search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cyclone"

    • தென் ஆப்பிரிக்கா, மலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் தயார் நிலையில் உள்ளன.
    • புயலின் கண் பகுதி ஆக்ரோஷமாக நகர்ந்து செல்லும் காட்சியை சர்வதேச விண்வெளி மையம் வீடியோ பிடித்திருக்கிறது.

    இந்திய பெருங்கடலில் அதிபயங்கர வெப்பமண்டல சூறாவளி உருவாகியிருப்பதாக சர்வதேச விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.

    இந்த புயல் இந்தியப் பெருங்கடல் தீவான மொரிஷியசை நோக்கிச் செல்கிறது. புயல் இன்று மொரிஷியசை தாக்கும் எனவும், சூறாவளியால் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மொரிஷியஸ் நேரடி அச்சுறுத்தலை எதிர்க்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    சூறாவளி புயல் ஒரு பயங்கரமான சூறாவளியாக தாக்கும், கனமழை வெள்ளம் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா, மலாவி, ஜாம்பியா, போட்ஸ்வானா மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளும் உச்சகட்ட தயார் நடவடிக்கையில் உள்ளன.

    புயலின் கண் பகுதி ஆக்ரோஷமாக நகர்ந்து செல்லும் காட்சியை சர்வதேச விண்வெளி மையம் வீடியோ பிடித்திருக்கிறது. ஆக்ரோஷ சூறாவளி புயல் நகரும் காட்சி வேகமாக பரவி வருகிறது.

    • புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும்.

    வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று அதிகாலை 3 மணியளவில் முழுமையாக கரையை கடந்ததாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்டு உடனடியாக நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறியதாவது:-

    மாண்டஸ் புயல் பாதிப்பால் 5 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு குடும்பத்தினருக்கு தலா ரூ4 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். புயலால் சேதமடைந்த பயிர்களை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படும். 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளன,மீனவர்கள் யாருக்கும் ஆபத்து இல்லை.

    புயலால் 40 இயந்திர படகுகள்,160 வலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.694 மரங்கள் சாய்ந்துள்ளன. புயலால் விழுந்த மரங்கள் உடனடியாக அகற்றப்பட்டன. 216 இடங்களில் நிவாரண மையம் அமைக்கப்பட்டிருந்தன. 10,743 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • வங்காளதேச கடலோர காவல் படையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    • இரு நாடுகளின் கடலோர காவல் படைகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    சிட்ரங் சூறாவளி தாக்குதலால் வங்காளதேச மீனவர்கள் சென்ற மீன்பிடி படகு ஒன்று நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படகில் இருந்த 20 மீனவர்கள் கடலில் தத்தளித்தனர்.

    இதன்பின்னர், கடலில் மிதந்த பெரிய பொருள் ஒன்றை பிடித்து கொண்டு உதவிக்காக வெகுநேரம் காத்திருந்துள்ளனர்.

    இந்த நிலையில், அந்த வழியே இந்திய கடலோர காவல் படையின் டோர்னியர் விமானம் ஒன்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தது. இதில், நடுக்கடலில் சிக்கி தவித்த வங்காளதேச மீனவர்களை இந்திய படை வீரர்கள் கவனித்தனர்.

    இதனை தொடர்ந்து உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டு மீனவர்களை மீட்டனர். அவர்களை வங்காளதேச கடலோர காவல் படையிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இரு நாடுகளின் கடலோர காவல் படைகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    • மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை மறுநாள் காலையில் புயல் உருவாக வாய்ப்பு
    • புயல் சின்னம் காரணமாக 26ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு

    சென்னை:

    அந்தமான் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது வடமேற்கு அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக் கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 23ம் தேதி (நாளை) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்பின்னர் வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அக்டோபர் 24ம் தேதி (நாளை மறுநாள்) காலையில் புயலாக வலுப்பெறக்கூடும், அதன்பின்னர் வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து 25ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையில் கரையை கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக 26ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, கடலூர், நாகை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    பானிப்புயல் உருவாவதையொட்டி கொடைக்கானலில் 2 நாட்களுக்கு சுற்றுலா இடங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #CycloneFani #TNRains

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். முக்கிய சுற்றுலா இடங்களான குணாகுகை, பில்லர்ராக், மோயர்பாயிண்ட், கோக்கர்ஸ் வாக், பைன்பாரஸ்ட் என 12 மைல் சுற்றளவில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் இயற்கை எழிலுடன் உள்ளது.

