search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "idol smuggling cases"

    சுமார் 91 கோவில் சிலைகளை திருட்டுத்தனமாக வைத்திருந்த தொழிலதிபர் ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான தஞ்சையில் உள்ள அவரது அரண்மனையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்மாணிக்கவேல் பார்வையிட்டார். #IdolTheft #RanvirShah
    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் தொழில் அதிபர் ரன்வீர்ஷா பழைமை வாய்ந்த கற்சிலைகள், தூண்கள் உள்ளிட்ட 91 வகையான கலைப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் அங்கிருந்த சிலைகள் அனைத்து கைப்பற்றப்பட்டு கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலைகள் அனைத்தும் கும்பகோணத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.

    இந்த நிலையில் ரன்வீர் ஷாவுக்கு சொந்தமாக பழைமையான அரண்மனைகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது. தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி பாலம் வலது கரையில் இந்த அரண்மனை உள்ளது. மராட்டிய மன்னர் சரபோஜிக்கு சொந்தமான இந்த அரண்மனையை ரன்வீர்ஷா, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கியுள்ளார். இதன் மதிப்பு பல கோடி ஆகும்.


    அரண்மனைக்கும், தஞ்சை பெரிய கோவிலுக்கும் பழங்காலத்தில் சுரங்கப்பாதை இருந்துள்ளது. தற்போது இந்த சுரங்கப்பாதை அடைக்கப்பட்டுள்ளது.

    ரன்வீர்ஷா அரண்மனை தற்போது பூட்டப்பட்டு உள்ளது. காவலாளி ஒருவர் மட்டும் இருந்து அரண்மனையை பாதுகாத்து வருகிறார். வெளிஆட்கள் யாரும் அரண்மனைக்குள் செல்ல முடியாது.

    தற்போது சிலை கடத்தலில் சிக்கியுள்ள ரன்வீர்ஷா, இந்த அரண்மனையில் ஏதேனும் சிலைகள், மற்றும் பழங்கால மன்னர்கள் காலத்தை சேர்ந்த மூலிகையிலான ஒவியங்களை பதுக்கி வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் இன்று காலை 11 மணியளவில் திருவையாறு வந்தார். அங்கு ரன்வீர்ஷாவுக்கு சொந்தமான அரண்மனை இடத்தை பார்வையிட்டார். அரண்மனை வளாகம் முழுவதும் அவர் சுற்றி பார்த்தார். சுமார் அரை மணி நேரம் அங்கிருந்த அவர் பின்னர் புறப்பட்டு சென்றார்.

    திருவையாறு அரண்மனையில், கோர்ட்டு அனுமதி பெற்று ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் பிரிவு போலீசார் சோதனை செய்வார்கள் என தெரிகிறது. அதன்பிறகு திருவையாறு அரண்மனை பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #IdolTheft #IdolWingTeam #RanvirShah #PonManickavel
    தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் பொன் மாணிக்கவேலுக்கு, அரசு விருது வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். #BJP #PonRadhakrishnan #PonManickavel
    நாகர்கோவில்:

    சுசீந்திரத்தை அடுத்த தேரூரில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக நாடுகள் மத்தியில் ஒரு நாட்டிற்கு பெருமை கிடைக்க வேண்டும் என்றால் அந்த நாடு தூய்மையாக இருக்க வேண்டும். இதற்காகவே மத்திய அரசு தூய்மை பாரதம் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

    காந்தி கண்ட கனவை நனவாக்க பிரதமர் மோடி நேரடியாக தூய்மை பாரத திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். எனவே தான் தெருக்களை நேரடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறி அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் பொது மக்களும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.

    நாடு சுதந்திரம் அடைந்த பின்பு 6 கோடி கழிவறைகளே அமைக்கப்பட்டிருந்தன. மத்தியில் மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின்பு 8 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன.

    தமிழகத்தில் குட்கா போன்ற போதை பொருட்கள் தற்போது பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த பிரச்சனையில் இப்போது சிறுதுளிதான் வெளிவந்துள்ளது. மாநில அரசு இந்த வழக்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.


    பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்று கூறிவருகிறார். அவர் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என எண்ணுகிறேன்.

    தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் அதிகாரி பொன். மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரை போன்ற அதிகாரிகளுக்கு அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.

    தமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இதற்கு மாநில அரசு முன்வர வேண்டும்.

    கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பு தரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக தேரூர் பேரூராட்சியில் கல்லூரி மாணவிகளுடன் இணைந்து தூய்மை பணியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார். #BJP #PonRadhakrishnan #PonManickavel
    சென்னை சைதாப்பேட்டையில் தொழில் அதிபர் வீட்டில் இருந்து 82 சிலைகளை ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் பறிமுதல் செய்துள்ளார். #StatueSmuggling #PonManickavel
    சென்னை:

    தமிழகம் முழுவதும் பழமையான கோவில்களில் இருந்த பழங்கால சிலைகளை கடத்தி வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் கடந்த சில ஆண்டுகளாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

    சர்வதேச சிலை கடத்தல் மன்னனான சுபாஷ்கபூர் தமிழகத்தில் உள்ள தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகளை வெளிநாட்டுக்கு கடத்தி விற்பனை செய்ததை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

    ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தலைமையேற்ற பின்னரே, தமிழக கோவில்களில் இருந்த பழமை வாய்ந்த சிலைகள் களவாடப்பட்டு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதில் சுபாஷ்கபூரின் நெருங்கிய கூட்டாளியான தீனதயாளன் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.

    ஆந்திராவைச் சேர்ந்த தொழில் அதிபரான இவருக்கு சொந்தமாக ஆழ்வார்பேட்டையில் 2 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் அப்போது அதிரடி சோதனை நடத்தப்பட்டது. ஆழ்வார்பேட்டை மூர் தெருவில் நடத்தப்பட்ட சோதனையில் 300-க்கும் மேற்பட்ட சிலைகள் கைப்பற்றப்பட்டன. பழங்கால ஓவியங்களும் கிடைத்தது.

    இவைகளை தீனதயாளன் தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இருந்து திருடி அந்த வீட்டில் பதுக்கி வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.


    இதையடுத்து தீனதயாளனின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றி தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில் தீனதயாளன் பழங்கால சிலைகளை தனது கூட்டாளிகள் பலரிடம் கொடுத்து வைத்திருப்பதை சிலை தடுப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.

    சைதாப்பேட்டை கோர்ட்டு பின்புறம் ஸ்ரீநகர் காலனியில் வசித்து வரும் பிரபல தொழில் அதிபர் ரன்வீர்ஷா என்பவரிடமும் தீனதயாளன் சிலைகளை கொடுத்து இருந்தார்.

    அதன் அடிப்படையில் அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

    சிலையை வாங்கியது தொடர்பாக பல்வேறு ஆவணங்களை ரன்வீர்ஷா அளித்திருந்தார். அவைகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த ஆவணங்கள் அனைத்தும் போலியானது என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் இன்று காலை மீண்டும் தனது அதிரடி வேட்டையை தொடங்கினார். டி.எஸ்.பி. சுந்தரம் மற்றும் போலீஸ் படையினருடன் ரன்வீர்ஷாவின் வீட்டுக்கு சென்றார்.

    சிலை தடுப்பு பிரிவு போலீசுக்கு உதவியாக சட்டம்-ஒழுங்கு போலீசாரும் அங்கு சென்றனர்.

    இந்த சோதனையின் ரன்வீர்ஷாவின் வீட்டில் குவியல் குவியலாக சிலைகள் இருந்தது. இதனை பார்த்து போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர். 82 சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன.


    இதில் ஐம்பொன் சிலைகளும் அடங்கும். அனைத்தையும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் பறிமுதல் செய்தார். இந்த சிலைகளில் பெரும்பாலானவை அசைக்க முடியாத அளவுக்கு வலுவானதாக உள்ளது.

    கோவில்களில் காணப்படும் பிரமாண்டமான கல் சிலைகளும் ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்தது. இந்த சிலைகளை கிரேன் மூலம் தூக்கி லாரிகளில் ஏற்றி கொண்டு செல்லவும் போலீசார் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

    சிலைகளை கொண்டு செல்ல 5 லாரிகள் தேவைப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த சோதனை காரணமாக சைதாப்பேட்டை பகுதியில் பரபரப்பு நிலவியது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீட்டில் சோதனை முடிந்ததும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    இன்று மொத்தம் 89 சிலைகள், கல்தூண்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் 82 சிலைகள் ஐகோர்ட்டு உத்தரவு படி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சிலைகள் அனைத்தும் மிக பழமையானவை. கோவில்களில் இருந்து இந்த சிலைகள் திருடப்பட்டுள்ளன என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

    இந்த சிலைகளை வைப்பதற்கு அரசு அருங்காட்சியகத்தில் இடம் இல்லை என்று சொல்லி விட்டனர். எனவே கிண்டியில் உள்ள சிலை தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தற்காலிகமாக வைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்.

