search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja"

    • ரெயிலில் வந்த பயணிகள் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.
    • வாலிபர் 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

    சென்னை:

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் அவுரா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வந்த பயணிகள் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற வாலிபர் 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • பெருமாநல்லூர்-ஈரோடு சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கைப்பைகளில் கஞ்சா மறைத்து வைத்து விற்று வருவது தெரியவந்தது

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் அடுத்த பெருமாநல்லூர்-ஈரோடு சாலையில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பெருமாநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமலதா, சப் இன்ஸ்பெக்டர்கள் அன்பரசன், உமா மகேஷ்வரி உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ரகசியமான இடத்தில் பதுங்கி இருந்த 4 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், வைத்திருந்த கைப்பைகளில் கஞ்சா மறைத்து வைத்து விற்று வருவது தெரியவந்தது.

    அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சுபீர் பாணி(வயது 34), அனாதி தலபெஹெரா(21), சனுஜரான(23) மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இது குறித்து பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 4 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    • சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத் தூர் அருகே கருங்கலூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கொளத்தூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • கருங்கல்லூர் அருகே காளையனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத் தூர் அருகே கருங்கலூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கொளத்தூர் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனை தொடர்ந்து கொளத்தூர் போலீசார் கருங்கல்லூர் பகுதியில் சோதனை செய்தனர். அப்போது, கருங்கல்லூர் அருகே காளையனூர் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் (வயசு 45) என்பவர் கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 650 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

    • 300 கிராம் கஞ்சா, பணம், பைக் பறிமுதல்
    • கஞ்சா வாங்கி வந்ததும் 200 கிராம் கஞ்சாவை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட ஒதியம்பட்டு ராம்பரதேசி கோவில் அருகே 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோருக்கு ரகசியதகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சந்தேகத்துக்கிடமாக பைக்கில் இருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்ட னர்.

    அதற்கு அவர்கள் முன்னுக்குப் பின் முரணான தகவல் அளித்தனர். அவர்களது உடைமைகளை சோதனை செய்ததில் அவர்களது பைக்கில் 300 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரியவந்தது.

    அவர்களை கைது செய்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று துருவி துருவி விசாரணை நடத்தியதில், மேட்டுப்பாளையம் வண்ணாத்திகுளத்தைச் சேர்ந்த ஜெயவேல் (வயது 22), என்பதும் மற்றொருவர் வில்லியனூர் உத்தரவாகினி பேட் அபினேஷ் (வயது 22) என்பதும், இருவரும் ஆந்திர மாநிலம் குன்னூரில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு 500 கிராம் கஞ்சா வாங்கி வந்ததும் 200 கிராம் கஞ்சாவை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

    மீதமிருந்த 300 கிராம் கஞ்சாவை வைத்திருந்த போது போலீசார் பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த 300 கிராம் கஞ்சா 4 ஆயிரம் ரூபாய் பணம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஜெயவேல் மற்றும் அபினேஷ் இருவரும் வில்லியனூரில் உள்ள அரசு பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் என்பதும், தற்போது இருவரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

    • கஞ்சா பறிமுதல் வழக்கில் தப்பியோடிய 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
    • காய்கறி மூட்டைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட 409 கிலோ கஞ்சா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே அம்மாசத்திரம் பகுதியில் கடந்த 13-ந் தேதி இரவு சரக்கு வேனில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காய்கறி மூட்டைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட 409 கிலோ கஞ்சா பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றை ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்த முயன்ற இந்த சம்பவத்தில் சரக்கு வேனில் வந்த 2 பேரும் தப்பியோடிவிட்டனர். போலீசார் விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம், சிப்பிக்குளம் கீழ வைப்பாறு ஸ்ரீ வைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 24), தூத்துக்குடி சிப்பிக்குளம் குளத்தூர் கிழக்கு பகுதியை சேர்ந்த ஸ்டார்வின் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்தனர். இதுவரை அவர்கள் பிடிபடவில்லை. அவர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க சென்றதில் ஒரு தனிப்படையினர் திருப்பி வந்த நிலையில், மற்றொரு தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் மாவட்டத்திற்குள் வெளிமாநில பதிவெண் கொண்ட வாகனங்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.


    • கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரைக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சிறப்பு பிரிவினர் ரோந்து சென்றனர். அப்போது ரெயில்நிலையம் எதிரே காலி இடத்தில் சந்தேகத்திற்கிடமாக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரித்தபோது, அவர் மண்டபம் மாரீஸ்வரன் என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

    அவரது ெகாடுத்த தகவல்படி ேபாலீசார் மண்டபம் பிரதீப் (20), சதீஷ்குமார் (30) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சதீஷ்குமார் என்பவர் இறால் ஏற்றுமதி நிறுவனம் அருகே கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • இந்த கஞ்சா பொட்டலங்களை கல்லூரி -பள்ளி மாணவர்க ளுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.
    • புதுவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அைடத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி உத்தர வின்படி திருபுவனை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கலிதீர்த்தாள் குப்பம் கலைஞர் கருணாநிதி அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் 3 வாலிபர்கள் போலீசாரை கண்டதும் ஓட முயற்சி செய்தனர்.

    இதனால் சந்தேமடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்களது சட்டை பையில் சோதனை நடத்திய போது

    அவர்கள் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இந்த கஞ்சா பொட்டலங்களை கல்லூரி -பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது.

    கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் இவர்கள் திருபுவனை, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த தாமு என்ற தாமோதரன் (23), விருத்தாசலம் பகுதியை சேர்ந்த விஷ்வா (21), கோலியனூர் பகுதியைச் சேர்ந்த வசந்த் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    அதனைத் தொடர்ந்து அவர்களை புதுவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர்.

    கைதுசெய்யப்பட்ட 3 பேரில் 2 பேர் கல்லூரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள்.
    • கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    குன்றத்தூர்:

    குன்றத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரெயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து தாம்பரம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் மாலதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் தாம்பரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து சோதனை செய்தபோது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள். மேலும் அவர்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது பிடிப்பட்ட நபர்கள் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சையது அனீஸ் (வயது 25), முகமது முஸ்தபா (26), என்பது தெரியவந்தது. இவர்கள் திரிபுரா மாநிலத்தில் இருந்து கஞ்சாவை மொத்தமாக எடுத்து வந்து குன்றத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • எருமபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.
    • வீட்டில் இருந்த 1¾ கிலோ கஞ்சா மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ½ பவுன் மோதிரம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிபாளையம் அருகே எருமபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா விற்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து கிச்சிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

    இதில் சண்முகம் (வயது 39) என்பவர் வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அந்த வீட்டில் இருந்த 1¾ கிலோ கஞ்சா மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம், 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ½ பவுன் மோதிரம், 3 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட சண்முகத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஆறாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள ஆறாகுளம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது கோவை - திருச்சி மெயின் ரோட்டில் ஆறாகுளம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்குப் பின் முரணாக தகவல் அளித்தார். இதையடுத்து அவரை பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்த போது அவர் கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் அவரது கூட்டாளிகள் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை பகுதியில் இருப்பதாக அவர் தெரிவித்த தகவலை அடுத்து, அங்கு சென்ற போலீசார் கஞ்சா வைத்திருந்த இரண்டு வாலிபர்களை மடக்கி பிடித்து பல்லடம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    அப்போது அவர்கள் திருப்பூர் வீரபாண்டி, பழவஞ்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் மகன் நவீன் குமார்(வயது 27),அவிநாசி அருகே உள்ள திருமுருகன் பூண்டி அண்ணாதுரை என்பவரது மகன் வசந்தகுமார்(22) , திருப்பூர் கணக்கம்பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகன் விக்னேஷ்(23) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கஞ்சா கடத்தி விற்பனை செய்வதும் தெரியவந்தது இதையடுத்து அவர்களிடம் இருந்து இரண்டரை கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மூதாட்டியின் வீட்டிற்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? என்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
    • மூதாட்டியின் எதிர் வீட்டில் வசித்து வரும் அர்ஜூன் என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    மதுரை:

    மதுரை ஜெய்ஹிந்துபுரம் ஜீவாநகர் அம்பேத்கர் நகரில் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார். அந்த மூதாட்டியின் வீடு நேற்று வெகுநேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் அவரது வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

    அப்போது அங்கு அந்த மூதாட்டி உடலில் காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு மூதாட்டியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் இறந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது யார்? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் போலீஸ் உதவி கமிஷனர் சண்முகமும் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    மூதாட்டியின் வீட்டிற்கு யாரெல்லாம் வந்து செல்வார்கள்? என்று அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மூதாட்டியின் எதிர் வீட்டில் வசித்து வரும் அர்ஜூன்(வயது30) என்ற வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கஞ்சா போதையில் மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தது அவர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து வாலிபர் அர்ஜூனை போலீசார் கைது செய்தனர்.

    மூதாட்டியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அர்ஜூன் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவர் தெருத்தெருவாக சென்று குப்பைகள் மற்றும் பழைய பேப்பர்களை சேகரித்து விற்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்திருக்கிறார். கஞ்சா போதைக்கு அடிமையாகி இருந்த அவர், தற்போது கொலை வழக்கிலும் சிக்கியுள்ளார்.

    வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை பக்கத்து வீட்டு வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற சம்பவம் மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியல் போராட்டம் நடத்தினர்
    • அறந்தாங்கி அருகே மது-கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டனர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் அரசின் டாஸ்மாக் கடை அருகே உரிய அனுமதியின்றி மதுபானக்கூடம் செயல்பட்டு வருகிறது. இதனால் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எந்நேரமும் மது போதையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சாலை ஓரத்தில் மது அருந்தி விட்டு, கஞ்சாவும் புகைத்துக் கொண்டு அவ்வழியாக செல்லக் கூடிய பொது மக்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று பஞ்சாத்தி கிராமத்தை சேர்ந்த ஒருவர் அவ்வழியாக சென்று கொண்டிருக்கையில், அவரிடம் தகராறு செய்த போதை ஆசாமிகள், அவரிடமிருந்த 7 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் அணிந்திருந்த இரண்டரை சவரன் சங்கிலியை அறுத்துவிட்டு, அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் அந்த நபர் படுகாயமடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அறந்தாங்கி ஆவுடையார்கோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் தெரிவிக்கையில் துரையரசபுரம், அறந்தாங்கி போன்ற பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதனால் இளைஞர்கள் கெட்டுப்போவதோடு பல்வேறு குற்றச்சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதோடு மட்டுமல்லாது துரையரசபுரத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் மதுபானக் கூடத்தில் 24 மணி நேரமும் மது கிடைக்கிறது. இதனால் கஞ்சா புகைப்போர் அங்கேயே குடியாக கிடக்கின்றனர். மேலும் அவ்வழியாக செல்வோரை அடித்து, வழிப்பறி செய்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து புழக்கத்தில் உள்ள கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், துரையரசபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி-ஆவுடையார்கோவில் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ×