என் மலர்
உலகம்
- இந்த ஆண்டும் யாத்ரீகர்கள் வருகையால் மெக்கா நகரம் நிரம்பி வழிகிறது.
- மெக்காவில் கடும் வெப்ப அலை வீசி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக கூறியுள்ளார்.
மெக்கா:
முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.
ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டும் யாத்ரீகர்கள் வருகையால் மெக்கா நகரம் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டவர்களில் 645 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களில் 323 பேர் எகிப்தியர்கள், 60 பேர் ஜோர்டானியர்கள், 68 பேர் இந்தியர்கள் என்று சவுதி நாட்டு தூதர் தெரிவித்துள்ளார். மெக்காவில் கடும் வெப்ப அலை வீசி வருவதால் உயிரிழப்புகள் அதிகரிப்பதாக கூறியுள்ளார்.
- ஹமாஸை அழிக்கும் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.
- ஹமாஸ் மீண்டும் அச்சுறுத்தலாக உருவாகலாம்.
ஹமாஸ் அமைப்பை அகற்றுவது செய்ய முடியாத காரியம் என்று இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த செய்தி தொடர்பாளர் தெரிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஹமாஸ் அமைப்பை அழிக்கும் முடிவில் உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் சார்பில் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஹமாஸ் அமைப்பை முழுமையாக ஒழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. இதன் விளைவாக பேரழிவு ஏற்பட்டுள்ள போதிலும், ஹமாஸை அழிக்கும் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை.
ஹமாஸ் உடனான போர் குறித்து பேசிய இஸ்ரேல் மூத்த செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி, "ஹமாஸ் அமைப்பை அழிப்பது, மக்களின் கண்களில் மண் வீசுவதற்கு சமம். இறுதியில் சரியான மாற்று வழியை வழங்காத பட்சத்தில், ஹமாஸ் மீண்டும் அச்சுறுத்தலாக உருவாகலாம். ஹமாஸ் ஒரு சித்தாந்தம். அதனை ஒழிக்கவே முடியாது," என்று தெரிவித்தார்.
இவரது கருத்துக்கள் பெரும் பேசுபொருளாக மாறியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹமாஸ்-ஐ முழுமையாக ஒழித்துக் கட்டும் வரை எங்களின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இருக்காது என்று தெரிவித்தார்.
"பிரதமர் நேதன்யாகு தலைமையில் கூடிய அரசியல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான மந்திரிசபை கூட்டத்தில் ஹமாஸ் ராணுவம் மற்றும் நிர்வாக அமைப்பு கொண்ட கட்டமைப்பை முழுமையாக ஒழித்துக் கட்டுவது தான் இந்த போரின் மிகமுக்கிய குறிக்கோள்களில் ஒன்று. இஸ்ரேலிய பாதுகாப்பு படை இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கும்," என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
மேலும், ஹமாஸ் அமைப்பை சித்தாந்த முறையில்தான் ஹகாரி குறிப்பிட்டார், அவர் தெரிவித்த கருத்துக்கள் தெளிவாகவே இருந்தது என்று இஸ்ரேல் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- பின்லாந்து எல்லையில் ராணுவத் தளம் அமைத்து வீரர்களை குவித்து வைத்திருந்தது.
- தற்போது உக்ரைன் மீது தாக்குதலை அதிகரித்துள்ளதால் பெரும்பாலான துருப்புகளை திருப்பியுள்ளது.
அண்டை நாடான உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இன்னும் சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் நேட்டோ படையில் சேர விருப்பம் தெரிவித்ததுதான். ஒருவேளை நேட்டோவில் இணைந்தால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது படைகளை நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளில் நிலைநிறுத்த முடியும்.
அப்படி செய்தால் ரஷியா நாட்டிற்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என புதின் கருதினார். இதனால் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து இரண்டு நாட்டிற்கும் இடையில் பாதுகாப்பு பகுதியாக வைத்துக் கொள்வதற்கான போர் தொடுத்ததாக கூறினார்.
