என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
    • அழிவு பாதையில் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியையே சேரும்.

    மதுரை:

    மதுரை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணன் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உடன் இணைந்து தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஆத்திக்குளம், சர்வேயர் காலனி, நாராயணபுரம். பேங்க் காலணி, அய்யர் பங்களா, திருப்பாலை, மேனேந்தல், நாகனாங்குளம் ஆகிய இடங்களில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார்.

    அப்போது டாக்டர் சரவணனுக்கும், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவிற்கும் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் பேசுகையில், தி.மு.க.வின் 3 ஆண்டுகால ஆட்சியில் அனைத்து விலை வாசிகளும் கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு விரல் புரட்சி செய்து அ.தி.மு.க.வை வெற்றி பெற செய்ய வேண்டும். மதுரை மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவேன் என பேசினார்.

    பின்னர் ராஜன் செல்லாப்பா எம்.எல்.ஏ. கூறுகையில், அ.தி.மு.க.வோடு கூட்டணி வைத்து அ.தி.மு.க.வை அழிக்க வேண்டும் என பா.ஜ.க. எண்ணியதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். பா.ஜ.க.வோடு தொடர்ந்து கூட்டணி வைத்திருந்தால் அ.தி.மு.க.வை அழித்து இருப்பார்பார். அழிவு பாதையில் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றிய பெருமை எடப்பாடி பழனிச்சாமியையே சேரும். பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலகியது நூற்றுக்கு நூறு சரியானது என மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் புரிந்து கொண்டுள்ளனர் என்றார்.

    • தேர்தல் பணி காரணமாக ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
    • இன்று மாலை புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்தும் நாளை பரமக்குடியில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்துகிறார்.

    உதகை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், உதகையில் நாளை நடைபெற இருந்த பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பணி காரணமாக ரோடு ஷோ ரத்து செய்யப்பட்டுள்ளதாக பா.ஜ.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

    இன்று மாலை புதுச்சேரியில் பாஜக வேட்பாளரை ஆதரித்தும் நாளை பரமக்குடியில் ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்தும் ஜே.பி.நட்டா ரோடு ஷோ நடத்துகிறார்.

    • ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?
    • 1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் GST: வரி அல்ல… வழிப்பறி! என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "தன் பிணத்தின் மீதுதான் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்த முடியும்" என்று முதலமைச்சராக எதிர்த்த நரேந்திர மோடி, பிரதமரானதும், "ஜி.எஸ்.டி பொருளாதாரச் சுதந்திரம்'' என்று 'ஒரே நாடு ஒரே வரி' கொண்டு வந்தார்.

    பேச நா இரண்டுடையாய் போற்றி!

    ஹோட்டல் முதல் டூ வீலர் பழுதுபார்ப்பது வரை அத்தனைக்கும் ஜி.எஸ்.டி.யா?

    ஒரு நடுத்தரக் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க ஹோட்டலுக்குச் சென்றால், பில்லில் உள்ள ஜி.எஸ்.டி-யைப் பார்த்து #GabbarSinghTax எனப் புலம்புகின்றனர்!

    அடுத்து என்ன செல்ஃபி எடுத்தாலும் GST கட்ட வேண்டுமா?

    1.45 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரியைத் தள்ளுபடி செய்யும் பா.ஜ.க.வால், ஏழைகளுக்குக் கருணை காட்ட முடியாதா?

    ஜி.எஸ்.டி-யில் கிடைக்கும் தொகையில் 64 விழுக்காடு 50 சதவிகித அடித்தட்டு மக்களிடம் இருந்து வசூலிக்கப்படுகின்றது. 33 விழுக்காடு ஜி.எஸ்.டி 40 சதவிகித நடுத்தர மக்களிடம் இருந்து பெறப்படுகின்றது. வெறும் 3 விழுக்காடு ஜி.எஸ்.டி மட்டுமே 10 சதவிகித பெரும் பணக்காரர்களிடம் இருந்து கிடைக்கிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகிதத்தினர் 6 மடங்குக்கும் அதிகமாக மறைமுக வரியைக் கட்டுகிறார்கள்.

    ஏழைகளைச் சுரண்டும் இந்த முறையை மாற்ற #Vote4INDIA!

    இவ்வாறு மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    • தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது.
    • அண்ணாமலை வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரசாரம் செய்து வருகிறார்‌.

