search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Child death"

    • விளையாடிக் கொண்டிருந்த போது வாய்க்காலில் சிறுமி தவறி விழுந்தாள்.
    • சிறுமி உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல கிராமங்கள் தனித் தீவாக காட்சியளிக்கின்றன.

    இந்த நிலையில் எருக்கூர் பகுதியைச் சேர்ந்த 5 வயது சிறுமி அக்‌சிதா,வீட்டு வாசல் அருகே விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த மழைநீர் வடிகால் வாய்க்காலில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுமி அக்‌சிதா உயிரிழப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிவாரண உதவியாக வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

    • குழந்தை தியா மாடி பால்கனி அருகே நின்றபடி விளையாடிக் கொண்டிருந்தாள்.
    • சிகிச்சை பலனின்றி தியா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தாள்.

    போரூர்:

    மதுரவாயல் கங்கை அம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். கால் டாக்சி டிரைவர். இவரது மனைவி பூர்ணிமா இவர்களது மகள் தியா (வயது2).

    பூர்ணிமா மகள் தியாவுடன் நேற்று முன்தினம் அருகில் உள்ள அக்கா மகேஸ்வரியின் வீட்டிற்கு சென்றார் பின்னர் சகோதரிகள் இருவரும் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். குழந்தை தியா மாடி பால்கனி அருகே நின்றபடி விளையாடிக் கொண்டிருந்தாள்.

    அப்போது குழந்தை தியா மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தாள். உடனடியாக அவளை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தியா இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை அருகே வளர்ப்பு தந்தையால் உயிரோடு எரிக்கப்பட்ட சிறுமி பலியான சம்பவத்தையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணகுடி:

    கன்னியாகுமரி மாவட்டம் பெரியவிளையை சேர்ந்தவர் ஜேசு அந்தோணிராஜ் (வயது45), கூலித்தொழிலாளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு மகனும், 2 மகள்களுடன் வசித்து வந்த சுஜா (33) என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஜேசு அந்தோணிராஜ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஜேசு அந்தோணி ராஜ், சுஜா மற்றும் குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல் கிணறு பாரதி நகரில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்கள். அங்குள்ள ஒரு ஓட்டலில் கணவன்-மனைவி வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் சுஜாவின் கடைசி மகள் மகேஷ்வரி (10) நேற்று முன்தினம் அங்குள்ள கடைக்கு பொருட்கள் வாங்க சென்றார். அப்போது அந்த கடையில் இருந்து தின்பண்டத்தை எடுத்து வந்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கடைக்காரர், அந்தோணி ராஜிடம் தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணிராஜ் வீட்டில் இருந்த சிறுமி மகேஸ்வரியின் தலையில் மண்எண்ணையை ஊற்றி உயிரோடு தீ வைத்தார். அலறி துடித்த மகேஸ்வரி வலி தாங்க முடியாமல் அந்தோணி ராஜை கட்டி பிடித்தாள்.

    இதில் அந்தோணிராஜ் உடலிலும் காயம் ஏற்பட்டது. இவர்களது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாய சாந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்நிலையில் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வந்த சிறுமி மகேஸ்வரி உடல்நிலை மிகவும் மோசம் அடைந்து காணப்பட்டது.

    நேற்று நள்ளிரவு மகேஸ்வரி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள். அந்தோணி ராஜ் உடல் நலம் தேறி வருகிறார். இதையடுத்து போலீசார் வழக்கை, கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆழியாறு அணை அருகே யானை தாக்கி சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சி ஆழியாறு அணை அருகே நவமலைபதி மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர் ராஜீ என்கிற முருகன் (வயது37). இவர் வனத்துறையில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சித்ரா.

    இவர்களின் மகள் ரஞ்சனி (7), அதே பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று சித்ரா தனது மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொள்ளாச்சிக்கு சென்றார். மாலை விரைவில் வீட்டிற்குள் வந்துவிடலாம் என்பதால் மின்விளக்கினை ஒளிரச்செய்யாமல் சென்றுள்ளார்.