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா, பின்லாந்து எல்லையிலும் ராணுவ தளங்களை அமைத்து வீரர்களை குவித்திருந்தது. இதனால் தங்கள் மீதும் போர் தொடக்க வாய்ப்புள்ளதாக மற்றொரு அண்டை நாடான பின்லாந்து கருதியது.
இதனால் பின்லாந்து கடந்த 2024-ம் ஏப்ரல் மாதம் நேட்டோவில் இணைய விண்ணப்பித்தது. இதன் காரணமாக பின்லாந்து எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்தது. ஆயுதங்களையும் பின்லாந்து எல்லையில் மறைத்து வைத்திருந்தது.
இதனால் ஒரு பதற்றமான சூழ்நிலைதான் நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது பின்லாந்து எல்லையில் குவிக்கப்பட்டிருந்த துருப்புகளில் 80 சதவீதத்தை உக்ரைன் நோக்கி நகர்த்தியுள்ளதாக பின்லாந்து புலானாய்வுத்துறை கூறியதாக அங்குள்ள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் உபகரணங்களையும் நகர்த்தியுள்ளது தெரியவந்துள்ளது.
உக்ரைன் மீது தற்போது முழு வீச்சாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வீரர்கள் தேவை என்பதால் நகர்த்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 2023-ல் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்தது. ரஷியாவின் விமானங்கள் அடிக்கடி தங்களது வான் எல்லையில் தென்படுவதாக பின்னலாந்து அடிக்கடி குற்றம்சாட்டுவது குறிப்பிடத்தக்கது.
- 24 வருடத்திற்குப் பிறகு ரஷிய அதிபர் புதின் வடகொரியா வந்துள்ளார்.
- ரஷிய அதிபர் புதினை கிம் ஜாங் உன் கட்டித் தழுவி வரவேற்றார்.
ரஷிய அதிபர் புதின் சுமார் 24 வருடத்திற்குப் பிறகு வடகொரியா சென்றுள்ளார். உக்ரைனுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷியாவுக்கு எதிராக கடும் பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன. இதனால் வடகொரியாவின் உதவி ரஷியாவுக்கு தேவைப்படுகிறது. இதனால் வடகொரியாவுடனான நட்பை மேலும் வலுப்படுத்தி வருகிறது.
கடந்த வருடம் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உடன் ரஷியா சென்றிருந்தார். அப்போது ஆயுத கிடங்குகள், ஆயுத தொழிற்சாலைகள் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டார்.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் இரண்டு நாட்கள் பயணமாக வடகொரியா வந்துள்ளார். அவரை சிவப்பு கம்பளம் மரியாதையுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கட்டித்தழுவி வரவேற்றார்.
இரு நாடுகளுக்கும் இடையில் கூட்டு ஒப்பந்தம் ஏற்பட்டதாகவும், அந்த ஒப்பந்தத்தில் புதின் மற்றும் கிம் ஜாங் உன் கையெழுத்திட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் மற்ற நாடுகள் ரஷியா அல்லது வடகொரியா மீது தாக்குதல் நடத்தினால் பரஸ்பர உதவிகள் செய்வது என உறுதி அளிக்கப்பட்டுள்ளது என புதின் தெரிவித்துள்ளார்.
ஆனால் எந்த மாதிரியான உதவி என புதின் குறிப்பிடவில்லை. ஆனால் விரிவான மூலோபாய கூட்டாண்மை உதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தையின்போது பாதுகாப்பு மற்றும் சர்வதேச பிரச்சனை ஆகியவை பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தது என புதின் கூறியதாக ரஷியா மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ராணுவ- தொழில்நுட்ப ஒத்துழைப்பு இந்த ஒப்பந்தத்தின் கீழ் வராது என புதின் புறந்தள்ளிவிடவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
இருவருடைய பேச்சுவார்த்தை குறித்து கிம் ஜாங் உன் கூறுகையில் "ஒப்பந்தம் அமைதி மற்றும் பாதுகாப்பு சார்புடையது. இது ஒரு புதிய பன்முனை உலகத்தை உருவாக்குவதற்கான உந்து சக்தியாக மாறும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரம், மருத்து கல்வி, அறிவியல் தொடர்பான ஒத்துழைப்பு தொடர்பாகவும் ஒப்பந்தம் கையெழுத்ததானதாக ரஷியா மீடியாக்கள் தெரிவித்துள்ளது.
