search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cumbum"

    கம்பத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஆலங்கட்டி மழை பெய்தது. மின் கம்பங்கள் சேதம் அடைந்ததால் பொதுமக்கள் இருளில் தவித்தனர்.
    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது. ஆனால் கடந்த 4 ஆண்டுகளாகவே பருவமழை போதிய அளவு பெய்யவில்லை. இதனால் விவசாயிகள் கவலையில் இருந்தனர்.

    இந்த ஆண்டு கோடை மழை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. சாரல் மழை பெய்தபோதும் வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை. இந்த நிலையில் நேற்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து ஆலங்கட்டி மழை பெய்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. மேலும் பலன் தரும் நிலையில் இருந்த ஏராளமான வாழைகள் காற்றுக்கு சேதம் அடைந்தது.

    பல இடங்களில் மின் கம்பங்கள் ஒடிந்து விழுந்ததால் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது. இதனை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இருந்தபோதும் காலைவரை மின் வினியோகம் இல்லை. இதனால் இரவு முழுவதும் இருளில் தவித்தனர்.

    சமீப காலமாக கோடை மழையில் காற்றின் வேகமே அதிகமாக உள்ளது. மழைப்பொழிவு போதிய அளவு இல்லை. சூறாவளி காற்று சுழன்று வீசுவதால் விவசாய பயிர்கள் சேதம் அடைந்துள்ளது.

    மேலும் செங்கல் காளவாசலில் வைக்கப்பட்டிருந்த செங்கலும் கரைந்து ஓடியதால் செங்கல் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.



    கம்பத்தில் காதல் தோல்வியால் மில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் நந்தனார் காலனியைச் சேர்ந்தவர் சிவா. இவரது மகன் வினோத்குமார்(வயது21). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திண்டுக்கல் அருகே தனியார் மில்லில் வேலைபார்த்து வந்தார். அப்போது அவருடன் வேலைசெய்த பெண்ணுடன் நட்பாக பழகி அவரது வீட்டாரிடம் பெண் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்கவே, வினோத்குமார் வேலையிலிருந்து விலகி கம்பத்திற்கு வந்து விட்டார்.

    பின்னர் வீட்டில் இருந்த அவர் குடும்பத்தில் யாருடனும் பேசாமல் இருந்து வந்தார். பின்னர் இரண்டு நாட்களுக்கு முன் இரவு வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்ப வரவில்லை. இந்நிலையில் நேற்று நந்தனார் காலனி மேற்கு புறத்தில் தோப்பில் உள்ள புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கம்பம் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் அப்பாவு பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் முருகன் (வயது 50). கம்பம் வேலப்பர் கோவில் தெருவில் டீக்கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி செந்தாமரை செல்வி (40). இவர்கள் இருவரும் கம்பம் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் உள்ள ஓம் சக்தி மன்றத்தில் பொறுப்பாளர்களாக இருந்து வந்தனர்.

    நேற்று அந்த மன்றத்தை காலி செய்து விட்டு அங்கிருந்த பொருட்களை தங்கள் வீட்டுக்கு எடுத்து வந்தனர். நேற்று இரவு 11.30 மணியளவில் பொருட்களை எடுத்து வந்த போது மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி முருகன் மற்றும் அவரது மனைவி மீது உரசியது.

    இதில் அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    உத்தமபாளையம் டி.எஸ்.பி. வீரபாண்டி மற்றும் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னிவளவன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் கணவன்-மனைவி 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடலை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான முருகன்-செந்தாமரை செல்வி தம்பதியினருக்கு சுந்தரலிங்கம் என்ற மகனும் ராமு பிரியா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் கல்லூரியில் படித்து வருகின்றனர்.

    கம்பம் பகுதியில் வைக்கோல் ஏற்றி சென்ற லாரியில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    கேரளா மாநிலத்தில் உள்ள கால்நடைகளின் தீவனத்திற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வைக்கோல் கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டம் கம்பத்தை சார்ந்த மணிவண்ணன் கேரளாவிற்கு வைக்கோல் களை லாரிகளில் ஏற்றி கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்வது வழக்கம்.

    அதன்படி மதுரை அருகே உள்ள செக்கானூரணி சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வைக்கோல் கட்டுகளாக கட்டப்பட்டு சுமார் 180 -க்கும் மேற்பட்ட கட்டுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரளா மாநிலம் கோட்டயம் நோக்கி சென்றது. லாரியை கம்பத்தை சேர்ந்த டிரைவர் சுரேந்திரன் ஓட்டினார்.

