search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Affair"

    • காரை விட்டு வெளியே வந்த கோபிநாத் புதுவை -திண்டிவனம் நெடுஞ்சாலையில் வந்த ஏதோ ஒரு வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • திண்டிவனம் ரோட்டில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    சென்னை கிழக்கு தாம்பரம் சிவஞானம் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கோபிநாத் (வயது 31). இவரது மனைவி சாந்தா பிரீத்தி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். புதுவை ரெட்டியார்பாளையத்தில் சாந்தா பிரீத்தி மருந்து கடை நடத்தி வருகிறார்.

    குடும்பத்துடன் இதே பகுதியில் அவர்கள் வசித்து வந்தனர். கோபிநாத் மரக்காணம் தனியார் வங்கியில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் வங்கி கிளையில் வேலை பார்த்தார். அப்போது அங்கு பணிபுரிந்த வங்கி அலுவலரான மதுரா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    மதுராவுக்கு ஏற்கனவே சுரேஷ் என்ற முந்திரி வியாபாரியுடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    கோபிநாத்-மதுரா இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    கள்ளக்காதல் விவகாரத்தை தெரிந்து கொண்ட சாந்தா பிரீத்தி, கணவர் கோபிநாத்தை கண்டித்துள்ளார். அதையும் மீறி மதுராவுடன் கோபிநாத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் மதுரா மேலாளராக பதவி உயர்வு பெற்று புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கிளைக்கு மாறுதலானார்.

    புதுவை லாஸ்பேட்டை அவ்வை நகரில் தங்கியிருந்தார். 2 பேருமே புதுச்சேரியில் தங்கியிருந்ததால் முன்பை விட அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இருவரும் மரக்காணம் வழியாக திண்டிவனம் ரோடு பகுதிக்கு சென்று அங்கிருந்து புதுவைக்கு காரில் திரும்பி வந்துள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் உருவாகி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் காரில் இருந்த ஸ்கூருட்ரைவரால் மதுராவின் கழுத்தில் குத்தியுள்ளார். மேலும் முகத்திலும் கீறியுள்ளார்.

    இதில் அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    அதன்பின் காரை விட்டு வெளியே வந்த கோபிநாத் புதுவை -திண்டிவனம் நெடுஞ்சாலையில் வந்த ஏதோ ஒரு வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    சம்பவ இடத்தில் விழுப்புரம் போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் வந்து விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் கோபிநாத், மதுரா இருவரையும் வேறு கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இருவரது செல்போன்களுக்கு தொடர்பு கொண்ட எண்களை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் மதுராவின் செல்போனுக்கு ஏராளமான போன் கால்கள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கோபி நாத்தை காணவில்லை என்று 2 நாட்களுக்கு முன் புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபிநாத், மதுரா இருவரும் காரில் வருவதை அறிந்த கும்பல் ஒன்று மதுராவை கொலை செய்து விட்டு கோபிநாத்தை அந்த வழியாக செல்லும் வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்ய தூண்டியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    திண்டிவனம் ரோட்டில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கோபிநாத் தற்கொலை செய்வதற்காக பாய்ந்த வாகனம் அடையாளம் தெரிந்து அந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினால் முழு விவரம் தெரிய வரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

    • மாரியப்பன் அதிகாலை 5 மணிக்கு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தான் தினமும் வருவார்.
    • கனகாவும் தனது கள்ளக்காதலனை பார்க்க முடியவில்லை என்று வருத்தம் அடைந்துள்ளார்.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சுவாமி சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரியப்பன்(வயது 41). ஓட்டல் தொழிலாளி. இவருக்கு கனகா என்ற மனைவியும், 2 மகள்கள், 1 மகனும் உள்ளனர்.

    இவர் அப்பகுதியில் உள்ள டீக்கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மாரியப்பன் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் நிரப்புவதற்காக புறப்பட்டு சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் திரும்பி வரவில்லை. அவர் புளியங்குடி அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையோரம் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுதொடர்பாக மாரியப்பன் தாயார் பழனியம்மாள் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். மேலும் அவரது தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வந்தனர்.

