என் மலர்
பாராளுமன்ற தேர்தல் 2024
- ‘ரோடு ஷோ ’வில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறார்.
- தேசிய தலைவர்கள் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜனதா வேட்பாளராக அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார்.
இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் வைத்தி லிங்கம் எம்.பி.யும், அ.தி.மு.க. சார்பில் தமிழ் வேந்தனும் போட்டியிடுகின்றனர். இதனால் புதுச்சேரியில் மும்முனை போட்டி நிலவுகிறது.
வேட்பாளர்களை ஆதரித்து அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான ரங்கசாமி தொகுதி வாரியாக வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்து வருகிறார்.
அதுபோல் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் வாக்கு சேகரித்து வருகிறார்கள். தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் கடந்த 7-ந் தேதி பொதுக்கூட்டத்தில் பேசினார்.
அதுபோல் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கடந்த 30-ந் தேதி பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் அமைச்சர் நமச்சிவாயத்தை ஆதரித்து பிரசாரம் செய்ய அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று மாலை 4 மணி அளவில் விமானம் மூலமாக புதுச்சேரிக்கு வருகிறார்.
மாலை 6 மணி அளவில் அண்ணாசிலையில் இருந்து அஜந்தா சிக்னல் வரை 'ரோடு-ஷோ' செல்கிறார். இந்த 'ரோடு ஷோ 'வில் புதுவை முதலமைச்சர் ரங்கசாமியும் பங்கேற்கிறார்.
தேசிய தலைவர்கள் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
- தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார்.
- நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.
கோவை:
கோவையில் தி.மு.க. வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், ஆவாரம்பாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் இரண்டு நபர்களுக்கு இடையே நடக்க கூடிய தேர்தல் அல்ல. இந்த தேர்தல் மூலமாகத்தான் நாம் நாட்டை காக்கப் போகிறோமா, கைவிடப் போகிறோமா என்பதை முடிவு செய்யப் போகிறோம்.
இந்த தேர்தலில் மோடி மீண்டும் வென்றால் இந்தியாவில் இனி தேர்தல்களே நடக்காது. நாடு சர்வாதிகார நாடாகி ஜனநாயகத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடும்.
தேர்தல் பிரசாரத்துக்கு கோவை வந்த பிரதமர் மோடி தி.மு.க. அழிந்து விடும் என பேசுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, அ.தி.மு.க. என்ற கட்சி அழிந்து விடும் என்று பேசுகிறார். அப்படி என்றால் தேர்தலுக்கு பிறகு இந்த இரண்டு கட்சிகளையும் இவர்கள் அழித்து விடுவார்களா, அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லாத சர்வாதிகாரிகள் போல் பேசுகிறார்கள்.

இந்தியாவுக்கு பாகிஸ்தான், சீனாவால் பிரச்சனை இல்லை. பாரதிய ஜனதாவால் தான் பிரச்சனை. அதனால் இந்த தேர்தலில் இவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க வேண்டும்.
மோடி கியாரண்டி என்ற தலைப்பில் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் வரும் 5 ஆண்டுகளில் என்ன செய்வோம் என்பதை பட்டியலிட்டுள்ளனர். ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் சொல்லியதை எல்லாம் செய்து விட்டீர்களா என்று கேட்டால் பதில் இல்லை. தமிழக மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத மோடி, நிதி கொடுக்காத மோடி, இப்போது தமிழக மக்களிடம் ஓட்டுக் கேட்க மட்டும் அடிக்கடி வருகிறார். இதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பறக்கும் படையினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு .
- அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு.
கோவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை நேற்று இரவு சூலூர் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். இருகூர் பிரிவு பகுதியில் அவர் பிரசாரம் மேற்கொண்டபோது இரவு 10 மணி ஆகி விட்டதால் மைக்கை ஆப் செய்து விட்டு கையசைத்தபடி சென்றார்.
இரவு 10 மணியை கடந்து விட்டதால் பிரசாரம் செய்யக்கூடாது என போலீசார் தடுத்தனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜனதாவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அண்ணாமலை மற்றும் பா.ஜ.க.வினர் அங்கு மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பறக்கும்படை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் சூலூர் போலீசார் போலீசார் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, சேலஞ்சர் துரை, விஜயகுமார், சிதம்பரம் உள்பட 300 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதேபோல் காமாட்சிபுரம் பகுதியிலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பா.ஜ.கவினர் பிரசாரம் மேற்கொண்டதாக சிங்காநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் சிங்காநல்லூர் போலீசார் அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.கவினர் மீது அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, வெடிபொருட்களை தவறாக கையாளுதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்த உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே பீளமேடு போலீசாரும் அண்ணாமலை மீது தேர்தல் விதிமீறல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
- அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்பு.
- நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து வாக்கு சேகரிப்பு
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. இன்றுடன் இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தேசிய கட்சிகளான பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வின் முக்கிய தலைவர்கள் மாவட்டந்தோறும் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் தனியாக கூட்டணி அமைத்து போட்டியிடும் பா.ஜனதா வெற்றி முனைப்பில் தீவிர வாக்கு வேட்டை நடத்தி வருகிறது.
வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடியும் தமிழகத்திற்கு வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரதமர் மோடி கடந்த 10-ந்தேதி வரை 7 முறை தமிழகத்திற்கு வந்து பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பேசியுள்ள நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக இன்று நெல்லை வருகிறார்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகஸ்தியர்பட்டியில் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று மக்களிடையே பேச உள்ளார். அவர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே நெல்லையில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
இந்நிலையில் நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை ஆதரித்து பேசி வாக்கு சேகரிப்பதற்காக அவர் நெல்லைக்கு மீண்டும் வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த பொதுக்கூட்டத்தில் குமரி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மற்றும் தென்காசி தொகுதி கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்தும் பிரதமர் மோடி பேச உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பிரசாரத்திற்காக இன்று ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார்.
- ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பாராளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நாடு முழுக்க தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் வாக்குப் பதிவு நடைபெற இருப்பதை ஒட்டி, அரசியல் கட்சிகள் வாக்கு சேகரிப்பில் முழு வீச்சில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப் பதிவை தொடர்ந்து ஜூன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த நிலையில், நீலகிரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஆ. ராசாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்யவுள்ளார்.
பிரசாரத்திற்காக இன்று ஹெலிகாப்டர் மூலம் ஊட்டி வந்தார். உதயநிதி ஸ்டாலின் வந்த ஹெலிகாப்டர் நீட்டுக்கல் என்ற பகுதியில் தரையிறங்கியது. அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர் ஹெலிகாப்டரில் அதிரடி சோதனை நடத்தினர்.
சோதனையின் போது ஹெலிகாப்டரில் பணம், பரிசு பொருள் என எதுவும் இல்லை என்பதை உறுதி செய்த பிறகு தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
- இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்
- தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
அந்த வகையில், இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள அரணாரை பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், ரெயில்வே மந்திரி, நிதிமந்திரி, பிரதமர் ஆகியோரை சந்தித்து பேசியிருக்கிறேன். இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.
இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.
குறிப்பாக இந்த தொகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் போதுமான வகுப்பறைகள் இல்லாமல் இருந்தது. பெண்கள் மரத்தடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்தார்கள். அதனால் அரசுப்பள்ளிகளுக்கு 42 வகுப்பறைகளை கட்டி கொடுத்துள்ளேன். எந்தெந்த ஊருக்கு சமுதாய கூட்டங்கள் கேட்டீர்களா அங்கெல்லாம் சமுதாய கூடங்கள் கட்டி கொடுத்துள்ளேன்.
இதேபோல் நியாயவிலை கடைகள், நீர்த்தேக்க தொட்டிகள், கழிப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன்.
தமிழ்நாட்டில் இருந்து பாராளுமன்றத்திற்கு சென்ற 38 எம்.பிக்களின் 75% பேர் மத்திய அரசு கொடுத்த 17 கோடியை முழுமையாக செலவு செய்யவில்லை. அப்படியென்றால் அவர்களுக்கும் மக்களின் மீது அக்கறை இல்லை என்ற அர்த்தம். எம்.பி.க்கள் செலவு செய்யாத தொகை மீண்டும் மத்திய அரசுக்கே சென்று விடும். இதுதான் திமுக எம்.பி.க்களின் நிலைமை.
நான் மட்டும் தான் மத்திய அரசு கொடுத்த ஒட்டுமொத்த நிதியையும் செலவு செய்துள்ளேன்.
பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். அவர்களுக்கு வேலையும் வாங்கி கொடுத்துள்ளேன். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.
நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .
இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.
