search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafale scam"

    உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரபேல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை மே 6-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019
    புதுடெல்லி:

    விமானப் படைக்கு, ரபேல் போர் விமானம் வாங்கும் ஒப்பந்தத்தில், எந்த முறைகேடும் நடக்கவில்லை என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சீராய்வு மனுக்களுடன், ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக, பத்திரிகைகளில் வந்த சில செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள், ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.

    இந்த கூடுதல் ஆவணங்களை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், அதை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதேபோல் சீராய்வு மனுக்கள் மீதான விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என, மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.



    இந்நிலையில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா அமர்வு முன், ரபேல் சீராய்வு மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்வதற்கு 4 வாரம் அவகாசம் வழங்கும்படி மத்திய அரசு சார்பில் கேட்கப்பட்டது. இதனை நிராகரித்த நீதிபதிகள், மே 6-ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். வழக்கின் விசாரணையையும் மே 6-ம்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

    ரபேல் விசாரணை நடைபெற இருக்கும் மே 6-ம் தேதி ஐந்தாம் கட்ட பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. #Rafale #RafaleReviewPetitions #LokSabhaElections2019
    ரபேல் போர் விமான ஊழல் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று குற்றம் சாட்டும் ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்ததுடன், விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. #RahulGandhi #SupremeCourt
    புது டெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ரூ.56 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தில் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதன் மூலம் முறை கேடுகள் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

    ரபேல் ஒப்பந்த விவகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட்,  எந்த முறைகேடும் நடந்து இருப்பதாக தெரியவில்லை என்று கூறியது. இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டது.

    அந்த ஆவணங்கள் அடிப்படையில் ரபேல் ஒப்பந்தம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் பாஜக முன்னாள் மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் புதிய ஆவணங்கள் அடிப்படையில் மறு ஆய்வு விசாரணை நடத்தலாம் என்று கடந்த வாரம் அறிவித்தது.




    இந்த மறு ஆய்வு விசாரணை எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

    இதற்கிடையே ராகுல் காந்தி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் மோடியை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து பேசி வரு கிறார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடியை திருடன் என்று சுப்ரீம்கோர்ட் நீதிபதியே கூறி விட்டார் என்றும் ராகுல் பேசி வருகிறார்.

    அதுமட்டுமின்றி ராகுல் காந்தி ரபேல் போர் விமானம் வாங்க ஒதுக்கீடு செய்த பணத்தை எடுத்து தொழில் அதிபர்களிடம் கொடுத்துவிட்டதாகவும், பொதுக்கூட்டங்களில் கூறி வருகிறார். ராகுலின் இந்த பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.

    டெல்லி தொகுதி பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், “ரபேல் குறித்த உத்தரவில் பிரதமர் மோடியை பற்றி நீதிபதி எதுவும் கூறாத நிலையில் அந்த உத்தரவை ராகுல் திரித்து கூறி வருகிறார். இது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ராகுல் பொய் சொல்லி பிரசாரம் செய்வதற்கு சுப்ரீம்கோர்ட் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    அதுபோல் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து ராகுல் மீது புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள், “ராகுல் தேவையில்லாமல் பிரதமரை மிகவும் தரக்குறைவாக பேசுகிறார். மோடி மீது அவர் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்லும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ்கண்ணா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது.

    பெண் எம்.பி. சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதகி ஆஜராகி வாதாடினார். அவர், “பிரதமரை நீதிபதியே திருடன் என்று கூறி விட்டார் என ராகுல் பொய் பிரசாரம் செய்து வருகிறார். இது கோர்ட்டு அவமதிப்பு ஆகும்” என்று வாதாடினார்.

    ரபேல் ஒப்பந்தம் மறு ஆய்வு விசாரணை குறித்து சுப்ரீம்கோர்ட் தெளிவான கருத்தை தெரிவித்து உள்ளது. ஆனால் பொதுக்கூட்டங்களிலும், பத்திரிகையாளர்களிடமும் ராகுல்காந்தி தவறாக பேசி இருப்பது இந்த கோர்ட்டுக்கு தெரிய வந்துள்ளது.

    பிரதமர் பற்றி எந்த ஒரு கருத்தையும் இந்த கோர்ட் தெரிவிக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்துக் கொள்கி றோம். எனவே ராகுல் இந்த விவகாரத்தில் வரும் 22ம் தேதிக்குள் உரிய விளக்கத்தை கோர்ட்டுக்கு அளிக்க வேண்டும்.

