search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul"

    திண்டுக்கல் அருகே தனியார் மில்லில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    திண்டுக்கல்:

    ஒடிசா மாநிலம் பாலிமோரி மாவட்டம் செம்பூரைச் சேர்ந்தவர் அனிஸ்குமார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சோனி (வயது 19) என்பவருக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவி இருவரும் திண்டுக்கல் அருகே மினுக்கம்பட்டியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

    மில் நிர்வாகம் சார்பில் ஒதுக்கப்பட்டிருந்த விடுதியில் அவர்கள் தங்கி இருந்தனர். இன்று காலை சோனி தனது அறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்தார்.

    அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக மில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் இளம்பெண் எவ்வாறு இறந்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பழனி ஆர்.டி.ஓ. மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 95 சதவீத பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகமடைந்தனர். #JactoGeo
    திண்டுக்கல்:

    9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று வந்தனர்.

    அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் பிப்ரவரி 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் பெரும்பாலான அரசு ஊழியர்கள் பங்கேற்கவில்லை.

    திண்டுக்கல்லில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 160 பெண்கள் உள்பட 200 பேர் கலந்து கொண்டனர். அவர்களை கைது செய்து போலீசார் தனியார் மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    நேற்று 80 சதவீத பள்ளிகள் இயங்கிய நிலையில் இன்றும் வழக்கமாக பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளைச் சேர்ந்த 3,497 ஆசிரியர்களில் 2894 பேர் பணிக்கு வந்தனர். 553 ஆசிரியர்கள் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 1486 ஆசிரியர்கள் முழுமையாக பணிக்கு திரும்பினர்.

    அரசு தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் 3567 பேரில் 2847 பேர் பணிக்கு வந்தனர். 484 ஆசிரியர்கள் மட்டுமே போராட்டத்தில் பங்கேற்றனர். அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளைச் சேர்ந்த 1614 ஆசிரியர்களில் 5 பேர் மட்டுமே வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதே போல் தேனி மாவட்டத்தில் 6092 ஆசிரியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 97 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். ஒரு வாரத்துக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் இன்று வகுப்புகளில் பங்கேற்றனர்.  #JactoGeo
    திண்டுக்கல் அருகே பள்ளியை திறக்க கோரி மாணவ-மாணவிகள் அரசு பஸ்சை சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    வடமதுரை:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை, கல்வித் துறை உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளும் முடங்கி உள்ளன.

    குறிப்பாக பள்ளிகள் பெரும்பாலும் மூடப்பட்டதால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்களை பணிக்கு திரும்ப அரசு கோரிக்கை விடுத்தபோதும் அவர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் அருகே வடமதுரை பாடியூர் புதுப்பட்டியில் அரசு பள்ளி உள்ளது. இங்கு கிரியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே இந்த பள்ளியை திறக்க வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் மாணவர்களுடன் வடமதுரையில் இருந்து திண்டுக்கல் சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர். வடமதுரை பகுதியில் கடந்த சில நாட்களாகவே ஆசிரியர்களை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    கல்பட்டிசத்திரம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் குடியரசு தினத்திற்கு வந்த ஆசிரியர்களை உள்ளே செல்லவிடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆத்தூர் காமராஜர் அணையின் நீர் மட்டம் சரிந்துள்ளதால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
    திண்டுக்கல்:

    திண்டுக்கல் நகராட்சியில் 48 வார்டுகள் உள்ளன. இப்பகுதி மக்களுக்கு ஆத்தூர் காமராஜர் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக பருவ மழை போதிய அளவு பெய்யாததால் காமராஜர் அணை வற்றியது. இதனால் திண்டுக்கல் நகர் மற்றும் குடிநீர் தேவைக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து காவிரி கூட்டுக்குடி நீர் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

    தற்போது ஜிகா பைப் மூலம் அனைத்து பகுதி பொதுமக்களும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருந்தபோதும் குடிநீர் தட்டுப்பாடு என்பது திண்டுக்கல் நகர மக்களுக்கு தீராத பிரச்சினையாக உள்ளது.

    கஜா புயலின் தாக்கத்தினால் கொடைக்கானல் கீழ்மலை பகுதியில் மழை பெய்தது. இதனால் காமராஜர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. எனவே அணையின் நீர் மட்டம் 17.5 அடியாக உயர்ந்தது. ஆனால் வடகிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால் மழையின்றி அணையின் நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது.

