search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ரபேல் போர் விமான ஊழல் - பெங்களூரு ஹெச்.ஏ.எல். பணியாளர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு
    X

    ரபேல் போர் விமான ஊழல் - பெங்களூரு ஹெச்.ஏ.எல். பணியாளர்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

    பெங்களூருவில் உள்ள ஹெச்.ஏ.எல். நிறுவன பணியாளர்களை இன்று சந்தித்த ராகுல் காந்தி ரபேல் போர் விமான கொள்முதல் தொடர்பாக கலந்துரையாடினார். #Rafalescam #RahulGandhi #HALemployees
    பெங்களூரு:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தின் மூலம் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானிக்கு  1 லட்சத்து 30 ஆயிரம் கோடி லாபம் கிடைக்க பிரதமர் மோடி உதவி செய்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ‘இந்தியா கொள்முதல் செய்யும் 36 ரபேல் போர் விமானங்களை வரும் 50 ஆண்டுகளுக்கு பராமரிப்பதற்காக மக்கள் பணத்தில் ஒரு லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தம் பிரதமரின் நண்பருக்கு சொந்தமான கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டார்.

    இந்த குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீட்டு குறிப்பு ஒன்றையும் தனது பதிவில் ராகுல் காந்தி இணைத்திருந்தார். இந்த ஆதாரத்தில் உண்மை இருப்பதாகவும், இதையும் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் மறுக்கக்கூடும் எனவும் அவர் தெரிவித்தார்.

    இந்திய அரசுக்கு சொந்தமான ‘ஹெச்.ஏ.எல்.’ எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் லிமிட்டட் நிறுவனத்திடம் ரபேல் போர் விமானங்களை பராமரிக்கவும், பழுது பார்க்கவும் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாததால் இந்த ஒப்பந்தம் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக பா.ஜ.க. தலைவர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.



    இதன்மூலம், உள்நாட்டு விமான தயாரிப்பு துறையில் நற்பெயருடன் திகழும் ‘ஹெச்.ஏ.எல்.’ நிறுவனத்தையும், அதன் பணியாளர்களின் திறமையையும் பா.ஜ.க. களங்கப்படுத்தி விட்டதாக குற்றம்சாட்டிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பெங்களூருவில் உள்ள ‘ஹெச்.ஏ.எல்.’ நிறுவனத்துக்கு வருகை தந்தார்.

    அங்கு பணியாற்றிய முன்னாள், இந்நாள் அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்களிடையே நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராகுல் காந்தி, ‘ஹெச்.ஏ.எல்.’ என்பது ஒரு நிறுவனம் மட்டுமல்ல என்று குறிப்பிட்டார்.

    இந்தியாவுக்கு விடுதலை கிடைத்தபோது பல்வேறு துறைகளில் தடம் பதிப்பதற்காக சில சிறப்புக்குரிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவ்வகையில், உள்நாட்டில் விமான உற்பத்திக்காக உருவாக்கப்பட்ட ‘ஹெச்.ஏ.எல்.’ மாபெரும் சொத்தாகும்.

    இந்த நிறுவனத்தின் மூலமாக நீங்கள் எல்லாம் நாட்டுக்கு ஆற்றிய பணிக்காக இந்த நாடு உங்களுக்கு கடமைப்பட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்தார். #Rafalescam #RahulGandhi #HALemployees
    Next Story
    ×