    தாய்-மகள் இருவரும் இரவு 7.30 மணியளவில் நவ மலைபதிக்கு திரும்பினர்.அங்கிருந்து செல்போனில் டார்ச் விளக்கு அடித்தபடி வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டின் முன்பு இருந்த அரிசியினை வனப்பகுதியில் உலா வந்த காட்டு யானை தின்று கொண்டிருந்தது.

    இருட்டாக இருந்ததால் யானை நிற்பதை அவர்கள் கவனிக்கவில்லை. திடீரென மின்விளக்கு ஒளியினை பார்த்த காட்டு யானை அவர்களை நோக்கி ஓடிவந்தது. இதனை பார்த்த இருவரும் யானையிடம் இருந்து தப்ப ஓடினர். அப்போது சிறுமி ரஞ்சனியால் ஓட முடியவில்லை.

    அவரை காட்டு யானை துதிக்கையால் தூக்கி வீசியுள்ளது. பின்னர் யானை அங்கிருந்து ஓடி புதருக்குள் மறைந்தது. யானை தாக்கியதில் காயமடைந்த சிறுமியை மீட்டு குடியிருப்பு வாசிகள் உதவியுடன் கோட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.செல்லும் வழியிலேயே சிறுமி ரஞ்சனி பரிதாபமாக உயிரிழந்தார்.

    பின்னர் அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை, ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.வனத்துறை ஊழியர்கள் நவமலைபதி பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளதா? என கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையாதவாறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தனர். யானை நடமாட்டம் காரணமாக கிராம மக்கள் பீதியடைந்தனர்.

    யானை தாக்கி உயிரிழந்த சிறுமி ரஞ்சனியின் உடல் இன்று காலை பிரேபரிசோதனை செய்யப்படுகிறது. வனத்துறை சார்பில் உடனடி நிவாரணமாக ரூ.50 ஆயிரம் கொடுக்கப்பட்டது. மேலும் ரூ.3.50 லட்சம் அரசு நடைமுறைப்படி விரைவில் ரஞ்சனியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுவதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.

    ஐசிஎப் ரெயில்வே குடியிருப்பில் தொட்டில் சேலை கழுத்தை இறுக்கியதில் சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அம்பத்தூர்:

    கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் வடிவேல். இவரது மகள் அஸ்வதி (11). அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு முடித்துள்ளார்.

    இவர் கோடை விடுமுறைக்காக சென்னை ஐ.சி.எப். ரெயில்வே காலனியில் உள்ள தனது மாமா வினோத்குமாரின் வீட்டுக்கு வந்திருந்தார்.

    டிக்கெட் பரிசோதகரான வினோத்குமாரின் மகன் யஸ்வந்த் காய்ச்சல் காரணமாக பெரம்பூர் ரெயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தாய் ஜானகி அங்கு சென்று விட்டார்.

    வீட்டில் தனியாக இருந்த சிறுமி அஸ்வதி உள்பக்கமாக வீட்டை பூட்டிக் கொண்டு விளையாடி உள்ளார். அப்போது வீட்டுக்குள் கட்டப்பட்டிருந்த தொட்டில் சேலையில் சிறுமி விளையாடி உள்ளார். இதில் கழுத்து இறுக்கி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இதுபற்றி ஐ.சி.எப். போலீசார் விசாரணை நடத்தினர். சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் ரெயில்வே காலனி குடியிருப்பில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரியில் இருந்து சிறுமியின் பெற்றோர் விரைந்து வந்து உடலை பார்த்து கதறி அழுதனர்.

    கரூர் அருகே இன்று கார்-லாரி மோதிய விபத்தில் குழந்தை உள்பட 5 பேர் பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    லாலாப்பேட்டை:

    கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ள கீழமாயனூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 70). இவர் தனது  உறவினர்களான சாலப்பட்டியை  சேர்ந்த நவீன், கீழமாயனூர் கோமதி, அருணா மற்றும் மேலவெளியூர் முருகேசன் மற்றும் 1 வயது குழந்தை கிஷோக் ஆகியோருடன் இன்று காலை முசிறி ஈச்சங்கோட் டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு காரில் புறப்பட்டனர்.

    லாலாப்பேட்டை மகாதானபுரம் பெட்ரோல் பங்க் அருகே செல்லும் போது அந்த வழியாக எதிரே திருச்சியில் இருந்து கரூர் நோக்கி மினி லாரி வந்தது. இந்த நிலையில் எதிர்பாராதவிதமாக லாரியும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் கார் சுக்குநூறாக நொறுங்கியது. காருக்குள் இருந்த குழந்தை கிஷோக் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியாகினர்.