    மேலும் பேரிஜம் ஏரிக்கு செல்லவும் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுவார்கள். இவை அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது.

    இது பானிப்புயலாக மாறி வருகிற 29-ந்தேதி வடதமிழகம் மற்றும் தென் ஆந்திரா வழியாக கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்திற்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    கடந்த கஜாபுயலின்போது கொடைக்கானல் மற்றும் மேல்மலை, கீழ்மலைகளில் கடுமையாக பாதிக்கப்பட்டன. மரங்கள், மின்கம்பங்கள் முறிந்துவிழுந்து இயல்புநிலை திரும்ப ஒரு மாதத்திற்கும் மேலானது. எனவே தற்போது உருவாகி உள்ள பானிப்புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அதன் ஒருபகுதியாக கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்கள் அனைத்தும் பாதுகாப்பு கருதி 29,30 ஆகிய 2 நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    மேலும் சேதங்கள் குறித்து ஆய்வு செய்த பின்னர் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர். #CycloneFani #TNRains

    வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். #CycloneFani #TNRains
    சென்னை:

    வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் புதுவையில் அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    இந்நிலையில் இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில், வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அது 24 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும் என்றும் கூறப்பட்டது.

    இந்த புயல் இலங்கை கடல் வழியாக 30-ம் தேதி வட தமிழகம்-தெற்கு ஆந்திரா கடல் பகுதியை நோக்கி நகரும். இதனால் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும். புயல் கரை கடக்கும்போது காற்றின் வேகம் 65 கிமீ வரை அதிகரிக்கலாம் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.



    இந்நிலையில் வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  வலுப்பெற்றது. கிழக்கு இந்திய பெருங்கடல் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவுகிறது.  இது மேலும் வலுப்பெற்று புயலாக மாறி வட தமிழகத்தில் 2 நாட்களில் நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    புயல் கரையை கடக்கும்போது தமிழகத்தின்  கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார்.  இந்த ஆலோசனை கூட்டத்தில் அரசுத்துறைகளின் உயர் அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

    புதுச்சேரியிலும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. விடுப்பு எடுத்த அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் உடனடியாக பணிக்கு திரும்பும்படி முதல் மந்திரி நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். #CycloneFani #TNRains
    வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.#TNRains #CycloneFani
    சென்னை:

    வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப்பகுதிகளில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர், பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரிகள் மற்றும் கடலோர காவல்படையினருடன் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.

    இந்நிலையில் தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தற்போது தெரிவித்துள்ளது.  #TNRains #CycloneFani
    அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை ‘பபுக் புயல்’ நேற்று மாலை தாக்கியது. #Andaman #Cyclone #Pabuk
    புதுடெல்லி:

    கடந்த சில தினங்களுக்கு முன்பு தாய்லாந்து வளைகுடா கடல் பகுதியில் உருவான ‘பபுக்’ புயல் அந்தமான் தீவு பகுதியை நோக்கி வேகமாக நகர்ந்து வந்தது. இந்த புயல் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகள் மற்றும் ஒடிசா மாநிலத்தின் கடலோர பகுதிகளை மணிக்கு 80 கி.மீட்டர் வேகத்தில் தாக்கும் என்று இந்திய வானிலை இலாகா தெரிவித்து இருந்தது. மேலும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் பபுக் புயல் நேற்று மாலை 5.30 அளவில் அந்தமான் தீவின் தலைநகர் போர்ட் பிளேர் பகுதியை தாக்கியது. இதேபோல் நிகோபார் தீவு பகுதிகளும் புயலின் தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது பல இடங்களில் பலத்த மழையும் கொட்டியது. புயல் அந்தமானை தாக்குவதற்கு முன்பாகவே வலு இழந்து போனதால் அதன் தாக்கம் பெரிய அளவில் இருக்கவில்லை.

    அதன்பின்னர் பாபுக் புயல் ஆழந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி தென்கிழக்கு வங்காள வளைகுடா கடல் பகுதியை நோக்கி நகர்ந்தது.

    புயல் தாக்கியதால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் தெரியவரவில்லை.

    முன்னதாக வானிலை இலாகாவின் அறிக்கையை சுட்டிக் காண்பித்து, மத்திய உள்துறை அமைச்சகம் பபுக் புயல் குறித்து அந்தமான் மற்றும் நிகோபார் தீவு பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்தது.

