search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள்: பாரிவேந்தர் சாடல்
    X

    தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் ஊழல்வாதிகள்: பாரிவேந்தர் சாடல்

    • தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது.
    • பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் தேனூர், அடைக்கம்பட்டியில் வாக்கு சேகரித்தார்.

    திருச்சி:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக அனைத்துக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், பெரம்பலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் பாரிவேந்தர் தேனூர் கிராமத்தில் தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த தேர்தலில் 6 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெற வைத்தீர்கள். நான் பாராளுமன்றத்தில் பேசியது மற்றும் பிரதமரை சந்தித்தது தொடர்பாக ஒரு புத்தகம் உங்களுக்கு வழங்கியுள்ளேன். மத்திய அரசு எவ்வளவு பணம் கொடுத்தது, எதற்காக கொடுத்தது என்பதையும் இதில் விளக்கியுள்ளேன்.

    இதுபோன்ற புத்தகம் போடுவதற்கு துணிச்சல் வேண்டும். நான் ஏழைகளுக்காக உதவ வந்த எம்.பி. எனக்கு வழங்கப்பட்ட 17 கோடி ரூபாய் பணத்தில் 42 வகுப்பறைகள், நியாயவிலைக் கடைகள், சமூக நலக் கூடங்கள் மற்றும் கழிவறைகள் கட்டிக்கொடுத்துள்ளேன்.

    கடந்த முறை உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி 118 கோடி ரூபாய் செலவில் 1,200 ஏழை மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பட்டப்படிப்பு படிக்க வைத்துள்ளேன். இது இம்முறையும் தொடரும்.

    இந்த முறை 1,500 ஏழைக் குடும்பங்களை தேர்ந்தெடுத்து உயர் மருத்துவம் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கிறேன்.

    வரும் தேர்தலில் நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஊழலற்ற ஆட்சி நடந்து வருகிறது. ரெயில் பாதை அமைக்கும் முயற்சியில் பாதியளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இருக்கும் திராவிட கட்சிகள் அனைத்தும் ஊழல் கட்சிகள்தான். அவர்கள் லஞ்சம் வாங்காமல் எந்த ஒரு காரியத்தையும் செய்வதில்லை.

    நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கப்படும் எனக்கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு அதை செய்யவில்லை. நீட் என சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி உள்ளனர். ஆட்சிக்கு வந்ததும் பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தனர். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டு கழித்து கொடுக்கின்றனர் என தெரிவித்தார்.

    இதேபோல், அடைக்கம்பட்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பாரிவேந்தர் பேசியதாவது:

    ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு வீட்டு வரி, மின்சார வரி, நில வரி, பால் விலை ஆகியவற்றை உயர்த்தி விட்டது. இதனால் விலைவாசியும் உயர்ந்து விட்டது. எனவே நல்லவர்கள் யார் என தேர்வு செய்து வாக்களிக்க வேண்டுகிறேன்.

    தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஊழல் அமைச்சர்கள் என உலகமெல்லாம் பேசுகிறது. தி.மு.க.வுக்கு வாக்களித்தால் நீங்கள் காலம் முழுவதும் கஷ்டத்தில் இருக்க வேண்டியதுதான். 1,000 ரூபாய் உரிமைத்தொகையை பாதி பெண்களுக்கு வழங்கவில்லை.

    நீட் தேர்வு குறித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது என்பதால் தி.மு.க.வால் ஒன்றும் செய்யமுடியாது.

    இங்கு நான்கு வழிச்சாலை அமைக்கச் சொல்லி கேட்டு வருகிறீர்கள். ஆட்சிக்கு வந்ததும் செய்து முடிக்க நடவடிக்கை எடுக்கிறேன்.

    நேரு மகனுக்கு வாக்களித்து மற்றொரு ராமஜெயத்தை உருவாக்கி விடாதீர்கள். நாடெல்லாம் எனது, மக்கள் எல்லாம் எனது அடிமைகள் என சென்னையில் மு.க.ஸ்டாலின் நினைக்கிறார். சூரியன் எப்படி பகலில் சுட்டெரிக்கிறதோ, ரத்தத்தை உறிஞ்சுகிறதோ, அதுபோல் சூரியனுக்கு வாக்களித்தால் உங்கள் ரத்தம் உறிஞ்சப்படும்.

    எனவே கல்விக்கு தெய்வமான சரஸ்வதி தேவி அமர்ந்துள்ள தாமரை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

    Next Story
    ×