என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • கோவையில் இருந்து இன்று பிற்பகல் 3.10 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் ஜே.பி.நட்டா 3.40 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைகிறார்.
    • ரோடு ஷோ நிறைவடைந்ததும் அவர் மாலை 5.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு செல்கிறார்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தமிழகத்தில் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி நேற்று நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை முசிறி பகுதியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி ஐ.ஜே.கே. வேட்பாளர் பாரிவேந்தரை ஆதரித்து ரோடு ஷோ நடத்துகிறார்.

    இதற்காக கோவையில் இருந்து இன்று பிற்பகல் 3.10 மணிக்கு தனி விமானத்தில் புறப்படும் ஜே.பி.நட்டா 3.40 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைகிறார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு முசிறி அருகாமையில் உள்ள சிட்டிலரை பகுதிக்கு செல்கிறார்.

    அங்கிருந்து கார் மூலம் முசிறி செல்கிறார். பின்னர் அங்குள்ள துறையூர் சாலை ரவுண்டானாவில் இருந்து பரிசல் துறை சாலை வரை நடைபெறும் ரோடு ஷோ நடத்துகிறார். ரோடு ஷோ நிறைவடைந்ததும் அவர் மாலை 5.45 மணிக்கு திருச்சி விமான நிலையத்துக்கு செல்கிறார்.

    பின்னர் மாலை 6 மணிக்கு தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு செல்கிறார். ஜே.பி.நட்டா வருகையை முன்னிட்டு திருச்சி மற்றும் முசிறியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ரோடு ஷோ ஏற்பாடுகளை பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் செய்து வருகின்றனர்.

    • சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு இடையில் நேரடி போட்டி உருவாகி உள்ளது.
    • சிவகங்கை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வரவில்லை.

    சிவகங்கை :

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் மாலையுடன் நிறைவு பெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களைப் பிரதானமாகச் செய்து வருகிறது. சிவகங்கை தொகுதி தொழில் வளர்ச்சியில் பின்தங்கியிருப்பதால் அங்கு படித்த இளைஞர்கள் வேலைக்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை நோக்கியே செல்ல வேண்டியிருக்கிறது. மேலும் ஆளும் கட்சி திமுக மீது எதிர்ப்பு நிலையில் தான் சிவகங்கை மக்களின் மன நிலை உள்ளது. ஜி.கே.வாசன், அமமுக போன்ற கட்சிகள் பாஜகவிற்கு ஆதரவாக உள்ளதால் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக-விற்கு இடையில் நேரடி போட்டி உருவாகி உள்ளது.

    தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் யாதவ் நிற்கிறார். அதிமுக சார்பில் கல்லல் ஒன்றியச் செயலாளரான சேவியர் தாஸ், நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழிலரசி போட்டியிடுகிறார். இதில் காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி என களம் இருக்கிறது.

    சிவகங்கை மாவட்டத்தைப் பொறுத்தவரை முக்குலத்தோர், யாதவர் முத்திரையிர் பட்டியல் பிரிவினர், உடையர், சிறுபான்மையினர் கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள் செட்டியார் சமூக வாக்குகள் இருக்கின்றன. "பாஜக-விற்கு கடந்த தேர்தலின்போது உட்கட்டமைப்பு பெரிய அளவில் இல்லை. ஆனால் இந்த முறை தொகுதியில் உள்ள அனைத்து பூத்துகளிலும் பணியாட்களை அமர்த்தி வேலை செய்து வருகின்றனர். மேலும், "சிவகங்கையில் 2 லட்சத்திற்கும் அதிகமான யாதவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இருப்பதால் அவர்களின் கணிசமான வாக்குகள் பாஜக சார்பில் போட்டியிடும் தேவநாதன் யாதவிற்கு கிடைக்கும்.