    இதற்காக ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அறிந்ததும் பாஜக பெண் எம்.பி. மீனாட்சி லேகி மகிழ்ச்சி அடைந்தார். அவர் கூறுகையில், “ராகுல் வேண்டுமென்றே கோர்ட் சொல்லாததை நாட்டு மக்களிடம் தவறாக பரப்பி வருகிறார். ஊடகங்களில் அவர் பேசியதை கோர்ட் கவனித்து இருக்கும். கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார். #RahulGandhi #SupremeCourt 

    ரபேல் ஊழல், நிரவ் மோடியின் வங்கி ஊழல் உள்ளிட்ட விவரங்கள் குறித்து என்னுடன் நேரடியாக விவாதிக்க பிரதமர் மோடி ஏன் தொடர்ந்து மறுத்து வருகிறார் என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். #PMModi #RahulGandhi
    புது டெல்லி:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், முக்கிய அரசியல் தலைவர்களும் பிரசாரம், செய்தியாளர் சந்திப்பு போன்ற களப்பணிகளில்   ஈடுபட்டு வருகின்றனர். இதேப்போல் தொழில்நுட்பத்தின் உதவி கொண்டும், தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி, 'அன்புள்ள பிரதமர் அவர்களே, ஊழல் குறித்து என்னுடன் விவாதிக்க அஞ்சுகிறீர்களா? நான் உங்களுக்கு எளிதான வழியை கூறுகிறேன். ரபேல்+ அனில் அம்பானி,  நிரவ் மோடி,  அமித் ஷா+ பணமதிப்பிழப்பு ஆகியவை குறித்து விவாதிப்பதற்கு உங்களை நன்கு தயார்படுத்திக்கொள்ளுங்கள்' என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.



    காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையினை வெளியிட்ட பின்னர், நாட்டின் பாதுகாப்பு, ஊழல் மற்றும் வெளிநாட்டு கொள்கை ஆகியவை குறித்து விவாதம் செய்ய பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்திருந்தார். மேலும் மோடியின் உதவியுடன் தான், அனில் அம்பானி ரபேல் ஊழலில் ரூ.30 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டினார் என ஏற்கனவே ராகுல் காந்தி குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.  #PMModi #RahulGandhi
    ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பான சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #SC #RafaleDeal
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து ரபேல் ரக 36 விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.

    இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.

    ரபேல் விமானங்களை வாங்க அதிக விலை கொடுக்கப்பட்டதாகவும், அனில் அம்பானிக்கு சாதகமாக பிரதமர் நடந்து கொண்டதாகவும் காங்கிரஸ் புகார் கூறியது.

    ரபேல் ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த்சின்கா, அருண்ஷோரி மற்றும் மூத்த வக்கீல் பிரசாந்த் பூசன் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.



    இந்த மனுவை கடந்த டிசம்பர் 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. ரபேல் ஒப்பந்தத்தில் எந்த சந்தேகமும் இல்லை. மத்திய அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது. இதனால் விசாரணைக்கு உத்தரவிட முடியாது என்று தீர்ப்பளித்தது.

    இந்த நிலையில் ரபேல் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. ரபேல் விவகாரத்தில் மத்திய அரசு தவறான தகவல்களை சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்ததால் இது குறித்து மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இந்த சீராய்வு மனுக்களை பிரசாந்த் பூசன் உள்ளிட்ட பலர் தாக்கல் செய்தனர்.

    இந்த சீராய்வு மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது. #SC #RafaleDeal
    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரபேல் ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்கு தொடரப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #Rafalescam #Congress #RahulGandhi
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமானங்கள் கொள்முதலில் ஊழல் நடந்ததாக பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் இரு அவைகளிலும் காங்கிரஸ் உறுப்பினர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனால், மக்களவை மற்றும் மாநிலங்களவையை சுமுகமாக நடத்த இயலாத நிலை நீடித்து வருகிறது.

    இன்றைய மக்களவை கூட்டத்தில் இவ்விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. உறுப்பினர்களிடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

    பின்னர், பாராளுமன்ற வாசலில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரபேல் பேரம் தொடர்பான கோப்புகளில் இடம்பெற்றுள்ள விபரங்களை ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.



    இந்த ஊழல் தொடர்பாக காங்கிரசின் கேள்விக்கு பதில் அளிக்க பயந்துகொண்டு பிரதமர் பாராளுமன்றத்துக்கு வராமல் இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். தனது குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் அளிக்க முடியாமல் தன்னை தனிப்பட்ட முறையில் நிதி மந்திரி அருண் ஜெட்லி தரக்குறைவாக அவையில் பேசி வருவதற்கும் ராகுல் கண்டனம் தெரிவித்தார்.

    எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிபெற்று மத்தியில் ஆட்சி அமைத்தால் ரபேல் ஊழல் தொடர்பாக கிரிமினல் வழக்கு தொடரப்படும். குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் ராகுல் காந்தி தெரிவித்தார். #Rafalescam #Congress #RahulGandhi
    பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். நிறுவன பணியாளர்களை இன்று சந்தித்த ராகுல் காந்தி ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக கலந்துரையாடினார். #Rafalescam #RahulGandhi #HALemployees
    பெங்களூரு:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு  1 லட்சத்து 30 ஆயிரம் கோடி லாபம் கிடைக்க பிரதமர் மோடி உதவி செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ‘இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை வரும் 50 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்காக மக்கள் பணத்தில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பிரதமரின் நண்பருக்கு சொந்தமான கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு குறிப்பு ஒன்றையும் தனது பதிவில் ராகுல் காந்தி இணைத்திருந்தார். இந்த ஆதாரத்தில் உண்மை இருப்பதாகவும், இதையும் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் மறுக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இந்திய அரசுக்கு சொந்தமான ‘ஹெச்.ஏ.எல்.’ எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிட்டட் நிறுவனத்திடம் ரபேல் போர் விமானங்களை பராமரிக்கவும், பழுது பார்க்கவும் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் இந்த ஒப்பந்தம் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பா.ஜ.க. தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.



