search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கும்பாபிஷேக விழாவில் கோபுரத்தில் இருந்து செம்பு விழுந்து குழந்தை பலி
    X

    கும்பாபிஷேக விழாவில் கோபுரத்தில் இருந்து செம்பு விழுந்து குழந்தை பலி

    சிவகிரி அருகே கும்பாபிஷேக விழாவில் கோபுரத்தில் இருந்து செம்பு விழுந்ததில் காயம் அடைந்த குழந்தை பலியான சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சிவகிரி:

    நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே தேவி பட்டினத்தில் உள்ள பாக்கிய விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. அந்த விழாவில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

    இதில் தேவிபட்டினத்தை சேர்ந்த கருத்தப்பாண்டி என்பவரின் மனைவி காயத்திரி (வயது25), தனது 3 மாத கைக்குழந்தை கிஷோருடன் சென்றிருந்தார். அவர் கோபுரத்திற்கு கீழே நின்று விழாவை பார்த்துக் கொண்டிருந்தார். கோபுர கலசத்தில் புனித நீர் தெளிப்பதற்கு செல்ல கோபுரத்தில் ‘சாரம்’ கட்டப்பட்டிருந்தது.

    அதில் புனித நீர் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்த செம்புகளில் ஒன்று பூஜையின் போது திடீரென்று தவறி கீழே விழுந்தது. அந்த செம்பு கூட்டத்தில் நின்று கொண்டிருந்த காயத்திரியின் கைக்குழந்தை கிஷோர் தலையின் மீது விழுந்தது. இதனால் குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதனால் கும்பாபிஷேக விழாவில் பரபரப்பு ஏற்பட்டது.

    காயம் அடைந்த குழந்தை கிஷோர் அங்கிருந்து மீட்கப்பட்டு விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே குழந்தை கிஷோர் பரிதாபமாக இறந்தது. இதனால் குழந்தையின் பெற்றோரும், உறவினர்களும் கதறி துடித்தனர்.

    கும்பாபிஷேக விழாவில் கோபுரத்தில் இருந்து செம்பு விழுந்ததில் காயம் அடைந்து குழந்தை பலியான சம்பவம் பக்தர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவில் விழாவில் நடந்த இந்த பரிதாப சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சிவகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×