    ஈரோடு:

    ஈரோடு பெரியார் நகரில் உள்ள மறைந்த கணேசமூர்த்தி எம்.பி. வீட்டிற்கு இன்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் அவரது மனைவி ரேணுகா தேவி ஆகியோர் வந்து கணேசமூர்த்தி படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கணேஷ்மூர்த்தியின் மகன், மகளுக்கு வைகோ மற்றும் அவரது மனைவி ஆறுதல் கூறினர்.

    பின்னர் வீட்டை விட்டு வெளியே வந்த வைகோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவள்ளுவர் கலாசார மையம் அமைக்கப்படும் என பா.ஜ.க. தனது தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருப்பது புதிதாக (டெஸ்ட்) சோதனை செய்து பார்க்கின்றனர். இது வெற்றி பெறாது. பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதி தமிழகத்தில் எடுபடாது.

    இந்தியாவிலேயே எந்த மாநிலத்திற்கும் செல்லாத அளவிற்கு தமிழகத்திற்கு 9 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். கொரோனா, வெள்ளம் வந்த போது எட்டி பார்க்காத பிரதமர் எப்படியாவது பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என தமிழகத்திற்கு 9 முறை வந்துள்ளார். அது கனவாகவே போகும்.

    நாற்பதிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்றளவிற்கான தேர்தல் களம் உள்ளது. தேர்தலுக்காக மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வருவதால் எந்த வித்தியாசமும் ஏற்படாது. பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பு நேரம் முடிந்த பிறகும் பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிற அளவுக்கு உயர்ந்துள்ளது.
    • பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கைத்தறி பற்றி குறிப்பிடவில்லை. நெசவாளர் பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.

    காஞ்சிபுரம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று (திங்கட்கிழமை) மீண்டும் காஞ்சிபுரம் வந்து அ.தி.மு.க. வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகரை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரசாரம் செய்தார்.

    திறந்த வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று அண்ணா சொன்ன அந்த பொன்மொழியை அ.தி.மு.க. தொடர்ந்து கடைபிடித்து அதை நிறைவேற்றுவதற்கு பாடுபட்டுக்கொண்டிருக்கிறது.

    இன்று ஸ்டாலின் போற பக்கமெல்லாம் பேசுகிறார். அ.தி.மு.க. 3 ஆக போய் விட்டது 4 ஆக போய் விட்டது என்கிறார். மு.க.ஸ்டாலின் காஞ்சிபுரத்துக்கு வந்து பார்க்கட்டும் அண்ணா பிறந்த மண், அண்ணா கண்ட கனவை நினைவாக்கும் கட்சி அ.தி.மு.க. காஞ்சிபுரமே குலுங்குகிற அளவுக்கு இன்று மக்கள் வெள்ளம். அ.தி.மு.க.வை பிரிக்க பார்க்கிறீர்கள். அது ஒரு போதும் நடக்காது. உங்களது எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.

    அண்ணா கண்ட கனவை நிச்சயமாக நிறைவேற்றியே தீருவோம். அது எங்களது இரு பெரும் தலைவர்களுடைய கொள்கை, லட்சியம். அதை நிறைவேற்றுவது தான் எங்களை போல் உள்ள தொண்டனுக்கு பெருமை.

    இந்த மாவட்டம் ஏரிகள் நிறைந்த மாவட்டம். விவசாயிகள், நெசவாளர்கள் நிறைந்த மாவட்டம். உழைப்பாளர்கள் நிறைந்த இந்த பூமியிலே உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    விவசாயம், நெசவுத்தொழில் இரண்டு தொழிலும் பிரதான தொழிலாக உள்ள காஞ்சி மாவட்டம் மென்மேலும் வளருவதற்கு நம்முடைய வெற்றி வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர் வெற்றி பெற வேண்டும்.

    இன்றைக்கு எத்தனையோ பேர் வருவார்கள், போவார்கள். ஆனால் மக்களுக்கு சேவை செய்வதிலே அ.தி.மு.க.தான் முன்னிலையில் இருக்கும். இந்த மண்ணிலே எத்தனையோ தலைவர்கள் பிறக்கின்றார்கள். வாழ்கிறார்கள். இறக்கின்றார்கள்.