ஒருகாலத்தில் சென்னை - திருச்சி செல்வதற்கு 5 மணிநேரம் ஆகும். இப்போது மூணரை மணிநேரத்தில் செல்வதற்கு சிறப்பான சாலைகள் போடப்பட்டதற்கு மோடி அரசு தான் காரணம். நாட்டின் அடிப்படை கட்டமைப்பு சரியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர் மோடி.
கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.
மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.
இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள்.திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம். ஆகவே ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.
மற்றவர்கள் சம்பாதிக்க வந்தவர்கள், ஊழல்வாதிகள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்கள். மக்களிடம் கொள்ளையடித்த அந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது.
என்னை எதிர்த்து போட்டியிடுபவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள். மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்களின் குடும்பம், அவர்கள் கொள்ளையடித்தது போதாது என்று அவர்களின் மகனை வேட்பளராக நிறுத்தியுள்ளார்கள். ஆகவே மக்கள் ஊழல் செய்யும் திமுகவை ஆதரிக்க கூடாது.
யார் மக்களுக்கு சேவை செய்கிறார்கள் என்பதை பார்த்து அவர்களுக்கு வாக்களியுங்கள் . ஆகவே தாமரையில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள்.
- பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன
- அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.
இந்நிலையில், இன்று அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
இதனையடுத்து பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாகத் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"2004 ஆம் ஆண்டு பா.ஜ.க வெளியிட்ட ஒளிரும் இந்தியா தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரித்ததுபோல் இம்முறையும் வளர்ந்த இந்தியா தேர்தல் அறிக்கையை மக்கள் நிராகரிப்பார்கள்.
பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை என்பது தோல்வியடைந்த வங்கியில் எடுக்கப்பட்ட செல்லா காசோலை. ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி மக்களின் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவரும்" என்று பதிவிட்டுள்ளார்.
- நான் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்து வந்தேன். பா.ஜ.க-வால்தான் தோற்றேன் - ஜெயக்குமார்
- 2019-லும் சரி 2021-லும் சரி நாங்கள் நாங்கள் தோற்றது பா.ஜ.க-வால்தான் பா.ஜ.க-வால்தான் - ஜெயக்குமார்
சென்னையில் இன்று அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால்தான் நாங்கள் தோல்வி அடைந்தோம் என்று பாஜகவினர் கூறுகிறார்களே என்று செய்தியாளர் ஒருவர் கேட்க அதற்கு ஜெயக்குமார் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;
"பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்ததால் தான் எங்களுடைய ஆட்சியே போனது. இல்லையென்றால் நான் ஜெயித்திருப்பேன், ராயபுரத்தில் நான் எல்லாம் தோற்க்கிற ஆளா, நான் மனம் திறந்து சொல்கிறேன், இதுவரை சொல்லவில்லை. நான் 25 ஆண்டுகள் முடிசூடா மன்னனாக ராயபுரத்தில் இருந்து வந்தேன். தோல்வி என்பதையே அறியாதவனாக இருந்தேன்; நான் யாரால் தோற்றேன், பா.ஜ.க-வால்தான் தோற்றேன்.
பா.ஜ.க இல்லை என்றால் நான் எல்லாம் இந்நேரம் சட்டமன்றத்திற்கு போயிருக்க வேண்டிய ஆள். பா.ஜ.க இருந்ததனால் என் தொகுதி ராயபுரத்தில் 40,000 சிறுபான்மை இன மக்கள் ஓட்டு போனது. இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் ஓட்டு போனது; அவர்களுக்கு என் மேல் கோபம் கிடையாது. அப்போதே அவர்கள் என்னிடம் சொன்னார்கள். பா.ஜ.க-வை கழட்டி விடுங்கள் என்று சொன்னார்கள். நான் சொன்னேன் வீண் சுமைதான் என்று சொன்னேன். சமயம் வரும்போது கழட்டி விட்டுவிடுவோம், நீங்கள் கவலைப்படாதீர்கள் என்று சொன்னேன். அதே மாதிரி நேரம் வந்தது கழட்டி விட்டுவிட்டோம்.
