என் மலர்tooltip icon

    பாராளுமன்ற தேர்தல் 2024

    • சமூகம் சார்ந்த பிரசாரங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் பார்த்து தான் வாக்களிப்பார்கள்.
    • தேனி தொகுதியில் உள்ள எந்த கிராமத்துக்கு சென்றாலும் மக்கள் நலனுக்காக நான் என்னென்ன செய்துள்ளேன் என்பது தெரியும்.

    சென்னை:

    பா.ஜனதா ஆதரவுடன் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் பா.ஜனதாவை ஆதரிப்பதற்கான காரணம் பற்றி விளக்கினார்.

    கேள்வி:-1999-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் வெற்றி பெற்றீர்கள். 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் திரும்பி வந்து மக்களை சந்திக்கிறீர்கள். மக்கள் ஆதரவு எப்படி இருக்கிறது?

    பதில்:-1999-2004 கால கட்டத்தில் நான் பெரிய குளம் தொகுதி எம்.பி.யாக இருந்து நிறைய பணிகள் செய்து இருக்கிறேன். அரசியல் சூழ்நிலையால் அதன் பிறகு வெற்றி வாய்ப்பை இழந்தேன். நான் 21,155 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தேன். இது மற்ற வேட்பாளர்களின் வாக்கு சதவீதத்துடன் ஒப்பிடும் போது நன்றாகவே இருந்தது. அதனால் என்னை அம்மா ஜெயலலிதா மேல்சபை எம்.பி. ஆக்கினார். தேனி தொகுதியில் உள்ள எந்த கிராமத்துக்கு சென்றாலும் மக்கள் நலனுக்காக நான் என்னென்ன செய்துள்ளேன் என்பது தெரியும்.

    ஆண்டிப்பட்டி மற்றும் சேடப்பட்டியில் என்னால் உருவான அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஒருங்கிணைந்த குடிநீர் திட்டம் ஆகியவற்றால் 14 ஆண்டுகளுக்கு பிறகு திரும்பி வந்த எனக்கு மக்கள் மிக சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள்.

    கேள்வி:- உங்களை எதிர்த்து போட்டியிடும் தங்க தமிழ்செல்வன் (தி.மு.க.), நாராயணசாமி (அ.தி.மு.க.) ஆகியோர் உங்களோடு அ.தி.மு.க.வில் இருந்தவர்கள்தான். இதனால் வாக்குகள் பிரிய வாய்ப்பு இருக்கிறதா?

    பதில்:-ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஒரிஜினல் அ.தி.மு.க. என்பது இல்லை. இப்போது இருப்பது எடப்பாடி பழனிசாமியின் கட்சி. இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்குகள் போய் விடாமல் தடுக்கலாம் என்று நினைக்கிறார். தி.மு.க. மக்கள் விரோத கட்சியாக உள்ளது. எனவே அவர்கள் கனவு நிறைவேறப் போவதில்லை.


    கேள்வி:-தங்க தமிழ்செல்வனும், நீங்களும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்களாக இருக்கும் போது சமூக ரீதியான வாக்குகள் அதிக அளவில் யாருக்கு கிடைக்கும்?

    பதில்:-தேனி ஒரு காஸ்மோபாலிடன் தொகுதி. 1952-ம் ஆண்டு முதல் முஸ்லீம்கள் உள்பட அனைத்து சமூகங்களின் வேட்பாளர்களும் இங்கிருந்து தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    சமூகம் சார்ந்த பிரசாரங்கள் எவ்வளவு பலமாக இருந்தாலும் மக்கள் பார்த்து தான் வாக்களிப்பார்கள்.

    கேள்வி:-அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகும் பா.ஜனதா கூட்டணியால் வாக்குகளை அதிக அளவு பெற முடியும் என்று நினைக்கிறீர்களா?

    பதில்:-நான் அ.ம.மு.க.வை தொடங்கிய போது பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கவில்லை. ஆனால் பிரதமரை தேர்வு செய்ய வேண்டும் என்று விரும்பியதால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தோம்.

    இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் பிரதமரின் ஒத்துழைப்போடு பல திட்டங்களை தொகுதியில் நிறைவேற்றுவேன்.

    கேள்வி:-உங்கள் குடும்ப உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கொடநாடு கொலை-கொள்ளை வழக்கில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா?

    பதில்:-அந்த நேரத்தில் என் அத்தை சசிகலா ஜெயிலில் இருந்தார். நானும் கைது செய்யப்பட்டிருந்தேன். ஒரு காவலாளி மட்டும்தான் இருந்தார். பங்களாவுக்குள் நுழைந்தவர்கள் அம்மாவின் பாதுகாப்பில் ஊழல் அமைச்சர்கள் பற்றிய பதிவுகள் இருப்பதாக நம்பினார்கள்.

    எனவே இந்த கொலை மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

    கேள்வி:-ஜெயலலிதாவின் கொள்கைகளை பின் பற்றுவதாக கூறுகிறீர்கள். ஆனால் அவர் பா.ஜனதாவுக்கு எதிரானவர். நீங்கள் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்திருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்?

