search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேட்பாளருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தபோது விபரீதம்:  கூரை வீடு எரிந்து நாசம்
    X

    வேட்பாளருக்கு பட்டாசு வெடித்து வரவேற்பு அளித்தபோது விபரீதம்: கூரை வீடு எரிந்து நாசம்

    • பனங்காட்டு தெருவில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிடுகிறார். இவர் நேற்று இரவு சீர்காழி நகரத்தில் உள்ள 24 வார்டுகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    ஒவ்வொரு வார்டு பகுதியிலும் அவரை வரவேற்கும் விதமாக தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பனங்காட்டு தெருவில் தி.மு.க. சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பொழுது வெடிக்கப்பட்ட பட்டாசிலிருந்து சிதறிய தீப்பொறி அருகில் இருந்த அய்யாதுரை என்பவரது வீட்டின் கூரையில் விழுந்துள்ளது.

    இதை யாரும் கவனிக்காத நிலையில் வேட்பாளரும் உடன் வந்தவர்களும் அங்கிருந்து வேறு பகுதிக்கு வாக்கு சேகரிக்க சென்றனர். சில நிமிடங்களில் அய்யாதுரையின் வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சீர்காழி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததுடன் துரிதமாக செயல்பட்டு வீட்டின் மீது தண்ணீரை ஊற்றியும் கூரையை பிரித்து அப்புறப்படுத்தியும் தீயை அணைத்தனர்.

    இதனால் வீட்டிலிருந்த பொருட்கள் தப்பியது. அதேநேரம் தீயை அணைப்பதற்காக வந்த தீயணைப்பு வாகனம் பிரசாரக் கூட்டத்தில் சிக்கி உரிய நேரத்தில் செல்ல முடியாமலும், குறுகிய சாலை என்பதால் தீ பிடித்த வீட்டிற்கு எளிதில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், மக்கள் விரைந்து செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×