search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிலை கடத்தல் வழக்கை மூடி மறைக்க சதி: தமிழிசை-எச்.ராஜா கண்டனம்
    X

    சிலை கடத்தல் வழக்கை மூடி மறைக்க சதி: தமிழிசை-எச்.ராஜா கண்டனம்

    சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்திருப்பதற்கு தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். #IdolSmugglingCases #CBIProbe
    சென்னை:

    தமிழக கோவில்களில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் டி.ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையில் துப்பு துலக்கி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க கொள்கை முடிவு எடுத்து இருப்பதாக தமிழக அரசு சார்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொன்.மாணிக்கவேல் தலைமையில் நடைபெற்று வரும் விசாரணையில் திருப்தி இல்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    இது பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல ஆண்டுகளாக அரங்கேற்றப்பட்ட இந்த கொள்ளை வெளிச்சத்துக்கு வராமல் இருந்தது.

    காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிலை செய்வதற்காக பக்தர்களிடம் இருந்து சுமார் 100 கிலோ தங்கம் காணிக்கையாக பெறப்பட்டு அதில் பொட்டு தங்கத்தை கூட சாமி சிலைக்கு பயன்படுத்தாமல் பங்கு போட்டு இருக்கிறார்கள். இதையும் டி.ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கண்டுபிடித்து அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதாவை கைது செய்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    அவர் தனது வாக்குமூலத்தில் தனக்கு எதுவும் தெரியாது என்றும் எல்லாம் கமி‌ஷனருக்குத்தான் தெரியும் என்றும் கூறினார்.

    விசாரணையில் முக்கிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்பட பலர் விசாரணை வளையத்துக்குள் வருவார்கள் என்று கூறப்படுகிறது. இதை தவிர்க்கவே சி.பி.ஐ. விசாரணைக்கு தள்ளி விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அரசின் முடிவுக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பற்றி தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-


    டி.ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் நடத்தி வரும் விசாரணை திருப்தி இல்லை என்று அரசு கூறி இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.

    கோவில் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டது இன்று, நேற்றல்ல. பல ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது. குறுகிய காலத்திலேயே பல முறைகேடுகளை கண்டுபிடித்து பல சிலைகளையும் பொன்.மாணிக்கவேல் மீட்டு இருக்கிறார்.

    குஜராத்தில் இருந்து ராஜ ராஜசோழன் சிலையை மீட்டு வந்தபோது அமைச்சரே நேரடியாக சென்று வரவேற்று பாராட்டினார். இப்போது திடீரென்று விசாரணை சரி இல்லை என்பது யாரையோ காப்பாற்ற நினைப்பதாகவே தோன்றுகிறது.

    இப்போது திடீரென்று சி.பி.ஐ. விசாரணை என்பது வழக்கை முடக்குவதற்கான முயற்சியாகவே மக்கள் கருதுகிறார்கள்.

    இப்படி ஒரு திடீர் முடிவுக்கு அரசு செல்ல என்ன காரணம்? நமது காவல்துறை மீது நம்பிக்கை இல்லையா? பொன்.மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து, பக்கபலமாக இருந்து உதவி செய்ய வேண்டிய அரசு இப்படி எதிர்ப்பு நிலையை கடைபிடிப்பது உண்மை குற்றவாளிகள் சிக்காமல் போய் விடுவார்களோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியதாவது:-

    பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சிறப்பாக செயல்பட்டு வருவது தெரிந்ததே. அவரை இந்த வழக்கு விசாரணைக்கு நியமித்தது கோர்ட்டு, அவரிடம் தமிழக அரசு அறிக்கை கேட்பதே தவறு. அவர் அறிக்கையை கோர்ட்டுக்குத்தான் கொடுப்பார்.

    உதவி ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல ஆயிரம் கோடி கோவில் சொத்துக்கள் கொள்ளை போயிருக்கிறது. அது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அதிகாரியை கைது செய்ததை துறை அதிகாரிகள் எதிர்ப்பது ஏன்?

    சரியாக நடந்து வரும் ஒரு விசாரணையை முடக்கவும் வழக்கை மூடி மறைக்கவும் நடக்கும் முயற்சியாகவே அரசின் முடிவு பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு சிலை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கோருவதை ஏற்க முடியாது. இந்தக் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கக் கூடாது என இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது. தொடர்ந்து பொன்.மாணிக்கவேல் விசாரணையை விரைவாக நடத்தி குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை பெற்று தந்திட வேண்டும்.

    களவாடப்பட்ட அனைத்து இறைவன் திருமேனிகளும் கண்டுபிடித்து மீட்கப்பட வேண்டும். பொன்.மாணிக்கவேல் பதவிக்காலத்தை நீட்டித்து, இந்த விசாரணை முழுமையாக நிறைவேற அரசும், நீதிமன்றமும் ஆவண செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #IdolTheftCases #IdolSmugglingCases #PonManickavel #CBIProbe
    Next Story
    ×