search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Precautions"

    • டெங்கு காய்ச்சல் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உலவுகின்றன.
    • குழந்தைகள்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகக்கூடும்.

    பருவ காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கொசுக்கள், உற்பத்திக்கும், கொசுக்களால் பரவும் நோய்களுக்கும் வழிவகுத்துள்ளது. பல பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை குறித்தும், அதன் உண்மை தன்மை குறித்தும், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் பார்ப்போம்.

    கட்டுக்கதை 1: பப்பாளி இலைச் சாறு டெங்குவை குணப்படுத்தும். ஆட்டு பால், பப்பாளி இலைகள் மற்றும் கிலோய் சாறு உட்கொள்வதன் மூலம் ரத்த தட்டுக்களின் (பிளேட்லெட்) எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

    உண்மை: இவற்றை உட்கொள்வது ரத்த தட்டுக்களின் (பிளேட்லெட்) எண்ணிக்கை சிறிதளவு உயர்வதற்கு வழிவகுக்கும் என்பது உண்மைதான். அதற்காக பப்பாளி இலை சாறு உள்ளிட்ட வீட்டு வைத்தியங்களை மட்டுமே நம்பியிருப்பது சரியான சிகிச்சைமுறை ஆகாது.

    டெங்கு காய்ச்சல் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இவை ஓரளவுக்கு கைகொடுக்கும். ஆனால் டெங்கு நோயாளியின் பிளேட்லெட்டுகள் திடீரென வீழ்ச்சி அடைந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப் பட்டால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருவதே பலனளிக்கும்.

    கட்டுக்கதை 2: முதியவர்கள், குழந்தைகள், கருமை நிறம் கொண்டவர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    உண்மை: இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் நம்பிக்கை இது. ஆனால் வயது, பாலினம், தோல் நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படாது.

    அத்தகைய பாகுபாட்டை டெங்கு கொசு காண்பிக்காது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக முதியவர்கள், குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் கடுமையான பாதிப்பை உண்டாக்கலாம்.

    இதை தவிர வேறு காரணம் இல்லை. வயது, பாலினத்தை பொருட்படுத்தாமல் எவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகலாம். டெங்குவை விரட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானது.

    கட்டுக்கதை 3: டெங்கு கொசுக்கள் கருமையான, அடர் நிறம் கொண்ட ஆடைகளை அணிபவர்களையே கடிக்க விரும்புகின்றன.

    உண்மை: நிறங்களால் கொசுக்கள் ஈர்க்கப்படுவது உண்மைதான். கருப்பு, சியான், ஆரஞ்சு, சிவப்பு போன்ற அடர் நிறங்களை கொண்ட ஆடைகளுடன் சுவாசத்தின்போது வெளியிடப்படும் கார்பன்டை ஆக்ஸைடு வாயு, உடல் வெப்பம் போன்றவை டெங்குவை பரப்பும் கொசுக்களால் எளிதில் ஈர்க்கப்படுகின்றன.

    அதற்காக வெளிர் நிற ஆடை அணிபவர்களை கொசுக்கள் கடிக்காது என்பதல்ல. கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இருப்பதை தவிர்ப்பது, கொசு விரட்டிகளை பயன்படுத்துவது பயனுள்ள தற்காப்பு நடவடிக்கைகளாக அமையும்.

    கட்டுக்கதை 4: ஒருவர் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாவார். அவருக்கு மீண்டும் டெங்கு காய்ச்சல் வராது.

    உண்மை: இதில் துளியும் உண்மை இல்லை. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் டெங்கு பாதிப்புக்கு ஆளாகலாம்.

    டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்கள் பகல் பொழுதில் சுறுசுறுப்பாக இயங்குவதால் எளிதில் டெங்கு பரவும் அபாயம் இருக்கிறது. எனவே கொசு கடிப்பதை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    கட்டுக்கதை 5: ஒருவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, டெங்கு காய்ச்சல் வராது.