- டெஸ்லா நிறுவனத்தின் மின்சார வாகன உற்பத்தியில் எலான் மஸ்க் முக்கிய பங்காற்றியுள்ளார்.
- இதற்காக அவர் அதிக சம்பளத்தை எதிர்பார்ப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
நியூயார்க்:
உலக பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்சின் சி.இ.ஓ.வும், எக்ஸ் தள உரிமையாளருமான இவரது தொலைநோக்கு பார்வை தொழில்நுட்ப துறையில் மாற்றங்களை விதைக்கிறது. ஏஐ, ரோபோடிக்ஸ், சிப் மேக்கிங் போன்றவற்றில் பல்வேறு ஆய்வுகளை செய்துவருகிறார்.
எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான டெஸ்லா நிறுவனத்தின் முன்னேற்றத்திலும் முக்கிய பங்காற்றியுள்ளார். இதற்காக அவர் அதிக சம்பளத்தை எதிர்பார்ப்பதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர். டெஸ்லா நிறுவன பங்குதாரர்களும் இதற்கு உடன்படவில்லை. இதுதொடர்பான வழக்கு டெலோவேர் கோர்ட்டில் நடந்து வருகிறது.
இந்நிலையில், டெஸ்லா பங்குதாரர்களின் கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில் எலான் மஸ்கிற்கு 56 பில்லியன் டாலர் சம்பளம் அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மஸ்க் ஆனந்தத்தில் திளைத்துள்ளார்.
இதில் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வருவாயை விட இவரது சம்பளம் அதிகம். 2023-24-ம் நிதியாண்டில் டாடா மோட்டார்ஸின் வருவாய் 52.44 பில்லியன் டாலர் ஆகும்.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆண்டு வருவாயை விட அதிக சம்பளம் பெறுவதால் எலான் மஸ்க் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
- இந்தியா, சீனாவில் அதிக அளவில் உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளது.
- இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மட்டும் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர்.
காற்று மாசுப்பாட்டால் 2021-ம் ஆண்டில் 81 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இதில் இந்தியா, சீனாவில் அதிக அளவில் உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளது. சுகாதார விளைவுகள் நிறுவனம் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் அமைப்பு சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெற்கு ஆசியாவில் இறப்புக்கான முக்கிய காரணமாக காற்று மாசுபாடு உள்ளதாகவும் அதைத் தொடர்ந்து இரத்தம் அழுத்தம், உணவு சரியாக சாப்பிடாமல் இருப்பது மற்றும் புகையிழை ஆகியவையும் உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கையின் படி, இந்தியாவில் 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மட்டும் ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தப்படியாக நைஜீரியாவில் 1,14,100, பாகிஸ்தானில் 68,100, எத்தியோப்பியா 31,100, வங்காளதேசம் 19,100 குழந்தைகளும் காற்று மாசுபாட்டிற்கு உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக இந்தியாவில் 21 லட்சம் மற்றும் சீனாவில் 23 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். முந்தைய ஆண்டை காட்டிலும் 2021-ம் ஆண்டில் அதிக இறப்புகள் பதிவாகி உள்ளது. 100 கோடிக்கு அதிகமான மக்கள் தொகையை கொண்ட இந்தியா, சீனாவில் மட்டும் இறப்பு விகிதம் உலக அளவில் 54 சதவீகிதமாக உள்ளது.