    மற்றவர்கள் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடினர். இதுகுறித்த தகவல் அறிந்த தும் லாலாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் காரின் இடிபாடுகளுக்கிடையே சிக்கி உயிருக்கு போராடிய வர்களை பொதுமக்கள் உதவியுடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். 

    பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நவீன், கோமதி, அருணா ஆகியோர் இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந் தது. முருகேசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    விபத்துக்கான காரணம் குறித்து லாலாப்பேட்டை போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். கோவிலுக்கு சென்றபோது விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    கேரளாவில் குடும்ப தகராறில் பெற்ற குழந்தையை கொன்று நாடகமாடிய தாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள சேர்த்தலா பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ஆதிரா (வயது 24).

    இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதியின் குழந்தை ஆதுஷா (1½). நேற்று காலை ஆதிரா தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு பதறியடித்துக் கொண்டு சென்றார்.

    தனது குழந்தை மூச்சு திணறல் காரணமாக மயங்கி விழுந்துவிட்டதாக கூறிய அவர் உடனே சிகிச்சை அளிக்கும்படி டாக்டர்களிடம் கூறி கண்ணீர் விட்டு அழுதார். அந்த குழந்தைக்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க பரிசோதனை செய்தபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள், ஆதிராவிடம் நடந்தது பற்றி கேட்டனர். அப்போது அவர் முன்னுக்குபின் முரணான தகவல்களை கூறியதால் அவர் மீது டாக்டர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆதிராவிடம் விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் பெற்ற குழந்தையை ஆதிராவே தலையணையால் முகத்தை மூடி மூச்சு திணறவைத்து கொலை செய்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு வேறு காரணம் எதுவும் உண்டா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    தண்டராம்பட்டு அருகே குழந்தையை கொன்ற வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர் தந்தையை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    தண்டராம்பட்டு:

    குழந்தையை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த வாலிபர் தந்தையை கோடாரியால் வெட்டி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த காம்பட்டு பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). இவரது மனைவி ராஜேஸ்வரி தம்பதிக்கு 3 மாத ஆண் குழந்தை இருந்தது.

    இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 5-ந் தேதி இரவு வீட்டில் கார்த்திகேயன் அவரது தந்தை தனபால், ராஜேஸ்வரி மற்றும் குழந்தை என அனைவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது அரிவாள் வெட்டும் சத்தம் கேட்டது. சத்தம் கேட்டு ராஜேஸ்வரி எழுந்து பார்த்த போது கார்த்திகேயன் அரிவாளால் தனது குழந்தையை துண்டு, துண்டாக வெட்டிகொண்டிருந்தார்.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி கத்தி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். குழுந்தை இறந்து கிடந்ததை பார்த்து திகைத்தனர்.

    இது குறித்து வானாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கார்த்திகேயனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு திருவண்ணாமலை கோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் கார்த்திகேயன் கடந்த 1-ந் தேதி ஜாமீனில் வந்தார். அவரிடம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் பேசவில்லை.

    இதனால் மன உளைச்சலில் இருந்த கார்த்திகேயன் தான் ஜெயிலுக்கு போனதற்கு தந்தை தனபால் தான் காரணம் என ஆத்திரத்தில் இருந்தார். எனவே அவரை கொலை செய்ய வேண்டும் என முடிவு செய்தார்.

    நேற்று இரவு தனபால் வீட்டின் திண்ணையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கார்த்திகேயன் கோடாரியால் தனது தந்தை தனபாலின் தலையை துண்டாக வெட்டினார். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த டி.எஸ்.பி. ஹேமசித்ரா தண்டராம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கார்த்தியேனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெற்ற குழந்தை மற்றும் தனது தந்தையை அடுத்தடுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை எற்படுத்தியது.
    திருவள்ளூர் அருகே செங்கல் சூளையில் தூங்கிய போது லாரி சக்கரத்தில் சிக்கி 7 மாத குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ள கல்பட்டு கிராமத்தில் தனியார் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது.