    உண்மை: இவை இரண்டுமே வைரஸ் வகை நோய்கள். அதனால் இரண்டும் ஒரே சமயத்தில் ஒருவரை தாக்காது என்று கூற முடியாது.

    கொரோனா காலகட்டத்தில் இரண்டு நோய்த்தொற்றுகளாலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே டெங்கு, கொரோனா இரண்டையும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

    குழந்தைகள்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகக்கூடும். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வைக்கும் உணவுகளை உட்கொள்ள செய்ய வேண்டும்.

    டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியோ, லேசான டெங்கு பாதிப்புக்கு குறிப்பிட்ட சிகிச்சை முறையோ இல்லை. லேசான டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் வழிகாட்டுதலின்படி வீட்டிலேயே சிகிச்சை அளிக்கலாம்.

    கடுமையான வயிற்று வலி, தொடர் வாந்தி, வேகமாக சுவாசிப்பது, ரத்தப்போக்கு ஏற்படுவது, சோர்வு, சருமம் வெளிர் நிறத்துக்கு மாறுவது, தூக்கமின்மை, வாய், நாக்கு உலர்வடைவது, நீரிழப்பு ஏற்படுவது, சிறுநீர் கழிப்பது குறைவது போன்ற அறிகுறிகள் நிலைமையை மோசமாக்கும். இவற்றுள் ஏதேனும் ஒரு அறிகுறி கடுமையாக வெளிப்பட்டாலே உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமானது.

    • கோடைகாலத்தில் உஷ்ணமும் வியர்வையும் உடலை இயல்பாகவே பலவீனப்படும்.
    • 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

    கோடைகாலம் என்பது இளவேனிற், முதுவேனிற் காலங்களையே குறிக்கும். சித்திரை, வைகாசி மாதங்கள் இளவேனிற் காலம் என்றும், ஆனி, ஆடி மாதங்கள் முதுவேனிற் காலம் என்றும் அழைக்கப்படும்.

    ஆனால் தற்சமயம், பின்பனி காலமாகிய மாசி, பங்குனி மாதங்களிலேயே வெயில் வறுத்தெடுத்து வியர்வைத் துளி ஆவியாகும் அளவுக்கு பருவநிலை மாற்றங்கள் பாடாய்படுத்துகிறது.

    கோடைகாலத்தில் ஏற்படும் உஷ்ணமும் வியர்வையும் நம் உடலை இயல்பாகவே பலவீனப்படுத்துகின்றது. கோடை காலத்தில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக பல்வேறு பாதிப்புகள், நோய்களை நாம் சந்திக்கிறோம்.

    இந்த நோய்களுக்கு இயற்கையான முறையில் நமது வீடுகளில் உள்ள இயற்கை பொருட்களை பயன்படுத்தியும், எளிய சித்த மருந்துகளை பயன்படுத்தியும் தீர்வு காணலாம்.

    நம் உடலின் சராசரி வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட். கோடைகாலத்தில் வெப்பம் 100 டிகிரியை தாண்டும். சில இடங்களில் வெப்ப அலை கடுமையாக வீசும். அப்போது வெயில் அளவு 106 முதல் 112 டிகிரி பாரன்ஹீட் வரை அதிகரிக்கும்.

    இது போன்ற சூழ்நிலையில் உடல் வெப்பம் அதிகரித்து உடலில் நீர்ச் சத்து குறைந்து களைப்பு, மயக்கம் வரலாம். வெப்ப தாக்குதல் அதிகமாகும் போது ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதம் தாக்கும் ஆபத்து உள்ளது. அதுபோன்ற நிலையில் உடல் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

    சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாய் முடியலாம். எனவே இதில் இருந்து பாதுகாக்க கவனமாக இருக்க வேண்டும்.

