search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என்பதா? - ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
    X

    ரபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என்பதா? - ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்

    ரபேல் போர் விமான ஊழல் தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என்று குற்றம் சாட்டும் ராகுல் காந்திக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்ததுடன், விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளது. #RahulGandhi #SupremeCourt
    புது டெல்லி:

    பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு ரூ.56 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தில் தொழில் அதிபர் அனில் அம்பானிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டதன் மூலம் முறை கேடுகள் நடந்து இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

    ரபேல் ஒப்பந்த விவகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஒப்பந்த ஆவணங்களை ஆய்வு செய்த சுப்ரீம் கோர்ட்,  எந்த முறைகேடும் நடந்து இருப்பதாக தெரியவில்லை என்று கூறியது. இந்த நிலையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை ஒரு ஆங்கில நாளிதழ் வெளியிட்டது.

    அந்த ஆவணங்கள் அடிப்படையில் ரபேல் ஒப்பந்தம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டில் பாஜக முன்னாள் மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண்ஷோரி ஆகியோர் மனுதாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் புதிய ஆவணங்கள் அடிப்படையில் மறு ஆய்வு விசாரணை நடத்தலாம் என்று கடந்த வாரம் அறிவித்தது.




    இந்த மறு ஆய்வு விசாரணை எப்போது நடைபெறும் என்று அனைவரும் எதிர்பார்த்தபடி உள்ளனர்.

    இதற்கிடையே ராகுல் காந்தி தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் மோடியை மிகவும் தரம் தாழ்ந்து விமர்சித்து பேசி வரு கிறார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடியை திருடன் என்று சுப்ரீம்கோர்ட் நீதிபதியே கூறி விட்டார் என்றும் ராகுல் பேசி வருகிறார்.

    அதுமட்டுமின்றி ராகுல் காந்தி ரபேல் போர் விமானம் வாங்க ஒதுக்கீடு செய்த பணத்தை எடுத்து தொழில் அதிபர்களிடம் கொடுத்துவிட்டதாகவும், பொதுக்கூட்டங்களில் கூறி வருகிறார். ராகுலின் இந்த பேச்சுக்கு பாஜக மூத்த தலைவர்கள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தனர்.

    டெல்லி தொகுதி பாஜக எம்.பி. மீனாட்சி லேகி கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம்கோர்ட்டில் ராகுலுக்கு எதிராக ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில் அவர், “ரபேல் குறித்த உத்தரவில் பிரதமர் மோடியை பற்றி நீதிபதி எதுவும் கூறாத நிலையில் அந்த உத்தரவை ராகுல் திரித்து கூறி வருகிறார். இது மிகப்பெரிய நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ராகுல் பொய் சொல்லி பிரசாரம் செய்வதற்கு சுப்ரீம்கோர்ட் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

    அதுபோல் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்து ராகுல் மீது புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள், “ராகுல் தேவையில்லாமல் பிரதமரை மிகவும் தரக்குறைவாக பேசுகிறார். மோடி மீது அவர் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்லும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.

    இந்த நிலையில் பாஜக எம்.பி. மீனாட்சி லேகி தொடர்ந்த வழக்கு விசாரணை இன்று சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ்கண்ணா ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது.

    பெண் எம்.பி. சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோதகி ஆஜராகி வாதாடினார். அவர், “பிரதமரை நீதிபதியே திருடன் என்று கூறி விட்டார் என ராகுல் பொய் பிரசாரம் செய்து வருகிறார். இது கோர்ட்டு அவமதிப்பு ஆகும்” என்று வாதாடினார்.

    ரபேல் ஒப்பந்தம் மறு ஆய்வு விசாரணை குறித்து சுப்ரீம்கோர்ட் தெளிவான கருத்தை தெரிவித்து உள்ளது. ஆனால் பொதுக்கூட்டங்களிலும், பத்திரிகையாளர்களிடமும் ராகுல்காந்தி தவறாக பேசி இருப்பது இந்த கோர்ட்டுக்கு தெரிய வந்துள்ளது.

    பிரதமர் பற்றி எந்த ஒரு கருத்தையும் இந்த கோர்ட் தெரிவிக்கவில்லை என்பதை நாங்கள் தெளிவாக தெரிவித்துக் கொள்கி றோம். எனவே ராகுல் இந்த விவகாரத்தில் வரும் 22ம் தேதிக்குள் உரிய விளக்கத்தை கோர்ட்டுக்கு அளிக்க வேண்டும்.

    இதற்காக ராகுலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை அறிந்ததும் பாஜக பெண் எம்.பி. மீனாட்சி லேகி மகிழ்ச்சி அடைந்தார். அவர் கூறுகையில், “ராகுல் வேண்டுமென்றே கோர்ட் சொல்லாததை நாட்டு மக்களிடம் தவறாக பரப்பி வருகிறார். ஊடகங்களில் அவர் பேசியதை கோர்ட் கவனித்து இருக்கும். கோர்ட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன்” என்று கூறினார். #RahulGandhi #SupremeCourt 

    Next Story
    ×