    பதில்:-அம்மா உயிருடன் இருந்திருந்தால் அவரது நிலைப்பாட்டை நாங்கள் பின்பற்றி இருப்போம். தற்போது தேசத்துக்கு தேவை சிறந்த பிரதமர். மோடிக்கு நிகரானவர்கள் இல்லை. எனவே உலகம் முழுவதும் உள்ள தலைவர்களால் பாராட்டப்படும் மோடிக்கு ஆதரவாக இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம்.

    கேள்வி:-எடப்பாடி பழனிசாமிக்கான வாய்ப்புகள் மற்றும் உங்களைப் பற்றிய அவரது விமர்சனங்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

    பதில்:-எடப்பாடி பழனிசாமி யாரால் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும். என் அத்தை சசிகலா ஜெயிலில் இருந்த போது அவரை கட்சியை விட்டு நீக்கினார். எனவே மற்றவர்களை விமர்சிக்க அவருக்கு எந்த தகுதியும் இல்லை. அவரது வேட்பாளர்களுக்கு எதிராக மக்கள் வாக்களித்து பாடம் புகட்டுவார்கள்.

    கேள்வி:-உங்களால்தான் அ.தி.மு.க. பிளவு பட்டதாக தங்க தமிழ்செல்வன் கூறுகிறாரே?

    பதில்:-அவருக்கு பதில் சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட பிறகும் 2½ ஆண்டுகள் என்னுடன் இருந்தார். ஏன் அப்படி செய்தார் என்பது என் கேள்வி.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    • நாடு முழுவதும் அனைத்து துறை மக்களிடமும் பா.ஜ.க. சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக பியூஸ்கோயலும் பொறுப்பேற்றனர். மேலும் 24 உறுப்பினர்களும் இந்த குழுவில் இடம் பெற்றனர். 27 பேர் கொண்ட அந்த குழு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தயாரித்தது.

    நாடு முழுவதும் அனைத்து துறை மக்களிடமும் பா.ஜ.க. சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டன. சுமார் 4 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை பரிந்துரையாக அளித்து இருந்தனர். அவற்றை எல்லாம் ஆய்வு செய்து பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கான விழா டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

    முதலில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தேர்தல் அறிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். அப்போது அவர் சமுதாய மேம்பாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க. தன்னை அர்ப்பணித்து இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.

    இதையடுத்து பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளி யிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * ஒரே நாடு ஒரே தேர்தல் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

    * நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


    * மேலும் 5 ஆண்டுகளுக்கு ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

    * 2025-ம் ஆண்டு பழங்குடியின மக்களின் பெருமைமிகு ஆண்டாக கடைபிடிக்கப்படும்.

    * 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

    * கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    * வேலை வாய்ப்பு முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    * வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முத்ரா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

    * ஏழைகளுக்கு ஊட்டச் சத்து கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்.

    * நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வந்து அமல்படுத்தப்படும்.

    * ஏழைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் சிலிண்டர் கொடுக்கும் திட்டம் மேலும் நீட்டிக்கப்படும்.

    * கிராம மக்களின் நலனுக்காக குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம் தீவிரப்படுத்தப்படும்.

    * பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    * கிராமத்து பெண்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு ஒரு ரூபாயில் ஒரு நாப்கின் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்.

    * திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

    * பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பொருளாதார கொள்கை திட்டம் வகுக்கப்படும்.

    * உலகின் சக்தி மிக்க பொருளாதார நாடுகளில் 3-வது நாடு என்ற மிகப்பெரிய பொருளாதார அந்தஸ்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பெண்களுக்கு கருப்பை புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம் வகுக்கப்படும்.

    * சாலையோரம் வசிப்பவர்களுக்கு மிகவும் குறைந்த வாடகையில் தங்குவதற்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கும்.

    * மக்கள் மருந்தகங்களில் மருந்து விலை 80 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.

    * புல்லட் ரெயில் திட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்படும்.

    * நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

    * ஸ்டாட்அப் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் தனி திட்டம் வகுக்கப்படும்.

    * தமிழுக்கு சேவை செய்யும் வகையில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்.

    இவ்வாறு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • வேட்பாளர்களின் பிரசாரமும் இல்லை, வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவில்லை.

    டேராடூன்:

    உத்தரகாண்டில் 24 கிராமங்களில் மக்கள் வசிக்காத இடங்களாக இருப்பதால் அதனை பேய் கிராமங்களாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது.

    உத்தரகாண்டில் வருகிற 19-ந் தேதி வாக்கு பதிவு நடைபெறுகிறது. கிராமங்கள் தோறும் தேர்தல் களைகட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த 24 கிராமங்களில் மட்டும் தேர்தலுக்கான எந்த விதமான முகாந்திரமும் இல்லாமல் அமைதியான முறையிலேயே இருக்கிறது. தேர்தல் கமிஷனும் இங்கு வாக்குச்சாவடிகள் ஏதும் அமைக்கவில்லை.

    பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர் பங்கேற்பை அதிகரிக்க இந்திய தேர்தல் கமிஷன் தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, உத்தரகாண்டில் உள்ள 24 கிராமங்களில், தேர்தல் நாளான ஏப்ரல் 19-ந் தேதி ஒரு வாக்குச்சாவடி கூட இருக்காது.

