கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயன்ற இளம்பெண் கைது

கள்ளக்காதல் விவகாரம் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். கார்த்திக்கை தொடர்பு கொண்ட பிரியா உங்களிடம் பேச வேண்டும் என கோவைக்கு அழைத்தார்.
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொல்ல முயன்ற இளம்பெண் கைது
Published on

குனியமுத்தூர்:

சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 31). வெல்டர். இவரது மனைவி பிரியா (25). இவர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 குழந்தைகள் உள்ளனர்.

பிரியாவின் தங்கை வீடு கோவை வெள்ளலூர் அருகே உள்ள கஞ்சிகோணம்பாளைத்தில் உள்ளது. இங்கு அவர் அடிக்கடி வந்து சென்றார். அப்போது பிரியாவுக்கு திருச்செங்கோட்டை சேர்ந்த டிரைவர் தினேஷ் (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர்.

இந்த கள்ளக்காதல் விவகாரம் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

கணவரிடம் கோபித்துக்கொண்டு பிரியாக 2 குழந்தைகளுடன் கோவையில் உள்ள தங்கை வீட்டிற்கு வந்தார். இங்கு வந்த பின்னர் தினேசுடன் நெருக்கம் அதிகமானது. இதனையடுத்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ ஆரம்பித்தனர். இந்த தகவல் கார்த்திக்கிற்கு தெரியவரவே அவர் தனது மனைவியை தொடர்பு கொண்டு ஏற்கனவே நடந்தவற்றை மறந்து விடு, என்னுடன் வா நாம் சேர்ந்து வாழலாம் என அழைத்தார்.

இதுகுறித்து பிரியா தனது கள்ளக்காதலன் தினேஷிடம் கூறினார். கார்த்திக் உயிரோடு இருந்தால் நாம் 2 பேரையும் சேர்ந்து வாழவிட மாட்டார். எனவே அவரை கொலை செய்தால் தான் நிம்மதியாக வாழ முடியும் என அவர்கள் 2 பேரும் கொலை திட்டம் தீட்டினர்.

அதன்படி தனது கணவர் கார்த்திக்கை தொடர்பு கொண்ட பிரியா உங்களிடம் பேச வேண்டும் என கோவைக்கு அழைத்தார். சம்பவத்தன்று அவரும் சேலத்தில் இருந்து புறப்பட்டு கோவைக்கு வந்தார்.

பிரியா தனது கணவரை கஞ்சிகோணாம் பாளையத்தில் உள்ள தனியார் கம்பெனி பின்புறம் உள்ள காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே கள்ளக்காதலன் தினேஷ் கத்தியுடன் மறைந்து இருந்தார். அவர் பாய்ந்து சென்று கார்த்திக்கை கத்தியால் குத்தினார். கார்த்திக் தடுக்க முயன்றதில் அவரது கையில் கத்திக்குத்து விழுந்தது.

வலிதாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டு அலறினார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்களை பார்த்ததும் தினேசும், பிரியாவும் அங்கிருந்து தப்பிச் சென்றனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கார்த்திக் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய முயன்ற பிரியா, அவரது கள்ளக்காதலன் தினேஷ் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com