search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chitra pournami"

    • சித்ரா பவுர்ணமி கிரிவலம்' தனித்துவமும் மகத்துவமும் கொண்டது.
    • மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை இந்திரன் பூஜிப்பார்.

    மாதந்தோறும் பவுர்ணமி தினம் வந்தாலும், சித்திரை மாதம் வரும் `சித்ரா பவுர்ணமி' தினத்துக்கு கூடுதல் சிறப்புகள் உள்ளது.

    சித்திரை மாதம் பவுர்ணமி திதியில், சித்திரை நட்சத்திரமும் கூடி வருவதால் இந்த தினத்தை `சித்ரா பவுர்ணமி' என்று அழைக்கிறார்கள். மாதத்தின் பெயரும் நட்சத்திரத்தின் பெயரும் அன்று ஒன்றாகி இருக்கும்.

    அது மட்டுமின்றி சூரியபகவான் உச்சம் பெற்ற மேஷ ராசியில் இந்த பவுர்ணமி தினம் வரும். இதுவும் சித்ரா பவுர்ணமி தினத்தின் சிறப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

    அம்மன் ஆலயங்களில் நடைபெறும் அபிஷேக, ஆராதனைகள், திருவிளக்கு பூஜை, பால்குடங்கள் எடுப்பது மற்றும் சித்திரை கஞ்சி தயாரிக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்பது போன்றவற்றில் கலந்து கொள்ளலாம்.

    சிவாலயங்களிலும், பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக பூஜைகள், வீதி ஊர்வலங்கள் நடைபெறும். மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரரை இந்திரன் பூஜிப்பார். அது போல காஞ்சீபுரத்தில் வரதராஜ பெருமாளை பிரம்மன் வழிபடுவார்.

    இது போன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள பழமை சிறப்பு வாய்ந்த ஆலயங்களில் சித்ரா பவுர்ணமி திருவிழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். அதில் திருவண்ணாமலையில் நடைபெறும் `சித்ரா பவுர்ணமி கிரிவலம்' தனித்துவமும் மகத்துவமும் கொண்டது. அது ஏன் என்பதை நாம் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டும்.

    ஒவ்வொருவரது வாழ்விலும் அமாவாசை, பவுர்ணமி இரண்டு திதிகளும் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சக்தி படைத்தவை.

    சூரியனுடன் 0 டிகிரியில் சந்திரன் இணைவது அமாவாசை ஆகிறது. பிறகு சந்திரன் தினமும் 12 டிகிரி வீதம் நகர்ந்து 15-வது நாளில் 180 டிகிரியில் சூரியனுக்கு சம சப்தமாகும் போது பவுர்ணமி ஆகிறது.

    பவுர்ணமியில் சந்திரன் முழுமையான ஆகர்ஷண சக்தியைப் பெற்று அருள் ஆற்றலை வெளிப்படுத்துவார். அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் கூடுதல் பலன்களைத் தரும்.

    சித்ரா பவுர்ணமி தினத்தன்று சந்திரன் இதுவரை இல்லாத அளவுக்கு ஆகர்ஷ்ண சக்தியை வெளிப்படுத்துவார். அதாவது ஆண்டுக்கு ஒரு தடவையே இந்நாளில் சந்திரனிடம் இருந்து பல மடங்கு அளவுக்கு ஈர்ப்பு- சக்தி வெளிப்படும்.

    சந்திரன் வழங்கும் அந்த சக்தியை நாம் பெற வேண்டும். சந்திர ஒளி நம் உடல் மீது பட வேண்டும். இதை கருத்தில் கொண்டே சங்க காலத்தில் இருந்த நம் மூதாதையர்கள் சித்ரா பவுர்ணமியை மிக, மிகச் சிறப்பாக கொண்டாடினார்கள்.

    வீடுகளில் யாரும் முடங்கிக் கிடக்கக்கூடாது. அன்றிரவு வெளியில் வந்து சந்திரன் தரும் சக்தியை பெற வேண்டும் என்று ஆலயங்களில் விதம், விதமாக விழாக்களை உருவாக்கினார்கள். இந்த அடிப்படையில் தான் சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்லும் மரபு உண்டானது.

    இந்த உண்மையை தெரிந்து கொண்டதால் தான் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் திருவண்ணாமலைக்கு படையெடுத்து வருகிறார்கள். நாளை 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல வருவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    திருவண்ணாமலையில் எந்த மாதம், எந்த கிழமையில் கிரிவலம் சென்றால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை ஏற்கனவே நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்துள்னர். ` சித்ரா பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும்?' என்று பலரும் யோசிக்கலாம்.

    இதற்கு ஒரே வரியில் பதில் சொல்வது என்றால், `நம் ஆத்ம பலம் அதிகரிக்கும்' என்ற மிகப்பெரிய பலன் கிடைக்கும்.

    ஒவ்வொருவருக்கும் `ஆத்ம பலம்' என்பது மிக, மிக முக்கியமானது. ஒருவரிடம் ஆத்ம பலம் பெருகினால் தான் அவர் இந்த உலகில் சிறப்பான வாழ்க்கை வாழ முடியும்.

    ஆத்ம பலம் அதிகரித்தால் கடவுளைத் தேடும் ஞானமும், அறிவாற்றலும் அதிகரிக்கும். இதற்கு பின்னணியில் சூரியனும், சந்திரனும் உள்ளனர்.