    அமமுக, ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவாளர்களும் இங்கே இருப்பதால் காங்கிரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வெற்றி வாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன, சிவகங்கை தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வரவில்லை. மாறாக காரைக்குடி பகுதிக்கு திட்டங்களை நகர்த்துவதால் மாவட்டத்தின் தலைநகரான சிவகங்கை பின்தங்கிவிட்டது

    இந்த முறை பிரதமர் மோடிக்கு எதிரான அலை என்பது பெரிய அளவில் இல்லை. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் செயல்பாடு மோடி அரசின் விவசாயிகளுக்கு பயிர்காப்பீடு திட்டம், ரூ.6000 நிதி, குறைந்த விலையில் உரம் என விவசாயிகள் சார்ந்த நலத்திட்டங்கள் நேரடியாக விவசாயிகளை சென்றடைந்துள்ளதால் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி பாஜகவின் வசமாக மாறியுள்ளது. மேலும் தேவநாதனின் பிரசார யுக்தி கிராமம் தோறும் வாக்குசேகரிப்பு குறிப்பாக யாதவர்களின் ஆதரவு என களத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி முந்தி செல்கிறது.

    • சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
    • பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    வேலூர்:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார்.

    எனது சமூக வலை தளங்கள் மூலம் பா.ஜனதாவின் கொள்கைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வேன் என அவர் கூறினார்.


    இந்த நிலையில் குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கி உள்ளார்.

    கடந்த சில நாட்களாக அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

    பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் சுவாரசியமாக பதில் அளித்தார்.

    • விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்தது, விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தவர் கருணாநிதி.
    • முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதை உங்கள் விரலில் வைக்க வேண்டும்.

    கோவை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு, தொண்டா முத்தூர் பகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    60 ஆண்டுகளாக பொள்ளாச்சிக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழகத்தில் மொத்தமே நான்கு கோடி தென்னை மரங்கள் தான் உள்ளன. அதில் பொள்ளாச்சியில் மட்டுமே இரண்டு கோடி தென்னை மரங்கள் உள்ளன.

    விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்தது, விவசாயிகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தவர் கருணாநிதி. இப்படி விவசாயிகளுக்காக செய்வது தான் திராவிட மாடல். ஆகவே யாரும் திராவிட மாடலை கிண்டலாக பேசக்கூடாது.

    இலவச மின்சாரம், விவசாயத்துக்கு தனி பட்ஜெட், 2 லட்சம் மின் இணைப்பு போன்றவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 10 ஆண்டில் மத்திய அரசு விவசாயத்திற்காக என்ன செய்தது. விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராட்டம் நடத்த டெல்லிக்கு சென்ற விவசாயிகளை ஆணி படுக்கை கொண்டு வரவேற்பு அளித்தது தான் மத்திய அரசு. ஆகவே எந்த அரசு வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லதை நினைத்து உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்.

    திராவிட மாடல் என்பது பெண்களுக்கானது. உரிமைத் தொகை திட்டம், நான் முதல்வன், புதுமை பெண் திட்டம் எல்லாம் உங்களுக்கானது. ஆனால் பெண்களுக்கான அரசாக மத்திய அரசு இல்லை. விவசாயிகளுக்காக பல நன்மைகளை செய்து கொண்டிருக்கும் தி.மு.க. அரசா அல்லது விவசாயிகளை விரோதிகள் போல பார்க்கும் மத்திய அரசா என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். தி.மு.க. அரசு மக்களுக்காக வேலை செய்யும் அரசு.

    நாட்டுக்கு நல்லது செய்யும் அரசை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும், பொய்யாமொழி புலவரை பற்றி பேசி விட்டால் நீங்கள் பேசுவது எல்லாம் மெய்யாகி விடாதே. இந்த பொய் நிறுத்தப்பட வேண்டும். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதை உங்கள் விரலில் வைக்க வேண்டும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும்.
    • இட ஒதுக்கீடு கொள்கையை நிராகரிக்கும் பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டு வைத்திருப்பது ஒவ்வாத சந்தர்ப்பவாத கூட்டணியாகும்.

    பழனி:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளரை ஆதரித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பழனியில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மக்கள் வாங்க முடியாத அளவுக்கு அனைத்து பொருட்களின் விலைவாசியும் அதிகரித்துள்ளது. வேலை இல்லா திண்டாட்டம் இந்தியா முழுவதும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வழி தவறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆனால் பா.ஜ.க. தனது தேர்தல் அறிக்கையில் இதைப்பற்றியெல்லாம் ஒன்றும் குறிப்பிடவில்லை. ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் ஆகியவை நாட்டுக்கு மிகுந்த ஆபத்தானது. நெல்லுக்கு நல்ல விலை விவசாயிகள் கேட்கிறார்கள். ஜி.எஸ்.டி. மறு சீரமைப்பு செய்யப்பட வேண்டும். இது குறித்து பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் எதுவும் சொல்லவில்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பை வழங்குவோம் என்றார்கள். அதனை நிறைவேற்றவில்லை.