    23.5 அடி நீர் மட்டம் கொண்ட காமராஜர் அணையில் தற்போது 13.5 அடி மட்டுமே நீர் உள்ளது. இதனால் கோடை காலத்தில் திண்டுக்கல் நகர் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் மட்டுமே இதனை சமாளிக்க முடியும்.

    இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் வடகிழக்கு பருவமழை ஏமாற்றியதால் ஆத்தூர் காமராஜர் அணை நீர் மட்டம் குறையத் தொடங்கியுள்ளது. இருந்த போதும் அனைத்து பகுதி மக்களுக்கும் சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் உள்ள நீர் மூலம் 5 மாதங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி வினியோகம் செய்ய முடியும். மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமும் தண்ணீர் கொண்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு கிடைக்கும் என்றனர்.

    திண்டுக்கல் அருகே நாகரத்தின கல் விற்பனையில் வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேர் கைதாகினர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் என்.எஸ். நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சிவக்குமார் (வயது27). டீக்கடை நடத்தி வந்தார். இவரது நண்பர் அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த ஹரிகரன் (23). இவரது தந்தை சந்தான கிருஷ்ணன் நாகரத்தின கல் வாங்குவதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு செங்குறிச்சி பகுதிக்கு சென்றார். அவருடன் சிவக்குமார் மற்றும் ஹரிகரனும் சென்றனர். மலையூரைச் சேர்ந்த முருகன் (42) என்பவரிடம் ரூ.3 லட்சம் பணத்தை கொடுத்து விட்டு நாகரத்தின கல்லை கேட்டனர்.

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவக்குமாரையும், ஹரிகரனையும் கத்தியால் குத்தினர். படுகாயம் அடைந்த சிவக்குமார் உயிரிழந்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹரிகரன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தொடர்புடைய முருகன், அவரது உறவினர்கள் வெள்ளைச்சாமி, சின்னையா ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    நத்தமாடிப்பட்டியில் வரும் 17-ந் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு 400 காளைகள் முன் பதிவு செய்துள்ளனர். #Jallikattu
    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் அதே போல் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    முதல் கட்டமாக வரும் 17-ந் தேதி பழனி அருகே உள்ள பெரியகலையம்புத்தூர், நத்தமாடிப்பட்டி, 22-ந் தேதி உலகம்பட்டி, பிப்ரவரி 3-ந் தேதி ஏ.வேள்ளோடு, 8-ந் தேதி கொசவபட்டி, 10-ந் தேதி மறவபட்டி, தவசிமடை ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரினர்.

    இதில் வரும் 17-ந் தேதி நத்தமாடிப்பட்டியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதற்காக திண்டுக்கல், திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான காளைகள் வந்தன.

    இதில் 400 காளைகளுக்கு பரிசோதனை நடத்தப்பட்டு ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதே போல் 300 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு முதல் போட்டியாக பழனி நெய்க்காரபட்டியிலும், 2-வதாக நத்தமாடிப்பட்டியிலும் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இதனால் வாடிவாசல் அமைக்கும் பணியில் விழா குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    விழா நடைபெறுவதற்கு முன்பாக அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்வார்கள். மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றும் காளைகளையும் மாடு பிடி வீரர்களின் உடல் தகுதியையும் இறுதி செய்த பிறகு அதற்கான சான்று அளிக்கப்படும். திண்டுக்கல் அருகே முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள நத்தமாடிப்பட்டி விழாக்கோலம் பூண்டுள்ளது. #Jallikattu

    திண்டுக்கல் அருகே திருமணம் ஆன 6 மாதத்தில் புது மாப்பிள்ளை மாயமானதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள போஜனம்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 35). இவர் வேல்வார்கோட்டையில் உள்ள ஒரு தனியார் ஆயில் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் கார்த்திகா என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற பெருமாள் வீடு திரும்பவில்லை. அவரது மோட்டார் சைக்கிள் மட்டும் சுடுகாடு அருகே தனியாக கிடந்தது.

    தலை பொங்கலுக்காக விருந்துக்கு செல்ல தயாராக இருந்த நிலையில் பெருமாள் மாயமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது குறித்து கார்த்திகா வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரை யாரேனும் கடத்திச் சென்றிருக்கலாம் என தனது புகாரில் தெரிவித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெருமாளை தேடி வருகின்றனர்.

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடின.
    திண்டுக்கல்:

    மத்திய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

    இன்றும் நாளையும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் ஓடியது. கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் செயல்பட்டது.