    பித்ருகாரரான சூரியனும், மாத்ருகாரரான சந்திரனும் சிவசக்தியின் ஐக்கியமாக போற்றப்படுகிறார்கள். பிராணாயமம், யோகா போன்றவற்றில் சிறப்பு பெற சூரியனின் அனுக்கிரகமும், ஆத்ம பலம் மேம்பட சந்திரனின் அனுக்கிரகமும் அவசியம் தேவை.

    ஆத்ம பலம் மேம்பட்டால், மனம் வசப்படும். மனம் கட்டுப்பாடு இல்லாமல் போய் விட்டால் வாழ்க்கை தடம் மாறி விடும். மனம் கட்டுப்பட, கட்டுப்பட நாம் யார், நாம் எப்படி வாழ வேண்டும் என்ற பக்குவம் உண்டாகும்.

    பிறவிப் பெருங்கடலில் நீந்தி கரையேற வேண்டும் என்ற தாக்கத்தை இது தான் கொடுக்கும். முக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தை இது ஏற்படுத்தும்.

    இந்த பக்குவத்தை நாம் சித்ரா பவுர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் போது பெற முடியும். இந்த பக்குவம் பெருக, பெருக உங்கள் வாழ்க்கை பிரகாசிக்கும்.

    பணம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தூய்மையான, நிம்மதியான வாழ்வை நாம் வாழ முடியும். தூய்மையும், நிம்மதியும் ஒருவருக்கு இருந்து விட்டால், அவர் எல்லா சுகங்களையும் அனுபவிக்க முடியும்.

    ஒரு மனிதனுக்கு இந்த பிறவியில் இதை விட வேறு என்ன வேண்டும். எனவே எல்லாம் தரும் ஆத்ம பலத்தைப் பெற சித்ரா பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்வோம். சிறப்பான வாழ்வை உறுதி செய்வோம்.

    • வைகாசி பவுர்ணமியன்று வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உற்சவம்.
    • மாதந்தோறும் பிரதோஷ கால பூசையும் நடைபெறும்.

    சித்திரை மாதம் :- புதுவை மரவாடி நடேச குப்புசாமி பிள்ளை குடும்பத்தார் 1909-ம் ஆண்டு முதல் தமிழ் வருடப்பிறப்பன்று காலை முதல் அபிஷேக ஆராதனை செய்து வருகின்றனர். வருடப்பிறப்பு வீதி உற்சவம், சித்ரா பவுர்ணமி வீதி உற்சவம், கும்பாபிஷேக ஆண்டு விழா, சங்காபிஷேகம் வீதி உற்சவம், சுக்ல சதுர்த்தி அன்று ஆலயத்தினுள் உற்சவம்.

    வைகாசி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் ஆலயத்தில் உற்சவம், வைகாசி பவுர்ணமியன்று வெள்ளி மூஷிக வாகனத்தில் வீதி உற்சவம். (அன்று ஏழைகளுக்கு அன்னமளித்தல்)

    ஆனி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் ஆலயத்தில் உற்சவம். ஆனித்திருமஞ்சனம், நர்த்தன கணபதி அபிஷேகம், ஆலய உற்சவம்.

    ஆடி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் ஆலயத்தில் உற்சவம், ஆடி அமாவாசை அன்று காலை கடல் தீர்த்த வாரி, வீதி உற்சவம்.

    ஆவணி மாதம்:- விநாயக சதுர்த்தி அன்று இரவு வெள்ளி மூஷிக வாகன வீதி உற்சவம், பிரம்ம உற்சவம், பவுர்ணமியை அனுசரித்துக் கொடியேற்றம்.

    புரட்டாசி மாதம்:- சதுர்த்தியை அனுசரித்துப் பவித்ர உற்சவம் ஐந்து நாட்களுக்கு நடைபெறும். ஆறாவது நாள் வீதி உற்சவம்.

    ஐப்பசி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்க ளில் உற்சவம், பவுணர்மியை அனுசரித்த அன்னாபிஷேகம், கந்தசஷ்டி உற்சவம் 9 நாட்கள்.

    கார்த்திகை மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் தீப உற்சவம்.

    மார்கழி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் உற்சவம். ஆருத்ரா தரிசனம்.

    தை மாதம்:- முதல் தேதி சங்கராந்தி உற்சவம், மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் உற்சவம், தை அமாவாசை நாளில் காலை மூஷிக வாகனத்தில் கடல் தீர்த்தவாரி வீதி உற்சவம், தைப்பூச உற்சவம்.

    மாசி மாதம்:- மாத சுக்ல சதுர்த்தி, கிருத்திகை நாட்களில் உற்சவம். மாசி மகம் அன்று காலை மூஷிக வாகனத்தில் கடல் தீர்த்தவாரியும், மாலையில் திருவீதி உலாவும், சிவராத்திரி நான்கு காலம் பூசை மறுநாள் வீதியுலா.

    பங்குனி மாதம்:- மாத சுக்ல பூர்த்தியில் தமன உற்சவம், பங்குனி உத்திர உற்சவம்.

    ஸ்படிகலிங்கத்திற்கு தினசரி காலை 10 மணியளவில் அபிஷேக ஆராதனையும், மாதந்தோறும் பிரதோஷ கால பூசையும் நடைபெறும்.

    • தை மாதத்தில் பௌர்ணமி, பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் முருக வழிபாட்டிற்கு ஈடு இணை இல்லை.
    • மாசி மாதப் பௌர்ணமி, மக நட்சத்திரத்தில் வரும். அன்று அம்பிகையை வழிபட, தேவியின் பூரண அருள் கிட்டும்.

    மாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது. சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு? சித்திரைமாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும்.

    இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அடுத்தடுத்து தானதர்மங்கள் செய்ய அக்ஷய திருதியை, சித்திரா பௌர்ணமி என்று எவ்வளவு புண்ணிய நாட்கள்!

    வானமண்டலத்தில் சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை "திதி' என்கிறோம். அமாவாசையன்று சூரியனும் சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு "திதி' கொடுப்பதும், (அன்று சூரிய சந்திரர்கள் ஒரே டிகிரியில் இணைந்திருப்பார்கள்.) பௌர்ணமியன்று சிறப்பான பூஜைகள், வழிபாடுகள் செய்வதும் சிறந்தது. (அன்று சூரிய சந்திரர்கள் சம சப்தமமாக இருப்பார்கள்.)

    அமாவாசையில் சூரியனுடன் 0 டிகிரியில் இணைந்த சந்திரன், தினமும் 12 டிகிரி நகர்ந்து 15ம் நாளான பௌர்ணமி அன்று 180ம் டிகிரியை அடைகிறது; சூரியனுக்கு சம சப்தமமாகி முழுமையான ஆகர்ஷண சக்தியை (புவியீர்ப்பு) வெளிப்படுத்துகிறது. அதனால் அன்று செய்யும் பூஜைகள், வழிபாடுகள் சிறப்பைப் பெறுகின்றன.

    சிவசக்தி ஐக்கியம்:

    சூரியனை பித்ருகாரகன் (தந்தையை நிர்ணயிப்பவர்) என்றும், சந்திரனை மாத்ருகாரகன் (தாயை நிர்ணயிப்பவர்) என்றும் கூறுவர். அதாவது அமாவாசையன்று சூரியனும், சந்திரனும் இணையும் நாளில் மூதாதையர்களுக்கு திதி, தர்ப்பணம் செய்கிறோம். சூரியனுக்கு அதிதேவதையாக பரமசிவனையும், சந்திரனுக்கு அதிதேவதையாக பார்வதியையும் வைத்திருப்பதும் ஆராய்ச்சிக்கு உகந்தது. அமாவாசை, பௌர்ணமி அன்று முறையே சூரிய சந்திர சங்கமத்தையும், சமசப்தமமாக இருப்பதையும் சிவசக்தியின் ஐக்கியம் என்று கூறுவது மிகையாகாது.

    மனித மனத்தின் மீது அமாவாசை, பௌர்ணமி திதிகளின் தாக்கம்:

    அமாவாசை, பௌர்ணமி அன்று நிகழும் ஆகர்ஷண சக்தியின் வேறுபாடுகள் மனித மன இயல்புகளில் பெரும் மாறுதல்களை உண்டாக்குகின்றன என்பதை மருத்துவம் ஏற்றுக் கொள்கிறது. இந்தக் காலங்களில் மன நோயாளிகளின் நடத்தையில் மாற்றங்கள் உண்டாகின்றன. மேலும் ஜாதகத்தில் சூரிய சந்திரர்கள் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சித்தப்பிரமை, மனஅழுத்தம், ஹிஸ்டீரியா போன்றவைகள் உண்டாவதையும் அனுபவ ரீதியாகக் காண்கிறோம்.

    இதற்கு ஜோதிடத்தின் மூலமாக காரணங்களைத் தேடுங்கால், சூரியனை ஆத்மகாரகன் என்றும், சந்திரனை மனோகாரகன் என்றும் நமது புராதன நூல்கள் குறிப்பிடுவதன் மகத்துவம் புரிகிறது. நமது ஆத்ம பலம் பெருகினால்தான் நம்மால் இந்த உலகில் சிறப்புடன் வாழ முடியும். கடவுளைத் தேடும் ஆற்றலும் உண்டாகும். அதாவது ஆன்மீகத்தின் மூலமாக ஆத்மபலத்தைப் பெற, இத்தகைய ஜாதக அமைப்பு உதவுகிறது. ப்ராணாயாமம், யோகா போன்றவற்றிற்கு சூரிய பகவானின் அனுக்கிரகம் அவசியம் தேவை. ஆத்மபலம் மேம்பட, மனதின் சக்தி அவசியம். "மனம் வசப்பட உன்னை உணர்வாய்' என்பது பெரியோர் வாக்கு. அப்படிப்பட்ட மனதை நிர்ணயிப்பவர் சந்திர பகவான். அதனால்தான் சூரிய சந்திரர்களின் பலத்தைப் பெருக்கிக் கொள்வதால், வசிய சக்திகளைப் பெறும் ஆற்றல் உண்டாகிறது.

    பௌர்ணமியின் சிறப்பு:

    பௌர்ணமிகளில் சித்திரா பௌர்ணமி தினத்தன்று மாதத்தின் பெயரும், நட்சத்திரத்தின் பெயரும் ஒன்றாகி, சித்திரை மாதத்தில் சூரியன் உச்ச பலம் பெறுகிறார். சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். கார்த்திகை மாத பௌர்ணமி தினத்தன்று சூரியன் கார்த்திகை மாதத்திலும், சந்திரன் கார்த்திகை நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பார். அன்று சந்திரன் உச்ச பலம் பெறுவார். மற்றும் சில பௌர்ணமிகளுக்கு சிறப்புகள் உள்ளன. வைகாசி மாதம் வரும் பௌர்ணமி, விசாக நட்சத்திரத்தில் வரும்.

