என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொலையுண்ட ஜெயராமனின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காட்சி.
கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை?: 3 பேர் கும்பல் வெறிச்செயல்

- மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஜெயராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
- கொலையுண்ட ஜெயராமன் தனியார் பள்ளி வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டப்பட்டி கிராமத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம் அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. கணவரை இழந்த அவர் தனியாக வசித்து வருகிறார்.
இவருக்கு சொந்தமான ஒரு வீட்டை நெருங்கிய உறவினரான கீழையூரை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் பயன்படுத்தி வருகிறார். வெங்கடேசன் சென்னையில் மருந்துக்கடை வைத்துள்ளார். இதற்கிடையே மகளின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அவர் கீழையூர் வந்திருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் கீழையூரைச் சேர்ந்த அவரது நண்பரான ஜெயராமன் (வயது 42) என்பவரும் கலந்து கொண்டார். பின்னர் ஜெயராமன் மட்டும் அட்டப்பட்டியில் உள்ள வெங்கடேசனின் சமத்துவபுரம் வீட்டிற்கு வந்தார். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டதால் பரமேஸ்வரியின் வீட்டின் முன்பு கட்டிலை போட்டு தூங்கினார்.
இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த ஜெயராமனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது.
காலையில் இதைப் பார்த்த அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியாஸ் ரெபோனி, இன்ஸ்பெக்டர் மன்னவன், கீழவளவு சப்-இன்ஸ்பெக்டர் வேல்ச்சாமி மற்றும் போலீசார் விரைந்து வந்து கொலையுண்ட ஜெயராமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கள்ளக்காதல் மற்றும் பெண் விவகாரத்தில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் கீழவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையுண்ட ஜெயராமன் தனியார் பள்ளி வேனில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். தற்போது அவர் வேலைக்கு செல்லாமல் இருந்தார்.