    இதன்மூலம், உள்நாட்டு விமான தயாரிப்பு துறையில் நற்பெயருடன் திகழும் ‘ஹெச்.ஏ.எல்.’ நிறுவனத்தையும், அதன் பணியாளர்களின் திறமையையும் பா.ஜ.க. களங்கப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பெங்களூருவில் உள்ள ‘ஹெச்.ஏ.எல்.’ நிறுவனத்துக்கு வருகை தந்தார்.

    அங்கு பணியாற்றிய முன்னாள், இந்நாள் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி, ‘ஹெச்.ஏ.எல்.’ என்பது ஒரு நிறுவனம் மட்டுமல்ல என்று குறிப்பிட்டார்.

    இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தபோது பல்வேறு துறைகளில் தடம் பதிப்பதற்காக சில சிறப்புக்குரிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவ்வகையில், உள்நாட்டில் விமான உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட ‘ஹெச்.ஏ.எல்.’ மாபெரும் சொத்தாகும்.

    இந்த நிறுவனத்தின் மூலமாக நீங்கள் எல்லாம் நாட்டுக்கு ஆற்றிய பணிக்காக இந்த நாடு உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்தார். #Rafalescam #RahulGandhi #HALemployees
    சபரிமலை குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு பக்தர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் உருவாக்கி இருக்கிறது என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishnan #Sabarimala
    கோவை:

    மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் இன்று கோவை ரெயில் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கேள்வி : சபரிமலை கோவிலில் வழிபட பெண்களுக்கு அனுமதி வழங்கி உள்ள உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து உங்கள் கருத்து?

    பதில் : பாரம்பரியம், பாரம்பரியமாக வழிபாட்டு தலங்களுக்கு என்று முறைகளை கடைபிடித்து வருகிறார்கள். அந்த முறைகள் அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பும் போது இந்த தீர்ப்பு மிகப்பெரிய ஏமாற்றத்தையும், ஒரு அதிர்ச்சியையும் அந்த ஆலய பக்தர்களுக்கு உருவாக்கி இருக்கிறது என்று அறிய முடிகிறது.

    கேரள தேவசம்போர்டு மேல் முறையீடு செய்ய இருப்பதாக அறிகிறேன். கோவில்களில் வழிபாட்டு முறைகளை அப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.

    கேள்வி : இந்த விசயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன?

    பதில் : மத்திய அரசு முடிவு செய்ய எதுவுமில்லை. மாநில அரசு தான் இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கேள்வி : அ.தி.மு.க. போராட்டத்தின் பின்னணியில் பாரதிய ஜனதா இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளாரே...

    பதில் : தமிழகம் முழுக்க எந்த அரசியல் விசயமாக இருந்தாலும் பாரதிய ஜனதாவை மையப்படுத்தியே அரசியல் நடத்த முடியும் என்ற நிலை உள்ளது. இதை அனைத்து அரசியல் கட்சியினரும் உணர்ந்து இருக்கின்றனர்.

    பாரதிய ஜனதா தமிழக அரசியலில் மையப்புள்ளியாக இருந்து வருகிறது. பாராட்டாக இருந்தாலும் சரி, குற்றச்சாட்டாக இருந்தாலும் சரி பாரதிய ஜனதாவை தான் சொல்கிறார்கள்.


    அ.தி.மு.க.வினர் தி.மு.க. பின்னணியில் பா.ஜ.க. இருக்கிறது என்றும், தி.மு.க.வினர் அ.தி.மு.க. பின்னணியில் பா.ஜ.க. இருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

    நாங்கள் எந்த கட்சிக்கும் பின்னால் இருந்து செயல்படவில்லை. அனைவருக்கும் முன்னோடியாக இருந்து வருகின்றோம்.

    கேள்வி : மத்திய அரசு ஊழல் இல்லாத அரசாக இருப்பதாக பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரபேல் ஊழல் புகார் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

    பதில் : அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் ஜூரம் எப்படி தாக்கும் என்பதை அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். குற்றச்சாட்டுகளுக்கு தேவையான விளக்கத்தை துறை அமைச்சர்கள், பாதுகாப்பு துறை மந்திரி அளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் அவர் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார். #BJP #PonRadhakrishnan #SabarimalaVerdict #Sabarimala
    ×