    இன்று கைப்பற்றப்பட்டுள்ள சிலைகளில் 12 சிலைகள் மிக தொன்மையான ஐம்பொன் சிலைகள் ஆகும். இந்த சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும்.

    இந்த சிலைகள் எந்தெந்த கோவில்களில் இருந்து திருடப்பட்டது என்பது பற்றி விசாரணை நடைபெறும். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளில் 75 சதவீதம் சிலைகளை தீனதயாளனே ரன்வீர்ஷாவுக்கு விற்பனை செய்துள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் அது தொடர்பான தகவல்களை தமிழக அரசுக்கு சரியாக தெரிவிக்கவில்லை. அவர் அரசுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக அரசு பரபரப்பான குற்றச்சாட்டுகளை ஐகோர்ட்டில் தெரிவித்தது.

    இதன் காரணமாக சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சி.பி.ஐ. சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க மறுத்து விட்டது.

    இந்த நிலையில்தான் பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீசார் தொழில் அதிபர் வீட்டில் இருந்து ஏராளமான சிலைகளை பறிமுதல் செய்துள்ளனர். இதன் மூலம் சிலை கடத்தல் விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் பின்னணியில் இருப்பவர்கள் யார்- யார் என்பது பற்றியும் தீவிர விசாரணை நடைபெறுகிறது. தொழில் அதிபர் ரன்வீர்ஷா ஆடை ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

    ஒரு சினிமாவிலும் அவர் தலைகாட்டி உள்ளார். மின்சார கனவு படத்தில் அவர் நடித்து இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே சினிமா பிரபலங்கள் யாருக்கும் சிலை கடத்தலில் தொடர்பு உள்ளதா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இதன்மூலம் ரன்வீர்ஷாவுடன் சிலை கடத்தலில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் சட்ட விரோதமாக கடத்தி வரப்பட்டவை என்று சிலை தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். எனவே விசாரணை முடிவில் ரன்வீர்ஷாவை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சிலை கடத்தலில் ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சினிமா இயக்குனர் வி.சேகரும் சிலை கடத்தல் வழக்கில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

    சிலை கடத்தல் பிரிவு கடந்த சில ஆண்டுகளாக மட்டுமே வேகமாக இயங்கி வருகிறது. அதற்கு முன்னர் பெயரளவுக்கு மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்தது.

    சிலை கடத்தலில் போலீசாரும், அறநிலையத்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்ததையும் பொன். மாணிக்கவேல் கண்டு பிடித்தார்.

    அந்த வகையில் அறநிலையத்துறை இணை ஆணையரான கவிதா கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

    சிலை தடுப்பு பிரிவில் பணியாற்றிய 2 டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. #StatueSmuggling #PonManickavel
    சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை, மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது. #IdolTheftCases
    சென்னை:

    தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிலைகள் காணாமல் போனது தொடர்பான விசாரணையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் நடத்தி வந்தார். அவரது தலைமையிலான தனிப்படை விசாரணையில் சிலர் சிக்கினர்.

    மேலும் ஒரு சில முக்கியஸ்தர்களுக்கும், தமிழக அரசு அதிகாரியும் சிலை கடத்தலில் தொடர்பு இருப்பதாக அவரது விசாரணையில் தெரியவந்தது. அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

    சிலை கடத்தல் தொடர்பாக ஏற்கனவே ஐகோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரிப்பதற்காக ஆர்.மகாதேவன், ஆதிகேசவலு ஆகிய 2 ஐகோர்ட்டு நீதிபதிகளை பிரத்யேகமாக சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி நியமித்து உள்ளார்.

    இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நீதிபதிகள் முன்பு இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்கில் திடீர் திருப்புமுனை ஏற்பட்டது. சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளையும், இனிமேல் பதிவாகும் வழக்குகளையும் சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்ப தமிழக அரசு கொள்கை முடிவெடுத்திருப்பதாக ஐகோர்ட்டில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தனிச்சையாக செயல்படுவதால் அவரது விசாரணயில் திருப்தி ஏற்படவில்லை. எனவே இந்த முடிவை அரசு எடுத்திருப்பதாக அரசின் கூடுதல் தலைமை வக்கீல் அரவிந்த பாண்டியன் வாதிட்டார். இதற்கான அரசாணையை தமிழக அரசு உடனே வெளியிட்டது.

    இந்த நிலையில், சிலை கடத்தல் தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.

