search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறந்தாங்கி அருகே மது-கஞ்சா போதையில் அடிதடி, ரகளை
    X

    அறந்தாங்கி அருகே மது-கஞ்சா போதையில் அடிதடி, ரகளை

    • குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மறியல் போராட்டம் நடத்தினர்
    • அறந்தாங்கி அருகே மது-கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டனர்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே துரையரசபுரத்தில் அரசின் டாஸ்மாக் கடை அருகே உரிய அனுமதியின்றி மதுபானக்கூடம் செயல்பட்டு வருகிறது. இதனால் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் எந்நேரமும் மது போதையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் சாலை ஓரத்தில் மது அருந்தி விட்டு, கஞ்சாவும் புகைத்துக் கொண்டு அவ்வழியாக செல்லக் கூடிய பொது மக்களை அச்சுறுத்தி ரகளையில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று பஞ்சாத்தி கிராமத்தை சேர்ந்த ஒருவர் அவ்வழியாக சென்று கொண்டிருக்கையில், அவரிடம் தகராறு செய்த போதை ஆசாமிகள், அவரிடமிருந்த 7 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் அணிந்திருந்த இரண்டரை சவரன் சங்கிலியை அறுத்துவிட்டு, அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதில் அந்த நபர் படுகாயமடைந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி அறந்தாங்கி ஆவுடையார்கோவில் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் தெரிவிக்கையில் துரையரசபுரம், அறந்தாங்கி போன்ற பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இதனால் இளைஞர்கள் கெட்டுப்போவதோடு பல்வேறு குற்றச்சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அதோடு மட்டுமல்லாது துரையரசபுரத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் மதுபானக் கூடத்தில் 24 மணி நேரமும் மது கிடைக்கிறது. இதனால் கஞ்சா புகைப்போர் அங்கேயே குடியாக கிடக்கின்றனர். மேலும் அவ்வழியாக செல்வோரை அடித்து, வழிப்பறி செய்கின்றனர்.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து புழக்கத்தில் உள்ள கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், துரையரசபுரத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதி அளித்தனர். அதிகாரிகளின் உறுதியளிப்பை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் போராட்டத்தால் அறந்தாங்கி-ஆவுடையார்கோவில் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×