    அன்று முருகக் கடவுள் அவதரித்த தினமாகும். மார்கழி மாதத்தில் வரும் பௌர்ணமி, திருவாதிரை நட்சத்திரத்தில் வரும். அது பரமசிவனின் திரு நட்சத்திரமாகி, ஆருத்ரா தரிசனம் காண பாபங்கள் தொலைந்துவிடும். அன்று ஆனந்த நடனமாடுகிறார் நடராஜப் பெருமான். அபஸ்மாரம் என்னும் முயலகனை தனது திருவடிகளால் மிதித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீநடராஜரை வழிபட்டால், அபஸ்மாரம் என்னும் காக்காய் வலிப்பு நோய் குணமாகும் என்பதும் ஓர் "சிதம்பர ரகசியம்.'

    தை மாதத்தில் பௌர்ணமி, பூசம் நட்சத்திரத்தில் வரும். அன்று செய்யும் முருக வழிபாட்டிற்கு ஈடு இணை இல்லை. மாசி மாதப் பௌர்ணமி, மக நட்சத்திரத்தில் வரும். அன்று அம்பிகையை வழிபட, தேவியின் பூரண அருள் கிட்டும். பங்குனி மாதத்துப் பௌர்ணமி, உத்திர நட்சத்திரத்தில் வரும். அன்று திருச்செந்தூரில் ஐராவத மண்டபத்தில் 108 சிவலிங்கங்கள் சாட்சியாக ஸ்ரீவள்ளி-ஸ்ரீமுருகர் திருமணம் நடப்பதைப் பார்த்தவர்கள் மறுபிறவி எய்தார் என்பது உண்மை.

    மேலும் பஞ்சகோசங்களில் பரமேஸ்வரனுக்கு ப்ராணமய கோசமும், பராசக்திக்கு மனோமய கோசமும் கொடுக்கப்பட்டுள்ளதை ஆராய்ச்சி செய்து பார்க்கையில் நம் வாழ்க்கையில் சூரிய சந்திரர்களின் தாக்கம், இந்தப் பார்வதி-பரமேஸ்வர வழிபாட்டினாலும், "நமசிவாய' என்னும் திருநாம ஜபத்தினாலும், லலிதா சஹஸ்ரநாம பாராயணத்தினாலும் பெருமளவு நலம் சேர்க்கும் என்பதில் இரண்டாவது கருத்துக்கு இடமில்லை என்று உறுதியாகக் கூறலாம்.

    அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.

    வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.

    உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.

    அது என்ன புத்தகம், பேனா? புதிதாக இருக்கிறதா? ஆம்! எமனின் சபையில் நம் பாவ புண்ணியக்கணக்கை இம்மியும் பிசகாமல் எழுதும் சித்திரகுப்தன் பிறந்த நாளாகவும் இது கருதப்படுவதால் நம் கணக்கை நல்ல முறையில் அவர் எழுத இந்த தானம் கொடுக்கப்படுகிறது என்கிறார்கள். சில கோவில்களில் சித்திரகுப்த பூஜையும் செய்யப்படுகிறது.

    இனி கோவில்களில் சித்திரா பௌர்ணமியை ஒட்டி என்னென்ன சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன என்று பார்ப்போம். குறிப்பாக அம்மன் கோவில்களில் பால்குடங்கள் எடுப்பது, திருவிளக்கு பூஜை என்றும், சிவாலயங்களிலும் பெருமாள் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகங்கள், இறைவன் வழிபாடு, வீதி ஊர்வலம் என்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

    ஆண்டாண்டுகளாக நடந்துவரும் இதுபோன்ற திருவிழாக்களும், சிறப்பு ஆராதனைகளும் மக்களின் ஆன்மீக உணர்வுகளை வளர்க்க உதவுகின்றன என்பதில் ஐயமில்லை.

    • சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடை பெற்றது.
    • அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் கீழத்தெருவில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம், அதன்படி இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமியையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது.

    முன்னதாக கோவிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பால் காவடி, பறவை காவடி எடுத்து கொண்டு ஊர்வலமாக தேர் தெற்கு வீதி, தேர் மேலவீதி, தேர் வடக்கு வீதி வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்து அடைந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர் உள்ளிட்டவைகளால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இதனை தொடர்ந்து இரவு அம்மன் வீதி உலா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

    இதே போல் சட்டநாதபுரம் மெயின் ரோட்டில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு உப்பனாற்றங்கரையில் இருந்து பக்தர்கள் பால்குடம், அலகு காவடி எடுத்து ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். தொடர்ந்து அம்மனுக்கு பல்வேறு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதைப் போல் ஆதமங்கலம் அய்யனார் கோவில், அரூர் மாரியம்மன் கோவில், தென்பாதி மகா மாரியம்மன் கோவில், அரசூர் மாரியம்மன் கோவில், ஓலையாம்புத்தூர் அய்யனார் கோவில், செம்பியன் வேளங்குடி அய்யனார் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    • வேள்வி பூஜை கடந்த ஏப்ரல் 26 -ந் தேதி சித்தர் பீடத்தில் குருபூ ஜையுடன் தொடங்கியது.
    • சித்தர் பீட வளாகம் முழுவதும் சூல வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    மேல்மருவத்தூர் ஆதிப ராசக்தி சித்தர் பீடத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி குரு பங்காரு அடிகளார் 1008 யாக குண்டங்கள் அமைத்து கலச விளக்கு வேள்வி பூஜை நடத்தினர்.