    அரசு அறிவிப்பின் படி இந்த கிராமங்கள் "பாலைவன கிராமங்கள்" என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால் உள்ளூர் மக்களால் "பேய் கிராமங்கள்" என்று அழைக்கப்படுகின்றது.

    மாநில தேர்தல் ஆணையம் வழங்கிய தகவலின்படி , சுதந்திரத்திற்குப் பிறகு கடந்த 16 மக்களவைத் தேர்தல்களில் தீவிரமாகப் பங்கேற்ற இந்த 24 கிராமங்கள், இந்த முறை தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாது.

    இந்த கிராமங்களை "மக்கள் வசிக்காத கிராமங்கள்" என்று மாநில இடம்பெயர்வு ஆணையம் சமீபத்தில் அறிவித்தது.

    அல்மோரா, டெஹரி, சம்பாவத், பவுரி கர்வால், பித்தோராகர் மற்றும் சாமோலி ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள இந்தக் கிராமங்கள் இப்போது மக்கள் வசிக்காதவையாகக் கருதப்படுகின்றது.

    பிப்ரவரி 2023-ல் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி உத்தரகாண்டில் 2018 மற்றும் 2022-க்கு இடையில் மாநிலத்தில் உள்ள 6,436 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்பைத் தேடி தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறினர். இருப்பினும் அவர்கள் அவ்வப்போது தங்கள் கிராமத்திற்கு திரும்பி வந்துள்ளனர்.


    அதே நேரத்தில், மாநிலத்தில் உள்ள 2067 கிராமங்களில் இருந்து சென்றவர்கள் நிரந்தர இடம்பெயர்வாக சென்றுள்ளனர். வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றைத் தேடி மக்கள் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேறினர், அவர்கள் திரும்பி வரவில்லை.

    புலம்பெயர்தல் ஆணையம் நடத்திய ஆய்வின் அறிக்கையில்:- ஏராளமான தனிநபர்கள் தங்கள் மூதாதையர் நிலங்களை விற்றுள்ளனர், பல நிலங்களை தரிசாக விட்டுவிட்டனர். குறிப்பிடத்தக்க வகையில், அல்மோரா மாவட்டத்தில் 80 கிராம பஞ்சாயத்துகள் நிரந்தர இடம்பெயர்வு காரணமாக கைவிடப்பட்டது.

    2018 மற்றும் 2022-க்கு இடையில், மாநிலத்தில் உள்ள 24 கிராமங்கள் முழுவதுமாக "மக்கள் வசிக்காதவையாக" மாறிவிட்டன என்று அந்த ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அந்த வெறிச்சோடிய 24 கிராமங்கள் இந்த முறை பொதுத் தேர்தலின் போது எந்தவிதமான அதிர்வையும் காணாமல் அமைதியாகவே இருக்கும்.

    அங்கு வேட்பாளர்களின் பிரசாரமும் இல்லை, வாக்குச்சாவடிகளும் அமைக்கப்படவில்லை.

    இதுகுறித்து உத்தரகாண்ட் தலைமை தேர்தல் அதிகாரி புருஷோத்தம் கூறுகையில்:-

    இந்த பிரச்சினை இடம்பெயர்வோடு தொடர்புடையதாக இருந்தாலும், 50-க்கும் குறைவான வாக்காளர்கள் வசிக்கும் மாநிலத்தின் மிகவும் தொலைதூர பகுதிகளில் கூட தேர்தல் ஆணையம் வாக்குச் சாவடிகளை நிறுவியுள்ளது. அணுக முடியாத பகுதிகளில் அனைவரையும் உள்ளடக்கிய வாக்களிப்பை எளிதாக்குவதே ஆணையத்தின் நோக்கமாகும்."

    சேகரிக்கப்பட்ட தகவல்களின்படி, "2018 மற்றும் 2022-க்கு இடையில், மாநிலத்தில் உள்ள 2,067 கிராம பஞ்சாயத்துகளில் வசிக்கும் மொத்தம் 28,531 பேர் நிரந்தர இடம்பெயர்வுக்கு உட்பட்டுள்ளனர், மாவட்ட தலைமையகம் அல்லது பிற மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.

    35.47 சதவீதம் பேர் அருகிலுள்ள நகரங்களைத் தேர்ந்தெடுத்தும் 23.61 சதவீதத்தினர் பிற மாவட்டங்களுக்கும் சென்றுள்ளனர். 21.08 சதவீதத்தினர் மாநில எல்லைகளைத் தாண்டி பிற மாநிலங்களுக்கு சென்றுள்ளனர் என்றார்.

    • பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும்.
    • கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஏழை-எளிய மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நம்மை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க-அ.தி.மு.க கட்சிகள் இன்னும் அடிமையாக வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் அடிப்படை வசதிகளுக்குகூட கையேந்தும் நிலையில்தான் உள்ளனர்.

    ஆனால் பிரதமர் மோடி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், இலவச கியாஸ் இணைப்பு மற்றும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளார்.

    மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து பொதுமக்களுக்கும் தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருசிலர் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கொடுக்க லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக சொல்கிறார்கள். ஏழை மக்களுக்கு தரப்படும் தண்ணீரில் யாராவது கைவைத்தால், அவர்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு சிறைக்கு செல்வது உறுதி.