    இந்த லாரியை டிரைவர் கம்பம் பகுதியில் உள்ள தியேட்டர் பகுதியில் நிறுத்திவிட்டு சாப்பிட சென்று விட்டார். சிறிது நேரத்தில் லாரியில் இருந்து புகை வந்துள்ளது.லாரியிலிருந்து புகை கிளம்புவதை கண்டு அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீ பரவுவதற்குள் வைக்கோல் மீது தண்ணீர் பாய்ச்சி அடித்தனர். இதனால் தீ பரவாமல் அணைக்கப்பட்டது. விரைந்து செயல்பட்டதால் லாரி சேதமாகாமல் தப்பியது. இது குறித்து கம்பம் வடக்கு பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கம்பம் அருகே காரில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் இருந்து கேரள பகுதிக்கு அதிகளவில் கஞ்சா கடத்தப்பட்டு வருகிறது. அடிக்கடி அதிகாரிகள் கஞ்சா கடத்திச்செல்பவர்களை கைது செய்தபோதும் இது தொடர்கதையாகி வருகிறது.

    அரசு பஸ், கூலித்தொழிலாளர்கள் மற்றும் கார் மூலம் மர்ம கும்பல் கஞ்சா கடத்தி வருகின்றனர்.

    கேரள மாநிலம் குமுளி சோதனைச்சாவடியில் சுங்கத்துறை அதிகாரி சுனிராஜ் தலைமையில் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கம்பத்தில் இருந்து எர்ணாகுளம் நோக்கி சென்ற காரை மறித்து சோதனையிட்டனர்.

    கார் இருக்கையின் அடியில் சுமார் 1½ கிலோ கஞ்சா கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதனைதொடர்ந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த லியோதாஸ், கோகுல், சானவால், இருக்கான், நிகில் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். கார் மற்றும் கஞ்சாவையும் பறிமுதல் செய்து எங்கிருந்து கஞ்சாவை கடத்தி வந்தார்கள் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    பிடிபட்ட குமுளி சோதனைச்சாவடி அருகே தமிழகஎல்லையில் ஒரு சோதனைச்சாவடி உள்ளது. ஆனால் ஒருமுறை கூட இங்கு கஞ்சா கடத்தும் கும்பல் பிடிபட்டது இல்லை. பெரும்பாலும் கேரள அதிகாரிகளே கடத்தல் கும்பலை கைது செய்து வருகின்றனர்.

    தமிழக அதிகாரிகள் அலட்சியமாகவே உள்ளதால் தமிழக பகுதியில் இருந்து எளிதாக ரேசன்அரிசி மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை கடத்திச் செல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி யுள்ளனர்.

    கம்பம் அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த யானையின் தந்தத்தை வெட்டி திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் பகுதியிலிருந்து கேரளாவிற்கு யானை தந்தங்கள் கடத்தப்படுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. தமிழக தென்மண்டல முதன்மை வன பாதுகாவலர் தொபாசிஜானா, மேகமலை வனஉயிரினகாப்பாளர் கலாநிதி ஆகியோர் கேரளாவிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது பெரியார் புலிகள் காப்பகத்தை சேர்ந்த வனத்துறையினர் யானை தந்தங்களை விற்பனை செய்ததாக 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த கங்கா, பிரபு என தெரியவந்தது.

    சுருளிஆறு, மின்நிலையம் அருகே வண்ணாத்திபாறை, காப்புக்காடு, உடுப்பிஆறு வனப்பகுதியில் இறந்துகிடந்த யானையின் தந்தங்களை வெட்டி எடுத்து வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அவர்கள் 2 பேரையும் கைது செய்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு 25 வயது மதிக்கத்தக்க ஆண்யானை உயரழுத்த மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்ததும் அவற்றின் தந்தங்கள் வெட்டி கடத்தப்பட்டதும் தெரியவந்தது.