    இந்த வேள்வி பூஜை கடந்த ஏப்ரல் 26 -ந் தேதி சித்தர் பீடத்தில் குருபூ ஜையுடன் தொடங்கியது.சித்ரா பவுர்ணமியான நேற்று மாலை 5 மணி அளவில் கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக குரு பங்காரு அடி களார் தொடங்கி வைத்தார்.

    இதில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மற்றும் தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், அமைச்சர் செஞ்சி மஸ்தான், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி ஆதிகேசவலு, முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், பாடகர் சீர்காழி சிவசிதம்பரம், ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடி களார், துணைத் தலைவர் ஸ்ரீதேவி ரமேஷ், தலைமை செயல் அதிகாரி அகத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஆதிபராசக்தி அம்மன் கருவறை முன்பு குரு மேடை, மற்றும் அதற்கான குரு யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.தொடர்ந்து அதற்கு முன்பாக ஆன்மிக குரு பங்காரு அடிகளாரின் 83 வது பிறந்தநாளை குறிக்கும் வகையில் 83 எண் வடிவில் சக்கரம் அமைத்து அதில் 4 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    கருவறை முன்பாக பஞ்சபூத சக்கரம் அமைத்து ஐந்து தலை நாகம் படம் எடுக்க அதனுள் கலசம் நிறுவப்பட்டு 5 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. புற்று மண்டபத்தின் முன்பாக வெற்றிலை அலங்காரத்தில் 3 நாகங்கள் பின்னிப் பிணைந்து அமைக்கப்பட்டு அதில் டைமண்ட் வடிவில் யாக குண்டம் அமைக்கப்பட்டு இருந்தது.

    புற்று மண்டப முன்புறத்தில் சமபக்க முக்கோண சக்கரங்கள் அமைத்து அதில் 9 முக்கோண வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு இருந்தது.

    ஓம் சக்தி மேடை முன்பாக பிரபஞ்ச சக்கரம் அமைத்து அதில் ஒன்பது படிகள் அமைத்து அதில் 27 நட்சத்திரங்கள் 12 ராசிகள் 8 திசைகள் வடிவில் சக்கரங்கள் அமைக்கப்பட்டு அதனுள் நவதானியம் பரப்பப்பட்டு சதுரம், வட்டம், டைமண்ட், ஐங்கோணம், முக்கோணம் ஆகிய வடிவங்களில் 12 யாக குண்டங்கள் அமைக்கப் பட்டு இருந்தது. மேலும் சித்தர் பீட வளாகம் முழுவதும் சூல வடிவிலான யாக குண்டங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த யாக குண்டங்களில் ஏராளமான செவ்வாடை பக்தர்கள் வேள்வி பூஜை செய்தனர்.

    • கருங்குளம் வெங்கடாசலபதி கோவிலில் சித்திரா பவுர்ணமி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
    • பக்தா்கள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பெருமாளுக்கு படைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி னா்.

    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் நதிக்கரையில் குன்றில் அமைந்திருக்கும் வகுளகிாி சேத்திரம் என்னும் கருங்குளத்தில் சுவாமி சந்தனகட்டையில் வெங்கடா சலபதி ஆக அருள்பாலிக்கின்றாா்.

    குலதெய்வம்

    திருப்பதி மலையில் தோ் செய்தது போக மீதம் இருந்த 2 கட்டைகள் இங்கு பிரதிஷ்டை செய்து சாபவிமோசனம் பெற்றதாக வரலாறு. அக்கட்டைகளை வெங்கடா சலபதியாக பக்தா்கள் வழிபட்டு வருகின்றனா். பல நுற்றாண்டுகளாக தினமும் திருமஞ்சனம் நடைபெற்று வருகின்றது. இன்றளவும் அந்த கட்டைகள் பின்னப்பட்டதில்லை.

    மேலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் தனிச்சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகின்றாா்.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாய் அருள்பாலித்து கொண்டிருக்கிறார் சுவாமி வெங்கடாஜலபதி. சிறப்பு வாய்ந்த கருங்குளம் ஸ்ரீ வெங்கடாசலபதி கோவிலில் சித்திரா பவுர்ணமி விழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த ஆண்டு திருவிழா நடைபெற்று வருகிறது.

    தீர்த்தம்

    10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் பெருமாள் மலையில் இருந்து கீழ் இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இதற்காக நேற்று மாலை பக்தா்கள் தாமிரபரணி ஆற்றில் இருந்து சுவாமி அபிஷேகத்திற்கு தீா்த்தம் கொண்டு வரும் நிகழ்வு நடைபெற்றது.