    இந்த பகுதியின் வனவிலங்கு பிரச்சனை நிரந்தர தீர்வு காணப்படும். மேலும் பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும். கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும். ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குறிப்பாக அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிகளில் மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் குறைந்தபட்சம் ரூ.100 கோடிகள் இருந்தால் தான் சீட் தருவார்கள்.
    • சுதீஷ் இன்று மைதானத்தில் நடைபயிற்சி செய்த பொது மக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி தே.மு.தி.க. வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து தே.மு.தி.க. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் இன்று தஞ்சை அன்னை சத்யா மைதானத்தில் நடைபயிற்சி செய்த பொது மக்களிடம் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தேர்தலில் போட்டியிட தி.மு.க.வில் குறைந்தபட்சம் ரூ.100 கோடிகள் இருந்தால் தான் சீட் தருவார்கள்.

    இதனை மாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தான். சாதாரண தொண்டையும் மந்திரிகளாக, எம்.பிக்களாக ஆக்கியவர்.

    அவரை தொடர்ந்து விஜயகாந்தும் சாதாரண தொண்டர்களை வேட்பாளராக நிறுத்தி எம்.எல்.ஏக்களாக உருவாக்கியவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை.
    • ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார்.

    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசா ரம் செய்து வருகிறார்.

    தி.மு.க. கூட்டணி சார்பில் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியின் மூலமாக ஒன்று அல்லது இரண்டு இடங்களை நிச்சயம் பெற்றுவிடலாம் என்றே மக்கள் நீதி மய்யம் கட்சியினர் நம்பி இருந்தனர்.

    ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ கமல்ஹாசனை கண்டு கொள்ளவில்லை. தங்களுக்கு தேவையான தொகுதிகளை தி.மு.க.விடம் கேட்டுப் பெறுவதில் உறுதியாக இருந்த காங்கிரஸ் கட்சியினர் கமல்ஹாசனுக்கு எந்த விதத்திலும் கை கொடுக்காமல் ஒதுங்கிவிட்டனர்.

    இதனால் காங்கிரசை நம்பி காத்திருந்த கமல்ஹாசனை யாருமே பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் கடைசி நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போய் சந்தித்தார்.

    அப்போது போட்டியிட தொகுதி ஒதுக்கப்படாத நிலையில் மேல்சபை எம்.பி. பதவி மட்டுமே தருவதாக தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட முடியாத இக்கட்டான நிலை ஏற்பட்டது. இருப்பினும் கமல்ஹாசன் மனம் தளராமல் தி.மு.க. கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    இந்த நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி நேற்று முன்தினம் தமிழகம் வந்திருந்தார். நெல்லை மற்றும் கோவையில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார்.


    கோவை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ராகுலுடன் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் ஏற்கனவே ஒப்புக் கொண்டபடி பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டி இருப்பதால் என்னால் ராகுல் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என்று கூறி கமல்ஹாசன் புறக்கணித்துள்ளார்.

    ராகுல் காந்தியுடன் கமல்ஹாசன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அவரது செயல்பாடுகளை கமல்ஹாசன் பாராட்டியும் பேசி வந்துள்ளார். டெல்லியில் ராகுலின் யாத்திரையில் பங்கேற்று பேசியுள்ள அவர் ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரசை ஆதரித்து பிரசாரமும் மேற்கொண்டார்.

    ஆனால் இதையெல்லாம் நினைத்துப் பார்க்காமல் காங்கிரஸ் கட்சியினர் பாராளுமன்றத் தேர்தல் தொகுதி பங்கீட்டு பேச்சு வார்த்தையின் போது நடந்து கொண்டதாக மக்கள் நீதி மய்யம் கட்சியினர் கூறியுள்ளனர்.

    இப்படி தேர்தல் நேரத்தில் யாரோ ஒருவர் போல மக்கள் நீதி மய்யம் கட்சியை தமிழக காங்கிரசார் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டதே, கமல்ஹாசனின் கோபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டதாகவும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

    இப்படி காங்கிரஸ் கட்சி மீது கமல் கொண்டுள்ள கோபம் இன்னும் அடங்காமல் இருப்பதாலேயே ராகுல் பிரசாரக் கூட்டத்தை கமல் ஹாசன் புறக்கணித்துள்ளதாக அரசியல் நிபுணர்களும் கருத்துக்களை தெரிவித்து உள்ளனர்.

    ராகுலின் தமிழக சுற்றுப் பயணம் பற்றி கமல்ஹாசன் எந்தவித கருத்துக்களையும் பதிவிடாமல் மவுனம் காத்து வருவதும் குறிப்பிடத்தக்கது என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.

    • நாட்டில் உள்ள மக்களின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
    • வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 200 ரூபாய்க்கு விற்ற அவலம் பா.ஜனதா ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் போட்டியிடுகிறார். அவர் நாள்தோறும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திக்கணங்கோடு சந்திப்பில் இருந்து நேற்று அவர் திறந்த ஜீப்பில் பிரசாரத்தை தொடங்கினார். இதில் அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி மற்றும் காங்கிரஸ், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க. உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பிரசாரத்தின் போது வேட்பாளர் விஜய் வசந்த் கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து பேசியதாவது:-

    கடந்த பத்தாண்டுகளாக பிரதமர் மோடி மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை அளித்து வாயால் வடை சுட்டு வருகிறார். (அதனை வெளிப்படுத்தும் விதமாக வேட்பாளர் விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார் ஆகியோர் வடையை பொதுமக்களிடம் காண்பித்து, இதுதான் மோடி சுட்ட வடை என்றனர்). நாட்டில் விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. இதற்கெல்லாம் முடிவு கட்டும் நாள் தான் வருகின்ற 19-ந் தேதி நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தல்.

