search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drowning"

    அரூர் கோட்டப்பட்டி அருகே, தென்பெண்ணை ஆற்றில் வாலிபர் மூழ்கி இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    கம்பைநல்லூர்:

    தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை சரடுவையை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 24), என்ஜினீயர் படித்துள்ளார்.

    இவர் நேற்று பெரியப்பட்டி புதுகாடு கிராமத்தில் நடந்த தனது உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று உள்ளார். பின்பு, மதியம் 1.30 மணிக்கு அந்த பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் தனது நண்பர்களுடன் குளித்து உள்ளார். அப்போது, ஆற்று சுழலில் சிக்கி நீரில் மூழ்கி உள்ளார். இதைக் கண்ட அவரது நண்பர்கள், ஹரிகிருஷ்ணனை மீட்டு, நரிப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு வரும்போது வழியிலேயே இறந்து விட்டார்.

    இதுகுறித்து கோட்டப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தடையை மீறி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றதால் நடுக்கடலில் படகு மூழ்கியது. இதில் 5 மீனவர்கள் தத்தளித்தனர். பின்னர் அவர்களை மற்ற மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம்  கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் சுமார் 600 விசைப்படகுகள் மூலம் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மீன்பிடித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மீன்பிடி தடைகாலத்தால் மீனவர்கள் யாரும்  கடந்த 2 மாதமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் விசைப்படகுகளை கடற்கரைகளில் நிறுத்தி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். வலை பின்னுதல், அறுந்த வலைகளை சீரமைத்தல் ஆகிய பணிகளிலும் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தடை காலம் முடிவடைந்ததையடுத்து நேற்று நள்ளிரவு கோட்டைப்பட்டினம், ஜெகதாப் பட்டினத்தில் இருந்து சுமார் 475 விசைப்படகுகளில் 2 ஆயிரம் மீனவர்கள் வரை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். தமிழகத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இருப்பினும் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 

    இதனிடையே ரம்ஜான் பண்டிகையையொட்டி அதிக விலைக்கு மீன்கள் விற்பனையாக வாய்ப்பு உள்ளதாக கருதி நேற்று காலை தடையை மீறி  ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீனவர்கள் சிலர் விசைப்படகுகளில்  மீன் பிடிக்க சென்றனர். 

    நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது பலத்த காற்று வீசியதில் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த முருகையன் என்பவரின் விசைப்படகு கடலில் மூழ்கியது . அதில் சென்ற கணேசன், தமிழ்செல்வன் உள்ளிட்ட 5 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர். பின்னர் அவர்களை மற்ற மீனவர்கள் பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 
    நண்பர்களுடன் குளித்த போது பவானி ஆற்றில் மூழ்கி கோவை வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை கணபதி மணியகாரன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் கோபிநாத்(17) ஐ.டி.ஐ.படிப்பை பாதியில் நிறுத்தி விட்டார்.

    இந்த நிலையில் கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் 6 பேர் மேட்டுப்பாளையத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர். சுவாமி தரிசனம் செய்து விட்டு மேட்டுப்பாளையம் அடுத்துள்ள ஆலாங்கொம்பு பழையூர் பவானி ஆற்றுக்கு குளிக்கச்சென்றனர். அப்போது திடீரென கோபிநாத் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். நீரில் மூழ்கி தத்தளித்த அவர் சிறிது நேரத்தில் மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். உடனே அக்கம் பக்கம் இருந்தவர்கள் உதவியுடன் அவரது உடல் மீட்கப்பட்டது.

    இது குறித்து தகவல் கிடைக்கப் பெற்றதும் சிறுமுகை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலக், ஏட்டு கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    வாலிபர் கோபிநாத் பிணத்தை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரியகுளம் அருகே தனது முதலாவது திருமண நாளை கொண்டாட இருந்த சுரேஷ் அணையில் மூழ்கி பலியானது அவர்கள் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஆண்டிப்பட்டி:

    பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (வயது 30). இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த வாரம் இவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதற்காக சுரேஷ் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று வைகை அணை அருகே நடந்த தனது உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றார்.