    இந்த எச்சரிக்கையின்படி சாலை வழி மற்றும் வான்வழி போக்குவரத்துக்கு இடையூறும் உயிர் மற்றும் உடைமைகளுக்கு பெருத்த சேதம் ஏற்படலாம் என்பதால் 50 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தனர்.
    புயலை பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க தேவையில்லை என்று புதுக்கோட்டையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MinisterJayakumar #GajaCyclone

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் கடலோர பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களையும், புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கோட்டைப்பட்டினம் விசைப் படகு மீனவர் சங்கத்தினரை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டதுடன், கட்டுமாவடி, பிள்ளையார்திடல், வடக்கு புதுக்குடி உள்ளிட்ட இடங்களில் நிவாரண உதவிகளை வழங்கிய பின்னர் ஜெகதாப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தையும் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது :-

    கடலோர பகுதிகளில் புயலுக்கு முன்னரே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் நிவாரண பணிகளில் எந்த தயக்கமும் ஏற்படவில்லை. புயல் பாதித்த பகுதிகளில் தொடர்மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகள் குறித்த பல்வேறு சேத விபரங்கள் கணக்கெடுக்கப்பட்டு வருவதுடன் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

    புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை மத்திய குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களுக்கும் மத்திய குழு ஆய்வுக்கு செல்ல முடியாது. அதிகமாக பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்து விரைவில் அதற்கான அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்தால்தான் நிதியும் விரைவாக கிடைக்கும்.


    தமிழக அரசு கோரியப்படி ரூ.15ஆயிரம் கோடியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்கு முன்பு இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரணம் வழங்கியதில் பின்பற்றியதை இம்முறை மத்திய அரசு பின்பற்றாது என நம்புகிறோம்.

    விவசாய கடன் தள்ளுபடி என்பது அரசின் கொள்கை முடிவு.அதை தமிழக முதல்வர் முடிவு செய்வார். தமிழக அமைச்சர்கள் மக்களோடு மக்களாக உள்ளனர். மக்களை அமைச்சர்கள் சந்திக்கவில்லை என்று விமர்சிப்பவர்கள் வானத்தில் இருந்து குதித்தவர்கள் போன்று பேசக்கூடாது. எதிர்க்கட்சிகள் இதில் அரசியல் செய்யக்கூடாது. புயலில் இருந்து மீனவவ்களை காப்பாற்றி உள்ளோம். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு விரைவில் நிவாரண தொகை வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது அப்போது அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தானே. வர்தா. ஒக்கி என‌ பல புயல்களில் பயிற்சி எடுத்தவர்கள் நாங்கள். யாரும் எங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க வேண்டாம். ஜெயலலிதா இருந்த போதிலிருந்தே பல விமர்சனங்களை சந்தித்தவர்கள் நாங்கள். இது அரசியல் ஆக்குவதற்கான களம் அல்ல. கஜா‌ புயல் மீட்புக்குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைகள் வழங்கலாம். மக்களை தூண்டி விட்டு அரசியல் செய்யக் கூடாது.

    கஜா புயல் மீட்புக்கு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட‌ அவசியம் இல்லை. மக்களுக்கு உதவி செய்ய ஸ்டாலினை யாரும் தடுக்கவில்லை. 2 லாரிகளில் நிவாரணப் பொருட்களை அனுப்பி வைத்து விட்டு ஓடி ஒளியும் ஆட்கள் இல்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றோம், மக்களோடு மக்களாக இருக்கின்றோம். யாரும் எங்களுக்கு அறிவுரை சொல்ல தேவையில்லை. அவரவர்கள் வேலையை பார்த்தாலே போதும். நாங்கள் எங்கள் வேலையை பார்த்து வருகிறோம். மக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள் என்று கூறுவது திட்டமிட்ட சதி. இந்த சதியை ஒரு குழுவாக இருந்து செயல்படுத்துகிறார்கள். இதற்கெல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #GajaCyclone

    கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்தனர். இன்று தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். #gajacycloneaffected
    சென்னை:

    கஜா புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

    பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசி, நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு குழு ஒன்றை அனுப்பி அறிக்கை கேட்க முடிவு செய்தது.