    ஏழை மக்களை வஞ்சித்து பணக்கார முதலாளிகளான அதானியையும், அம்பானியையும் வாழ வைக்க கார்ப்பரேட்டுக்கு துணை போகும் பா.ஜனதா அரசின் பத்தாண்டு கால ஆட்சியில் மக்கள் நாளுக்கு நாள் பல்வேறு வேதனையை அனுபவித்து வருகின்றனர். ஏழை மாணவர்களின் கல்விக் கடனையும், விவசாயிகளின் விவசாய கடனையும் ரத்து செய்ய மறுத்த பா.ஜனதா அரசு, அதானிக்கும்- அம்பானிக்கும், கார்ப்பரேட் முதலாளிகளுக்கும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்து அவர்களை மேலும், மேலும் பணக்காரர்களாக மாற்றி வருகிறது.

    ஆனால் நாட்டில் உள்ள மக்களின் வறுமை நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. மக்கள் உணவுக்காக பயன்படுத்தும் வெங்காயம் மற்றும் தக்காளியின் விலை 200 ரூபாய்க்கு விற்ற அவலம் பா.ஜனதா ஆட்சியில் தான் நிகழ்ந்துள்ளது.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி மக்கள் அனைவரும் அன்புடனும், மகிழ்ச்சியுடனும் வாழ மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் நமது இந்தியா கூட்டணிக்கு உங்கள் பேராதரவை தர வேண்டும். குமரி மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வதற்காகவும், நமது மண்ணில் ஒற்றுமையாக வாழ நினைக்கும் மக்களைப் பிரித்தாள நினைக்கும் ஏமாற்றுவாதிகளை விரட்டி அடிப்பதற்கும் நீங்கள் அனைவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் எனக்கு கை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார்
    • இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள சிறுவயலூர், குரூர், செட்டிகுளம் ஆகிய பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

     இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பெரம்பலூர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். தேர்தல் நெருங்கி வருவதால், பாரிவேந்தர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    அந்த வகையில், இன்று பெரம்பலூர் தொகுதியில் உள்ள சிறுவயலூர், குரூர், செட்டிகுளம் ஆகிய பகுதியில் பாரிவேந்தர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    அப்போது பொது மக்களுக்கு மத்தியில் அவர் பேசியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். 2019-ல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தீர்கள். வெற்றி பெற செய்த நான் உங்களுக்காக என்ன செய்தேன் என்று கேட்கலாம். உங்களுக்காக பாராளுமன்றத்திலே பேசிருக்கிறேன், உங்கள் தொகுதிகளுக்கு என்னென்ன செய்தேன் என இவை அனைத்தையும் உங்களுக்கு புத்தமாக போட்டு கொடுத்திருக்கிறேன்.

    இந்த புத்தகம் எல்லாருடைய வெற்றிக்கும் வந்து சேர்ந்திருக்கும். இல்லையென்றாலும் விரைவில் வரும். மற்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எம்பிக்கள் இது போன்ற புத்தகங்கள் போடுவதில்லை. பாராளுமன்ற உறுப்பினரின் பணிக்கு மதிப்பெண்கள் கொடுத்தால் எனக்கு நீங்கள் 100 மதிப்பெண்கள் கொடுப்பேர்கள். அந்த அளவிற்கு இந்த பகுதியில் நான் வேலை செய்துள்ளேன்.

    ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் வேலை உங்களின் பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் பேசுவது. உங்களின் பிரச்சினைகளை தீர்க்க மத்திய அரசு 17 கோடி கொடுத்தது. அந்த 17 கோடி ரூபாயில் எனது பாராளுமன்ற தொகுதிக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்துள்ளேன்.

    பெரம்பலூர் தொகுதியில் ஏழை மாணவர்களால் உயர்கல்வி பெற முடியாமல் தவித்தனர். அதனால் ஏழை மாணவர்களை தேர்வு செய்து அவர்களில் 1200 மாணவர்களுக்கு மருத்துவம் , எஞ்ஜினியர், விவசாயம் ஆகிய உயர்கல்விகளை படிக்க வைத்துள்ளேன். எனது தொகுதியில் 1200 மாணவ, மாணவிகள் பட்டாதாரிகளாக ஆக்கியுள்ளோம். இதுவரை எந்த எம்பி செய்யாத ஒன்றை நான் செய்திருக்கிறேன். இதுவரை 118 கோடி மாணவர்களுக்காக செலவு செய்திருக்கிறேன்.

    நீங்கள் மீண்டும் என்னை பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தால், 1500 ஏழை குடும்பங்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன். குறிப்பாக இதய நோய், சிறுநீரக செயல் இழப்பு, போன்ற பல லட்சம் செய்ய கூடிய மருத்துவ சிகிச்சைகளுக்கு உயர் மருத்துவம் செய்து தருவேன் .