    தொடா்நது நவகலச ஸ்னப்ன திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வெங்கடாசலபதி பெருமாள் தங்க சப்பரத்தில் மலையில் இருந்து கீழ் இறங்கி வந்தாா். அப்போது பக்தா்கள் தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை பெருமா ளுக்கு படைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி னா்.நிகழ்ச்சியை ஆயிரக்கணக்கான பக்தா்கள் கண்டு தாிசனம் செய்தனா். நாளை காலை பச்சை சாத்தி அலங்காரத்தில் சுவாமி மலை ஏறும் நிகழ்ச்சி நடைபெறு கின்றது. விழா ஏற்பாடுகளை கோவில் நிா்வாகத்தினா் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    • இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர்.
    • கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமியொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    நேற்று மாலை கிரிவலத்திற்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

    இரவு வரை பக்தர்கள் கிரிவலப் பாதையை சுற்றி வந்தனர். இதனால் நகரின் முக்கிய பகுதியில் உள்ள சின்ன கடை தெரு, தேரடி தெரு, திருவூடல் தெரு, திருமஞ்சன கோபுர தெருக்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

    தொடர்ந்து இன்று காலை வரை பக்தர்கள் கிரிவலம் வந்த வண்ணம் இருந்தனர்.

    நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பொது தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.50 கட்டண தரிசன வரிசையில் சென்ற பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இன்று காலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் குறைவாக காணப்பட்டது. ஆனால் கோவிலில் கூட்டம் அலைமோதியது.

    இதனால் சாமி தரிசனம் செய்ய 5 மணி நேரமானது. சித்ரா பவுர்ணமிக்கு வரும் பக்தர்கள் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வகையில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்திருந்தார்.

    அதன்படி கூடுதலாக தரிசன வரிசைகள் அமைக்கப்பட்டிருந்தன ஆனால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    இதே போல பக்தர்களின் பயன்பாட்டிற்காக குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதுவும் சீராக செய்யப்படவில்லை.

    இன்று பக்தர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டதால் சிறப்பு ரெயில், பஸ் நிலையங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கிரிவலப் பாதையில் உள்ள கழிவறைகள் திறக்கப்படாததால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    • இந்த கோவிலில் சித்ராபவுர்ணமி தினத்தன்று வருடத்தில் ஒருநாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது.
    • அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியன்குடி மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சேரன் செங்குட்டுவனால் கட்டப்பட்ட இந்த கோவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி தினத்தன்று வருடத்தில் ஒருநாள் மட்டும் திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி மங்கலதேவி கண்ணகி கோவிலில் இந்த ஆண்டு சித்ராபவுர்ணமி திருவிழா இன்று நடைபெற்றது.

    கோவிலுக்கு வருகை தருவதற்கு ஏதுவாக இடுக்கி, தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதன்படி பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் இருந்த முட்செடிகள் அகற்றப்பட்டு பாதை சீரமைக்கப்பட்டது. சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் கோவிலுக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வரத் தொடங்கினர்.

    கோவில் வாசலில் வாழை, மா இலை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது. மங்கல தேவி கண்ணகிக்கு பச்சை பட்டு உடுத்தி சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை 6 மணிக்கு பள்ளி உணர்த்துதலுடன் விழா தொடங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மலர் வழிபாடு, மங்கல இசை, பொங்கல் வைத்தல், பக்தர்களுக்கு அமுதசுரபியின் அவல் பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் கண்ணகி தேவியை வழிபட்டனர். விழாவுக்கு வந்த பக்தர்கள் மஞ்சள் மற்றும் பச்சை நிறத்திலான ஆடைகள் அணிந்து வந்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இரு மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்து தரப்பட்டு இருந்தது. மாலையில் பூமாரியுடன் விழா நிறைவு பெறுகிறது.

    தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, கேரள மாநிலம் இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சென்னை, காவேரி பட்டினம், பூம்புகார், பாண்டிச்சேரி உட்பட தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபாடு செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் கம்புகள் கட்டப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டு இருந்தது. பெண்களுக்கு வளையல் மற்றும் மஞ்சள் கயிறு, குங்குமம் உள்ளிட்ட பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் உள்ள இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் தமிழக-கேரள வனத்துறையினர் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கோவிலுக்கு பக்தர்களை ஏற்றி வந்த ஜீப்புகளின் பதிவு எண்களை வனத்துறையினர் பதிவேட்டில் பதிவு செய்து கொண்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களை மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டு அனுப்பி வைத்தனர்.

    கம்பம் பகுதியிலிருந்து குமுளி மற்றும் பளியன்குடி வரை அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் சென்ற பக்தர்கள் பளியன்குடியில் இருந்து 6 கி.மீ தூரம் நடந்து கோயிலுக்கு சென்றனர். இதேபோல் கேரள மாநிலம் குமுளியிலிருந்து ஏராளமானவர்கள் மலை பாதையில் நடந்து சென்றும், ஜீப்களிலும் சென்றும் கண்ணகி தேவியை வழிபட்டனர்.

    • தொடர் மழை காரணமாக பக்தர்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • இரவில் மலைப்பகுதிகளில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிர தோஷம், பவுர்ணமி, அமாவாசையையொட்டி 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    சித்திரை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கடந்த 3-ந்தேதி முதல் நாளை (6-ந்தேதி) வரை அனுமதி வழங்கப்பட்டன.

    இன்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை புரிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பறை மலைப்பாதை வழியாக மலையேறி சென்று சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தொடர் மழை காரணமாக பக்தர்கள் காலை 7 மணி முதல் 11 மணி வரை மட்டுமே மலையேறி செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    பக்தர்கள் கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப் பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்தவுடன் தாணிப்பறை அடிவார பகுதிக்கு வந்து விட வேண்டும் எனவும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கியுள்ளனர்.

    இரவில் மலைப்பகுதிகளில் பக்தர்கள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • சித்ரா பவுர்ணமி நேற்று இரவு 11.59 மணிக்கு தொடங்கியது.
    • இன்று இரவு 11.33 மணிக்கு சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரகுப்தருக்கு சன்னதி உள்ளது.

