search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தமிழை, உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டம்-  பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு
    X

    தமிழை, உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டம்- பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

    • நாடு முழுவதும் அனைத்து துறை மக்களிடமும் பா.ஜ.க. சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
    • ஒரே நாடு ஒரே தேர்தல் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு முக்கிய கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு வாக்குறுதி அளிக்கும் வகையில் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றன.

    அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை பாரதிய ஜனதா நியமித்தது.

    பா.ஜ.க. தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும், இணை ஒருங்கிணைப்பாளராக பியூஸ்கோயலும் பொறுப்பேற்றனர். மேலும் 24 உறுப்பினர்களும் இந்த குழுவில் இடம் பெற்றனர். 27 பேர் கொண்ட அந்த குழு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தயாரித்தது.

    நாடு முழுவதும் அனைத்து துறை மக்களிடமும் பா.ஜ.க. சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டன. சுமார் 4 லட்சம் பேர் தங்களது கருத்துக்களை பரிந்துரையாக அளித்து இருந்தனர். அவற்றை எல்லாம் ஆய்வு செய்து பாரதிய ஜனதாவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டது.

    பல்வேறு கட்ட ஆய்வுக்கு பிறகு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அம்பேத்காரின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட பா.ஜ.க. மேலிட தலைவர்கள் முடிவு செய்தனர். இதற்கான விழா டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் அனைவரும் இதில் பங்கேற்றனர்.

    முதலில் பா.ஜ.க. தேசிய தலைவர் நட்டா தேர்தல் அறிக்கை தொடர்பாக விளக்கி பேசினார். அப்போது அவர் சமுதாய மேம்பாட்டுக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் பா.ஜ.க. தன்னை அர்ப்பணித்து இருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக வீடியோ காட்சியும் வெளியிடப்பட்டது.

    இதையடுத்து பிரதமர் மோடி பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை வெளி யிட்டார். அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

    * ஒரே நாடு ஒரே தேர்தல் முறை விரைவில் அமல்படுத்தப்படும்.

    * நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.


    * மேலும் 5 ஆண்டுகளுக்கு ரேஷன் கடைகளில் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்.

    * 2025-ம் ஆண்டு பழங்குடியின மக்களின் பெருமைமிகு ஆண்டாக கடைபிடிக்கப்படும்.

    * 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

    * கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி பேர் வறுமையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.

    * வேலை வாய்ப்பு முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

    * வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் முத்ரா கடன் ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.

    * ஏழைகளுக்கு ஊட்டச் சத்து கிடைப்பது உறுதிப்படுத்தப்படும்.

    * நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் கொண்டு வந்து அமல்படுத்தப்படும்.

    * ஏழைகளுக்கு சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் சிலிண்டர் கொடுக்கும் திட்டம் மேலும் நீட்டிக்கப்படும்.

    * கிராம மக்களின் நலனுக்காக குழாய்கள் மூலம் சமையல் எரிவாயு வினியோகம் செய்யும் திட்டம் தீவிரப்படுத்தப்படும்.

    * பெண்கள், இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    * கிராமத்து பெண்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு பல திட்டங்கள் முன்னெடுக்கப்படும். அதன் ஒரு பகுதியாக பெண்களுக்கு ஒரு ரூபாயில் ஒரு நாப்கின் வழங்கும் திட்டம் கொண்டு வரப்படும்.

    * திருநங்கைகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வரப்படும்.

    * பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய பொருளாதார கொள்கை திட்டம் வகுக்கப்படும்.

    * உலகின் சக்தி மிக்க பொருளாதார நாடுகளில் 3-வது நாடு என்ற மிகப்பெரிய பொருளாதார அந்தஸ்தை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    * பெண்களுக்கு கருப்பை புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டம் வகுக்கப்படும்.

    * சாலையோரம் வசிப்பவர்களுக்கு மிகவும் குறைந்த வாடகையில் தங்குவதற்கு அரசே கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கும்.

    * மக்கள் மருந்தகங்களில் மருந்து விலை 80 சதவீத தள்ளுபடி விலையில் வழங்கப்படும்.

    * புல்லட் ரெயில் திட்டம் நாடு முழுவதும் கொண்டு வரப்படும்.

    * நாடு முழுவதும் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும்.

    * ஸ்டாட்அப் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    * உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வகையில் தனி திட்டம் வகுக்கப்படும்.

    * தமிழுக்கு சேவை செய்யும் வகையில் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்.

    இவ்வாறு பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×