    இந்த 1500 குடும்பங்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான இன்சூரன்ஸ் செய்து இந்த சிகிக்சை கிடைக்க வழிவகை செய்வேன். இவை அனைத்தும் என் தனிப்பட்ட வாக்குறுதிகள்.

    செட்டிகுளம் பகுதியில் விளையும் சின்ன வெங்காயம் புகழ்பெற்றது. அத்தகைய செட்டிகுளம் சின்ன வெங்காயத்திற்கு புவிசார் குறியீடு விரைவில் நான் பெற்று தருவேன்.

    கடந்த 10 ஆண்டுகளாக பாஜக ஆட்சி செய்து வருகிறது. மோடி பிரதமராக உள்ளார். பாஜக ஆட்சியில் எந்த அமைச்சர் மீதும் எந்த ஊழல் குற்றசாட்டும் இல்லை. அந்த வகையில் ஊழல் இல்லா ஆட்சியை மோடி கொடுத்திருக்கிறார்.

    தேசபக்தி கொண்டவர். அவர் ஒரு மகான், புண்ணியவான், சந்நியாசி. இரவு பகல் பாராமல் மோடி நாட்டுக்காக உழைத்து கொண்டிருக்கிறார். இந்திய பொருளாதாரத்தை உயர்த்தியார் மோடி.

    மீண்டும் மோடி 3-வது முறையாக பிரதமராக மக்கள் வாக்களிக்க போகிறார்கள். வட மாநிலங்களில் மோடிக்கு பெரும் ஆதரவு உள்ளது. இந்த முறை தமிழ்நாட்டில் இருந்து பாஜக சார்பாக நாம் எம்.பிக்களை அனுப்ப வேண்டும்.

    இந்தியா முழுவதும் ஊழல் செய்த கட்சி என்றால் திமுகவை தான் அழைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை டெல்லிக்கு அனுப்பாதீர்கள்.திமுக அமைச்சர்கள் பலர் மீது ஊழல் குற்றசாட்டு உள்ளது. எப்போது வேண்டுமானாலும் அவர்கள் கைது செய்யப்படலாம். ஆகவே ஊழல் கட்சிகளுக்கு வாக்களிக்காதீர்கள்.

    என்னை எதிர்த்து போட்டியிடுவர் எவ்வளவு பெரிய மலைக்கோட்டை மன்னனின் மகனாக இருந்தாலும் சரி, அவர்கள் எல்லாம் ஊழல்வாதிகள், நமது எதிரி நாடான சீனாவில் உள்ள நிறுவனங்களுடன் வியாபாரம் செய்பவர்கள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடிப்பவர்களின் குடும்பம், அவர்கள் கொள்ளையடித்தது போதாது என்று அவர்களின் மகனை வேட்பளராக நிறுத்தியுள்ளார்கள்.

    மற்றவர்கள் சம்பாதிக்க வந்தவர்கள், ஊழல்வாதிகள், மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிப்பவர்கள். மக்களிடம் கொள்ளையடித்த அந்த பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்கிறார்கள். அவர்கள் சீன நாட்டு நிறுவனங்களிடம் வியாபாரம் செய்கிறார்கள். அவர்கள் எல்லாம் துரோகிகள். அவர்களுக்கு நீங்கள் வாக்களிக்க கூடாது.

    மக்களுக்கு நல்லது செய்ய நினைப்பர்களுக்கு தான் நீங்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில் நீங்கள் அனைவரும் தாமரை சின்னத்துக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று பாரிவேந்தர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.
    • பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் தேனூர், அடைக்கம்பட்டியில் வாக்கு சேகரித்தார்.

    திருச்சி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பெரம்பலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் தேனூர் கிராமத்தில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த தேர்தலில் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்தீர்கள். நான் பாராளுமன்றத்தில் பேசியது மற்றும் பிரதமரை சந்தித்தது தொடர்பாக ஒரு புத்தகம் உங்களுக்கு வழங்கியுள்ளேன். மத்திய அரசு எவ்வளவு பணம் கொடுத்தது, எதற்காக கொடுத்தது என்பதையும் இதில் விளக்கியுள்ளேன்.

    இதுபோன்ற புத்தகம் போடுவதற்கு துணிச்சல் வேண்டும். நான் ஏழைகளுக்காக உதவ வந்த எம்.பி. எனக்கு வழங்கப்பட்ட 17 கோடி ரூபாய் பணத்தில் 42 வகுப்பறைகள், நியாயவிலைக் கடைகள், சமூக நலக் கூடங்கள் மற்றும் கழிவறைகள் கட்டிக்கொடுத்துள்ளேன்.

    கடந்த முறை உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி 118 கோடி ரூபாய் செலவில் 1,200 ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளேன். இது இம்முறையும் தொடரும்.

    இந்த முறை 1,500 ஏழைக் குடும்பங்களை தேர்ந்தெடுத்து உயர் மருத்துவம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன்.

    வரும் தேர்தலில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஊழலற்ற ஆட்சி நடந்து வருகிறது. ரெயில் பாதை அமைக்கும் முயற்சியில் பாதியளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகள் அனைத்தும் ஊழல் கட்சிகள்தான். அவர்கள் லஞ்சம் வாங்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்வதில்லை.

    நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கப்படும் எனக்கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அதை செய்யவில்லை. நீட் என சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி உள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு கழித்து கொடுக்கின்றனர் என தெரிவித்தார்.

    இதேபோல், அடைக்கம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாரிவேந்தர் பேசியதாவது:

    ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு வீட்டு வரி, மின்சார வரி, நில வரி, பால் விலை ஆகியவற்றை உயர்த்தி விட்டது. இதனால் விலைவாசியும் உயர்ந்து விட்டது. எனவே நல்லவர்கள் யார் என தேர்வு செய்து வாக்களிக்க வேண்டுகிறேன்.

    தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் அமைச்சர்கள் என உலகமெல்லாம் பேசுகிறது. தி.மு.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் காலம் முழுவதும் கஷ்டத்தில் இருக்க வேண்டியதுதான். 1,000 ரூபாய் உரிமைத்தொகையை பாதி பெண்களுக்கு வழங்கவில்லை.

    நீட் தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது என்பதால் தி.மு.க.வால் ஒன்றும் செய்யமுடியாது.

    இங்கு நான்கு வழிச்சாலை அமைக்கச் சொல்லி கேட்டு வருகிறீர்கள். ஆட்சிக்கு வந்ததும் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கிறேன்.

    நேரு மகனுக்கு வாக்களித்து மற்றொரு ராமஜெயத்தை உருவாக்கி விடாதீர்கள். நாடெல்லாம் எனது, மக்கள் எல்லாம் எனது அடிமைகள் என சென்னையில் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். சூரியன் எப்படி பகலில் சுட்டெரிக்கிறதோ, ரத்தத்தை உறிஞ்சுகிறதோ, அதுபோல் சூரியனுக்கு வாக்களித்தால் உங்கள் ரத்தம் உறிஞ்சப்படும்.

    எனவே கல்விக்கு தெய்வமான சரஸ்வதி தேவி அமர்ந்துள்ள தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    • வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன் - முதல்வர் ஸ்டாலின்
    • நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது

    கோவை அவிநாசியில், நீலகிரி திமுக வேட்பாளர் ஆ.ராசா மற்றும் திருப்பூர் தொகுதி சி.பி.ஐ வேட்பாளர் சுப்பராயனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது பேசிய அவர், "வந்தாரை வாழவைக்கும் திருப்பூருக்கு வந்திருக்கிறேன். மலைகளின் அரசியாகவும், நீர் வீழ்ச்சியின் எழுச்சியாகவும். மக்கள் மனங்களில் மகிழ்ச்சியாகவும் உள்ள இடத்திற்கு வந்துள்ளேன்.

    நேற்று நடந்த ராகுல் காந்தியின் கூட்டம் பாகுபலி படம் போல பிரமாண்டமாக இருந்தது. ஒரே ஒரு கூட்டம் டோட்டல் பாஜகவும் குளோஸ். ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகையே பிரதமர் மோடியின் மொத்த பிரசார பயணத்தையும் காலி செய்துவிட்டது.

    தமிழ்நாட்டு மக்களை உண்மையான அன்பால் மட்டுமே ஆள முடியும் என்பதை ராகுல் காந்தி நிரூபித்துவிட்டார். ராகுல் எந்த அளவுக்கு தமிழ்நாட்டை மதிக்கிறார். என்பது அவரின் பேச்சின் மூலம் தெரிந்திருக்கும்.

    மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தார் என்றால், முதலில் இட ஒதுக்கீட்டைதான் ரத்து செய்வார். ஏனென்றால் சமூகநீதி என்றாலே பாஜகவுக்கு அலர்ஜி.

    உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா விளங்க காரணம், இந்திய அரசியலமைப்பு சட்டம். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், புரட்சியாளர் அம்பேத்கர் உருவாக்கிய அந்த அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றிவிடுவார்.

    திருப்பூரில் ஜி.எஸ்.டி குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணை, பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதுதான் பாஜக மக்களை மதிக்கும் லட்சணம். இதுதான் பாஜக பெண்களுக்கு கொடுக்கிற மதிப்பு. மக்களை மதிக்காமல் அராஜகம் செய்கிற பாஜகவினர் திருப்பூரை மணிப்பூராக்கிவிடுவார்கள். மோடியும், பாஜகவும் வீட்டுக்கும் கேடு; நாட்டுக்கும் கேடு.

    கலவரம் செய்வது பாஜகவின் DNAவில் ஊறிப் போன ஒன்று. அமைதியான இடத்தில்தான் தொழில் வளரும், தொழில் வளர்ச்சி இருக்கும், நிறுவனங்களை நடத்த முடியும். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும்.. நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது" என்று தெரிவித்தார்.