    மத்திய அரசு அலுவலகங்களான பி.எஸ்.என்.எல்., தபால்துறை, ரெயில்வே உள்ளிட்ட அலுவலகங்களில் குறைந்த அளவு ஊழியர்களே வந்திருந்தனர். வங்கிகள் செயல்படவில்லை.

    திண்டுக்கல் நகரில் 50-க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் உள்ளன. இதில் பணிபுரியும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைக்கு வராததால் அந்த ஆலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

    ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் திண்டுக்கல்லில் முழு வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். அவர்கள் தெரிவிக்கையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்டோக்களுக்கு இலவச ஜி.பி.ஆர்.எஸ். கருவி பொருத்தப்படும் என்றார்.

    ஆனால் தற்போதைய தமிழக அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை. கடந்த பல ஆண்டுகளாக ஆட்டோ கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. இன்சூரன்ஸ் தொகை அதிக அளவு உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கான மானியம் வழங்கவில்லை. இதனை கண்டித்து இன்றும் நாளையும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற உள்ளோம் என்றனர்.

    மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என்றபோதும் ஒருசில அரசு அலுவலகங்களில் அலுவலர்கள் இல்லாமல் மக்கள் பணி பாதிக்கப்பட்டது.

    திண்டுக்கல் அருகே கோவில் அறங்காவலர் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள வடமதுரையில் வண்டிகருப்பணசாமி கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலில் புதிதாக வாகனம் வாங்குபவர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள்.

    மேலும் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் வாகனங்களும் இந்த கோவிலை கடந்து செல்லும்போது சூறை காணிக்கை செலுத்தி செல்வது இன்று வரை தொடர்ந்து வருகிறது.

    இக்கோவிலில் அறங்காவலராக இருந்து வருபவர் ரெங்கநாதன். இவர் அய்யலூர் அருகில் உள்ள தங்கம்மாபட்டியில் இருந்து கோவிலுக்கு வந்து செல்வார்.

    சம்பவத்தன்று இவர் கோவில் எதிரே உள்ள ஓட்டலில் சாப்பிட்டு விட்டு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென அவரை குண்டுகட்டாக தூக்கி காருக்குள் போட்டது.

    அந்த சமயத்தில் அங்கு யாரும் இல்லாததால் கண் இமைக்கும் நேரத்தில் அக்கும்பல் தப்பி ஓடிவிட்டது. அதன்பின்னர் கோவிலுக்கு வராததால் அங்கிருந்தவர்கள் ரெங்கநாதனை தேடினர். அப்போது கோவில் முன்பு இருந்த கண்காணிப்பு கேமிராவில் ரெங்கநாதன் கடத்தப்பட்ட வீடியோ காட்சி பதிவாகி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து சமூக ஊடகங்களிலும் வீடியோ வேகமாக பரவியது.

    வண்டிகருப்பணசாமி கோவிலில் கடந்த பல வருடமாகவே இரு தரப்பினரிடையே மோதல் இருந்து வருகிறது. கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் மோதல் உருவாகி கோர்ட்டில் வழக்கும் நடந்து வருகிறது. இதுமட்டுமின்றி காணிக்கைகளை பங்கிடுவதிலும், வாகன நிறுத்த பிரச்சினையிலும் தகராறு இருந்து வருகிறது.

    இந்த சூழ்நிலையில் ரெங்கநாதன் கடத்தப்பட்டு இருப்பதால் அவரை யார்? கடத்தி சென்றார்கள் என கோவில் ஊழியர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமிராவில் பெண் போலீசார் ஒருவரின் உருவம் பதிவாகி இருப்பதால் பல சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அவருக்கு மனைவி இல்லாததால் இதுவரை யாரும் புகார் தெரிவிக்கவில்லை. இச்சம்பவம் வடமதுரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வேடசந்தூர் அருகே பால் வியாபாரி ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக எவர்சில்வர் பாத்திரங்களை வழங்கினார். #Plasticban
    திண்டுக்கல்:

    தமிழக அரசு 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது. இந்த உத்தரவு நேற்று முதல் மாநிலம் முழுவதும் தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. இதனால் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு, வணிகர்கள் மாற்று வழியை கையாண்டு வருகின்றனர்.



    இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் ஒரு பால் வியாபாரி, பாலித்தீன் பைகளை தவிர்க்கும் வகையில் வாடிக்கையாளர்களுக்கு பாத்திரங்களை வழங்குகிறார்.