    கோடைகால நோய்கள்

    கோடைகாலத்தில் டைபாய்டு, மஞ்சள் காமாலை, அமீபியாசிஸ், அம்மை போன்ற நோய்கள் பரவும். இயற்கையிலேயே கோடைகாலத்தில் நம் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உடல் வன்மை குறைந்து காணப்படும். ஆகையால் தான் மாசி முதல் ஆடி வரையுள்ள காலம் `ஆதாந காலம்' என்று சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது.

    நாம் பருகும் நீரும், உண்ணும் உணவும் சுத்தமானதாக இருக்க வேண்டும். 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். குடிக்கும் நீரை கொதிக்க வைத்து வடிகட்டி ஆறவைத்து பருகலாம். நீர்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சோம்புத் தண்ணீர், சீரகத் தண்ணீர் குடிக்க வேண்டும்.

     வியர்க்குரு:

    கோடை காலத்தில் தான் வியர்வை சுரப்பிகளில் அழுக்குகள் சேர்ந்து வியர்க்குருக்கள் தோன்றும். அதிகப்படியான வியர்வை பிசுபிசுப்பால் சில கிருமிகள் வியர்வையுடன் சேர்ந்து தேமல், படை, தினவு போன்ற சரும தொற்றுகளை ஏற்படுத்தும்.

    மருந்து:

    சிறிதளவு அருகம்புல்லின் சாறு எடுத்து அதனுடன் சமஅளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி ஆற வைத்து ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை அடிக்கடி தோலின் மீது பூசி பயன்படுத்த வேண்டும்.

     நலங்கு மாவு:

    குளிப்பதற்கு நலங்கு மாவு பயன்படுத்தலாம். நலங்கு மாவு என்பது வெட்டிவேர், விலாமிச்சுவேர், கோரைக்கிழங்கு, கிச்சிலி கிழங்கு, பாசிப்பயறு, கார்போகரிசி, சந்தனம் இவைகளை சமஅளவில் எடுத்து பொடித்த பொடியாகும். இதை சோப்பிற்கு பதிலாக உடலில் தேய்த்து குளித்து வரவேண்டும். இதனால் தேமல், படை, தினவு, தோல் வறட்சி இவைகள் நீங்கி தோல் பளபளப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் காணப்படும்.

    அதிகப்படியான வியர்வைக்கு:

    உள்ளங்கை, உள்ளங்கால் வியர்வை, தோலின் வியர்வை, வியர்வை நாற்றம் அதிகம் உள்ளவர்கள் ஆவாரம்பூ, மகிழம்பூ இவை இரண்டையும் டீ போல போட்டு குடித்தும், வெளிப்பூச்சாக ஆவாரம்பூ, மகிழம்பூ, கஸ்தூரி மஞ்சள், வேப்பிலை இவைகளை சமஅளவில் அரைத்து தேய்த்து குளித்தும் வரலாம்.

    தலை அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல்:

    வெயில் காலத்தில் பிரத்தியேகமாக ஏற்படும் தலை அரிப்பு, பொடுகு, முடி உதிர்தல் இவைகளை நீக்க கடுக்காய்த் தோல், நெல்லிவற்றல், மிளகு, கஸ்தூரி மஞ்சள், வேப்பம் வித்து இவைகளை சமஅளவு எடுத்து பொடித்து பசும்பாலில் காய்ச்சி குளிப்பதற்கு 15 நிமிடம் முன்பாக தலையில் நன்றாக தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணிந்து கண்களுக்கும் நல்ல குளிர்ச்சி உண்டாகும்.

    சிறுநீரகக் கற்கள்:

    போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருத்தல், வெயிலில் அலைதல், அசைவ உணவுகளை அதிகமாக விரும்பி சாப்பிடுதல் இவைகளால் உணவில் உள்ள அதிகப்படியான கால்சியம், ஆக்சலேட், பாஸ்பரஸ் போன்றவை சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப்பாதையில் தேங்கி கற்களாக உருவாகின்றது. மேலும் சிறுநீரகத் தொற்றினாலும் கற்கள் உருவாகும். சிறுநீரை அடக்காமல் கழித்து விடவேண்டும்.