    சித்ரா பவுர்ணமியன்று மட்டும் சிதிரகுப்பருக்கு எருமை பால் அபிஷேகம் செய்யபடும். அதன்படி சித்ரா பவுர்ணமியான இன்று அம்மன் சன்னதி அருகே உள்ள சித்திர குப்தருக்கு எருமை மாட்டு பால் அபிஷேகமும் மற்றும் சிறப்பு அபிஷேகமும் நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.***திருவண்ணாமலை, மே.5-

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் மாதந்தோறும் பவுணர்மி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    12 மாதங்களில் வரும் பவுர்ணமிகளில் சித்ரா பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    அக்னி திருத்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து கிரிவலம் செல்வது வாழ்வில் பல நல்ல பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது.

    சித்ரா பவுர்ணமி தினத்தில் சித்தர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி நேற்று இரவு 11.59 மணிக்கு தொடங்கியது. இதனால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    அதேபோல் இன்று இரவு 11.33 மணிக்கு சித்ரா பவுர்ணமி நிறைவடைகிறது. இதனால் நேற்று இரவு முதல் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர்.

    நள்ளிரவு 12 மணிக்கு மேல் பஸ்கள் மற்றும் வாகனங்கள் நகருக்குள் வர அனுமதி வழங்கப் படவில்லை. அவைகள் நகர எல்லையில் உள்ள 13 தற்காலிக பஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டன.

    அங்கிருந்து பக்தர்கள் கோவிலுக்கு நடந்து சென்றனர். மேலும் ஆட்டோக்களும் இயக்கப் பட்டன. நகரமெங்கும் சிறு சிறு வியாபாரிகள் கடை அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.

    கற்பூரம் மற்றும் தண்ணீர் பாட்டில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. பக்தர்களுக்கு இலவச தண்ணீர் பந்தல் மற்றும் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டு அவர்களின் தாகம் தணிக்க ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. 110 இடங்களில் அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.


    திருவண்ணாமலை நகரம் இன்று காலை பக்தர்களின் கூட்டத்தால் திணறியது. 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்தனர்.

    அலைகடல் புகுந்தது போல் பக்தர்கள் கூட்டம் கண் கொள்ளா காட்சியாக இருந்தது.

    14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் காட்டாற்று வெள்ளம் போல பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் முழங்கி செல்கின்றனர். சிறப்பு பஸ்கள் மற்றும் சிறப்பு ரெயில்கள் மூலம் பக்தர்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பாதுகாப்புக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்குள் வந்ததும் பரவச நிலையில் அண்ணாமலையாரை வணங்கிய படி செல்கின்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது. அங்கு விரைவு தரிசனத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர். பக்தி பரவசத்துடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.* * *திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் சன்னதி அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருச்செந்தூர், பழனி பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 10 கோவில்களின் பிரசாதம் விற்பனை செய்தனர். இதனை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.* * *சித்ரா பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.* * *திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சித்திரை வசந்த உற்வசத்தையொட்டி மன்மத தகனம் நிகழ்ச்சி நடந்தது.

    • பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.
    • அம்மனுக்கு பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகம் நடக்கிறது.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய பூஜையும், விஸ்வரூப தரிசனமும், அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

    ஸ்ரீபலி பூஜையும், 10 மணிக்கு அம்மனுக்கு எண்ணெய், பால், தயிர், நெய் பன்னீர், இளநீர், தேன், களபம், சந்தனம், குங்குமம், பஞ்சாமிர்தம் மற்றும் புனித நீரால் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும், 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனையும், பகல் 12 மணிக்கு அன்னதானமும் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு சாயராட்சை தீபாராதனையும், அம்மனுக்கு பல வகையான மலர்களால் புஷ்பாபிஷேகமும், இரவு 8 மணிக்கு அம்மனை வெள்ளி பல்லக்கில் எழுந்தருள செய்து கோவிலின் உள்பிரகாரத்தை சுற்றி மேளதாளம் முழங்க 3 முறை வலம் வர செய்யும் நிகழ்ச்சியும் நடக்கிறது. பின்னர் அம்மனை வெள்ளி சிம்மாசனத்தில் அமரச்செய்து தாலாட்டு நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து அத்தாழ பூஜையும், ஏகாந்த தீபாராதனையும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளருமான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை மனதார வழிபட வேண்டும்.
    • நைவேத்திய பிரசாதங்களை பசித்தோருக்கு தானமாக கொடுத்தால் புண்ணியம் சேரும்.

    5-5-2023 சித்ரா பவுர்ணமி

    சித்திரை மாதத்தில் உச்சம் பெறுபவர், சூரியன். அதேபோல் அந்த மாத பவுர்ணமி அன்று முழு மதியாக திகழ்பவர் சந்திரன். ராஜகிரகங்களான சூரியனும், சந்திரனும் முழு பலத்துடன் இருக்கும் மாதம் என்பதால் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி சிறப்புக்குரியதாக மாறுகிறது. இந்த நாளில் கிரிவலம் வருவது சிறப்பான பலனைப் பெற்றுத் தரும். எமதர்மனின் கணக்காளராகவும், பாவ-புண்ணிய கணக்குகளை பாரபட்சம் இன்றி எழுதும் பணியைச் செய்பவருமான சித்ரகுப்தர் அவதரித்த நாள், இந்த சித்ரா பவுர்ணமி. எனவே இந்நாளில் சித்ரகுப்தரை வழிபாடு செய்வதும் நன்மைகளை வாரி வழங்கும்.