    இதற்கிடையே கடந்த வாரம் ஐகோர்ட்டில் சிலை கடத்தல் தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு வந்தன. சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில் உள்நோக்கம் இருப்பதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்த வழக்குகள் மீதான விசாரணை, ஐகோர்ட்டில் இன்னும் நிலுவையில் உள்ளது.

    இந்தநிலையில், சிலை கடத்தல் குற்றங்களை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக அரசு வைத்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பி உள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

    அதில், சிலை கடத்தல் குற்றம் தொடர்பான வழக்குகளின் எப்.ஐ.ஆர். போன்ற முக்கிய ஆவணங்களை இணைத்து அனுப்பவில்லை. பரிந்துரைக் கடிதம் மட்டுமே இருக்கிறது. வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சேர்த்து அனுப்பினால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடுவது பற்றி பரிசீலிக்கலாம் என்று கூறப்பட்டு இருப்பதாக அரசு வட்டாரம் தெரிவித்தது.  #IdolTheftCases
    சிலை கடத்தல் தடுப்பு பிரிவை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என்று அமைச்சர் பாண்டியராஜன் கூறியுள்ளார். #IdolSmugglingCases #PonManickavel

    சென்னை:

    தமிழக போலீசில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன். மாணிக்க வேலுக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேல் சரியாக செயல்படவில்லை என்று குற்றம்சாட்டி உள்ள தமிழக அரசு அது தொடர்பான வழக்குகள் அனைத்தையும் சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இதனை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதற்கு ஐகோர்ட்டில் விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, பொன்.மாணிக்கவேல் மீது மீண்டும் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளது.

    தமிழக அரசின் இது போன்ற நடவடிக்கைகளால் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு செயல்படுமா? என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்கும் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாது. மீட்கப்பட்டுள்ள சிலைகள் அனைத்தும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் கண்காணிப்பில் உள்ளன.


     

    மீட்கப்பட்ட சிலைகளை அந்தந்த கோவில்களுக்கு கொண்டு செல்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக கோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

    கடத்தப்பட்டுள்ள மற்ற சிலைகளை மீட்பதற்காக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தொடர்ந்து செயல்படும். அந்த போலீஸ் பிரிவை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை. எனவே சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரின் பணிகளில் எந்தவித தொய்வும் ஏற்படாது. சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் ஒரு சில வழக்குகள் மட்டுமே சி.பி.ஐ.க்கு மாற்றப்படுகிறது.

    இதுபற்றி கோர்ட்டிலும் விளக்கம் அளித்துள்ளோம். சிலை கடத்தல் யார் ஆட்சியிலும் நடந்திருக்கலாம். அப்படி கடத்தப்பட்ட சிலைகள் அ.தி.மு.க. ஆட்சியில்தான் மீட்கப்பட்டுள்ளன. சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நீடிப்பாரா? என்பதுபற்றி கருத்து கூற முடியாது.

    இவ்வாறு பாண்டியராஜன் கூறினார்.

    சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றியது இயற்கையாக நிகழ்ந்தவை. இதில் உள்நோக்கம் கற்பிப்பதற்கு ஒன்றுமில்லை என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறினார். #IdolSmugglingCases #CBI
    ஆரணி:

    ஆரணியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மா.பா.பாண்டிய ராஜன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஜ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் குழுவினர், தமிழக அரசுக்கு கடந்த ஓராண்டாக எந்த ஒரு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை.



    இதுபோன்ற பல்வேறு காரணங்களால், தமிழக அரசு தாமாக முன் வந்து, சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. சி.பி.ஐ.க்கு மாற்றியதில் அரசியல் நோக்கம் இல்லை. ஒளிவு மறைவு இல்லாத தெளிவான விசாரணை தேவைப்படுகிறது.

    சிலை கடத்தல் வழக்கில் வேகமாக செயல்படுவதுடன் நிறைய சிலைகளை மீட்பதற்காகவே சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசும் தனது நிலையை கோர்ட்டில் தெரிவித்துள்ளது. எந்த ஒரு மாநில அரசும் தாமாக வந்து சி.பி.ஐ. வசம் வழக்குகளை ஒப்படைத்ததில்லை.