    இடைப்பட்ட காலத்திலே மக்களுக்கு நன்மை செய்கின்ற தலைவர்கள்தான் மக்கள் உள்ளத்திலே வாழ்வார்கள். அப்படி நமது முப்பெரும் தலைவர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., அம்மா இந்த மண்ணிலே மறைந்தாலும் மக்கள் உள்ளத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள். இன்னும் சில தலைவர்கள் வீட்டு மக்களுக்காக வாழ்கிற தலைவர்கள். யார் என்று உங்களுக்கு தெரியும்.

    இன்றைக்கு இந்தியாவிலேயே முதன்மை மாநிலம் என்று சொல்கிறார்கள். அது அ.தி.மு.க. ஆட்சியில் போடப்பட்ட திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதால் இன்று இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்கிறது. எனவே அ.தி.மு.க. ஆட்சி தான் இதற்கு காரணம்.

    ஏரிகள் நிறைந்த இந்த மாவட்டத்தில் மணிமங்கலத்தில் நான் குடிமராமத்து திட்டத்தை தொடங்கி வைத்தேன். 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏரிகள் பொதுப்பணித்துறையில் இருக்கிறது. அதில் சுமார் 6,211 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு குடிமராமத்து திட்டத்தில் கொண்டு வந்து முழுக்க விவசாயிகள் பங்களிப்போடு திட்டத்தை நிறைவேற்றினோம். இதற்கு மட்டும் சுமார் ரூ.1,240 கோடி நிதி ஒதுக்கினோம்.

    இந்த குடிமராமத்து திட்டம் மூலமாக ஏரிகள் ஆழமாக்கப்பட்டது. மழை நீர் முழுவதும் சேமித்து வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்பட்டது. குடிநீருக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

    இந்த அற்புதமான திட்டம் அ.தி.மு.க. ஆட்சியில்தான் கொண்டு வரப்பட்டது.

    இங்கு 40 வருடத்திற்கு ஒருமுறை அத்திவரதர் மக்களுக்கு அருள் புரிந்தார். அ.தி.மு.க. ஆட்சியில்தான் அத்திவரதர் எழுந்தருளி மக்களுக்கு காட்சி அளித்தார். அந்த விழாவில் 60 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இந்த காஞ்சிபுரம் நகரமே சிறப்பு பெற்றது.

    அப்படி அத்திவரதரை தரிசனம் செய்ய பல லட்சம் பேர் வந்து குழுமி பத்திரமாக வீடு திரும்பினாார்கள். அந்த அளவுக்கு அ.தி.மு.க. ஆட்சி நிர்வாக திறமை பிரதிபலித்தது.

    இந்த பகுதியில் கைத்தறி, விசைத்தறி இரண்டு தொழிலும் நலிவடைந்துள்ளது. இந்த தொழிலை நம்பிதான் இப்பகுதி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகி விட்டது. கைத்தறி நெசவு படிப்படியாக சரிந்து விட்டது. விசைத்தறி அதோடு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. ஆட்சி விரைவில் மலரும். நமது வெற்றி வேட்பாளர் ராஜசேகர் வெற்றி பெற்று இந்த தொழில் சிறக்க பாராளுமன்றத்திலே குரல் கொடுப்பார்.

    பாரதிய ஜனதா கட்சி தேர்தல் அறிக்கையில் கைத்தறி பற்றி குறிப்பிடவில்லை. நெசவாளர் பற்றி கவலைப்படாத ஒரு அரசாங்கம் மத்தியில் ஆட்சியில் இருக்கிறது.

    ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் இந்த கைத்தறி நெசவாளர்களுக்கு மானியம் வழங்கப்பட்டது. கைத்தறி நெசவாளர்களை பாதுகாத்தோம். கைத்தறி நெசவு தொழில் அ.தி.மு.க. ஆட்சியில்தான் பாதுகாக்கப்பட்டது.

    காஞ்சி என்று சொன்னாலே பட்டுதான் நினைவுக்கு வரும். பட்டு விற்பனைக்கு பெயர் பெற்ற நகரம் பட்டு நெசவு இங்குதான் அதிகமாக உள்ளது.

    இந்த தொழில்கள் சிறக்க வேண்டும் என்றால் அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் மத்திய-மாநில அரசுகள் இந்த மக்களுக்கு தேவையான திட்டங்களை எதுவும் இதுவரை செய்யவில்லை.

