search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காருக்குள் பிணம் கிடந்ததில் திருப்பம்: வங்கி பெண் மேலாளர்-கள்ளக்காதலனை வேறு கும்பல் கொலை செய்தனரா?
    X

    காருக்குள் பிணம் கிடந்ததில் திருப்பம்: வங்கி பெண் மேலாளர்-கள்ளக்காதலனை வேறு கும்பல் கொலை செய்தனரா?

    • காரை விட்டு வெளியே வந்த கோபிநாத் புதுவை -திண்டிவனம் நெடுஞ்சாலையில் வந்த ஏதோ ஒரு வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
    • திண்டிவனம் ரோட்டில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    சென்னை கிழக்கு தாம்பரம் சிவஞானம் தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மகன் கோபிநாத் (வயது 31). இவரது மனைவி சாந்தா பிரீத்தி (28). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். புதுவை ரெட்டியார்பாளையத்தில் சாந்தா பிரீத்தி மருந்து கடை நடத்தி வருகிறார்.

    குடும்பத்துடன் இதே பகுதியில் அவர்கள் வசித்து வந்தனர். கோபிநாத் மரக்காணம் தனியார் வங்கியில் விற்பனை மேலாளராக வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் வங்கி கிளையில் வேலை பார்த்தார். அப்போது அங்கு பணிபுரிந்த வங்கி அலுவலரான மதுரா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    மதுராவுக்கு ஏற்கனவே சுரேஷ் என்ற முந்திரி வியாபாரியுடன் திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    கோபிநாத்-மதுரா இடையே ஏற்பட்ட நட்பு நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    கள்ளக்காதல் விவகாரத்தை தெரிந்து கொண்ட சாந்தா பிரீத்தி, கணவர் கோபிநாத்தை கண்டித்துள்ளார். அதையும் மீறி மதுராவுடன் கோபிநாத் தொடர்பில் இருந்து வந்துள்ளார்.

    இந்தநிலையில் மதுரா மேலாளராக பதவி உயர்வு பெற்று புதுச்சேரி ரெட்டியார்பாளையம் கிளைக்கு மாறுதலானார்.

    புதுவை லாஸ்பேட்டை அவ்வை நகரில் தங்கியிருந்தார். 2 பேருமே புதுச்சேரியில் தங்கியிருந்ததால் முன்பை விட அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர்.

    இந்தநிலையில் நேற்று இருவரும் மரக்காணம் வழியாக திண்டிவனம் ரோடு பகுதிக்கு சென்று அங்கிருந்து புதுவைக்கு காரில் திரும்பி வந்துள்ளனர்.

    அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் உருவாகி தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த கோபிநாத் காரில் இருந்த ஸ்கூருட்ரைவரால் மதுராவின் கழுத்தில் குத்தியுள்ளார். மேலும் முகத்திலும் கீறியுள்ளார்.

    இதில் அவர் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    அதன்பின் காரை விட்டு வெளியே வந்த கோபிநாத் புதுவை -திண்டிவனம் நெடுஞ்சாலையில் வந்த ஏதோ ஒரு வாகனத்தின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    சம்பவ இடத்தில் விழுப்புரம் போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல் ஹக் வந்து விசாரணை நடத்தினார்.

    இந்த நிலையில் கோபிநாத், மதுரா இருவரையும் வேறு கும்பல் கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். இருவரது செல்போன்களுக்கு தொடர்பு கொண்ட எண்களை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் மதுராவின் செல்போனுக்கு ஏராளமான போன் கால்கள் வந்துள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கோபி நாத்தை காணவில்லை என்று 2 நாட்களுக்கு முன் புதுச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோபிநாத், மதுரா இருவரும் காரில் வருவதை அறிந்த கும்பல் ஒன்று மதுராவை கொலை செய்து விட்டு கோபிநாத்தை அந்த வழியாக செல்லும் வாகனத்தில் விழுந்து தற்கொலை செய்ய தூண்டியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

    திண்டிவனம் ரோட்டில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். கோபிநாத் தற்கொலை செய்வதற்காக பாய்ந்த வாகனம் அடையாளம் தெரிந்து அந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினால் முழு விவரம் தெரிய வரும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

    Next Story
    ×