    வெட்டிவேர், நன்னாரி வேர் கலந்த தண்ணீர் குடிக்கலாம். சுரைக்காய், வாழைத்தண்டு, சவ்சவ், முள்ளங்கி, பீர்க்கங்காய், எலுமிச்சம்பழம், இளநீர், பீன்ஸ் இவைகளை உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    சிறுகன்பீளை செடி, நெருஞ்சில் விதை இவைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர வேண்டும். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

     சின்னம்மை:

    கோடைகாலத்தில் காணப்படும் தொற்றுகளில் முதன்மையானது சின்னம்மை. இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு நேரடித்தொடர்பு, காற்று மூலமாக எளிதில் தொற்றும் நோய். முதல் அறிகுறியாக காய்ச்சல், உடல்வலி, கொப்புளங்களை ஏற்படுத்தும்.

    கொப்புளங்களை நகங்களால் கீறவோ, கிள்ளவோ கூடாது. ஒரு வாரத்தில் தானாகவே மறைந்து விடும். வேப்பிலை, வேப்பிலை தளிரில் படுக்க வைக்க வேண்டும். வேப்பிலை, மஞ்சள் அரைத்த நீரால் உடலைக் கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

    சீரகம், கொத்தமல்லி சேர்த்து கொதிக்க வைத்த நீரை அடிக்கடி குடித்து வரவும். நுங்கு, இளநீர், பதனீர், தர்ப்பூசணி, கிர்ணி, முலாம்பழம், மோர், சின்ன வெங்காயம், கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற உணவுகளை அடிக்கடி எடுக்க வேண்டும்.

    தசைப்பிடிப்பு வலிகள்:

    கோடைகாலத்தில் ஏற்படும் அதிவியர்வை, நீரிழப்பு, தொற்று நோய்களான வாந்தி, வயிற்றுப்போக்கு முதலியவற்றால் உடலில் உள்ள பொட்டாசியம் அளவு குறையும். உடலில் உள்ள நரம்புகள் மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு பொட்டாசியம் அவசியமான ஒன்று. இது குறைந்தால் உடல் களைப்படைந்து தசைகள் இழுத்துக் கொள்ளும். சில நேரங்களில் கால் மூட்டுகள் வலுவிழந்து நடக்க முடியாத நிலை கூட ஏற்படும்.

    இதைத் தவிர்க்க பொட்டாசியம் நிறைந்த உணவுகளான இளநீர், தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, திராட்சை, வாழைப்பழம், நுங்கு, பதநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    கோடை காலத்தில் சூரியக் கதிர்களில் இருந்து வரும் புறஊதாக் கதிர்களில் ஒருவகை தோலின் ஆழம் வரை ஊடுருவி செல்லக் கூடியது. இதனால் ஒவ்வாமை, தோல் சுருக்கங்கள் மற்றும் இளவயதிலேயே வயதான தோற்றம் போன்றவைகளை ஏற்படுத்தும்.

    மற்றொரு வகை கதிர்கள் தோலின் மேற்பகுதியை ஊடுருவி செல்லக் கூடியது. இவை தோலின் நிறமிச் செல்களை பாதித்து மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும். இதனால் உடல் கருநிறம் அடைகின்றது.

    இதை தவிர்க்க முகம், உதடுகளில் வெண்ணெய் பூசிக்கொள்ளலாம். உடலில் தேங்காய் எண்ணெய் தேய்த்து கொள்ளலாம். புற ஊதாக்கதிர்கள் உடலை தாக்காதவாறு துணிகளால் உடலை மூடிக் கொள்ளலாம்.

     நீர்க்கடுப்பு-சூடு பிடித்தல்

    கோடையில் நம் உடலில் நீரின் அளவு குறைவதால், வெளியேறும் சிறுநீரின் அளவும் குறைகின்றது. தினமும் 3 முதல் 4 லிட்டர் நீர் குடிக்க வேண்டும். இளநீர், நுங்கு, எலுமிச்சை, நன்னாரி சர்பத், முலாம் பழம், தர்ப்பூசணி பழம், வெள்ளரி போன்ற நீர் சத்துள்ள பழங்கள் சாப்பிட வேண்டும்.

