என் மலர்
உலகம்
பின்லாந்து எல்லையில் இருந்து 80 சதவீத துருப்புகளை உக்ரைனுக்கு நகர்த்திய ரஷியா
- பின்லாந்து எல்லையில் ராணுவத் தளம் அமைத்து வீரர்களை குவித்து வைத்திருந்தது.
- தற்போது உக்ரைன் மீது தாக்குதலை அதிகரித்துள்ளதால் பெரும்பாலான துருப்புகளை திருப்பியுள்ளது.
அண்டை நாடான உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. இன்னும் சண்டை நடைபெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உக்ரைன் நேட்டோ படையில் சேர விருப்பம் தெரிவித்ததுதான். ஒருவேளை நேட்டோவில் இணைந்தால் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது படைகளை நேட்டோ அமைப்பில் உள்ள நாடுகளில் நிலைநிறுத்த முடியும்.
அப்படி செய்தால் ரஷியா நாட்டிற்கு அது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என புதின் கருதினார். இதனால் ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடித்து இரண்டு நாட்டிற்கும் இடையில் பாதுகாப்பு பகுதியாக வைத்துக் கொள்வதற்கான போர் தொடுத்ததாக கூறினார்.
உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷியா, பின்லாந்து எல்லையிலும் ராணுவ தளங்களை அமைத்து வீரர்களை குவித்திருந்தது. இதனால் தங்கள் மீதும் போர் தொடக்க வாய்ப்புள்ளதாக மற்றொரு அண்டை நாடான பின்லாந்து கருதியது.
இதனால் பின்லாந்து கடந்த 2024-ம் ஏப்ரல் மாதம் நேட்டோவில் இணைய விண்ணப்பித்தது. இதன் காரணமாக பின்லாந்து எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்தது. ஆயுதங்களையும் பின்லாந்து எல்லையில் மறைத்து வைத்திருந்தது.
இதனால் ஒரு பதற்றமான சூழ்நிலைதான் நிலவி வந்தது. இந்த நிலையில் தற்போது பின்லாந்து எல்லையில் குவிக்கப்பட்டிருந்த துருப்புகளில் 80 சதவீதத்தை உக்ரைன் நோக்கி நகர்த்தியுள்ளதாக பின்லாந்து புலானாய்வுத்துறை கூறியதாக அங்குள்ள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் உபகரணங்களையும் நகர்த்தியுள்ளது தெரியவந்துள்ளது.
உக்ரைன் மீது தற்போது முழு வீச்சாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வீரர்கள் தேவை என்பதால் நகர்த்தியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதற்கிடையே கடந்த 2023-ல் பின்லாந்து நேட்டோ அமைப்பில் இணைந்தது. ரஷியாவின் விமானங்கள் அடிக்கடி தங்களது வான் எல்லையில் தென்படுவதாக பின்னலாந்து அடிக்கடி குற்றம்சாட்டுவது குறிப்பிடத்தக்கது.