    இன்று கடுமையான மின் கட்டண உயர்வு உள்ளது. வீடுகளுக்கு பயன்படுத்துகிற மின் கட்டணம் உயர்ந்து விட்டது. விசைத்தறி மற்றும் கடைகளுக்கு பயன்படுத்துகிற கட்டணம் 'பீக் ஹவர்' என்று கூறி அதிக கட்டணத்தை வசூலிக்கிறார்கள்.

    மின் கட்டண உயர்வினால் கடுமையாக தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விசைத்தறி பாதிக்கப்பட்டு விட்டது. கடைகளுக்கு அதிக வரி போடப்பட்டுள்ளது.

    தி.மு.க. அரசு வந்தாலே மின் கட்டணம் உயர்ந்து விடும். இது கோடை காலம். அடிக்கடி மின்வெட்டு ஏற்பட்டு கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின் வெட்டு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    அ.தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம் தடையில்லா மின்சாரத்தை தந்தோம். தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற 3 ஆண்டில் விலைவாசி உயர்வு அதிகமாகி விட்டது. இன்று 1 கிலோ அரிசி 18 ரூபாய் உயர்ந்து விட்டது. எண்ணெய் விலை உயர்ந்து விட்டது, பருப்பு, சர்க்கரை விலை உயர்ந்து விட்டது. மளிகை பொருட்கள் விலை அனைத்தும் 40 சதவீதம் உயர்ந்து விட்டது. வேலையில்லை. வருமானம் இல்லை. செலவு அதிகம். மக்கள் இன்றைக்கு படாதபாடுபடுகிறார்கள்.

    இப்படிப்பட்ட அவல நிலைதான் தி.மு.க. ஆட்சியில் பார்க்கப்படுகிறது. ஆனால் ஸ்டாலின் பேசும்போது என்ன சொல்கிறார், தி.மு.க. ஆட்சி மக்களுக்கு நன்மை செய்கிற ஆட்சி என்று சொல்கிறார். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய அரசு மக்கள் விரோத ஆட்சியாக தி.மு.க. அரசை பார்க்கிறார்கள்.

    தி.மு.க. ஆட்சி வந்த பிறகுதான் விலைவாசி உயர்வு விண்ணை முட்டுகிற அளவுக்கு உயர்ந்துள்ளது. அ.தி.மு.க. ஆட்சி எப்போதெல்லாம் தமிழகத்தில் ஆட்சி புரிகிறதோ அப்போதெல்லாம் விலைவாசியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் தி.மு.க. ஆட்சி மக்களை பற்றி சிந்திப்பது கிடையாது. மக்கள் படும் துன்பத்தை அவர்கள் பார்ப்பதில்லை. ஆகவே ஏழை மக்களுக்கு உதவி செய்கிற ஒரே கட்சி அ.தி.மு.க. கட்சி. அ.தி.மு.க. அரசுதான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பனங்காட்டு தெருவில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். இவர் நேற்று இரவு சீர்காழி நகரத்தில் உள்ள 24 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    ஒவ்வொரு வார்டு பகுதியிலும் அவரை வரவேற்கும் விதமாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பனங்காட்டு தெருவில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது வெடிக்கப்பட்ட பட்டாசிலிருந்து சிதறிய தீப்பொறி அருகில் இருந்த அய்யாதுரை என்பவரது வீட்டின் கூரையில் விழுந்துள்ளது.

    இதை யாரும் கவனிக்காத நிலையில் வேட்பாளரும் உடன் வந்தவர்களும் அங்கிருந்து வேறு பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றனர். சில நிமிடங்களில் அய்யாதுரையின் வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சீர்காழி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததுடன் துரிதமாக செயல்பட்டு வீட்டின் மீது தண்ணீரை ஊற்றியும் கூரையை பிரித்து அப்புறப்படுத்தியும் தீயை அணைத்தனர்.