    ஆனால் பா.ஜ.க. கடந்த ஆட்சியில் அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டதாக அண்ணாமலை கூசாமல் பொய் சொல்லி வருகிறார். தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா கூட்டணி நாடு முழுவதும் மகத்தான வெற்றி பெறும்.

    பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் ஆவலுடன் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால் நாட்டின் அரசியல் சுதந்திரம் பாதுகாப்பாக இருக்காது.

    இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இதுவாகும். ஆனால் எடப்பாடி பழனிசாமி மோடி அரசைப்பற்றி எந்த விமர்சனமோ, கேள்வியோ கேட்பதில்லை. அந்த அளவுக்கு மோடியை கண்டு அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் வேட்பாளராக நினைத்து அவரை மட்டுமே குறி வைத்து பேசி வருகிறார்.

    இட ஒதுக்கீடு கொள்கையை நிராகரிக்கும் பா.ஜ.க.வோடு பா.ம.க. கூட்டு வைத்திருப்பது ஒவ்வாத சந்தர்ப்பவாத கூட்டணியாகும். இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஜூன் 4-ந் தேதிக்கு பிறகு அ.தி.மு.க. காணாமல் போய் விடும். டி.டி.வி. தினகரன் பக்கம் தொண்டர்கள் வந்து விடுவார்கள் என அண்ணாமலை பேசுகிறார். அ.தி.மு.க. தலைவர் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரத்தை அண்ணாமலைக்கு அ.தி.மு.க.வே கொடுத்து விட்டது. ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, டி.டி.வி. தினகரன் உள்பட அனைவருமே அண்ணாமலைக்கு காவடி தூக்கியதன் விளைவு இன்றைக்கு அவர்களை ஏறி மிதிக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.
    • மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை.

    சென்னை :

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பாஜக ஏன் வரவே கூடாது?

    தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம்.

    இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை.

    பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது.

    தமிழ்நாடு உள்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம்.

    புதிய பாராளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி.

    மக்கள் தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்? சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?

    தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம்.

    இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக்காசாக்கி விடும்! வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

    மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள்.

    மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!

    பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க #Vote4INDIA!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


    • அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும்
    • மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர்

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.

    கோவையில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனுக்கு ஆதரவாக நடிகை விந்தியா பிரச்சாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "ஒரு திரைப்படத்தில் வடிவேல், 'நானும் ரவுடி தான், நானும் ரவுடி தான்' என கத்துவது போல, நான் தான் தலைவர் என கூறிக்கொண்டு ஒரு ஆட்டுக்குட்டி சுற்றி கொண்டு உள்ளது.

    திருவிழா முடிந்தவுடன் ஆடு பலி கொடுப்பது வழக்கம், அந்த ஆட்டை வளர்த்தவனே பலி கொடுப்பது தான் வரலாறு, ஆட்டுக்குட்டி எங்கு வேண்டுமானாலும் சிங்கம் வேஷம் போடலாம், ஆனால் இந்த தேர்தலுக்கு பின் கோவையில் ஆட்டை மட்டன் பிரியாணி போடுவது உறுதி.

    அண்ணாமலையும் மோடியும் பாஜகவும் ஜெயித்தால் இந்திய மக்கள் சந்திக்கின்ற கடைசி தேர்தல் இதுவாகத்தான் இருக்கும். இன்னும் ஓர் சுதந்திர போராட்டம் நடத்த வேண்டி இருக்கும். இதை நான் சொல்லவில்லை பாஜகவின் மத்திய நிதியமைச்சர் ஆன நிர்மலா சீதாராமன் கணவரே சொல்லியிருக்கிறார்.