இதை தவிர மற்ற நாடுகளை பொறுத்தவரையில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பாகிஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 2 லட்சத்து 56 ஆயிரம் பேர், வங்காளதேசம் 2 லட்சத்து 36 ஆயிரத்து 300 பேர், மியான்மர் 1 லட்சத்து ஆயிரத்து 600 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு ஆசியாவை பொறுத்தவரையில் இந்தோனேசியாவில் அதிகபட்சமாக 2 லட்சத்து 21 ஆயிரத்து 600 பேரும் வியட்நாம், பிலிப்பைன்ஸ் ஆகியவை முறையே 99,700, மற்றும் 98,209 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவில் நைஜீரியா (2,06,700) மற்றும் எகிப்து (1,16,500) பேர் உயிரிழந்துள்ளனர்.
- நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது உடமை சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.
- கராச்சியில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில பகுதிகளில் இன்று பிற்பகலில் 4.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இருப்பினும், நிலநடுக்கத்தால் உயிரிழப்போ அல்லது உடமை சேதமோ ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.
நிலநடுக்கம் குறித்து தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, "ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியில் 98 கிலோமீட்டர் ஆழத்தில் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, பெஷாவர், ஸ்வாட், மலகாண்ட், வடக்கு வஜிரிஸ்தான், பராச்சினார், லோயர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியா மற்றும் யூரேசிய டெக்டோனிக் தகடுகளின் எல்லையில் பாகிஸ்தான் அமைந்துள்ளதால், பாகிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில், கராச்சியில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேலும், பாகிஸ்தானில் கடந்த 2005ம் ஆண்டில் 7.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 74,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
- தற்போது தனது மகளுக்கு ஒரு சகோதரி வேண்டும் என்ற ஆசையில் 11-வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார்.
- தனது மகன்கள் ஒவ்வொருவரும் வருங்காலத்தில் என்னவாக வர வேண்டும் என்ற கனவுகளை அவர்களே தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த 31 வயதான பெண் ஒருவர், ஒரு மகளை பெறுவதற்கான ஆசையில் 9 மகன்களுக்கு தாயாகி உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது கதையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
யலன்சியா ரொசாரியோ என்ற பெயர் கொண்ட அந்த பெண்ணுக்கு ஒரு மகள் வேண்டும் என ஆசைப்பட்டார். ஆனால் அவருக்கு அடுத்தடுத்து ஆண் குழந்தைகளே பிறந்தன. ஆனால் மகள் வேண்டும் என்ற ஆசையில் அடுத்தடுத்து 9 முறை கர்ப்பமான அவருக்கு ஒவ்வொரு முறையும் ஆண் குழந்தைகளே பிறந்தது.
இந்நிலையில் 10-வது முறையாக அவர் கர்ப்பமானார். பிரசவத்தின் போது அவர் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார். அதில் அவரது ஆசைப்படியே ரொசாரியோவுக்கு அழகான, ஆரோக்கியமான பெண் குழந்தை பிறந்தது. அதன்பிறகு அவரது ஆசை தீரவில்லை. தற்போது தனது மகளுக்கு ஒரு சகோதரி வேண்டும் என்ற ஆசையில் 11-வது முறையாக கர்ப்பமாகி இருக்கிறார். அதோடு அவர் தனது மகன்கள் ஒவ்வொருவரும் வருங்காலத்தில் என்னவாக வர வேண்டும் என்ற கனவுகளை அவர்களே தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- ஜிங்ஷனின் குடும்பத்தினர் லீயை தங்களது மருமகளாக குறிப்பிட்டு அவருக்கு திருமண சடங்கு நடத்தி உள்ளனர்.
- புகைப்படங்கள், வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.