    இதனால் வீட்டிலிருந்த பொருட்கள் தப்பியது. அதேநேரம் தீயை அணைப்பதற்காக வந்த தீயணைப்பு வாகனம் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உரிய நேரத்தில் செல்ல முடியாமலும், குறுகிய சாலை என்பதால் தீ பிடித்த வீட்டிற்கு எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், மக்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
    • கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 32 தெருக்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பிரசாரம் செய்வதற்கு இன்னும் 2 நாட்களே உள்ளது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன்படி, தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், தனது சொந்த சட்டமன்ற தொகுதியான கொளத்தூரில் நாளை காலை 7 மணிக்கு திறந்த வேனில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார்.

    கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 32 தெருக்களில் பிரசாரம் மேற்கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜி.கே.எம்.காலனியில் திறந்தவேனில் பிரசாரம் செய்வார் என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

    வடசென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்கிறார்.

    • பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.
    • குழாய் மூலமாக எரிவாயு என்பது வேடிக்கையான அறிவிப்பு.

    காரைக்குடி:

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாவது:-

    * பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.

    * 5 கோடி மக்கள் மட்டுமே வறுமையில் இருப்பதாக நிதி அயோக் கூறும் நிலையில், 80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் ஏன்?

    * குழாய் மூலமாக தண்ணீரே வராத நிலையில், எப்படி எரிவாயு வரும்.

    * குழாய் மூலமாக எரிவாயு என்பது வேடிக்கையான அறிவிப்பு.

    * உஜ்வாலா திட்டத்தின் கீழ் சிலிண்டர் பயன்பாடு 3.7 என்ற எண்ணிக்கையில் தான் உள்ளது.

    * எரிவாயு விலை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வாங்க தயங்குகிறார்கள்.

    * பா.ஜ.க. அரசு 4 கோடி வீடுகளைக் கட்டிக்கொடுத்துவிட்டதாகத் தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பது பொய்க் கணக்கு.

    * 4 கோடி வீடுகளைக் கட்டி இருந்தால் 52,000 வீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்டி இருக்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பா.ஜ.க. அரசு கட்டிக்கொடுத்த 52,000 வீடுகளைக் காட்ட முடியுமா?"

    * அனைத்து ஊர்களுக்கும் புல்லட் ரெயில் இயக்கப்படும் என்ற பா.ஜ.க. வாக்குறுதி வேடிக்கையானது. ஒரு புல்லட் ரெயிலுக்கு ரூ.1.1 லட்சம் கோடி செலவு செய்யத் தயாராக உள்ள பா.ஜ.க. அரசு, போதிய விபத்து தடுப்புக் கருவிகளைப் பொருத்தாதது ஏன்?

    இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.

    • பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளா் என்.நரசிம்மனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.
    • வேட்பாளா் வி.என்.வேணுகோபாலுக்கு ஆதரவாக இரவு 7 மணி அளவில் சாலை வாகன பிரசார பேரணியில் கலந்து கொள்கிறார்.

    சென்னை:

    மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) பிரசாரம் செய்கிறார்.

    கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரி வரும் அவா் அங்குள்ள புதிய பஸ் நிலையத்தில் நாளை காலை 10.30 மணி அளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளா் என்.நரசிம்மனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்.

    மீண்டும் ஹெலிகாப்டரில் பெங்களூர் செல்லும் அவா் பின்னா் அங்கிருந்து சென்னை விமான நிலையம் வரவுள்ளாா். கிண்டியில் உள்ள லீமெரிடியன் ஓட்டலில் மாலை 3 மணி அளவில் பல்வேறு சமுதாய தலைவா்களுடன் கலந்துரையாடுகிறார்.

    தொடா்ந்து, ஹெலிகாப்டரில் திருவண்ணாமலைக்குச் செல்லும் அவா் பா.ஜ.க. வேட்பாளா் அஸ்வத்தாமனுக்கு ஆதரவாக மாலை 4 மணி அளவில் சாலை வாகன பிரசார பேரணியில் ஈடுபடுகிறார்.

    மீண்டும் சென்னைக்கு ஹெலிகாப்டரில் வரும் அவா், தாம்பரத்தில் த.மா.கா. வேட்பாளா் வி.என்.வேணுகோபாலுக்கு ஆதரவாக இரவு 7 மணி அளவில் சாலை வாகன பிரசார பேரணியில் கலந்து கொள்கிறார்.

    • மோடியை தவிர மற்றவர்கள் பிரதமராக வந்தால் இந்த நாட்டை சின்னபின்னமாக்கி விடுவார்கள்.
    • பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை பா.ஜ.க வெளியிட்டுள்ளது.