    எலுமிச்சைச்சாறு, பனங்கருப்பட்டி, கொடம்புளி, சுக்குப்பொடி, ஏலப்பொடி, தண்ணீர் சேர்த்து தயாரிக்கப்படும் `பானகம்' உடலுக்கு குளர்ச்சியைத் தரும். இது நீர்க்கடுப்புக்கு அருமருந்தாகும். எலுமிச்சை, கொடம்புளி, புளி, அன்னாசி, மாதுளை போன்ற பல வகையான பானகங்களை கோடைகாலத்தில் குடிக்கலாம்.

    • பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.
    • சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    பெங்களூரு:

    மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து தற்போது பல நாடுகளில் இந்த நோய் கண்டறியப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் இந்த குரங்கு அம்மை பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நோய் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவினால் 7 முதல் 14 நாட்களுக்குள் தொற்றை ஏற்படுத்திவிடும்.

    குரங்கு அம்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல்வலி, உடலில் தடுப்புகள் ஏற்படும். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உமிழ்நீர், சளி மூலமாக பிறருக்கு பரவக்கூடும் என்பதால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபடுத்துவது அவசியம்.

    இந்நிலையில் கர்நாடக மாநிலம், உத்தர கன்னடம் மாவட்டத்தில் உள்ள மலை கிராமத்தில் குரங்கு அம்மையால் 21 பேர் பாதிக்கப்பட்டுள்னர். இதில் 8 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற 13 பேர் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களது உடல் நிலையை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நோய் பரவாமல் தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    இது குறித்து மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர். நிரஜ் கூறியதாவது:-

    குரங்கு அம்மையால் பாதிக்ப்பட்ட 21 பேரும் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட விலங்குடன் தொடர்பு கொள்வதன் மூலம் மனிதர்களுக்கு இந்த குரங்கு அம்மை பரவுகிறது. எனவே வனப்பகுதிக்குள் மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருமல் சளி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சுகாதார அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும். குரங்கு அம்மை ஏற்பட்டால் அடுத்த 3 முதல் 5 நாட்களில் அதிக காய்ச்சல் இருக்கும். 2 வது முறையாக குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தப்போக்கு அறிகுறிகள் இருக்கும், உடல் வெப்பநிலையும் உயரக்கூடும் எனவே பொது மக்கள் கவனமாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    கர்நாடகா, தமிழகம் இடையே தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும் சூழ்நிலையில் கர்நாடகாவில் குரங்கு அம்மை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை. அத்தகைய அறிகுறிகளுடன் கூட யாரும் இல்லை. ஆனாலும் அண்டை மாநிலங்களில் அத்தகைய பாதிப்பு இருக்கும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகளை பொது சுகாதாரத்துறை மேற்கொள்ளும். கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு கண்காணிப்பு பணிகளின் தொடர்ச்சியாக தற்போதும் தேவையின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கபடும். அதே போன்று குரங்கு அம்மை குறித்த விழிப்புணர்வு பொது மக்களுக்கு ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    உடுமலை:

    கேரளாவில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருகிறது. இதனைத் தடுக்க கேரள அரசு நோய் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நோயின் தாக்கம் தமிழகத்தில் பரவ வாய்ப்புள்ளது.

    இதனால் திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே தமிழக - கேரள எல்லையில் உள்ள கிராமங்களில், கால்நடைத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கால்நடை டாக்டர், ஆய்வாளர் மற்றும் உதவியாளர் அடங்கிய குழுவினர் கல்லாபுரம், மானுப்பட்டி, கோடந்தூர், தளிஞ்சி, ஜல்லிப்பட்டி, செல்லப்பம்பாளையம், வாளவாடி உள்ளிட்ட பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று கால்நடைகளைக் கண்காணிக்கின்றனர்.