பா.ஜ.க இல்லை என்றால் நான் எல்லாம் ஜெயித்து இருக்க வேண்டிய ஆள். 40 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்திருப்பேன்; பாஜக இருந்ததால் இப்பொழுது நான் ஜீரோவில் இருந்து ஓடுகிறேன். தி.மு.க நாற்பதில் இருந்து ஓடுகிறார்கள் அப்படி என்றால் யார் முன்னாடி செல்வார்கள், இதுதான் காரணம். தமிழ்நாடு முழுக்க பார்த்தீர்கள் என்றால் 2019-லும் சரி 2021-லும் சரி நாங்கள் நாங்கள் தோற்றது பா.ஜ.க-வால்தான் பா.ஜ.க-வால்தான்" என்று கூறினார்.
பாஜக குறித்து ஜெயக்குமார் பேசியது தொடர்பாக வடசென்னை பாஜக வேட்பாளர் பால் கனகராஜ்-யிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். தற்கு பதில் அளித்த அவர், "கடந்த தேர்தலில் பா.ஜ.க-வால்தான் கொஞ்ச ஓட்டாவது ஜெயக்குமார் வாங்குனாரு, இல்லைனா சுத்தமா அவுட் ஆகியிருப்பாரு." என்று பதிலடி கொடுத்துள்ளார்.
- தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது
- 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ம் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர்கள் 100 சதவிகிதம் வாக்களிப்பது குறித்து பொது மக்களிடம் பல்வேறு வகையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19ம் தேதி தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குச் சென்று 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று செங்கல்பட்டு ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,
"ஏப்ரல் 19ம் தேதி தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்கும்போது விரலில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20ம் தேதி சாப்பிடச் செல்லும்போது காண்பித்தால் உணவு விலையில் 5 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும், என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும்
- வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை
பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.
இந்நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
"2014, 2019 ஆகிய தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத பா.ஜ.க. 2024 தேர்தலுக்கு முதல்கட்ட தேர்தல் தொடங்கி அனைத்து கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பிறகு அவற்றை பார்த்து இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை சமூகநீதி, மதநல்லிணக்கம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக பல்வேறு அம்சங்கள் உள்ளன.
பல்வேறு மதம், மொழி, ஜாதி, இனங்களை கொண்ட பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று சொல்வது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் செயலாகும்.
தற்போது நடைபெறுகின்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 இல் ஆரம்பித்து ஜூன் மாதம் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்படுகிற நிலையில் ஒரே நாடு, ஒரே தேர்தலை எப்படி நடத்த முடியும் என்பதை பிரதமர் மோடி தான் விளக்க வேண்டும்.
புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு அவர்களை அழைக்காமல் புறக்கணித்த பா.ஜ.க.வினர் 2025 ஆம் ஆண்டை பழங்குடியினர் ஆண்டாக கொண்டாடுவோம் என்பது அப்பட்டமான இரட்டை வேடமாகும்.
ஏற்கனவே ஆயுஷ்மான் திட்டத்தில் ஊழல் புரையோடிப் போயிருக்கிற நேரத்தில் மீண்டும் அத்திட்டம் குறித்து தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெருமைமிகு தமிழ் மொழி வளர்க்கப்படும் என்று தேர்தல் அறிக்கை கூறுகிறது. நிதி ஒதுக்குவதில் தமிழ் மொழியை விட 18 மடங்கு அதிகமாக சமஸ்கிருத மொழிக்கு நிதி ஒதுக்கி பாரபட்சம் காட்டுகிற பா.ஜ.க., தமிழ் மொழி வளர்ச்சி பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. இதன்மூலம் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது.
தேர்தல் நன்கொடை பத்திரம் மூலமாக ரூபாய் 8,000 கோடி கார்ப்பரேட்டுகளிடம் நிதியை பெற்று குவித்த பா.ஜ.க., ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது மிகுந்த கேலிக்குரியதாக இருக்கிறது.
வந்தேபாரத் ரயில், புல்லட் ரயில் இவை எதுவுமே சாதாரண மக்களுக்கு பயன்படுகிற வகையில் அமைவதில்லை. தமிழகத்தில் மெட்ரோ ரயிலை புறக்கணித்த பா.ஜ.க.வை எவரும் மறந்திட இயலாது.
மோடியின் உத்திரவாதம் நம்பகத் தன்மையை இழந்துள்ளது. ஏற்கனவே 2014 இல் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை, விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக கூட்டப்படும், கருப்பு பணத்தை ஒழித்து அனைவரது வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்ற உத்திரவாதத்தை நிறைவேற்றாத மோடியின் உத்திரவாதத்தை மக்கள் எவரும் நம்ப மாட்டார்கள்.