    கோவை:

    கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை இன்று பல்லடம் ரங்கநாதபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது அவர் அங்கு திரண்டிருந்த மக்கள் மத்தியில் பேசியதாவது:-

    இது மிகப்பெரிய தேர்தல். ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடக்கும் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்தும் வாய்ந்தது. இந்தியாவில் உள்ள 98 கோடி மக்களும் இந்தியாவின் அடுத்த பிரதமராக யார் வர வேண்டும். அடுத்த 5 ஆண்டுகாலம் யாருடைய ஆட்சி நடைபெற வேண்டும் என்பதை தீர்மானிக்கின்றனர்.

    நம்மிடத்தில் நரேந்திர மோடி என்ற ஒரு தலைவர் இருக்கிறார். அவருக்கு மீண்டும் ஒரு 5 ஆண்டு காலம் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

    இந்தியா கூட்டணி தலைவர்கள் இல்லாமல் தத்தளித்து கொண்டிருக்கிறது. 10 செம்மறி ஆடுகள் கூட ஒரு வாரத்தில் தங்கள் தலைவனையோ, தலைவியையோ தேர்ந்தெடுத்து விட்டு தான் அடுத்த வேலையை செய்யும்.

    ஆனால் இந்தியா கூட்டணியில் இதுவரை யார் பிரதமர் வேட்பாளர், யார் தலைவர் என்றே தெரியாமல் தத்தளிக்கும் நிலை தான் காணப்படுகிறது.

    இந்த தேர்தல் பிரதமருக்கான தேர்தல். அவர் எப்படிப்பட்ட மனிதராக இருக்க வேண்டும். அவர் எப்படி இந்தியாவை வழிநடத்த வேண்டும் என்பதற்காக தான் நாம் வாக்களிக்கிறோம்.

    மோடியை தவிர அந்த நாற்காலியில் வேறு யாராவது பிரதமராக வந்து அமர்ந்தால் நாடு என்னவாகும் என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். மோடியை தவிர மற்றவர்கள் பிரதமராக வந்தால் இந்த நாட்டை சின்னபின்னமாக்கி விடுவார்கள். எனவே நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.


    பாராளுமன்ற தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதியை பா.ஜ.க வெளியிட்டுள்ளது. அதுவும் பிரதமர் மோடியே வெளியிட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் 4 கோடி மோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இன்னும் 3 கோடி மோடி வீடுகளை கட்டி கொடுப்போம் என உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆரோக்கியமான, வளர்ச்சியான அரசியலை கொடுப்பது பா.ஜ.க மட்டும் தான்.

    100 நாள் வேலை திட்டத்தில் ஒரு நாள் சம்பளமாக கடந்த 10 ஆண்டுக்கு முன்பு வரை ரூ.174 தான் இருந்தது. கடந்த வாரம் வரை ரூ.284 சம்பளமாக வழங்கப்பட்டது. அதனை தற்போது ரூ.319 ஆக உயர்த்தி வழங்கி வருகிறோம். 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு தான் முழு பணத்தையும் கொடுக்கிறது. மாநில அரசு கொடுக்கவில்லை. ஸ்டாலின் கொடுக்க வில்லை.

    ஆனால் அவர்கள் வெறும் வாயில் ஒற்றை வரியில் பா.ஜ.க.வை உள்ளே விட்டு விடாதீர்கள். அவர்கள் வந்து விடக்கூடாது என்கிறார்கள். அதனை விளக்கும் வகையில் நாங்கள் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளோம்.

    அந்த வீடியோவில் ஒரு கணவனும், மனைவியும் மோட்டார் சைக்கிளில் செல்கிறார்கள். அப்போது பின்னால் அமர்ந்து இருக்கும் மனைவி, தனது கணவரிடம் ஏதோ சொல்ல வருகிறார். ஆனால் கணவர் அதனை கண்டு கொள்ளாமல் நீ பேசாமல் வா என்கிறார்.

    இருந்தாலும் மனைவி மீண்டு பேச முற்படும் போது, கணவர், வேகமாக நீ வாக்கை மாத்தி போட்டு விடாதே. பா.ஜ.க உள்ளே வந்து விட போகிறது என்கிறார். அவர்கள் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார்கள்.