    யானை இறந்து 5 நாட்களுக்கு மேல் இருக்கலாம். உடலை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர். தொடர்ந்து இப்பகுதியில் யானைகள் மின்சாரம் தாக்கி பலியாவது வனஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் கங்கா, பிரபு ஆகியோர் யானை தந்தத்தை எங்கு கடத்த முயன்றனர் என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் அருகே ரேசன் கடையில் அனுமதியின்றி வைத்திருந்த 44 ஸ்மார்ட் கார்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கம்பம்:

    கம்பம் அருகே கூடலூர் கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகத்தின் கீழ் சுருளிப்பட்டியில் ரேசன் கடை உள்ளது. இந்த ரேசன் கடையில் அனுமதியின்றி ஸ்மார்ட் கார்டுகள் வைத்திருப்பதாகவும் அதன் மூலம் ரேசன் அரிசியை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாகவும் உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் மோகன் முனியாண்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த ரேசன் கடையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி 44 பயனாளிகளின் ஸ்மார்ட் கார்டுகளை வைத்திருந்தது தெரிய வந்தது.

    அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து ரேசன் கடை ஊழியரிடம் கேட்ட போது சுருளிப்பட்டி பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் கடைக்கு மின்சாரம் வரும் போது பொருட்களை வழங்குவதற்காக ஸ்மார்ட் கார்டுகளை வாங்கி வைத்ததாக தெரிவித்தார்.

    இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்ததாவது:- ரேசன் கடையில் பறிமுதல் செய்யப்பட்ட 44 ஸ்மார்ட் கார்டுகளும், கூட்டுறவு பண்டகசாலை மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உண்மையான பயனாளிகள் வசம் அவை ஒப்படைக்கப்படும். ஸ்மார்ட் கார்டுகளை மொத்தமாக வைத்திருப்பது குற்றம் என்பதால் விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    கம்பம் அருகே 25 பவுன் நகை மற்றும் பணத்துடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

    தேனி:

    கம்பம் அருகே சுப்பையன் சேர்வை சந்து பகுதியை சேர்ந்தவர் அமாவாசி. இவரது மகள் கார்த்திகா (வயது25). இவருக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது.

    கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில வருடங்களாக தனது தந்தை வீட்டில் தங்கி வேலைக்கு சென்று வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு வீட்டில் கார்த்திகா மற்றும் அவரது தந்தை தூங்கிக்கொண்டிருந்தனர். காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.43 ஆயிரம் பணம் மற்றும் 25 பவுன் நகையுடன் கார்த்திகா மாயமாகி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தந்தை அமாவாசி கூடலூர் வடக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் கிடந்த வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம்:

    கம்பம்-கூடலூர் சாலையில் உள்ள ஒரு பயன்பாடற்ற தோட்டத்து கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்புத்துறையினர் வரவழைக்கப்பட்டு அவரது உடல் மேலே கொண்டு வரப்பட்டது. அவர் இறந்து 30 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    இதனால் உடலை மேலே எடுத்தபோதே பல பாகங்கள் தனித்தனியாக கிணற்றுக்குள் விழுந்தன. பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு உடல் அனுப்பி வைக்கப்பட்டது.

    இறந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விவரம் தெரியவில்லை. அவர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்றும் தெரியவில்லை.

    எனவே இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை சேகரித்து வருகின்றனர்.

    மேலும் வெளியூர் வியாபாரியாக இருக்கலாம் என்ற சந்தேகத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    கம்பம் அருகே ஆட்டோ மீது பைக் மோதியதில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கூடலூர்:

    கம்பம் உலகத்தேவர் தெருவை சேர்ந்தவர் சரண்ராஜ் (வயது26). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று தனது ஆட்டோவில் ஆண்டிப்பட்டியை சேர்ந்த ரமேஷ் (36) என்பவரை ஏற்றிக்கொண்டு கூடலூர் சென்றுகொண்டிருந்தார்.

    கம்பம் மாலையம்மாள் புரத்தை சேர்ந்த குமார் (40) என்பவர் மோட்டார் சைக்கிளில் ஈஸ்வரன் (38) என்பவரை ஏற்றிக்கொண்டு வந்துகொண்டிருந்தார்.

    அப்பாச்சிபண்ணை என்ற இடத்தில் வந்தபோது ஆட்டோவும் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதியது.

    இதில் பைக்கில் வந்த குமார், ஈஸ்வரன், ஆட்டோவில் வந்த ரமேஷ் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மேல் சிகிச்சைக்காக தேனி க.விலக்கு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி குமார் உயிரிழந்தார்.

    இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×