search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பீளமேடு பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது- மொபட் எண்ணை மாற்றியவர் சட்டையை மாற்றாததால் சிக்கினார்
    X

    பீளமேடு பெண் கொலையில் கள்ளக்காதலன் கைது- மொபட் எண்ணை மாற்றியவர் சட்டையை மாற்றாததால் சிக்கினார்

    • பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் இளம்பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பீளமேடு அருகே உள்ள சேரன்மாநகர் பாலாஜி நகர் பேஸ்-2 பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயிண்டிங் காண்டிராக்டர். இவரது மனைவி ஜெகதீஷ்வரி (வயது40).

    கடந்த 28-ந்தேதி ஜெகதீஷ்வரி வீட்டில் உள்ள அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    வீட்டில் இருந்த 5 ¾ பவுன் நகைகள் கொள்ளை போய் இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டது.

    ஜெகதீஷ்வரி கொலையில் தொடர்புடைய நபரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் ஜெகதீஷ்வரியின் செல்போனை கைப்பற்றி, அதில் அவருக்கு கடைசியாக போன் செய்தவர்கள் யார் என்ற தகவல்களை சேகரித்து விசாரித்தனர்.

    அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்தனர். ஆனாலும் போலீசாருக்கு அதில் எந்தவித துப்புமே கிடைக்காமல் இருந்து வந்தது. அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் இதுவரை 90 பேரை அழைத்து விசாரணை நடத்தி இருந்தனர்.

    கொலை நடந்து சில நாட்களை கடந்த பின்னும் குற்றவாளியை கண்டுபிடிக்கப்படாததால் இளம்பெண் கொலையில் பல்வேறு மர்மங்களும் நீடித்து வந்தது. கொலையாளி யார் என்பதை கண்டறியும் பணியில் போலீசார் இறங்கினர்.

    தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களையும் ஆய்வு செய்த போது சில ஆதாரங்கள் கிடைத்ததுடன், குற்றவாளி தொடர்பான தகவல்களும் கிடைத்தன.

    அதனை கொண்டு தீவிர விசாரணை நடத்தியதில் இளம்பெண்ணை கொலை செய்தது, ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் வீதியை சேர்ந்த மோகன்ராஜ் (33) என்பது தெரியவந்தது. இருந்த போதிலும் அவர்தான் கொலை செய்தாரா என்பதை தெரிந்து கொள்ள சில நாட்கள் சாதாரண உடையில் சென்று போலீசார் அவரது நடவடிக்கைகளை கண்காணித்தனர்.

    அப்போது அவர் தான் கொலை செய்தது என்பது உறுதியாகவே நேற்று மாலை போலீசார் ரேஸ்கோர்சில் வைத்து மோகன்ராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரை பீளேமடு போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது பணம் கேட்டு தொந்தரவு செய்ததால் கொலை செய்தேன் என அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தன.

    கைதான மோகன்ராஜ் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் சூப் கடை நடத்தி வருகிறார். இவர் முதலில் சேரன்மாநகர் பாலாஜி நகர் பகுதியில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்தார்.

    அப்போது, அவருக்கு ஜெகதீஷ்வரியுடன் நட்பாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கமானது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் தங்கள் செல்போன் எண்களை பரிமாறிக்கொண்டு போனில் பேசி வந்தனர்.

    மேலும் அடிக்கடி நேரில் சந்தித்தும் தனிமையில் ஜாலியாக இருந்து வந்தனர். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் 2 வீட்டாருக்கும் தெரியாமலேயே இருந்துள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, மோகன்ராஜ், சேரன்மாநகர் பகுதியில் இருந்து வீட்டை காலி செய்து விட்டு, ராமநாதபுரம் கிருஷ்ணன் கோவில் பகுதிக்கு மாறி வந்து விட்டார். வீடு மாறினாலும், அவர்களது கள்ளக்காதலானது தொடர்ந்தது.

    ஒரு நாள் ஜெகதீஷ்வரி, மோகன்ராஜூக்கு வீடியோ காலில் போன் செய்து பேசியுள்ளார். அப்போது, எனக்கு பணம் வேண்டும். நான் கேட்கும் பணத்தை கொடுக்கவில்லை என்றால் நமது கள்ளக்காதலை உனது மனைவியிடம் தெரிவித்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    இதனால் கள்ளக்காதலர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. தொடர்ந்து அவர் பணம் கேட்டு மிரட்டவே மோகன்ராஜ், ஜெகதீஷ்வரியை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

    அதன்படி கடந்த 28-ந்தேதி காலை வீட்டில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஜெகதீஷ்வரியின் வீட்டிற்கு மோகன்ராஜ் புறப்பட்டார். நவ இந்தியா பகுதிக்கு சென்றதும், தனது கடையில் வேலை பார்க்கும் ஊழியரை தொடர்பு கொண்டு, மொபட்டை எடுத்து வர கூறியுள்ளார். அவரும் எடுத்து சென்று கொடுத்தார்.

    அதனை வாங்கி கொண்டு, மீண்டும் ஜெகதீஷ்வரியின் வீட்டை நோக்கி பயணித்த அவர், செல்லும் வழியில் வண்டியின் ஒரிஜினல் நம்பர் பிளேட்டை மாற்றி விட்டு, மற்றொரு நம்பர் பிளேட்டை மாற்றி கொண்டு சென்றார்.

    ஜெகதீஷ்வரியின் வீட்டிற்குள் சென்ற மோகன்ராஜ் 2 மணி நேரம் வரை இருந்துள்ளார். பின்னர் அவரை கொலை செய்து விட்டு, நகைக்காக கொலை நடந்தது போல் காண்பிக்க வேண்டும் என்பதற்காக, அங்கிருந்த நகைகளை 5 முக்கால் பவுன் நகைகளுடன் தப்பிவிட்டார்.

    வீட்டிற்கு திரும்பி வந்த போதும், நவஇந்தியா வரை மொபட்டிலும், அதன் பின்னர் மோட்டார் சைக்கிளிலும் வீட்டிற்கு திரும்பி உள்ளார். கொலை செய்த பிறகு அவர் தலைமறைவாகவில்லை. எப்போதும், போல ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு சென்று தனது சூப் வியாபாரத்தை கவனித்து வந்துள்ளார். செல்போனில் இவருடன் பேசியதற்கான ஆதாரங்களும் இல்லாததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வரவில்லை. இதனால் அவரும் தொடர்ந்து தனது வேலைகளில் ஈடுபட்டு வந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    மொபட்டிலும், மோட்டார்சைக்கிளிலும் சென்றபோது ஒரே சட்டை தான் அவர் அணிந்திருந்தார். கண்காணிப்பு கேமிராக்களில் அவர் தப்பிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. ஒரே சட்டை அணிந்த நபர் 2 மோட்டார்சைக்கிளில் பயணிப்பது ஏன் என்பது பற்றி போலீசார் விசாரித்தபோது தான் குற்றவாளி சிக்கிக் கொண்டார். மொபட்டின் எண்ணை மாற்றியவர் சட்டையை மாற்றாததால் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து மோகன்ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பணம் கேட்டு தொந்தரவு கொடுத்ததால் இளம்பெண்ணை கள்ளக்காதலன் கொலை செய்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×