    100 மீட்டர் தூரம் சென்றதும், ஒரு பூக்கடையில் கணவனும், மனைவியும் சண்டை போடுகிறார்கள். அந்த கணவன், பூக்கடையில் இருக்கும் பணத்தை எடுத்து டாஸ்மாக் கடைக்கு செல்கிறேன் என்கிறார். இன்னும் சில அடி தூரத்தில் செவிலியர்கள், அரசு பஸ் ஊழியர்கள் போராடுகின்றனர். இன்னும் சில 100 மீட்டர் தூரத்தில் காவல்துறை போதை பொருள் கடத்தலில் தொடர்புடையதாக ஆளுங்கட்சி பிரமுகரை கைது செய்து செல்கிறது.

    இதனை எல்லாம் மோட்டார் சைக்கிளில் செல்லும் கணவன், மனைவி பார்த்தபடியே செல்கின்றனர். அப்போது கணவர் சொல்கிறார். தமிழகத்தில் பா.ஜ.க வருவதற்கான நேரம் வந்து விட்டது என்று.

    உண்மையிலேயே தமிழகத்தில் பா.ஜ.க, தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளே வர வேண்டிய நேரம் வந்து விட்டது.இது மாற்றத்திற்கான நேரம். நிச்சயமாக ஒரு கட்சி நேர்மையான ஆட்சி கொடுக்கும் என்றால் அது பா.ஜ.கவால் மட்டும் தான் முடியும்.

    தமிழகத்தில் 33 மாத காலமாக ஆட்சியில் உள்ளனர். அவர்களிடம் அதிகாரம், ஆள்பலம் இருக்கிறது. இருந்தாலும் பணத்தை கொடுத்து தான் தேர்தலை சந்திக்க வேண்டிய அவல நிலை உள்ளது. அதுவும் அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை மின் தடை செய்து விட்டு வீடு, வீடாக சென்று ஒரு ஓட்டுக்கு ரூ.500, ரூ.1000 கொடுத்து வருகிறார்கள்.

    50 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகளால் நேரடியாக தேர்தலை சந்திக்க முடியவில்லை. பணத்தை கொடுத்து தான் வாக்குகளை பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

    நாம் ஏதாவது கேட்டால் பணத்தை வாங்கி கொண்டு தானே வாக்களித்தீர்கள். உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது என சொல்கிறார்கள். 50 ஆண்டுகாலமாக நாம் ஏழையாக, வளர்ச்சியடையாமல் இருக்கிறோம். தமிழகத்தை திராவிட கட்சிகள் பின்னோக்கி கொண்டு சென்று விட்டனர்.

    நான் கோவைக்கு என்று 100 வாக்குறுதிகள் கொடுத்துள்ளேன். 500 நாட்களில் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். தி.மு.கவினர் போன்று 500-க்கும் அதிகமான வாக்குறுதிகளை கொடுத்து விட்டு, அதனை நிறைவேற்ற முடியாமல் பயந்து, பயந்து வர வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. ஏனென்றால் நாங்கள் 100 வாக்குறுதியை 500 நாளில் நிறைவேற்றுவோம். வாக்குறுதியை நிறைவேற்றி விட்டு கம்பீரமாக வருவேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கணையா குமார் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார்.
    • 2019-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

    டெல்லி மாநிலத்தில் இந்தியா கூட்டணி பா.ஜனதாவை எதிர்த்து களம் இறங்குகிறது. மொத்தம் உள்ள ஏழு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் காங்கிரஸ், நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுகின்றன.

    இந்த நிலையில் மூன்று தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் கணையா குமாருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள பா.ஜனதா வேட்பாளர் போஜ்புரி பாடகர் மனோஜ் திவாரியை எதிர்த்து களம் காண்கிறார்.

    கணையா குமார் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆவார். பல்கலைக்கழக வளாகத்திற்குள் நாட்டிற்கு எதிராக கோஷம் எழுப்பியதாக கைது செய்யப்பட்டார். விசாரணையில் பல்கலைக்கழக வளாகததிற்கு வெளியே இருந்துதான் கோஷமிட்டது தெரியவந்ததால் விடுதலை செய்யப்பட்டார்.

    2019-ம் ஆண்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெகுசரை தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது பா.ஜனதா வேட்பாளர் கிரிராஜ் சிங்கிடம் தோல்வியடைந்தார்.