    மேலும் இனிவரும் நாட்களில் ஏதேனும் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனே அருகில் உள்ள கால்நடை டாக்டரை அணுகி சிகிச்சை பெற கால்நடை வளர்ப்போரிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து கால்நடைத்துறை உதவி இயக்குனர் ஜெயராம் கூறியதாவது:-

    மாநில எல்லை கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் பாதிப்பு கிடையாது. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் உள்ள கால்நடைகள் கண்காணிக்கப்படுகிறது.

    கால்நடை வளர்ப்போரிடம் நோய் பாதிப்பின் தன்மை, சிகிச்சை முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்தே கேரளாவுக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்படுகின்றன. கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு கால்நடைகள் பெருமளவு கொண்டு வரப்படுவதில்லை. இருப்பினும் ஒன்பதாறு சோதனைச்சாவடியில் கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு சுகாதார நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 1.60 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது.
    • ஆபத்தை விளை விக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சேலம் மாவட்டம், மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியில் உள்ள நிலையில், தற்போது அணைக்கு வரும் 1.60 லட்சம் கன அடி நீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கர்நாடகா மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் அங்கு உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    குறிப்பாக கிருஷ்ணராஜா சாகர் அணை, கபினி அணை

    களில் இருந்து அதிக அள விலான நீர் காவிரி ஆற்றில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன்மூலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதி கரித்துள்ளது. ஏற்கனவே சுமார் 1.60 லட்சம் கன அடிக்கு மேல் உபரி நீர் வெளியேற்றப்பட்டுவரும் நிலையில், தற்போது 2.10 லட்சம் கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் அதிகளவில் வெளியேற்றப்படுவதால் வருவாய்த்துறை, நீர்வளத்துறை, காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதோடு ஒலிப்பெருக்கி மூலமும், தொலைக்காட்சி வாயிலாகவும் பொது மக்க ளுக்கு விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மேட்டூர் அணைக்குத் தொடர்ந்து அதிக அள வில் தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மீண்டும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆபத்தை விளை விக்கும் வகையில் யாரும் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதோ, புகைப்படங்கள் எடுப்பதோ கூடாது என எச்சரிக்கப்படுகிறது.

    எனவே, பொதுமக்கள் எவரும் மேட்டூர் அணை யின் கரையோரம், காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதி கள், அணையின் தாழ்வான பகுதிகள், சேலம் மாவட்டம், மேட்டூர், எடப்பாடி, சங்க கிரி வட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர பகுதிகள், நீர்படுகைகள் மற்றும் நீர் வழித்தடங்கள், மேட்டூர் அணை பூங்கா, செக்கானூர் கதவணை, கோட்டையூர், பரிசல்துறை, பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை உள்ளிட்ட காவேரி கரையோரப் பகுதிகளில் சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் நீர் நிலைகளுக்கு அருகில் செல்வதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

    குறிப்பாக, காவிரியில் இளைஞர்கள், பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோர் நீரில் இறங்கி குளிப்பதையோ, நீச்சல் அடிப்பதையோ, மீன் பிடிப்பதையோ, கால்நடைகளை குளிப்பாட்டு வதையோ, புகைப்படங்கள் மற்றும் சுயபடங்கள் எடுப்பதையோ, காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்ப தையோ முற்றிலும்தவிர்த்திட வேண்டும். மீறினால் காவல்து றைமூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளார்.