    இங்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த காமராஜ், தனது மனைவி மற்றும் 7 மாத ஆண் குழந்தை வசந்த குமாருடன் தங்கி வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மதியம் குழந்தை வசந்தகுமாரை தங்குவதற்காக அமைக்கப்பட்ட குடிசை வீட்டு முன்பு படுக்க வைத்தவிட்டு காமராஜும், அவரது மனைவியும் அங்கு வேலை பார்த்து கொண்டு இருந்தனர். அந்த நேத்தில் செங்கல் சூளையில் நிறுத்தப்பட்டு இருந்த மினி லாரியை டிரைவர் மணிமாறன் ஒட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டார்.

    அப்போது வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை வசந்தகுமாரின் தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது.

    இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் மணிமாறனை தேடி வருகின்றனர்.

    புதுவண்ணாரப்பேட்டையில் தண்ணீர் தொட்டியில் விழுந்து 3 வயது சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ராயபுரம்:

    புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ். பெயிண்டர். இவரது மனைவி ராதிகா. இவர் களது 3 வயது மகள் மூனேஷி. நேற்று மாலை ராதிகா வீட்டு வாசலில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது சிறுமி மூனேஷி சமையல் அறைக்குள் சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டிக்குள் உள்ள நீரை எடுக்க முயன்றாள். அப்போது தலைகுப்புற தண்ணீருக்குள் விழுந்து விட்டாள்.

    மகளை காணாததால் ராதிகா வீட்டுக்குள் சென்று பார்த்தபோது தண்ணீர் தொட்டிக்குள் சிறுமி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே சிறுமியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே தொட்டிலில் தூங்க வைத்த குழந்தை மூச்சு திணறி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    தருமபுரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே பரசுராம கவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி. இவர் கட்டிட கண்ட்ரக்டர். இவரது மனைவி கல்பனா. இவர்களுக்கு தினேஷ் என்ற ஒரு வயது குழந்தை உள்ளது.

    கடந்த 5-ந் தேதி குழந்தையை கல்பனா தொட்டிலில் போட்டு தூங்க வைத்து விட்டு அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்று விட்டார்.

    அப்போது குழந்தை தொட்டிலில் சுற்றி கொண்டதில் மூச்சு திணறியதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் அந்த குழந்தை மயங்கியது.

    சிறிது நேரம் கழித்து கல்பனா வீட்டிற்கு வந்து பார்த்தபோது தினேஷ் குழந்தை மயங்கி கிடந்தது. உடனே அவர் குழந்தையை மீட்டு தருமபுரி அரசு மருத்து கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    இதுகுறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
    சிவகிரி அருகே கும்பாபிஷேக விழாவில் கோபுரத்தில் இருந்து செம்பு விழுந்ததில் காயம் அடைந்த குழந்தை பலியான சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சிவகிரி:

    நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே தேவி பட்டினத்தில் உள்ள பாக்கிய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அந்த விழாவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

    இதில் தேவிபட்டினத்தை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவரின் மனைவி காயத்திரி (வயது25), தனது 3 மாத கைக்குழந்தை கிஷோருடன் சென்றிருந்தார். அவர் கோபுரத்திற்கு கீழே நின்று விழாவை பார்த்துக் கொண்டிருந்தார். கோபுர கலசத்தில் புனித நீர் தெளிப்பதற்கு செல்ல கோபுரத்தில் ‘சாரம்’ கட்டப்பட்டிருந்தது.

    அதில் புனித நீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்த செம்புகளில் ஒன்று பூஜையின் போது திடீரென்று தவறி கீழே விழுந்தது. அந்த செம்பு கூட்டத்தில் நின்று கொண்டிருந்த காயத்திரியின் கைக்குழந்தை கிஷோர் தலையின் மீது விழுந்தது. இதனால் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் கும்பாபிஷேக விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

    காயம் அடைந்த குழந்தை கிஷோர் அங்கிருந்து மீட்கப்பட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குழந்தை கிஷோர் பரிதாபமாக இறந்தது. இதனால் குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் கோபுரத்தில் இருந்து செம்பு விழுந்ததில் காயம் அடைந்து குழந்தை பலியான சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் விழாவில் நடந்த இந்த பரிதாப சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×