மலேசியாவை சேர்ந்த ஜிங்ஷன் என்ற வாலிபர் அதே பகுதியை சேர்ந்த லீ என்ற பெண்ணை 3 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்துள்ளார். ஜிங்ஷன் கடந்த 2-ந்தேதி தனது காதலியுடன் பாங்காங்கில் தனது திருமண நாளை கொண்டாடவும், அந்த பயணத்தின் போது காதலியை திருமணம் செய்து கொள்ளவும் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மே மாதம் 24-ந்தேதி வடமேற்கு மலேசியாவில் பேராக் பகுதியில் நடந்த ஒரு சாலை விபத்தில் ஜிங்ஷன்- லீ சென்ற கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் இருவரும் பரிதாபமாக இறந்தனர். இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருந்த நிலையில், விபத்தில் அவர்கள் மரணம் அடைந்தது இருவரின் குடும்பத்தினரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விபத்தில் இறந்த ஜிங்ஷன்- லீயின் குடும்பத்தினர் ஒன்றுகூடி, லீ- ஜிங்ஷன் இருவரையும் மறுமையில் கணவன்-மனைவியாக ஒன்றிணைக்கும் வகையில் பேய் திருமணம் என்ற சடங்கை நடத்தி உள்ளனர். பேய் திருமணம் என்பது திருமணம் ஆகாத ஆவிகளை இணைக்கும் ஒரு சடங்கு ஆகும். இதன்படி ஒரு மண்டபத்தில் இறந்த தம்பதியின் புகைப்படத்தை வைத்திருந்தனர். அதில் ஜிங்ஷனின் குடும்பத்தினர் லீயை தங்களது மருமகளாக குறிப்பிட்டு அவருக்கு திருமண சடங்கு நடத்தி உள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோ வலைதளங்களில் பரவி வருகிறது.
- குவைத் நாட்டில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள்.
- பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது.
குவைத்சிட்டி:
குவைத் நாட்டில் இந்தியர்கள் பலர் பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையே கடந்த 12-ந்தேதி அந்நாட்டின் தெற்கு அகமதி மாகாணத்தில் மங்கப் நகரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 46 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர்.
பலியான இந்தியர்களில் கேளராவை சேர்ந்த 23 பேர், தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேர், ஆந்திரா-உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தலா 3 பேர், ஒடிசாவைச் சேர்ந்த இருவர், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார், மேற்கு வங்காளம், பஞ்சாப், அரியானா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவர்.
தமிழ்நாட்டை சேர்ந்த வீராசாமி மாரியப்பன் (தூத்துக்குடி), சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி (கடலூர்), சிவசங்கர் கோவிந்தன் (சென்னை ராயபுரம்) முகமது ஷெரீப் (திண்டிவனம்), கருப்பணன் ராமு (ராமநாதபுரம்), ராஜூ எபநேசன் (திருச்சி) , ரிச்சர்ட் ராய் (பேராவூரணி) ஆகியோர் இறந்தனர்.
பலியான இந்தியர்களின் உடல்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவியை குவைத் அரசாங்கம் அறிவித்துள்ளது. பலியானவர்களின் குடும்பங்களுக்கு குவைத் அரசாங்கம் தலா 15 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 12.50 லட்சம்) இழப்பீடாக வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குவைத் மன்னர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் உத்தரவின் பேரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று அரபு டைம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
- சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது
- அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஈரானில் கடந்த 1979 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின் அந்நாட்டில் இஸ்லாமிய சட்டங்கள் அமல்படுத்தத்தப்பட்டு பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. இதை எதிர்த்து அங்கொன்றும் இங்கொன்றுமாக அவ்வப்போது எதிர்ப்புக்குரல் எழுந்து வந்தது. அப்படி அரசின் அடிப்படைவாதத்தை எதிரித்து குரல் கொடுத்துவந்தவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் பெண்கள் ஹிஜாப் அணிய நிர்பந்திக்கப்படுவதற்கு எதிராகவும் அந்நாட்டின் மரண தண்டனைக்கு எதிராகவும் போராடிவந்த பெண் பத்திரிகையாளரும் சமூக செயல்பாட்டாளருமான நர்கிஸ் முகமதி கடந்த 2021 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் உள்ள அவருக்கு கடந்த 2023 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது உலக அளவில் பேசுபொருளானது. பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை எதிர்த்து போராடி வருவதால் சிறையில் உள்ள அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது. எனவே ஈரான் அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில்தான் நர்கிஸ் முகமதி அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்யத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்த குற்றத்திற்காக 1 வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்நாட்டின் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்க மக்களைத் தூண்டியதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் 6 முறை அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு இதுவரை மொத்தமாக 16 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் நடந்த விசாரணையில் அவருக்கு 15 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்ட நிலையில் தற்போது மேலும் 1 வருடம் சிறை தண்டனை விதிக்கபட்டுள்ளது.