    • டாக்டரை நாடி ஆலோசனை பெற்று உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது
    • கொரோனாவின் முதல் இரண்டு அலைகள் தந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிடக்கூடாது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளது. இம்மாத துவக்கத்தில் 0.3 சதவீதமாக இருந்த தொற்று பரவல் மெல்ல அதிகரித்து, 2.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் மேலும் தொற்று வேகமெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவதால், தொற்று தடுப்பு பணிகளை முடுக்கி விட மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.முதல் கட்டமாக மருத்துவ கல்லூரியில் சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வருவோர் தொடர் உடலக்குறைவு இருந்தால் உயர்சிகிச்சைக்கு பரிந்துரைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    திருப்பூர் மருத்துவ கல்லூரி டீன் முருகேசன் கூறுகையில், மாவட்டத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரிக்க துவங்கியுள்ளதால், அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டு, 50 படுக்கைகளுடன் துவங்கப்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனைக்கான வசதிகள் தயாராக உள்ளது. சுகாதாரத்துறை அறிவுறுத்திய பின் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். அறிகுறி இருப்பவர்கள் சந்தேகம் இருந்தால் டாக்டரை நாடி ஆலோசனை பெற்று உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது என்றார்.

    மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறுகையில், எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், இன்னும் கூட முதல்தவணை தடுப்பூசி கூட செலுத்தாமல் ஒரு லட்சம் பேர் உள்ளனர். இரண்டாவது தவணை தடுப்பூசி 3லட்சம் பேருக்கு செலுத்த வேண்டியுள்ளது.மருத்துவ கல்லூரி, தாலுகா அளவிலான மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர் முன்வந்து செலுத்தி கொள்ள வேண்டும். தற்போது தொற்று பாதித்தவரில் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்தாதவர்களா என்பது குறித்து ஆராயப்பட்டு வருகிறது என்றார்.

    கடந்த5 மாதங்களாக திருப்பூர் பின்னலாடை தொழில்முனைவோரும், தொழிலாளர்களும் கொரோனா பயமின்றி பயணித்துவருகின்றனர். மேலும் தொற்று தடுப்பு வழிமுறைகளை யாரும் பின்பற்றுவதில்லை.மெல்லமெல்ல கொரோனா தலை தூக்கும்நிலையில்மீண்டும் தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நான்காவது அலை உருவாகாமல் தடுப்பது அவசியமாகிறது.

    கொரோனாவின் முதல் இரண்டு அலைகள் தந்த கசப்பான அனுபவங்களை மறந்துவிடக்கூடாது.பின்னலாடை தொழிலாளர் பணிக்கு வரும்போதும், பணி முடித்து வீட்டுக்குச் செல்லும்போதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கவேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். நிறுவனங்களின் சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.அனைவரும் தவறாமல் முக கவசம் அணியவேண்டும். தொழிலாளர்கள் கைகழுவுவதற்காக நிறுவன வளாகத்தில், சோப், தண்ணீர் வழங்கவேண்டும்.

    இதுவரை தடுப்பூசி செலுத்தாதோர், தாமதிக்காமல் உடனே தடுப்பூசி செலுத்தி பாதுகாப்பு வளையத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.ஒவ்வொரு பின்னலாடை உற்பத்தி நிறுவனமும், உடனடியாக தொற்று தடுப்பு அம்சங்களை செயல்படுத்தவேண்டும். அனைவரும் ஒன்றுபட்டு, கொரோனாவின் கொடிய அலைகளிடமிருந்து பின்னலாடை தொழில் வளர்ச்சியை பாதுகாத்துக்கொள்ளவேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். 

    • தியாகதுருகம் அருகே தேசிய பேரிடர் குறித்து அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே நாகலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் குறித்து மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வருவாய் ஆய்வாளர் பாலு தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் தேசிய பேரிடர்மீட்பு படை உதவி ஆய்வாளர் சஞ்சீவதேஸ்வால் தலைமை யில் நிலநடுக்கம் ஏற்படும் போதும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள் மற்றும் பாது காப்பு குறித்து மாணவ- மாணவிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து சுமார் 15-க்கும் மேற்பட்ட தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் கலந்து கொண்டு செயல் விளக்கம் அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் உஷா முருகன், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரகாஷ், ரூபா தேவி, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×