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் மத்திய நிதித்துறை (செலவீனங்கள்) அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் (ஐதராபாத்) இயக்குனர் (பொறுப்பு) பி.கே.ஸ்ரீவத்சவா,

    மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக துணைச் செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர் ஆதாரத்துறை இயக்குனர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் நேற்று இரவு 8 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள் நேற்றிரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கினர். அந்த ஓட்டலில் குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் இரவில் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர்களின் பயணத்திட்டம் பற்றி முடிவு செய்யப்பட்டது.

    இன்று (சனிக்கிழமை) காலை 10.15 மணியளவில் சென்னை தலைமை செயலகத்துக்கு குழுவினர் வருகின்றனர். 10.30 மணிக்கு அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுகின்றனர். பின்னர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

    இந்த சந்திப்பின்போது வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வருவாய் துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட முக்கிய அரசு துறைகளின் செயலாளர்கள் மத்திய குழுவினருடன் ஆலோசனை செய்வார்கள்.

    அதன் பிறகு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய குழுவினர் திருச்சிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் முதலில் புதுக்கோட்டைக்கு சென்று கஜா புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கின்றனர்.

    அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளில் (25 மற்றும் 26-ந் தேதிகளில்) வரிசையாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். புயல் அதிகமாக பாதித்த இந்த 4 மாவட்டங்களை மட்டும் அவர்கள் பார்வையிடுவதாக தெரிகிறது.

    26-ந் தேதி மாலை அவர்கள் சென்னை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்திக்கும் அவர்கள், பின்னர் டெல்லி திரும்புகின்றனர்.

    கஜா புயல் ஏற்படுத்திய சேதாரத்தை கணக்கிட்டு சில நாட்களில் மத்திய அரசுக்கு மத்திய குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். #gajacycloneaffected #edappadipalanisamy #CentralCommittee
    டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, கஜா புயல் பாதிப்பு தொடர்பாக அறிக்கை அளித்து, மத்திய அரசு நிவாரண நிதி வழங்கும்படி கேட்டுக்கொண்டார். #GajaCyclone #EdappadiPalaniswami #Modi
    புதுடெல்லி:

    தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் ‘கஜா’ புயல் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    அரசு சார்பிலும், தனியார் நிறுவனம், அரசியல் கட்சிகள், திரை உலகம் உள்பட பல்வேறு தரப்பில் இருந்தும் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், ‘கஜா’ புயல் பாதிப்பு குறித்து விளக்கவும், சேத மதிப்பு தொடர்பான விவரங்களை பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான நிதியை பெற்றுவருவதற்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றார்.  அவருடன் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.

    நேற்று இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று காலை அங்கிருந்து பிரதமர் இல்லத்திற்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.



    அதில் தமிழகத்துக்கு தேவையான மத்திய அரசின் நிதி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. கஜா புயலினால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டன? அதிலிருந்து மக்களை மீட்கும் பணிகள் மற்றும் நிவாரணத்துக்கு ஆகும் செலவுகள் குறித்து கூறப்பட்டுள்ளது. கணிசமான நிதியை முதல் கட்டமாக ஒதுக்கும்படி பிரதமரிடம், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுள்ளார். இதையடுத்து மத்திய அரசு முதற்கட்டமாக குறிப்பிட்ட நிதியை ஒதுக்கீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் தமிழக அரசின் கோரிக்கையின் அடிப்படையில், சேதங்களை மதிப்பிடுவதற்கு மத்திய அரசு தனது அதிகாரிகள் அடங்கிய குழுவை தமிழகத்துக்கு அனுப்பி ஆய்வுகளை நடத்தும். புயல் சேதங்களை அந்த குழு மதிப்பிட்டு மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்கும். அதன் பின்னர் தேவையான நிதியை தமிழகத்துக்கு மத்திய அரசு அளிக்கும். #GajaCyclone #EdappadiPalaniswami #Modi
    கஜா புயல் கரையை கடந்த போது புதுவையில் பலத்த காற்றால் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. #gajacyclone #heavyrain #rain