    போலீசார் பல்வேறு கோணங்களில் நடத்திய விசாரணையில், வாசுதேவநல்லூர் அக்ரஹாரம் சந்து தெருவை சேர்ந்த சண்முகையா மகன் விக்னேஷ்(24) என்பவர் மாரியப்பனை கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    விக்னேசுக்கு திருமணம் ஆகவில்லை. அவர் பால் வியாபாரம் செய்து வந்தார். வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு பால் விற்பனை செய்து வந்தார். அந்த வகையில், கொலை செய்யப்பட்ட மாரியப்பன் வீட்டுக்கும் அவர் பால் கொடுத்து வந்துள்ளார். அப்போது அவருக்கும், மாரியப்பனின் மனைவி கனகாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

    மாரியப்பன் அதிகாலை 5 மணிக்கு ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் தான் தினமும் வருவார். இதனை பயன்படுத்தி கனகா, அந்த வாலிபருடன் வீட்டில் தனிமையில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையே பால் வியாபாரத்திற்காக விக்னேஷ், மாரியப்பனிடம் கடனாக ஒரு குறிப்பிட்ட தொகையையும் பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு கனகாவும், விக்னேசும் வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்ததை திடீரென வீட்டுக்கு வந்த மாரியப்பன் பார்த்து விட்டார். உடனே அவர் 2 பேரையும் கண்டித்துள்ளார். மேலும், இனி தனது வீட்டுக்கு பால் ஊற்ற வரவேண்டாம் என்றும், கடனாக கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விடுமாறும் மாரியப்பன் கண்டிப்பாக பேசியுள்ளார்.

    இதனால் விக்னேசுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.

    கனகாவும் தனது கள்ளக்காதலனை பார்க்க முடியவில்லை என்று வருத்தம் அடைந்துள்ளார். இதையடுத்து விக்னேசை செல்போனில் தொடர்பு கொண்ட கனகா, மாரியப்பன் இருக்கும் வரை நாம் உல்லாசமாக இருக்க முடியாது. எனவே அவரை கொலை செய்து விடலாம் என்று கூறியுள்ளார்.

    இதையடுத்து 2 பேரும் சேர்ந்து மாரியப்பனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி நேற்று அதிகாலையில் மாரியப்பனுக்கு போன் செய்த விக்னேஷ், புளியங்குடி பகுதியில் நிற்பதாகவும், கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தந்துவிடுவதாகவும் கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பிய மாரியப்பன் வீட்டில் இருந்து புறப்பட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

    அப்போது நவாசாலை பகுதியில் நின்று கொண்டிருந்த விக்னேஷ், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார். பின்னர் அவரும் ஏதும் தெரியாதது போல் வீடுகளுக்கு பால் ஊற்ற சென்றுவிட்டார். அவரது மனைவி கனகாவும் வழக்கம்போல் வீட்டில் உள்ள வேலைகளை பார்த்து வந்துள்ளார். ஆனால் மாரியப்பன் குடும்பத்தினரிடம் போலீசார் விசாரித்த போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், விக்னேசை பிடித்து விசாரித்த போது அவர் கனகாவுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து கொலையில் தொடர்புடைய கனகாவையும் போலீசார் கைது செய்தனர். இன்று காலை விக்னேஷ், கனகா ஆகியோரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    • இளம்பெண் செல்வகுமாருடன் ஜாலியாக இருப்பதை அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தார்.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும், செல்வகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் ஆழியாறு அருகே உள்ள புளியன்கண்டியை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது28). லாரி டிரைவர்.

    இவர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கவுசல்யா என்ற பெண்ணை திருமணம் செய்தார். திருமணமான ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் பிரிந்தனர்.

    இதையடுத்து செல்வகுமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு கல்பனா என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 11 மாதங்களுக்கு முன்பு செல்வகுமாருக்கு தெக்கோட்டு வாய்க்காலை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இளம்பெண் செல்வகுமாருடன் ஜாலியாக இருப்பதை அவரது செல்போனில் வீடியோ எடுத்து வைத்து இருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண்ணுக்கும், செல்வகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனையடுத்து லாரி டிரைவர் கள்ளக்காதலியிடம் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த இளம்பெண் ஜாலியாக இருக்கும் போது எடுத்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக செல்வகுமாரை மிரட்டி பணம் கேட்டார்.

    இதனால் பயந்த அவர் ரூ.1.50 லட்சம் வரை பணத்தை இளம்பெண்ணிடம் கொடுத்தார். ஆனால் இளம்பெண் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்தார்.

    இதன் காரணமாக செல்வகுமார் கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

    சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த செல்வகுமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் அவர்கள் இதுகுறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தற்கொலை செய்வதற்கு முன்பு செல்வகுமார் கைப்பட எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

    அதில் இளம்பெண்ணுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவர் நாங்கள் ஜாலியாக இருந்ததை வீடியோவாக எடுத்து வைத்து என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார்.