    மோடியும், நிர்மலா சீதாராமனும், அண்ணாமலையும், ராகுல் காந்தியும் ரோடு ஷோ நடத்தி வித்தை காட்டிக் கொண்டிருக்கின்றனர். இதைப் பற்றி கூறினால் எடப்பாடியும் ரோட் ஷோ நடத்துங்கள் என்று கூறுகிறார்கள். கைத்தட்டல் வாங்க வேண்டும் என்றால் குரங்கு தான் வித்தை காட்ட முடியும். எங்கள் தலைவர் சிங்கம் மாதிரி இருப்பதால் தலைவர் இருக்கும் இடத்திற்கே கூட்டம் தேடி வரும். ஆனால் பாஜகவினர் கூட்டம் இருக்கும் இடத்தை பார்த்து தேடிப்போய் கூட்டம் நடத்த வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

    • உபி.யில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாக புகார்
    • மக்களிடையே சாதி, மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் பிரதமர் மோடி பேசியதாக புகார்

    பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் எஸ் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், உத்தரபிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி இந்து மற்றும் சீக்கிய கடவுள் பெயரில் வாக்கு சேகரித்ததாகவும், அவரின் பேச்சு மக்களிடையே சாதி, மத ரீதியாக வெறுப்புணர்வை தூண்டுவதாகவும் பேசினார்.

    ஆகவே, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் 6 ஆண்டுகளுக்கு மோடி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பிரசாரத்திற்கு அரசுக்கு சொந்தமான விமானம், ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவது தேர்தல் விதிமீறல் எனவும் அந்த மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது - மம்தா பானர்ஜி
    • திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது

    அலிபுர்துவாரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசிய மம்தா பானர்ஜி, "தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் ஏதேனும் ஒரு கலவரம் நடந்தால் கூட ஆணையத்திற்கு வெளியே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

    பாஜகவின் உத்தரவின் பேரில் முர்ஷிதாபாத் காவல் துணைக் கண்காணிப்பாளரை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இப்போது, முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் கலவரம் நடந்தால், அதற்கு தேர்தல் ஆணையமே பொறுப்பாகும். கலவரம் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையில், போலீஸ் அதிகாரிகளை மாற்ற பாஜக விரும்புகிறது.

    நேற்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி ஹெலிகாப்டர் சோதனை செய்யப்பட்டது. இதே போல் தேர்தல் பிரச்சார வேலைகளில் ஈடுபடும் பா.ஜ.க தலைவர்களின் ஹெலிகாப்டர்களிலும், தேர்தல் ஆணைய பறக்கும் படை சோதனை செய்யுமா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

    அபிஷேக் பானர்ஜியை தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ஹெலிகாப்டரும் சோதனைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

    • 2016-ல் மோடி ஈரான் சென்றார். அங்கு அவருடன் சென்ற அதானிக்கு சதார் துறைமுக ஒப்பந்தப் பணி ரூ.4000கோடி கிடைத்தது.
    • 2017-ல் மோடி இஸ்ரேல் சென்றார். அப்போது அவருடன் பயணித்த அம்பானிக்கு ரூ.65000 கோடி வான்வழி ஏவுகணை ஒப்பந்தம் கிடைத்தது.

    சென்னை:

    தி.மு.க. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    பா.ஜ.க. ஆட்சி ஊழலை ஒழிக்கும் என மேடைக்கு மேடை முழங்குகின்ற மோடி! பா.ஜ.க.வின் முதுகில் மட்டுமல்ல அதன் உடம்பு முழுவதும் ஊழல் மயம்தான். உத்தம வேடம் போடும் மோடியின் முகத்திரையைக் கிழிக்கும் சில சாட்சிகள்.

    இது தகவல் அறியும் சட்டத்தின் துணை கொண்டு வெளிவந்த ஊழல்- வீட்டுக்கடன் ஊழல்

    கோவா மாநில பா.ஜ.க. அரசின் தொழில் துறை அமைச்சர் மகாதேவ் நாயக்-கோவா அரசின் எம்.எல்.ஏ.க்களுக்கான வீட்டு வசதித் திட்டத்தில் வெறும் 2 சதவீத வட்டியில் ஏற்கனவே உள்ள நிலத்தில் வீடுகளைக் கட்ட அல்லது குடியிருப்பு நோக்கத்திற்காகப் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதற்காக அனுமதிக்கப்படும் நிதியில் புதிய வணிக வளாகங்களை வாங்கிடத் தவறாகப் பயன்படுத்தினார் என்று தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆவணத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.

    உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. ஆட்சியில் 2010-ம் ஆண்டு கும்பமேளா கொண்டாட ஒன்றிய அரசு ரூ.565 கோடி வழங்கியது. இந்த நிதி தவறாகப் பயன்படுத்தட்டதாக கூறி உத்தரகாண்ட் பா.ஜ.க. ஆட்சி ஊழலை வெளிப்படுத்தி உள்ளது.

