என் மலர்

  செய்திகள்

  கஜா புயல் பாதிப்பு- ஆய்வு செய்ய மத்திய குழுவினர் முதல்-அமைச்சருடன் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை
  X

  கஜா புயல் பாதிப்பு- ஆய்வு செய்ய மத்திய குழுவினர் முதல்-அமைச்சருடன் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழுவினர் சென்னை வந்தனர். இன்று தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். #gajacycloneaffected
  சென்னை:

  கஜா புயல் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்பட 12 மாவட்டங்களை புரட்டிப்போட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் வீடு, உடைமைகள் மற்றும் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

  பிரதமர் நரேந்திர மோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் சந்தித்து பேசி, நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய அரசு தமிழகத்துக்கு குழு ஒன்றை அனுப்பி அறிக்கை கேட்க முடிவு செய்தது.

  மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் மத்திய நிதித்துறை (செலவீனங்கள்) அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின் (ஐதராபாத்) இயக்குனர் (பொறுப்பு) பி.கே.ஸ்ரீவத்சவா,

  மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக துணைச் செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர் ஆதாரத்துறை இயக்குனர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  இந்த குழுவினர் நேற்று இரவு 8 மணியளவில் விமானம் மூலம் சென்னை வந்தனர். அவர்கள் நேற்றிரவு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கினர். அந்த ஓட்டலில் குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு தலைமையில் இரவில் கூட்டம் நடைபெற்றது. அதில் அவர்களின் பயணத்திட்டம் பற்றி முடிவு செய்யப்பட்டது.

  இன்று (சனிக்கிழமை) காலை 10.15 மணியளவில் சென்னை தலைமை செயலகத்துக்கு குழுவினர் வருகின்றனர். 10.30 மணிக்கு அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசுகின்றனர். பின்னர் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

  இந்த சந்திப்பின்போது வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வருவாய் துறை முதன்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட முக்கிய அரசு துறைகளின் செயலாளர்கள் மத்திய குழுவினருடன் ஆலோசனை செய்வார்கள்.

  அதன் பிறகு இன்று பிற்பகல் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மத்திய குழுவினர் திருச்சிக்கு செல்கின்றனர். அங்கிருந்து அவர்கள் முதலில் புதுக்கோட்டைக்கு சென்று கஜா புயல் பாதித்த இடங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்கின்றனர்.

  அதைத் தொடர்ந்து நாளை மற்றும் நாளை மறுநாளில் (25 மற்றும் 26-ந் தேதிகளில்) வரிசையாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் புயல் பாதித்த இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர். புயல் அதிகமாக பாதித்த இந்த 4 மாவட்டங்களை மட்டும் அவர்கள் பார்வையிடுவதாக தெரிகிறது.

  26-ந் தேதி மாலை அவர்கள் சென்னை திரும்புவார்கள் என்று கூறப்படுகிறது. தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்திக்கும் அவர்கள், பின்னர் டெல்லி திரும்புகின்றனர்.

  கஜா புயல் ஏற்படுத்திய சேதாரத்தை கணக்கிட்டு சில நாட்களில் மத்திய அரசுக்கு மத்திய குழுவினர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். #gajacycloneaffected #edappadipalanisamy #CentralCommittee
  Next Story
  ×