    வேடசந்தூர் அருகேயுள்ள அம்மாபட்டியை சேர்ந்தவர் தனபால் (வயது 39). பால் வியாபாரி. இதற்காக வேடசந்தூர்-வடமதுரை சாலையில் பால் விற்பனை நிலையம் நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு வந்த வாடிக்கையாளர்களில் ஒருசிலர் பாத்திரம் கொண்டு வருவது இல்லை.

    மேலும் பாலித்தீன் பைகளில் பால் வாங்கி செல்வோரும் உண்டு. இதற்கிடையே தமிழக அரசு பாலித்தீன் பைகளுக்கு தடை விதித்தது. இதனால் தனபால் தனது வாடிக்கையாளர்களுக்கு பாலித்தீன் பைகளை வழங்குவதை நிறுத்தினார். அதேநேரம் வழக்கத்தை மாற்றி திடீரென பால் வாங்குவதற்கு பாத்திரம் கொண்டு வரும்படி வற்புறுத்தினால் வாடிக்கையாளர்கள் கலக்கம் அடைந்து விடுவார்கள் என தனபால் நினைத்தார்.

    மேலும் பாலித்தீன் பையை பயன்படுத்துவதை தவிர்ப்பதில் உறுதியாக இருந்தார். எனவே, வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக எவர்சில்வர் பாத்திரம் வழங்க முடிவு செய்தார். அதன்படி நேற்று பால் வாங்க வந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எவர்சில்வர் பாத்திரங்களை (தூக்குவாளி) வழங்கினார். அதில் வாடிக்கையாளர்கள் வாங்கும் பாலின் அளவுக்கு ஏற்ப எவர்சில்வர் பாத்திரங்களை வழங்கி அசத்தினார்.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக பாத்திரம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தினார். #Plasticban
    திண்டுக்கல் அருகே வங்கியில் இணையதளம் முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    கன்னிவாடி:

    திண்டுக்கல் அருகே மூலசத்திரத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இயங்கி வருகிறது. இஙகு சுற்று வட்டார 19 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சேமிப்பு உள்ளிட்ட கணக்குகள் வைத்துள்ளனர். மேலும் 100 நாள் வேலை திட்டம், அரசின் உதவித் தொகை ஆகியவற்றுக்கும் இதே வங்கியில் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்கள் வரவு செலவு வைத்துள்ளனர்.

    கடந்த 1 மாதமாக இணைய தளம் முடங்கியுள்ளதால் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். தினசரி 10 முதல் 15 நிமிடம் வரையே இணையதளம் இயங்குகிறது. இதனால் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்புகின்றனர்.

    எனவே ஏமாற்றத்துடன் செல்லும் பொதுமக்கள் ஒரு நாள் முழுவதும் வங்கியிலேயே செலவிட வேண்டிய நிலை உள்ளது என புலம்புகின்றனர்.

    இந்த வங்கியில் 13 பேர் வேலை பார்த்து வந்தனர். படிப்படியாக 7 ஆக குறைத்து தற்போது 3 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் தினசரி வாடிக்கையாளர்களுக்கும் வங்கி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

    இணையதளம் முடங்கியது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தினசரி பொதுமக்கள் பணம் எடுக்க மற்றும் கணக்கில் செலுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    எனவே இதற்கு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    திண்டுக்கல் அருகே பெண் சத்துணவு ஊழியரிடம் நகை பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆத்தூர்:

    திண்டுக்கல் அருகே செம்பட்டி பச்சமலையான் கோட்டையை சேர்ந்தவர் பாலமுருகன் மனைவி பழனியம்மாள். கணவர் இறந்து விட்டதால் மகளுடன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் செல்லாயிபுரத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். பச்சமலையான் கோட்டை பிரிவு அருகே செல்போன் அழைப்பு வந்ததால் சாலையோரம் பைக்கை நிறுத்தி விட்டு பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது பின்னால் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் பழனியம்மாள் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பழனியம்மாள் சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடினர். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் தங்க சங்கிலியுடன் தப்பி சென்றனர்.

    இது குறித்து செம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் தாவூத்உசேன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இப்பகுதியில் பெண்களிடம் நகை பறிக்கும் சம்பவம் அதிகரித்துள்ளது. இதனால் மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் வெளியே வர அச்சம் அடைந்துள்ளனர். போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்தி நகை பறிக்கும் கொள்ளை கும்பலை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×