    பொது சுகாதாரப் பொறியியல் துறைக்கு நியாயமற்ற விலையில் எல்.இ.டி. பல்புகள் கொள்முதல் செய்யப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

    மோடி பிரதமர் ஆனது முதல் உலகில் அவர் செல்லாத நாடுகள் இல்லை எனும் அளவுக்கு எல்லா நாடுகளுக்கும் விமானப் பயணம் சென்றுள்ளார்.

    அப்படி அவர் பயணம் செய்த போதெல்லாம் அவருடன் பயணம் செய்தவர்கள் அதானியும் அம்பானியும். இது உலகம் அறிந்தது. மோடியின் இந்தப் பயணங்களால் பயனடைந்தவர்கள் யார்?

    இந்திய மக்கள் அல்ல ! அம்பானியும் அதானியும் தான்!.

    மோடி 2014-ல் ஆஸ்திரேலியா சென்றார். உடன் சென்ற அதானிக்கு அங்கு ரூ.6,200 கோடி மதிப்புள்ள நிலக்கரி ஒப்பந்தம் கிடைத்தது. அடுத்து பிரான்ஸ் சென்றார். அங்கு அம்பானிக்கு ரூ.58,000 கோடி ரபேல் விமான ஒப்பந்தம் கிடைத்தது.

    2016-ல் மோடி ஈரான் சென்றார். அங்கு அவருடன் சென்ற அதானிக்கு சதார் துறைமுக ஒப்பந்தப் பணி ரூ.4000கோடி கிடைத்தது.

    2017-ல் மோடி இஸ்ரேல் சென்றார். அப்போது அவருடன் பயணித்த அம்பானிக்கு ரூ.65000 கோடி வான்வழி ஏவுகணை ஒப்பந்தம் கிடைத்தது.

    அதே ஆண்டில், அடுத்த முறை இஸ்ரேல் சென்ற மோடியுடன் பயணித்த அதானிக்கு ரூ.1,500 கோடி ஆளில்லா விமானத் தயாரிப்பு ஒப்பந்தம் கிடைத்தது.

    2018 ஸ்வீடன் நாட்டிற்குச் சென்ற மோடியுடன் பயணித்தவர் அதானி. அங்கு அவருக்கு ரூ.60 ஆயிரம் கோடிக்கான ஒற்றை என்ஜின் போர் விமானத் தயாரிப்பு ஒப்பந்தம் கிடைத்தது.

    அதே ஆண்டில் அம்பானியுடன் பயணித்த பிரதமர் மோடியால் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான - அமெரிக்காவின் 7வது கடற்படை பராமரிப்பு ஒப்பந்தம் அம்பானிக்குக் கிடைத்தது.

    இப்படி பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் கிடைத்ததே பிரதமரின் இந்தப் பயணங்களால். இந்திய மக்களுக்கு என்ன பயன்?

    இப்படி எண்ணற்ற ஊழல்களின் உறைவிடமாகத் திகழ்பவர் இன்று புதுவேடமிட்டு வருகிறார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! சத்தியம் தவறாத உத்தமர் போல் நடிக்கும் மோடியின் உண்மையான வேடங்களை பொது மக்கள் அறியட்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம்.
    • செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சுப்பராயனை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நாட்டை காக்கும் தருணம் என்பதால் பரப்புரைக்கு நான் வந்துள்ளேன். தனக்கான தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யாமல் உலகளாவிய உடை தேவைகளை பூர்த்தி செய்யும் நகரம் இந்த திருப்பூர். திருப்பூரில் பனியன் தொழில் மந்தமாக உள்ளது. இதற்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி., பெட்ரோல் விலை உயர்வு காரணம். இப்போது மந்தமாக உள்ள போதே ரூ.40 ஆயிரம் கோடி வர்த்தகம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும். அதிக வருவாய் ஈட்டித்தரும் திருப்பூரை ஒழுங்காக கவனிக்க முடியவில்லை. இதில் 75 புதிய நகரத்தை பிரதமர் எப்படி உருவாக்குவார்.

    மக்கள் நலனை குறிக்கோளாய் கொண்டது 2 தத்துவங்கள். செய்ததை சொல்லி கொண்டு வருபவரை நம்பலாம். செய்யாததை சொல்வதும், செய்வதாய் பொய் சொல்வதுமாய் வருபவரை நம்ப கூடாது.