    ஒரு முறை கயிலாயத்தில் இருந்த பார்வதிதேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் உருவத்தை, சித்திரமாக வடித்தாள். அப்போது உலகிற்கு படியளக்கும் பணியைச் செய்துவிட்டு வந்த ஈசனிடம், தான் வரைந்த சித்திரத்தை பார்வதிதேவி காட்டினாள். அந்த ஓவியம், சிவபெருமானை கவர்ந்தது. அப்போது அவருக்கு ஒன்று நினைவுக்கு வந்தது. விதிமுடிந்த மனித உயிர்களின் உயிரைப் பறித்து, பூமித்தாயின் பாரத்தைக் குறைக்கும் பணியைச் செய்பவர் எமதர்மன்.

    அவர் அதிக வேலைப்பளு காரணமாக, தனக்கு ஒரு உதவியாளரைத் தரும்படி, ஈசனிடம் கேட்டிருந்தார். அதுபற்றிய நினைவு வந்ததும், பார்வதிதேவி வரைந்த ஓவியத்தை கையில் எடுத்து அதில் தன்னுடைய மூச்சுக்காற்றை செலுத்தினார், ஈசன். உடனே அந்தச் சித்திரம் உயிர்பெற்றது. சிவசக்தியின் அம்சமாக, சித்திரத்தில் இருந்து உயிர்பெற்றதால், 'சித்ரகுப்தன்' என்ற பெயர் வந்தது. 'சித்' என்பது 'மனம்' என்பதையும், 'குப்த' என்பது 'மறைவு' என்பதையும் குறிக்கும். அதாவது மனித மனங்களில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களை கவனித்து, அதற்குத் தகுந்தாற் போல் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் என்பதால் இந்தப் பெயர் வந்தது. சித்ரகுப்தன் பிறக்கும்போதே, தனது கையில் ஏடு மற்றும் எழுத்தாணியோடு பிறந்தவர்.

    விரதம் இருந்து வழிபாடு செய்வது எப்படி?

    சித்திரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப்பொட்டு வைத்து, பழங்கள்- காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ர குப்தனை மனதார வழிபட வேண்டும்.

    சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழுநிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை, பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவரவர் வீடுகளில் செய்த 'சித்ரா அன்னம்' எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும், அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது.

    சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும், பூஜைகளும் ஆலயங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டு தோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்னியாகுமரியில் அன்று மட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம்.

    திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும். அன்றைய தினம் சித்ராதேவிக்கு (அம்பிகை) தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து வழிபட வேண்டும்.

    பின்னர் அந்த நைவேத்திய பிரசாதங்களை, பசித்தோருக்கு தானமாக கொடுத்தால், புண்ணியம் சேரும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், முழுமையாக விரதம் மேற்கொண்டு, சித்ரா பவுர்ணமி அன்று இரவு நிலவு பார்த்த பின் உணவருந்த வேண்டும். சித்ரகுப்தனுக்கு காஞ்சிபுரத்தில் தனிக்கோவில் உள்ளது. அதேபோல் அருப்புக்கோட்டை அமிர்தகடேஸ்வரர் கோவிலில், சித்ரகுப்தனுக்கு தனிச் சன்னிதி இருக்கிறது. சித்ரா பவுர்ணமி அன்று, இந்த ஆலயங்களுக்குச் சென்றும் வழிபாடு செய்து வரலாம். சித்ரகுப்தனை வழிபடுவதோடு நில்லாமல், இனி பாவச் செயல்கள் செய்யாமல், புண்ணியத்தைச் சேர்க்க வேண்டும் என்ற உறுதியையும் மனதில் பதித்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

    சிதம்பரம் சித்ரகுப்தர்

    'கோவில்' என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோவிலைத் தான் குறிக்கும். அந்த அளவுக்கு மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனிக் கோவில் அமைந்திருப்பது போல, சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் சித்ரகுப்தருக்கு தனிச் சன்னிதி அமைந்திருக்கிறது. நடராஜர் ஆலயத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கே சிவகாமி அம்பிகைக்கு தனிச் சன்னிதி உள்ளது. இதனை 'சிவகாமக் கோட்டம்' என்று அழைப்பார்கள். இதன் வெளிச்சுற்று பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் சித்திரகுப்தருக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த சன்னிதியில், சித்ரகுப்தர் அமர்ந்த நிலையில் கையில் எழுத்தாணியுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் சனீஸ்வர பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று, இங்குள்ள சித்ரகுப்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சித்ரகுப்தர் அவதரித்த தினமாகவும் கருதப்படுகிறது. சித்ரா பவுர்ணமியில் சித்ரகுப்தரை வழிபட்டால் ஆயுள் விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும். எமதர்மனின் கணக்கராக இருந்து, உலக உயிர்களின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் சித்ரகுப்தர். எனவே அவர் அவதரித்த நாளில் அவரை வழிபடுவதால், நம்முடைய பாவங்கள் குறையும் என்பது நம்பிக்கை. சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தருக்கு விழா எடுப்பது சிறப்புக்குரியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சித்ரகுப்தர் சன்னிதியில் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சித்ரகுப்தர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம்.

    ×