    பின்னர் நண்பர்களுடன் வைகை அணை நீர் தேக்கத்துக்கு குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதியில் இறங்கினார். நீரில் மூழ்கிய அவர் தனது நண்பர்களிடம் காப்பாற்றுமாறு சத்தம் போட்டார். ஆனால் அவர்களால் முடியாததால் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தீயணைப்பு துறையினர் அங்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் 3 மணி நேரம் போராடி அவரது உடலை மீட்டனர். இது குறித்து வைகை அணை போலீசார் வழக்கு பதிவு செயது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இன்று தனது முதலாவது திருமண நாளை கொண்டாட தயார் நிலையில் இருந்த சுரேஷ் அணையில் மூழ்கி பலியானது அவர்கள் குடும்பத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.



    கண்மாய் நீரில் மூழ்கடித்து 12 வயது சிறுவனை கொன்ற 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கே.பெருமாள்பட்டியை சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் மகன் கவின் குமார் (வயது12).

    இவன் அங்குள்ள அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் கவின்குமார் நேற்று மாலை அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் கண்மாயில் குளிக்க சென்றான். அடுத்த ஒரு மணி நேரத்தில் கவின் குமாரின் உடல் குளத்தில் மிதப்பதாக தகவல் வந்தது.

    இதையடுத்து செல்லப்பாண்டி உத்தப்ப நாயக்கனூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்.

    சிறுவன் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் சந்தேகத்தின் பேரில் கவின்குமாருடன் குளிக்க சென்ற 3 மாணவர்களை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் கவின்குமாரை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தது தெரியவந்தது.

    மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி அருகே கால்வாயில் மூழ்கி அண்ணன் - தங்கை பரிதாபமாக இறந்தனர்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணை அருகே உள்ள சின்ன பேயனப்பள்ளியை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 45). விவசாயி. இவரது மனைவி கவிதா (40). இவர்களுக்கு தமிழ்ச்செல்வன் (8) என்ற மகனும், நந்தினி (3) என்ற மகளும் இருந்தனர். தமிழ்ச்செல்வன் அருகில் உள்ள அரசு பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

    இந்த நிலையில் நேற்று நரசிம்மன் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் பூப்பறிப்பதற்காக சென்றார். மேலும் ஆட்டையும் மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றார். அப்போது சிறுவன் தமிழ்ச்செல்வனும், சிறுமி நந்தினியும் உடன் சென்றனர். அந்த நேரம் நரசிம்மன் மேய்ச்சலுக்காக கொண்டு சென்ற ஆடு வேறு பக்கம் சென்றது.

    இதைப் பார்த்த நரசிம்மன் அந்த ஆட்டை பிடித்து வருமாறு தமிழ்ச்செல்வனிடம் கூறினார். இதனால் தமிழ்ச்செல்வனும், நந்தினியும் ஆட்டை பிடிப்பதற்காக ஓடிச் சென்றனர். அப்போது அவர்கள் அந்த பகுதியில் உள்ள கே.ஆர்.பி. அணை தண்ணீர் செல்லும் கால்வாயில் இறங்கினர். அந்த நேரம் இருவரும் சேற்றில் சிக்கினார்கள்.

    பின்னர் சிறிது நேரத்தில் அவர்கள் 2 பேரும் தண்ணீரில் தத்தளித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு நரசிம்மன் அங்கு ஓடி சென்றார். ஆனால் அதற்குள் தமிழ்ச்செல்வனும், நந்தினியும் கால்வாயில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். குழந்தைகளின் உடலை நரசிம்மன் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது 2 பேரின் உடல்களை பார்த்து நரசிம்மன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கிருஷ்ணகிரி அணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றார்கள். அவர்கள் பலியான சிறுவன் தமிழ்ச்செல்வன், சிறுமி நந்தினி ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி அணை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.கால்வாயில் மூழ்கி அண்ணன் - தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
    சென்னை அடையாறு ஐஐடி வளாகத்தில் உள்ள ஏரியில் குளித்த இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களது உடலை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். #MadrasIIT
    சென்னை:

    சென்னை அடையாறு ஐஐடி வளாகத்தில் ஏரி ஒன்று உள்ளது. இன்று மாலை கானகம் பகுதியை சேர்ந்த 7 பேர் ஏரியில் குளிக்கச் சென்றுள்ளனர். அதில், மூர்த்தி, ஜேரால்டு ஆகிய இருவர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அவர்களது உடலை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    உள்ளே நுழைய அனுமதி இல்லாத நிலையில், பின்பக்க சுவர் வழியாக அவர்கள் உள்ளே வந்து ஏரியில் குளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #MadrasIIT
    ×