    பணம் கொடுக்கவில்லை என்றால், அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டி என்னிடம் இருந்து ரூ.1.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து இதுபோன்று பணம் கேட்டு மிரட்டி வந்ததால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்.

    இவ்வாறு அந்த கடிதத்தில் எழுதி இருந்தார்.

    பின்னர் போலீசார் தற்கொலை செய்து கொண்ட லாரி டிரைவர் செல்வகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து ஆழியாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் சந்தேகத்தின் பேரில் லலிதாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
    • சுரேஷ் தனது நண்பர்களான சதீஷ், சீனிவாஸ், கணேஷ் மற்றும் பாம்பு பிடிக்கும் சந்திர சேகர் ஆகியோருடன் பிரவீன் வீட்டிற்கு வந்தார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கோதாவரி கனி மண்டலம், மார்க்கண்டேய காலனியை சேர்ந்தவர் பிரவீன் (வயது 42) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி லலிதா. இவர்களுக்கு 2 மகள்கள், 1 மகன் உள்ளனர்.

    தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று வந்ததால் பிரவீனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது.

    லலிதா கள்ளத்தொடர்பை கண்டித்ததால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு நடந்தது.

    இதனால் விரத்தி அடைந்த பிரவீன் மது போதைக்கு அடிமையானார். கள்ளக்காதலை கணவர் கைவிடாததால் ஆத்திரம் அடைந்த லலிதா கணவரை கொலை செய்ய முடிவு செய்தார்.

    அதன்படி பிரவீன் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்யும் ராமகுண்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் ஒத்துழைப்பை லலிதா நாடினார்.

    கணவரை கொலை செய்து விட்டால் ஒரு வீட்டுமனை பட்டா தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

    இதையடுத்து கடந்த 10-ந்தேதி இரவு பிரவீன் மது போதையில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். கணவர் மது போதையில் தூங்குவது குறித்து லலிதா சுரேஷ்க்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து சுரேஷ் தனது நண்பர்களான சதீஷ், சீனிவாஸ், கணேஷ் மற்றும் பாம்பு பிடிக்கும் சந்திர சேகர் ஆகியோருடன் பிரவீன் வீட்டிற்கு வந்தார்.

    மரணம் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சுரேஷ் அவரது நண்பர்கள் பிரவீனை கெட்டியாக பிடித்துக் கொண்டனர்.

    சந்திரசேகர் விஷப்பாம்பை கொண்டு பிரவீனை கடிக்க வைத்தார். இதில் வாயில் நுரை தள்ளியபடி பிரவீன் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து 5 பேரும் அங்கிருந்து சென்றனர்.

    கணவர் பாம்பு கடித்து இறந்துவிட்டதாக லலிதா நாடகமாடினார்.

    போலீசார் சந்தேகத்தின் பேரில் லலிதாவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் கணவரை பாம்பை கடிக்க வைத்து கொலை செய்ததை லலிதா ஒப்புக்கொண்டார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து லலிதா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஜெயராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
    • கொலையுண்ட ஜெயராமன் தனியார் பள்ளி வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டப்பட்டி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. கணவரை இழந்த அவர் தனியாக வசித்து வருகிறார்.

    இவருக்கு சொந்தமான ஒரு வீட்டை நெருங்கிய உறவினரான கீழையூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பயன்படுத்தி வருகிறார். வெங்கடேசன் சென்னையில் மருந்துக்கடை வைத்துள்ளார். இதற்கிடையே மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் கீழையூர் வந்திருந்தார்.

    இந்த நிகழ்ச்சியில் கீழையூரைச் சேர்ந்த அவரது நண்பரான ஜெயராமன் (வயது 42) என்பவரும் கலந்து கொண்டார். பின்னர் ஜெயராமன் மட்டும் அட்டப்பட்டியில் உள்ள வெங்கடேசனின் சமத்துவபுரம் வீட்டிற்கு வந்தார். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் பரமேஸ்வரியின் வீட்டின் முன்பு கட்டிலை போட்டு தூங்கினார்.

    இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஜெயராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.

    காலையில் இதைப் பார்த்த அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியாஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் மன்னவன், கீழவளவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்ச்சாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்காதல் மற்றும் பெண் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட ஜெயராமன் தனியார் பள்ளி வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார்.

    • சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையிலும், ஜெயலட்சுமி மதுரையிலும் இருந்ததால் இருவருக்குமான தொடர்பில் இடைவெளி அதிகரித்தது.
    • இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சாத்தூர்:

    மதுரை அருகே உள்ள திருப்பாலை பகுதியை சேர்ந்த சுப்புராஜ் (வயது 40). பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள முடிவைத்தானேந்தல் கிராமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி (37) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஜெயலட்சுமி மதுரை ரெயில்வேயில் போலீசாக வேலை பார்த்து வந்தார். இந்த தம்பதிக்கு பவித்ரா (11) என்ற மகளும், காளிமுத்து (9) என்ற மகனும் இருந்தனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இருந்தபோதிலும் பிள்ளைகள் இருவரும் தாய் ஜெயலட்சுமியின் பராமரிப்பில் இருந்தனர். இந்த நிலையில் நேற்று ஜெயலட்சுமி திருச்சி ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் திருச்சிக்கு செல்வதில் விருப்பமின்றி இருந்துள்ளார். தனது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் எதுவும் நடக்கவில்லை. இதனால் ஜெயலட்சுமி மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.

    இதற்கிடையே நேற்று மாலை ஜெயலட்சுமி தனது மகள், மகனை அழைத்துக் கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். பின்னர் அவர் நேராக அந்த பகுதியில் உள்ள தேனூர் தண்டவாள பகுதிக்கு சென்றார். திடீரென்று அந்த வழியாக மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற இண்டர்சிட்டி ரெயில் முன்பு குழந்தைகளின் கைகளை பிடித்துக்கொண்டு பாய்ந்தார். ரெயில் மோதிய வேகத்தில் 3 பேரின் உடல்களும் துண்டு, துண்டாக சிதறியது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை ரெயில்வே போலீசார் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுபற்றிய விபரம் வருமாறு:-

    மதுரையில் ரெயில்வே பாதுகாப்பு படையில் போலீஸ்காரராக வேலை பார்த்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சொக்கலிங்க பாண்டியன் (47) என்பவருடன், ரெயில்வே போலீசாக வேலை பார்த்த ஜெயலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டு பின்னர் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த விஷயம் தெரிந்த சுப்புராஜூக்கும், ஜெயலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகத்தான் சுப்புராஜ், ஜெயலட்சுமி தம்பதியினர் சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    அதேபோல் மதுரையில் ரெயில்வே பாதுகாப்பு படையில் இருந்த சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டைக்கு மாறுதலாகி சென்றார். ஆனாலும் ஜெயலட்சுமியுடன் வைத்திருந்த கள்ளக்காதலை அவர் கைவிடவில்லை. 6 ஆண்டுகளாக அவர்களது கள்ளக்காதல் தொடர்ந்தது. சொக்கலிங்க பாண்டியனுக்கும் திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் கல்லூரி படிப்பு படித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே சொக்கலிங்க பாண்டியன் அடிக்கடி பெண்களுடன் செல்போனில் பேசி வருவதாக கூறி அவரது மனைவியும் தகராறில் ஈடுபட்டு விவகாரத்து பெற்று சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் தனியாக இருந்த சொக்கலிங்க பாண்டியன் ஜெயலட்சுமியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

    இந்த நிலையில் சொக்கலிங்க பாண்டியன் திடீரென தென்காசி மாவட்டம் செங்கோட்டை ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையிலும், ஜெயலட்சுமி மதுரையிலும் இருந்ததால் இருவருக்குமான தொடர்பில் இடைவெளி அதிகரித்தது.

    இதனால் சொக்கலிங்க பாண்டியன் செங்கோட்டையில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதாக அறிந்த ஜெயலட்சுமி சொக்கலிங்க பாண்டியனிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இருவரும் அடிக்கடி செல்போனில் வாக்குவாதம் செய்த நிலையில் நேற்று முன்தினம் சொக்கலிங்க பாண்டியன் மதுரை திருப்பாலையில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டிற்கு வந்து வாக்குவாதம் செய்ததில் இருவருக்கும் கைகலப்பாகி உள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட சண்டையை பார்த்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இதன் மூலம் அவர்களது கள்ளக்காதல் விவகாரம் ஊருக்கே தெரிந்து வெட்ட வெளிச்சமானது. கணவரை பிரிந்ததாலும், தனது கள்ளக்காதலன் ஏமாற்றியதாலும் சம்பவத்தை அவமானமாக கருதிய ஜெயலட்சுமி இனி இந்த உலகத்தில் வாழக்கூடாது என தனது 2 பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நேற்று மாலை ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜெயலட்சுமி தனது இரு பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்த சொக்கலிங்க பாண்டியன் போலீஸ் விசாரணைக்கு பயந்து நேற்று இரவு கோவில்பட்டியில் இருந்து கார் மூலமாக சாத்தூர் சென்றுள்ளார். சாத்தூர்-நல்லி ஊருக்கு இடையே உள்ள சின்னக்கொல்லப்பட்டி பகுதியில் சென்னை-திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்த போது தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த விபத்தில் சொக்கலிங்க பாண்டியன் தலை துண்டித்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.

