search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "smart card seized"

    கம்பம் அருகே ரேசன் கடையில் அனுமதியின்றி வைத்திருந்த 44 ஸ்மார்ட் கார்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கம்பம்:

    கம்பம் அருகே கூடலூர் கூட்டுறவு பண்டகசாலை நிர்வாகத்தின் கீழ் சுருளிப்பட்டியில் ரேசன் கடை உள்ளது. இந்த ரேசன் கடையில் அனுமதியின்றி ஸ்மார்ட் கார்டுகள் வைத்திருப்பதாகவும் அதன் மூலம் ரேசன் அரிசியை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வதாகவும் உத்தமபாளையம் வட்ட வழங்கல் அலுவலர் மோகன் முனியாண்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த ரேசன் கடையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அனுமதியின்றி 44 பயனாளிகளின் ஸ்மார்ட் கார்டுகளை வைத்திருந்தது தெரிய வந்தது.

    அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது குறித்து ரேசன் கடை ஊழியரிடம் கேட்ட போது சுருளிப்பட்டி பகுதியில் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் கடைக்கு மின்சாரம் வரும் போது பொருட்களை வழங்குவதற்காக ஸ்மார்ட் கார்டுகளை வாங்கி வைத்ததாக தெரிவித்தார்.

    இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரி தெரிவித்ததாவது:- ரேசன் கடையில் பறிமுதல் செய்யப்பட்ட 44 ஸ்மார்ட் கார்டுகளும், கூட்டுறவு பண்டகசாலை மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    உண்மையான பயனாளிகள் வசம் அவை ஒப்படைக்கப்படும். ஸ்மார்ட் கார்டுகளை மொத்தமாக வைத்திருப்பது குற்றம் என்பதால் விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×