சமீப காலங்களாக பெண்களின் ஆடை விஷயத்தில் மிகவும் கடுமை காட்டி வரும் ஈரான் அரசு பொது இடங்களில் சிசிடிவி கண்கணிப்பு மூலமும் எந்நேரமும் தீவரமாக கண்காணித்து வருகிறது . இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் சிறையில் இருந்து நர்கிஸ் வெளியிட்ட வீடியோவில் பெண்களுக்கு எதிரான தீவிரமான போரை இரான் அரசு முன்னெடுத்து நடத்தி வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஹிஜாப் அணியாத காரணத்தால் இளம்பெண் போலீசாரால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் ஹிஜாபுக்கு எதிரான கிளர்ச்சி மிகப்பெரிய அளவில் வெடித்தது. இருப்பினும் போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குறையை பிரயோகப்படுத்தி ஈரான் அடிப்படைவாத அரசு கிளார்ச்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தது குறிப்பிடத்தத்க்கது.

- அமெரிக்காவில் இது நடந்திருந்ததால் அதிகமானவர்களின் ஆதரவை பெற்றிருக்கும் என்று கூறினார்.
- காதலை ஊக்கப்படுத்தியதற்காக பலரும் ஒனிசிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.
நெதர்லாந்து நாட்டில் ஒரு டிராம் வண்டி, அதிக பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. திடீரென ஒரு வாலிபர், முழங்காலிட்டபடி தனக்கு அருகில் நின்ற பெண்ணிடம் காதலை சொல்ல தயாரானார். இதை கவனித்த ஒரு வாலிபர் அதை செல்போனில் படம்பிடித்தார்.
மற்ற பயணிகள் செல்போனிலும், சிந்தனையிலும் மூழ்கியவர்களாக பயணித்துக் கொண்டிருக்க அந்த வாலிபர், இளம்பெண்ணிடம் காதலை பகிர்ந்தார். போனில் படம் பிடித்த வாலிபர் மட்டும் கைதட்டி ஆமோதித்தபடி "உங்களுக்கு காதல் பிடிக்கவில்லையா" என்று கேள்வியெழுப்ப, வேறு சில பயணிகளும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். இளம்பெண்ணும் புன்னகையுடன் காதலை ஏற்றார்.
இளம்ஜோடியின் காதலை படம்பிடித்த வாலிபர் டிராம்வண்டியில் இருந்து இறங்கியபடி, சுற்றி நடப்பதை கண்டுகொள்ளாமல் பயணித்த மக்களின் மனநிலை பற்றி வருத்தத்துடன் வலைத்தள பதிவு வெளியிட்டார். "அவர் அழகிய அமைப்பில் காதலை முன்மொழிந்தார் என்று நான் நம்புகிறேன். நிஜத்தில் முக்கியமானது நாம் பகிர்ந்து கொள்ளும் உண்மையான அன்பே. மற்றவர்கள் இதை வாழ்த்தவில்லை. முக்கியமற்றதாக கருதி அமைதியாக இருந்தார்கள். அமெரிக்காவில் இது நடந்திருந்ததால் அதிகமானவர்களின் ஆதரவை பெற்றிருக்கும்" என்று கூறினார்.
ஒனிஸி இன்ஸ்டாகிராம் என்ற பக்கத்தில் வெளியான இந்த வீடியோவை 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டனர். காதலை ஊக்கப்படுத்தியதற்காக பலரும் ஒனிசிக்கு வாழ்த்து தெரிவித்து கருத்து பதிவிட்டனர்.