    உடலை கைப்பற்றிய தூத்துக்குடி ரெயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சொக்கலிங்க பாண்டியன் உடலை அனுப்பி வைத்தனர். இரண்டு தற்கொலை சம்பவங்கள் குறித்தும் வழக்கு பதிவு செய்த ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அருள்ராஜை கழுத்தை இறுக்கி கொலை செய்தது யார் என போலீசார் விசாரணை நடத்தினர்.
    • கள்ளக்காதல் விவகாரம் அருள்ராஜிக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    கோவை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிஸ்மி நகரை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 52). வெல்டிங் ஒர்க்ஷாப் தொழிலாளி.

    சம்பவத்தன்று இவர் உடுமலை ரோட்டில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள ஒர்க்ஷாப் முன்பு பிளாஸ்டிக் டேப்பால் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் போலீசார் அருள்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அருள்ராஜை கழுத்தை இறுக்கி கொலை செய்தது யார் என விசாரணை நடத்தினர். தொழிற்பேட்டையில் உள்ள ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வரும் அருள்ராஜின் நண்பரான மாக்கினாம்பட்டியை சேர்ந்த தங்கவேல் (51) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அருள்ராஜை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் போலீசாரிடம் கூறியதாவது:-

    நாங்கள் 2 பேரும் நண்பர்களாக பழகி வந்தோம். இதனால் நான் அடிக்கடி அருள்ராஜின் வீட்டிற்கு சென்று வந்தேன். அப்போது அவரது மனைவிக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. நான் அடிக்கடி அவரது வீட்டிற்கு சென்று அருள்ராஜின் மனைவியுடன் ஜாலியாக இருந்து வந்தேன். இந்த கள்ளக்காதல் விவகாரம் அருள்ராஜிக்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.

    இதுதொடர்பாக எங்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று இரவு வேலை முடிந்ததும் நாங்கள் 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்தோம். அப்போது எங்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் பிளாஸ்டிக் டேப்பால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்தேன். பின்னர் எதும் தெரியாதபடி அங்கு இருந்து தப்பிச்சென்றேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் கூறினார்.

    போலீசார் தங்கவேலுவை கைது செய்தனர்.

    • பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் இளம்பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவரது மனைவி ஜெகதீஷ்வரி (வயது40).

    கடந்த 28-ந்தேதி ஜெகதீஷ்வரி வீட்டில் உள்ள அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வீட்டில் இருந்த 5 ¾ பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

    ஜெகதீஷ்வரி கொலையில் தொடர்புடைய நபரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் ஜெகதீஷ்வரியின் செல்போனை கைப்பற்றி, அதில் அவருக்கு கடைசியாக போன் செய்தவர்கள் யார் என்ற தகவல்களை சேகரித்து விசாரித்தனர்.

    அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். ஆனாலும் போலீசாருக்கு அதில் எந்தவித துப்புமே கிடைக்காமல் இருந்து வந்தது. அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் இதுவரை 90 பேரை அழைத்து விசாரணை நடத்தி இருந்தனர்.

    கொலை நடந்து சில நாட்களை கடந்த பின்னும் குற்றவாளியை கண்டுபிடிக்கப்படாததால் இளம்பெண் கொலையில் பல்வேறு மர்மங்களும் நீடித்து வந்தது. கொலையாளி யார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் இறங்கினர்.

    தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்த போது சில ஆதாரங்கள் கிடைத்ததுடன், குற்றவாளி தொடர்பான தகவல்களும் கிடைத்தன.

    அதனை கொண்டு தீவிர விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணை கொலை செய்தது, ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்த மோகன்ராஜ் (33) என்பது தெரியவந்தது. இருந்த போதிலும் அவர்தான் கொலை செய்தாரா என்பதை தெரிந்து கொள்ள சில நாட்கள் சாதாரண உடையில் சென்று போலீசார் அவரது நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

    அப்போது அவர் தான் கொலை செய்தது என்பது உறுதியாகவே நேற்று மாலை போலீசார் ரேஸ்கோர்சில் வைத்து மோகன்ராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரை பீளேமடு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்தேன் என அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

    கைதான மோகன்ராஜ் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சூப் கடை நடத்தி வருகிறார். இவர் முதலில் சேரன்மாநகர் பாலாஜி நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.

    அப்போது, அவருக்கு ஜெகதீஷ்வரியுடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு போனில் பேசி வந்தனர்.

    மேலும் அடிக்கடி நேரில் சந்தித்தும் தனிமையில் ஜாலியாக இருந்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் 2 வீட்டாருக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மோகன்ராஜ், சேரன்மாநகர் பகுதியில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு, ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் பகுதிக்கு மாறி வந்து விட்டார். வீடு மாறினாலும், அவர்களது கள்ளக்காதலானது தொடர்ந்தது.

    ஒரு நாள் ஜெகதீஷ்வரி, மோகன்ராஜூக்கு வீடியோ காலில் போன் செய்து பேசியுள்ளார். அப்போது, எனக்கு பணம் வேண்டும். நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் நமது கள்ளக்காதலை உனது மனைவியிடம் தெரிவித்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதனால் கள்ளக்காதலர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து அவர் பணம் கேட்டு மிரட்டவே மோகன்ராஜ், ஜெகதீஷ்வரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 28-ந்தேதி காலை வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஜெகதீஷ்வரியின் வீட்டிற்கு மோகன்ராஜ் புறப்பட்டார். நவ இந்தியா பகுதிக்கு சென்றதும், தனது கடையில் வேலை பார்க்கும் ஊழியரை தொடர்பு கொண்டு, மொபட்டை எடுத்து வர கூறியுள்ளார். அவரும் எடுத்து சென்று கொடுத்தார்.

    அதனை வாங்கி கொண்டு, மீண்டும் ஜெகதீஷ்வரியின் வீட்டை நோக்கி பயணித்த அவர், செல்லும் வழியில் வண்டியின் ஒரிஜினல் நம்பர் பிளேட்டை மாற்றி விட்டு, மற்றொரு நம்பர் பிளேட்டை மாற்றி கொண்டு சென்றார்.

    ஜெகதீஷ்வரியின் வீட்டிற்குள் சென்ற மோகன்ராஜ் 2 மணி நேரம் வரை இருந்துள்ளார். பின்னர் அவரை கொலை செய்து விட்டு, நகைக்காக கொலை நடந்தது போல் காண்பிக்க வேண்டும் என்பதற்காக, அங்கிருந்த நகைகளை 5 முக்கால் பவுன் நகைகளுடன் தப்பிவிட்டார்.

    வீட்டிற்கு திரும்பி வந்த போதும், நவஇந்தியா வரை மொபட்டிலும், அதன் பின்னர் மோட்டார் சைக்கிளிலும் வீட்டிற்கு திரும்பி உள்ளார். கொலை செய்த பிறகு அவர் தலைமறைவாகவில்லை. எப்போதும், போல ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு சென்று தனது சூப் வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். செல்போனில் இவருடன் பேசியதற்கான ஆதாரங்களும் இல்லாததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வரவில்லை. இதனால் அவரும் தொடர்ந்து தனது வேலைகளில் ஈடுபட்டு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    மொபட்டிலும், மோட்டார்சைக்கிளிலும் சென்றபோது ஒரே சட்டை தான் அவர் அணிந்திருந்தார். கண்காணிப்பு கேமிராக்களில் அவர் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. ஒரே சட்டை அணிந்த நபர் 2 மோட்டார்சைக்கிளில் பயணிப்பது ஏன் என்பது பற்றி போலீசார் விசாரித்தபோது தான் குற்றவாளி சிக்கிக் கொண்டார். மொபட்டின் எண்ணை மாற்றியவர் சட்டையை மாற்றாததால் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் இளம்பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர்.
    • பின்தொடர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    பல்லடம்:

    திருப்பூர் கல்லூரி சாலையைச் சேர்ந்த 23 வயது வாலிபரும், கோவில் வழி பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண்ணும் சமூக வலைத்தளங்கள் மூலம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்தப் பெண்ணை வீட்டில் இருந்து திடீரென காணவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பெண்ணை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்கள் இருவரும் பல்லடம் அருகே அருள்புரத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இது குறித்து பல்லடம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இளம்பெண் வசிக்கும் பகுதி நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டது என்பதால் அவர்கள் இருவரையும் நல்லூர் காவல் நிலையத்திற்கு போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர். அருள்புரம் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது அவர்களைப் பின்தொடர்ந்த சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் அந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்களை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் அருகே உள்ள கள்ளிமேட்டைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

    மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சுமார் பத்துக்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடுகின்றனர்.