    மோடி ஆட்சியில் பத்திரிக்கையாளர்களும், ஊடக நிறுவனங்களும் நிம்மதியாக செயல்பட முடியவில்லை. பத்திரிக்கையாளர்கள் படுகொலையை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது. மோடி ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டதன் விளைவுதான், ஊடக சுதந்திரத்தில் 161 இடத்தில் இந்தியா இருக்கிறது. நமது பழம்பெரும் ஜனநாயகத்திற்கு மோடி ஏற்படுத்திய அவமானம் இது

    பன்னீர் செல்வத்தை தர்ம யுத்தம் நடத்த வைத்தது, பழனிசாமியை முதலமைச்சராக கொண்டுவந்தது, இரு துருவங்களாக இருந்த பன்னீரையும், பழனிசாமியையும் சேர்த்தது, தினகரனை கைது செய்து தங்களின் அடிமையாக மாற்றியது, அரசியலுக்குள் சசிகலாவை வரவிடாமல் தடுத்தது, தற்போது பன்னீரையும், தினகரனையும் மிரட்டி தேர்தலில் நிற்க வைத்திருப்பதும் பாஜகதான். இப்படி டிவி சீரியல்களில் வருவதுபோல், திடீர் திடீர் என காட்சிகளை மாற்றி சதி நாடகம் நடத்துகிறது பாஜக" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

    • தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறப் போகிறது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
    • கேரளாவில் இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளை பிரித்துக் கொள்ளும்.

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களை எம்.பி.யுமான ப.சிதம்பரம் கொல்கத்தாவில் இன்று பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இந்து மதத்திற்கோ அல்லது இந்துக்களுக்கோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. மேலும் மோடியை இந்துக்களின் பாதுகாவலர் என்று முன்னிறுத்துவதற்காக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளையும் இந்து எதிர்ப்பு என்று சாயம் பூசுவது பா.ஜனதாவின் உத்தி.

    இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி முக்கியமானவர். மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தனது கோட்டையை தக்கவைத்துக் கொள்ளும் திறன் அவரிடம் உள்ளது. இது இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும்.

    அனைத்து மாநிலங்கள் குறித்து என்னால் பேச முடியாது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறப்போகிறது என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். கேரளாவில் இடதுசாரி கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி 20 தொகுதிகளை பிரித்துக் கொள்ளும். பா.ஜனதாவுக்கு ஒரு இடத்தைக்கூட விட்டு வைக்காது. கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் பிரபலமாக உள்ளது. 2019-ஐ காட்டிலும் காங்கிரஸ் அதிக இடங்களை பெறும்.

    கச்சத்தீவு பிரச்சனை முடிந்தது. 50 வருடத்திற்கு முன்னதாக ஒப்பந்தம் ஏற்பட்டது. தேர்தல் வரும்போது, அதற்கான பா.ஜனதா கையில் எடுக்கிறது. கடந்த 10 வருடமாக இந்த பிரச்சினையை பிரதமர் மோடி ஏன் எழுப்பவில்லை?. சீனா இந்தியா எல்லையில் ஊடுருவிய உண்மை வெளிவந்த நிலையில், இந்த பிரச்சனை எழுப்பப்படுகிறது.

    இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

    • ஜூன் 4-ந்தேதிக்குப்பின் யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.
    • அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டுகள் நிறைவு செய்த கட்சி.

    சிதம்பரம் தொகுதி வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    2024-க்குப் பிறகு அதிமுக கட்சி இருக்காது என சிலர் கூறுகிறார்கள். வேறு எங்கு போகும்?. அதிமுக இங்கேதான் இருக்கும். ஜூன் 4-ந்தேதிக்குப்பின் யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 50 ஆண்டுகள் நிறைவு செய்த கட்சி.

    மதுரையில் பிரமாண்டமாக மாநில மாநாடு நடத்தினோம். அந்த மாநாடு இந்தியாவே திரும்பிப்பார்க்கும் மாநாடாக அமைந்தது. அது சில பேருக்கு புரியாமல்... வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகிவிட்டது போலிக்கிறது. அதனால் இப்படி மாறிமாறி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    அதிமுக-வை தோற்றுவித்தவர் எம்.ஜி.ஆர். அதை கட்டிக்காத்தவர் புரட்சித்தலைவி அம்மா. இருபெரும் தலைவர்களும் தெய்வமாக விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். தெய்வத்தின் அருள் ஆசியுடன் இருக்கக் கூடிய கட்சி அதிமுக என்பதை மறந்து கொண்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

    இது தெய்வ சக்தி உள்ள கட்சி. அழிக்க நினைத்தாலோ, முடக்க நினைத்தாலோ காற்றோடு காற்றாக கரைந்து போய் விடுவார்கள். இதுதான் வரலாறு. இந்த கட்சியை எத்தனையோ பேர் எதிர்த்தார்கள். அவர்கள் இருக்கும் இடம் தெரிகிறதா? எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.

    சிலர் பலத்தை தூக்கிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் யார் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். அதிமுக-வை நம்பியவர்கள் கெட்டுப்போன சரித்திரம் கிடையாது. அதிமுக-வை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போனதுதான் வரலாறு. அதிமுக-விடம் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திவிடுங்கள். அதிமுக உழைப்பை நம்பி இருக்கின்றன கட்சி.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தேர்தலுக்குப் பிறகு அதிமுக அழிந்து போகும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், ஜூன் 4-ந்தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக இருக்காது. உண்மையான தலைவர்கள் கைக்கு கட்சி வந்துவிடும் எனத் தெரிவித்திருந்தார். அதற்கு தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

    ×