தேர்தல் அறிக்கையை டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாளில் வெளியிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை ஜாதிவாரியாக கணக்கெடுத்து இடஒதுக்கீடு வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்காத பா.ஜ.க., டாக்டர் அம்பேத்கர் பெயரை உச்சரிக்க தகுதியில்லை.
எனவே, மக்களின் நம்பகத்தன்மையை இழந்த பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாகவே இருக்கிறது. இதில் இந்தியாவின் வளர்ச்சி குறித்து ஆக்கப்பூர்வமான கருத்துகள் எதையும் பா.ஜ.க. கூறவில்லை. இந்த தேர்தல் அறிக்கையை நாட்டு மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்.
கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் நிகழ்த்திய ஜூம்லா நாடகத்தை மீண்டும் பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியிட்டு அரங்கேற்றியிருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்
- பாஜகவின் தேர்தல் அறிக்கையில் வேலையின்மை என்ற வார்த்தையே இல்லை - ராகுல்காந்தி
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.
அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.
இந்நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கான விழா டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.
முதலில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தேர்தல் அறிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். அப்போது அவர் சமுதாய மேம்பாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க. தன்னை அர்ப்பணித்து இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
பாஜகவின் தேர்தல் அறிக்கை தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
"பாஜகவின் தேர்தல் அறிக்கை மற்றும் நரேந்திர மோடியின் உரையில் பணவீக்கம் மற்றும் வேலையின்மை ஆகிய இரண்டு வார்த்தைகள் இல்லை. மக்களின் வாழ்க்கை தொடர்பான மிக முக்கியமான பிரச்சனைகளை கூட விவாதிக்க பாஜக விரும்பவில்லை.
இந்தியா கூட்டணியின் நோக்கம் மிகவும் தெளிவானது - அரசு பணிகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு மற்றும் படித்த ஒவ்வொரு இளைஞருக்கும் நிரந்தர வேலை உறுதி.
இந்த முறை மோடியின் மாய வலையில் இளைஞர்கள் சிக்கப் போவதில்லை, இனி அவர்கள் காங்கிரசின் கரங்களை வலுப்படுத்தி நாட்டில் வேலைவாய்ப்பு புரட்சியை ஏற்படுத்துவர்" என்று பதிவிட்டுள்ளார்.
- அனைத்தையும் தி.மு.க. ஆட்சி நிறுத்தி விட்டது.
- உலக தமிழர்களுக்காக பாடுபட்டவர் விஜயகாந்த்.
பசும்பொன்:
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பா.ஜெயபெருமாளுக்கு இரட்டை இலைக்கு வாக்குகள் சேகரித்து தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கமுதியில் பேசியதாவது:-
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் பா.ஜெயபெருமாள் பண்பாளர். மக்களின் பிரச்சனைகளை தீர்க்க ஓடோடி வருவார். கச்சத்தீவை ஒப்படைத்தவர்களும், ஆட்சியில் இருப்பவர்களும் இப்போது கச்சத்தீவை மீட்போம் என்கிறார்கள். மீனவர்களின் பாதுகாப்பு மிக அவசியம், மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இரட்டை இலைக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் தான் மக்கள் நல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்தையும் தி.மு.க. ஆட்சி நிறுத்தி விட்டது.
உலக தமிழர்களுக்காக பாடுபட்டவர் விஜயகாந்த். தமிழர்களுக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினார். மானாமதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி வழியாக ரெயில் பாதை அமைக்க பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கப்படும் .
தமிழக மக்களின் நலனில் அதிக அக்கறையுடன் செயல்பட்டவர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஆட்சிதான். அ.தி.மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும். பா.ஜெயபெருமாளுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் அ.தி.மு.க. வேட்பாளருடன் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி, ராமநாதபுரம் பாராளுமன்ற அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னாள் எம்எல்ஏ மலேசியா, எஸ்.பாண்டியன், முன்னாள் எம்.பி. எம்.எஸ். நிறைகுலத்தான். மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன். தே.மு.தி.க. சிங்கை சின்னா. எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாலர்கள் பெரியசாமி தேவர், காளி முத்து, ராஜேந்திரன், அ.தி.மு.க. நிர்வாகிகள் கர்ணன். எஸ்.டி. செந்தில்குமார். கருப்பசாமி ஆகியோர் வெற்றி கலந்து கொண்டனர்.