    • கல்யாணி செங்கன் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக சென்றார்.
    • மகளின் சாவில் சந்தேகம் அடைந்த ரமேஷ் போலீசில் புகார் செய்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் தராபாத், குஷாய் குடாவை சேர்ந்தவர் ரமேஷ். கார் டிரைவர். இவரது மனைவி கல்யாணி (வயது 22).

    இவர்கள் 2018-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு கடந்த 2019-ம் ஆண்டு தன்விதா என்ற பெண் குழந்தை பிறந்தது.

    தற்போது அந்த சிறுமிக்கு 4 வயதாகிறது. கருத்து வேறுபாடு காரணமாக தம்பதிகளுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

    கல்யாணி செங்கன் மாவட்டத்தில் உள்ள தனது பெற்றோர் ஊரில் நடைபெறும் திருவிழாவிற்காக சென்றார். அப்போது அதே ஊரை சேர்ந்த நவீன் குமார் (19) என்ற வாலிபருடன் கள்ளக்காதல் ஏற்பட்டது.

    பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தாய் வீட்டிற்கு சென்று நவீன் குமாருடன் உல்லாசமாக இருந்து வந்தார். இவர்களது கள்ளக்காதலுக்கு தன்விதா தடையாக இருப்பதாக இருவரும் எண்ணினர்.

    இதனால் மகளை கொலை செய்ய கல்யாணி முடிவு செய்தார். நேற்று முன்தினம் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்த சிறுமி தன்விதாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் உடல் நிலை சரியில்லாததால் மகள் இறந்து விட்டதாக அங்குள்ளவர்களிடம் கூறினார்.

    மகளின் சாவில் சந்தேகம் அடைந்த ரமேஷ் இது குறித்து போலீசில் புகார் செய்தார். போலீசார் கல்யாணியை சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் மகளை கொலை செய்ததாக கல்யாணி வாக்குமூலம் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து கல்யாணியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • தகாத உறவு கணவருக்கு தெரிந்து விட்டதால், அவரை தீர்த்துக் கட்ட கள்ளக்காதலன் தினேஷ், வித்யாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன்.
    • கொலைக்கு உடந்தையாக இருந்ததாக தோழி வித்யா, கள்ளக்காதலன் தினேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    நங்கவள்ளி:

    சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள மலையாம்பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர ராஜ் ( 32). நெசவு தொழிலாளி. இவரது மனைவி நிவேதா (27). இவர்களுக்கு 7 வயதில் மகன் உள்ளான்.

    கடந்த 17-ந்தேதி சுந்தர ராஜ் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுதொடர்பாக அவரது தந்தை அர்த்த நாரீஸ்வரர் என்பவர் ஜலகண்டாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே சுந்தரராஜ் கழுத்தில் காயம் இருந்தது. இதனால் அவருடைய மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவரை தனி அறையில் வைத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர், கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த கள்ளக்காதலன் தினேஷ் (24) என்பவருடன் சேர்ந்து தனது கணவரை கொலை செய்து நாடகமாடியது அம்பலமானது. உடனே போலீசார் நிவேதாவை கைது செய்தனர்.

    மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தோழி வித்யா (27), கள்ளக்காதலன் தினேஷ் (24) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். 3 பேரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்திய போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.

    இதில் நிவேதா போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-

    கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவர் சுந்தர ராஜ் பெங்களூருவில் வேலை பார்த்தபோது உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் சொந்த ஊரிலேயே தறித்தொழில் செய்து வந்தார்.

    அவர், பெங்களூருவில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பி வந்ததும் நான் ஜலகண்டாபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை பணியில் சேர்ந்தேன். அப்போது பள்ளி தோழி வித்யா அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். அவர் மூலம் எனக்கு தறி தொழிலாளி தினேஷ் அறிமுகமானார்.

    பின்னர் நானும், தினேசும் செல்போனில் பேசி நெருக்கமானோம். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. தொடர்ந்து அவருடன் செல்போனில் மணிக்கணக்கில் பேசி வந்தேன்.

    ஒரு கட்டத்தில் எங்களது கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரியவந்தது. இதை அறிந்த எனது கணவர் சுந்தரராஜ், என்னை கண்டித்து செல்போனை பறித்துக் கொண்டார்.

    எங்களது இந்த தகாத உறவு கணவருக்கு தெரிந்து விட்டதால், அவரை தீர்த்துக் கட்ட கள்ளக்காதலன் தினேஷ், வித்யாவுடன் சேர்ந்து திட்டம் தீட்டினேன்.