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை கஜா புயலாக உருவெடுத்தது. இந்த புயல் நாகை அருகே கரையை கடக்கும் என்றும், அந்நேரத்தில் பலத்த காற்றோடு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து புதுவை அரசு சார்பில் கஜா புயலை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    தாழ்வான பகுதி மக்களை தங்க வைக்க சமுதாயக்கூடம், அரசு பள்ளிகள் திறந்து வைக்கப்பட்டது. பாதிப்புகளை தெரிவிக்க உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமியும், அமைச்சர் ஷாஜகானும் நகர பகுதியில் கால்வாய்கள் தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். அரசுத் துறை அலுவலகங்களுக்கு சென்று முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

    அரசு பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது. இரவு 8 மணிக்கு மேல் கஜா புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்தது. இதையடுத்து அரசு ஊழியர்கள் 4.30 மணிக்கே பாதுகாப்பாக வீட்டிற்கு செல்ல உத்தரவிடப்பட்டது.

    புயல் எதிரொலியாக நேற்று மதியம் கடற்கரை சாலையில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. காலை முதல் கடல் அலைகளில் சீற்றம் இருந்தது. வழக்கத்தை விட இருமடங்கு அலைகளின் உயரம் இருந்தது. துறைமுகத்தில் 9-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடலில் இறங்க அனுமதி மறுக்கப்பட்டது.

    நேற்று காலை முதல் வானம் மப்பும், மந்தாரமுமாக இருந்தது. ஆனால் மழை பெய்யவில்லை. மதியம் 2 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. 10 நிமிடம் பெய்த மழை தொடர்ந்து நீடிக்கவில்லை. மேகக்கூட்டங்களின் சுழற்சியால் அவ்வப்போது வெளிச்சமும், மீண்டும் மழையும் பெய்தது.

    கடற்கரை சாலையில் புயல் சீற்றத்தை வேடிக்கை பார்க்க பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்.

    புயலையொட்டி மாலையில் வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன. பெரும்பாலான கடைகள், வணிக நிறுவனங்கள் இரவு 8 மணிக்கு மேல் பூட்டப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் பஸ்கள் இயக்கப்படவில்லை. பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை.

    சில தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் கிராமங்களில் இருந்து புதுவைக்கு வந்து பணிபுரிபவர்களும், பயணிகளும் அவதிப்பட்டனர். பெரும்பாலான சாலைகள் வாகன போக்குவரத்தின்றி வெறிச்சோடியது. பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

    குளிர்ந்த காற்று வீசினாலும் பெருமழை பெய்யவில்லை. ஆனால் இன்று அதிகாலை 1.30 மணிக்கு பலத்த வேகத்துடன் சூறாவளி காற்று வீசியது. அவ்வப்போது மழையும் பெய்தது. நகர பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெரும் பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    பலத்த காற்றால் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. நகர பகுதியில் பேனர்கள் அகற்றப்பட்டிருந்ததால் பெரியளவில் பாதிப்பு இல்லை. ஆனால் வியாபார நிறுவனங்களின் பெயர் பலகைகள் பெயர்ந்து விழுந்தது.

    லப்போர்த் வீதியில் ஒரு மரம் பெயர்ந்து விழுந்தது. அது உடனடியாக அகற்றப்பட்டது. தொடர்ந்து கனமழை பெய்யாததால் மழைநீர் எங்கும் தேங்கவில்லை. வழக்கமாக மழைநீர் தேங்கும் பாவாணர் நகர், கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர் பகுதிகளில் கூட தண்ணீர் தேங்கவில்லை. இன்று அதிகாலை 6மணியளவில் ஒவ்வொரு பகுதியாக மின் இணைப்பு தரப்பட்டது.

    புயல் காரணமாக இன்றும் அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களாக நடத்தப்பட வேண்டிய பல்கலைக்கழக தேர்வுகள் வேறு தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை முதல் வானம் இருண்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இன்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் 5 செமீ மழை புதுவையில் பதிவாகியுள்ளது. அதிகாலை வீசிய சூறாவளி காற்றால் நகரபகுதிகள் முழுவதும் கிளைகள் முறிந்தும், கிளைகள், பூக்கள், குப்பை, கூளமாக கிடக்கிறது.

    இந்த குப்பைகளை அகற்றும் பணிகளில் உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஒருவார காலமாக மிரட்டி வந்த ‘கஜா’ புயல் புதுவையில் பெரும் சேதத்தை விளைவிக்காமல் கடந்து சென்றுள்ளது அரசையும், மக்களையும் நிம்மதி பெருமூச்சடைய வைத்துள்ளது. #gajacyclone #heavyrain #rain

    ×