    கணையா குமார் காங்கிரஸ் கட்சியில் துசிய மாணவர்கள் அமைப்பின் மாணவர்கள் அணி பொறுப்பாளராக உள்ளார்.

    காந்திசவுக் தொகுதியில் இருந்து 1984, 1989 மற்றும் 1996-ல் வெற்றி பெற்ற மூத்த தலைவர் ஜே.பி. அகர்வால் அதே தொகுதியில் போட்டியிடுகிறார்.

    வடமேற்கு டெல்லி (எஸ்சி) தொகுதியில் உதித் ராஜ் களம் இறக்கப்பட்டுள்ளார். இவர் 2014-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 2019 தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வாய்ப்பு வழங்காததால் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    டெல்லியில அடுத்த மாதம் 25-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

    • கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன்.
    • கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    சிவகாசி:

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் விஜயகாந்த் மகனை ஆதரித்து கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உங்கள் அண்ணன் மகனுக்கு நீங்கள் பெருவாரியான வாக்குகளை அளிக்க வேண்டும். 32 வயதில் படித்து முடித்துவிட்டு எத்தனையோ கனவுகள் இருந்தாலும் அதை தூக்கி எறிந்து விட்டு தந்தையின் வழியில் மக்கள் சேவை செய்ய இந்த தொகுதியில் அவர் போட்டியிடுகின்றார். உங்கள் எல்லாருக்கும் தெரியும் தம்பிக்கு இன்னும் கல்யாணம் கூட ஆகவில்லை. இந்த விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர் இந்த தொகுதி மக்களின் தலைமையில் தான் அவருக்கு திருமணம் நடக்கும்.

    கூட்டணி தர்மத்தை மதித்து மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்து வருகின்றேன். எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரதமராகும் வாய்ப்பு இருப்பதாகவும் அனைத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. இந்த தொகுதியில் தே. மு.தி.க. வெற்றி பெற்றவுடன் அவர் பல நல்ல திட்டங்களை இந்த தொகுதியில் அறிவித்து செயல்படுத்த உள்ளார். அதில் சிலவற்றை என்னிடம் கூறினார். அதை நான் உங்களிடம் கூறுகின்றேன்.

    விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் கேப்டன் பிறந்தநாள் அன்று 60 பெண்களை தேர்வு செய்து பெண்கள் நாட்டின் கண்கள் திட்டத்தின் மூலம் எங்களது சொந்த நிதியிலிருந்து அவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வழங்க உள்ளார். ஆண்டுதோறும் 6 லட்சம் வீதம் 5 வருடத்தில் ரூ.30 லட்சம் வரை பெண்களுக்கு நிதி உதவி வழங்க உள்ளார்.

    தொகுதி முழுவதிலும் இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மையம் தொடங்கப்படும். இலவச தையல் பள்ளிகள், இலவச நீட் கோச்சிங் சென்டர், படித்த படிக்காத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு, தையல் பயிற்சி பெற்ற பெண்களுக்கு இலவச தையல் மிஷின்கள் வாங்கி கொடுத்து அவர்கள் வாழ்வாதாரம் உயர நடவடிக்கை, 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தவும் கூலித் தொகையை ரூ.500 ஆக அதிகரிக்கவும் பாராளுமன் றத்தில் கோரிக்கை வைப்பார்.

    நமது வேட்பாளர் வயதில் சின்னவர் என்று நினைக்காதீர்கள். அவர் நல்ல அறிவாளி, உலகம் முழுவதும் சுற்றி வந்துள்ளார். பல்வேறு மொழிகளை பேசும் திறமை கொண்டவர். பாராளுமன்றத்தில் உங்கள் பிரச்சனைகளை எழுப்பி அதற்கு தீர்வு காணும் வல்லமை அவரிடம் உள்ளது. குணத்திலும், பழகுவதிலும் கேப்டனின் மறு உருவம். 34 வருடம் கேப்டனுக்கு மனைவியாக வாழ்ந்தும், அவருக்கு தாயாக இருந்தும் சேவை செய்திருக்கிறேன். கேப்டன் இல்லை என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். அவரது ஆசியால்தான் நான் இயங்கி வருகிறேன்.

    இவர் அவர் பேசினார்.

    ×