    மாறாக தமிழக அரசு சி.பி.ஐ.யிடம் சிலை கடத்தல் வழக்குகளை ஒப்படைத்திருப்பது, இயற்கையாக நிகழ்ந்தவை. இதில் உள்நோக்கம் கற்பிப்பதற்கு ஒன்றுமில்லை.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக தரத்தில் அருங்காட்சியகம் விரைவில் அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IdolSmugglingCases #CBI

    சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #IdolSmugglingCases #CBIProbe
    சென்னை:

    தமிழக கோவில்களில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் டி.ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் துப்பு துலக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க கொள்கை முடிவு எடுத்து இருப்பதாக தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொன்.மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் திருப்தி இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்ட இந்த கொள்ளை வெளிச்சத்துக்கு வராமல் இருந்தது.

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்வதற்காக பக்தர்களிடம் இருந்து சுமார் 100 கிலோ தங்கம் காணிக்கையாக பெறப்பட்டு அதில் பொட்டு தங்கத்தை கூட சாமி சிலைக்கு பயன்படுத்தாமல் பங்கு போட்டு இருக்கிறார்கள். இதையும் டி.ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதாவை கைது செய்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அவர் தனது வாக்குமூலத்தில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் எல்லாம் கமி‌ஷனருக்குத்தான் தெரியும் என்றும் கூறினார்.

    விசாரணையில் முக்கிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்பட பலர் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இதை தவிர்க்கவே சி.பி.ஐ. விசாரணைக்கு தள்ளி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரசின் முடிவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-


    டி.ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நடத்தி வரும் விசாரணை திருப்தி இல்லை என்று அரசு கூறி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    கோவில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது இன்று, நேற்றல்ல. பல ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது. குறுகிய காலத்திலேயே பல முறைகேடுகளை கண்டுபிடித்து பல சிலைகளையும் பொன்.மாணிக்கவேல் மீட்டு இருக்கிறார்.

    குஜராத்தில் இருந்து ராஜ ராஜசோழன் சிலையை மீட்டு வந்தபோது அமைச்சரே நேரடியாக சென்று வரவேற்று பாராட்டினார். இப்போது திடீரென்று விசாரணை சரி இல்லை என்பது யாரையோ காப்பாற்ற நினைப்பதாகவே தோன்றுகிறது.

    இப்போது திடீரென்று சி.பி.ஐ. விசாரணை என்பது வழக்கை முடக்குவதற்கான முயற்சியாகவே மக்கள் கருதுகிறார்கள்.

    இப்படி ஒரு திடீர் முடிவுக்கு அரசு செல்ல என்ன காரணம்? நமது காவல்துறை மீது நம்பிக்கை இல்லையா? பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, பக்கபலமாக இருந்து உதவி செய்ய வேண்டிய அரசு இப்படி எதிர்ப்பு நிலையை கடைபிடிப்பது உண்மை குற்றவாளிகள் சிக்காமல் போய் விடுவார்களோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:-

    பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சிறப்பாக செயல்பட்டு வருவது தெரிந்ததே. அவரை இந்த வழக்கு விசாரணைக்கு நியமித்தது கோர்ட்டு, அவரிடம் தமிழக அரசு அறிக்கை கேட்பதே தவறு. அவர் அறிக்கையை கோர்ட்டுக்குத்தான் கொடுப்பார்.

    உதவி ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல ஆயிரம் கோடி கோவில் சொத்துக்கள் கொள்ளை போயிருக்கிறது. அது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிகாரியை கைது செய்ததை துறை அதிகாரிகள் எதிர்ப்பது ஏன்?

    சரியாக நடந்து வரும் ஒரு விசாரணையை முடக்கவும் வழக்கை மூடி மறைக்கவும் நடக்கும் முயற்சியாகவே அரசின் முடிவு பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோருவதை ஏற்க முடியாது. இந்தக் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கக் கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்து பொன்.மாணிக்கவேல் விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்று தந்திட வேண்டும்.

    களவாடப்பட்ட அனைத்து இறைவன் திருமேனிகளும் கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டும். பொன்.மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீட்டித்து, இந்த விசாரணை முழுமையாக நிறைவேற அரசும், நீதிமன்றமும் ஆவண செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #IdolTheftCases #IdolSmugglingCases #PonManickavel #CBIProbe
    சிலைக் கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவிடம் இருந்து சி.பி.ஐ.க்கு மாற்றி தமிழக அரசு இன்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. #IdolSmugglingCases #CBIProbe
    சென்னை:

    சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவிற்கும் மாநில அரசுக்கும் இடையே சமீப காலமாக உரசல் போக்கு இருந்து வருகிறது. அரசிடம் இருந்து தனக்கு அழுத்தம் வருவதாகவும், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டியிருந்தார். பொன்.மாணிக்கவேல் தங்களிடம் அறிக்கை தாக்கல் செய்வதில்லை என தமிழக அரசு கூறியது.