    கலைஞர் சொல்வதை செய்பவர். திருப்பூர் மாநகராட்சியாக மாறுவதற்கு கலைஞர் முக்கிய காரணம். நிறைய பாலங்கள் சாலைகள் கொடுத்துள்ளார். மத்திய அரசு உதவியை தடை செய்தால் தொகுதியில் வேலை தடைபடும். ஒரு எம்.பி.க்கு ரூ.5 கோடி கொடுப்பார்கள். இங்கு 6 சட்டமன்ற தொகுதி. 6 தொகுதிக்கு ஒரு கோடி கிடையாது. மக்களுக்கான வளர்ச்சி பணிகளை செய்வதற்கு கூட ஜி.எஸ்.டி. வரி போட்டது தான் ஒன்றிய அரசு.

    ஜி.எஸ்.டி. போடும் போது சினிமா துறையில் இருந்து நான் குரல் கொடுத்தேன்.

    ஜி.எஸ்.டி. நல்ல திட்டம் என்றால் அந்த வரி திட்டத்தை சொல்லி பாரதிய ஜனதாவினர் ஓட்டு கேட்டிருக்கலாம். ஜி.எஸ்.டி., வேண்டாம் என முழங்கியவர்களில் நானும் ஒருவன். ஜி.எஸ்.டி., மற்றும் பணமதிப்பிழப்பு உள்ளிட்ட மத்திய அரசின் இரட்டை தாக்குதலால் கடந்த 10 ஆண்டுகளாக திருப்பூர் பனியன் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சு விலை உயர்வு, நூல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் உலக அளவில் முதல் இடத்தை நெருங்கி கொண்டிருந்த இந்தியாவை பின்னால் தள்ளியது பங்களாதேஷ். அங்கு வரி குறைவு. பங்களாதேசில் இருந்து நூல் துணியை இறக்குமதி செய்கின்றனர். இந்த உதாரணம் போதும். ஒன்றிய அரசு என சொன்னாலும் மக்களுடன் ஒன்றாத அரசாக மத்திய பா.ஜ.க. அரசு மாறி விட்டது. எனக்கென்று எதிர்பார்ப்பு இல்லாமல் நமக்காக வந்திருக்கிறேன். நாட்டைக்காக்கவே இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பிரசாரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி த்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், செல்வராஜ் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.
    • பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இரட்டை இலை அமோக வெற்றி பெறும் என்று பேசினார்.

    பசும்பொன்:

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாள் கிராமம் கிராமமாக கூட்டணி கட்சியினருடன் சென்று இரட்டை இலைக்கு ஓட்டு சேகரித்தார். கீழக்கரை, ஏர்வாடி இதம்பாடல், சிக்கல், மாரியூர், சாயல்குடி கிழக்கு ஒன்றியம் மற்றும் தரைக்குடி, சேதுராஜபுரம் உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பெண்கள் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வெற்றி திலகமிட்டு வரவேற்றனர்.


    வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் ஆர். பி.உதயகுமார், அன்வர்ராஜா, மணிகண்டன். தேர்தல் பொறுளர்கள் மலேசியா எஸ். பாண்டியன், முன்னாள் எம். பி. நிறைகுளத்தான், மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன், எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் மு.சுந்தரபாண்டியன், கடலாடி ஒன்றிய பெருந்தலைவர் முனியசாமி பாண்டியன் தே.மு.தி.க. மாவட்ட கழக செயலாளர் சிங்கை ஜின்னா, ஒன்றிய செயலாளர்கள் பிரவீன் குமார் ராஜேந்திரன், அந்தோனிராஜ், உள்பட அ.தி.மு.க. கூட்டணியினர் திரளாக கலந்து கொண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தனர்.

    பிரசாரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயபெருமாள் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. சென்ற இடமெல்லாம் இரட்டை இலைக்கு அதிக மவுசு உள்ளது. அ.தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் அனைவரும் சுயேட்சைகள். பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இரட்டை இலை அமோக வெற்றி பெறும் என்று பேசினார். சாயல்குடி பகுதியில் அ.தி.மு.க. மகளிரணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி வீடு, வீடாக சென்று பா. ஜெயபெருமாளுக்கு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்தார். இது பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

    ×