    இந்த நிலையில் ஆடி 1-ந் தேதி மாமனார், மாமியார் பெங்களூருவில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றனர். இது எங்களுக்கு சாதகமாக இருந்தது. சம்பவத்தன்று இரவு சுந்தரராஜிக்கு தூக்க மாத்திரைகள் கொடுத்து தூங்க வைத்தேன். பின்னர் கள்ளக்காதலன் தினேசை வீட்டிற்கு வரவழைத்தேன். அவர் வந்ததும், சுந்தரராஜ் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்து விட்டு, தற்கொலை செய்தது போல் தூக்கில் கட்டி தொங்கவிட்டோம்.

    இதையடுத்து நான் அதிகாலை 4 மணிக்கு மாமனாருக்கு போன் செய்து சுந்தரராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டு விட்டதாக கூறினேன். மேலும் யாருக்கும் சந்தேகம் வராதபடி இதை நம்ப வைத்து நாடகம் ஆடினேன்.

    மேலும் தகவல் அறிந்து பெங்களூருவில் இருந்து புறப்பட்டு ஊருக்கு வந்த மாமனார்-மாமியாரும் ஜலகண்டாபுரம் போலீஸ் நிலையத்தில் மகன் சாவில் சந்தேகம் இல்லை என புகார் கொடுத்தனர்.

    ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை எங்களை காட்டிக் கொடுத்து விட்டது. சுந்தரராஜ் மூச்சு திணறி இறந்துள்ளதும், அவர் கழுத்து இறுகாமல் தூக்கில் தொங்கியதும், இது கொலை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

    இது தொடர்பாக எங்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் நானும், கள்ளக்காதலனும், பள்ளி தோழியும் போலீசில் மாட்டிக்கொண்டோம்.

    இவ்வாறு நிவேதா போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

    கைதான ஆசிரியை நிவேதா, கள்ளக்காதலன் தினேஷ், தோழி ஆசிரியை வித்யா ஆகிய 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    • கள்ளக்காதல் விவகாரம் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார்.
    • கார்த்திக்கை தொடர்பு கொண்ட பிரியா உங்களிடம் பேச வேண்டும் என கோவைக்கு அழைத்தார்.

    குனியமுத்தூர்:

    சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). வெல்டர். இவரது மனைவி பிரியா (25). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

    பிரியாவின் தங்கை வீடு கோவை வெள்ளலூர் அருகே உள்ள கஞ்சிகோணம்பாளைத்தில் உள்ளது. இங்கு அவர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது பிரியாவுக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த டிரைவர் தினேஷ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

    இந்த கள்ளக்காதல் விவகாரம் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    கணவரிடம் கோபித்துக்கொண்டு பிரியாக 2 குழந்தைகளுடன் கோவையில் உள்ள தங்கை வீட்டிற்கு வந்தார். இங்கு வந்த பின்னர் தினேசுடன் நெருக்கம் அதிகமானது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ ஆரம்பித்தனர். இந்த தகவல் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை தொடர்பு கொண்டு ஏற்கனவே நடந்தவற்றை மறந்து விடு, என்னுடன் வா நாம் சேர்ந்து வாழலாம் என அழைத்தார்.

    இதுகுறித்து பிரியா தனது கள்ளக்காதலன் தினேஷிடம் கூறினார். கார்த்திக் உயிரோடு இருந்தால் நாம் 2 பேரையும் சேர்ந்து வாழவிட மாட்டார். எனவே அவரை கொலை செய்தால் தான் நிம்மதியாக வாழ முடியும் என அவர்கள் 2 பேரும் கொலை திட்டம் தீட்டினர்.

    அதன்படி தனது கணவர் கார்த்திக்கை தொடர்பு கொண்ட பிரியா உங்களிடம் பேச வேண்டும் என கோவைக்கு அழைத்தார். சம்பவத்தன்று அவரும் சேலத்தில் இருந்து புறப்பட்டு கோவைக்கு வந்தார்.

    பிரியா தனது கணவரை கஞ்சிகோணாம் பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனி பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே கள்ளக்காதலன் தினேஷ் கத்தியுடன் மறைந்து இருந்தார். அவர் பாய்ந்து சென்று கார்த்திக்கை கத்தியால் குத்தினார். கார்த்திக் தடுக்க முயன்றதில் அவரது கையில் கத்திக்குத்து விழுந்தது.

    வலிதாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் தினேசும், பிரியாவும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கார்த்திக் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற பிரியா, அவரது கள்ளக்காதலன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    ×