    இந்த விவகாரம் முற்றிய நிலையில், சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக உயர்நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.


    இதையடுத்து அரசின் கொள்கை முடிவுகளை ஆகஸ்ட் 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

    இந்நிலையில் சிலை கடத்தல் வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றி தமிழக அரசு இன்று அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. சிலை கடத்தலில் அயல்நாட்டவர்கள் தொடர்பு இருப்பதால் சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் மட்டுமே அவர்களிடம் விசாரிக்க முடியும் என்றும், சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக தமிழக எல்லைக்குள் விசாரணை நடத்திட சிபிஐ-க்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது. #IdolTheftCases #IdolSmugglingCases #PonManickavel #CBIProbe
    சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றுவதன் மூலம் குற்றவாளிகளை தப்ப வைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். #CBIProbe #Mutharasan #IdolSmugglingCases
    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் உள்ள பாரம்பரிய மிக்க கோவில் சிலைகள், சிற்பங்கள் பல ஆண்டுகளாக திருட்டு போய் கொண்டு இருக்கிறது.

    வெளிநாடுகளுக்கு சிலைகள் எப்படி செல்கிறது என்றே தெரியவில்லை. கடத்தப்பட்ட சிலைகளை மீட்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டார்.

    கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு கொண்டு வந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    இத்தகைய சூழலில் பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் தொடர்வதை தமிழக அரசு விரும்பவில்லை.

    தனக்கு மாநில அரசு முழு ஒத்துழைப்பு தரவில்லை என்று பொன் மாணிக்கவேல் கோர்ட்டில் குற்றம் சாட்டியுள்ளார். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற தமிழக முடிவு செய்துள்ளது. மாற்ற வேண்டிய பல வழக்குகள் சி.பி.ஐ.க்கு மாற்றவில்லை.


    தற்போது பொன் மாணிக்கவேல் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை, அவர் மீது நம்பிக்கை இல்லை என்று மாநில அரசு கூறுவது மிக வினோதமாக இருக்கிறது.

    அவர் தொடர்ந்து பணியை மேற்கொண்டால் உயர் பொறுப்பில் இருக்கக்கூடிய பலர் சிலை கடத்தல் வழக்குகளில் சிக்கவார்கள் என்ற அச்சுறுத்தல் காரணமாக அவரை விடுவித்து சி.பி.ஐ.க்கு மாற்றுவதன் மூலம் தேவையற்ற காலதாமதத்தை ஏற்படுத்தி குற்றவாளிகள் தப்பித்து கொள்வதற்கு அரசு வழிவகை செய்கிறது. அரசின் நடவடிக்கை உள்நோக்கமுடையதாக உள்ளது.

    இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றாமல் பொன் மாணிக்கவேலை தொடர்ந்து விசாணை அதிகாரியாக செயல்பட செய்வதன் மூலமாகத்தான் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள். கடத்த பட்ட சிலைகள், சிற்பங்கள் மீட்கப்படும். ஆகவே அவர் பணியில் தொடர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #IdolSmugglingCases #PonManickavel #CBIProbe #Mutharasan
    பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழுவின் விசாரணையில் திருப்தி இல்லாததால் சிலைக் கடத்தல் வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. #IdolSmugglingCases #PonManickavel
    சென்னை:

    சிலைக் கடத்தல் வழக்குகளை பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு விசாரணை நடத்தி பல்வேறு சிலைகளை மீட்டுள்ளது. ஆனால் மாநில அரசுக்கும் அவருக்கும் இடையே சமீப காலமாக உரசல் போக்கு இருந்து வருகிறது. அரசிடம் இருந்து தனக்கு அழுத்தம் வருவதாகவும், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் பொன்.மாணிக்கவேல் குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்நிலையில், சிலை கடத்தல் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிலை கடத்தல் வழக்குகள் அனைத்தையும் சிபிஐ வசம் ஒப்படைக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.



    பொன்.மாணிக்கவேல் குழுவினரின் விசாரணையில் திருப்தி இல்லை என்றும், ஓராண்டாக ஒரு விசாரணை அறிக்கையை கூட தாக்கல் செய்யவில்லை என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழக அரசின் குற்றச்சாட்டுக்கு பொன்.மாணிக்கவேல் தரப்பு வழக்கறிஞர் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

    இதையடுத்து அரசின் கொள்கை முடிவுகளை ஆகஸ்ட் 8-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தது. #IdolSmugglingCases #PonManickavel
    ×