என் மலர்
உலகம்
- வட கொரியா ரஷியாவுக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவித்தார்.
- ரஷியா, வட கொரியா இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளுக்கு பிறகு வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அதிபர் புதின் வருகையை ஒட்டி, வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் விமான நிலையத்திற்கு விரைந்தார்.
வட கொரிய தலைநகர் பியாங்காங் விமான நிலையத்தற்கு வந்த அதிபர் புதினை நேரடியாக சென்று வரவேற்ற கிம் ஜாங் உன், அதிபர் புதினுக்கு சிறப்பான வரவேற்பை அளித்தார். பயணத்திற்கு முன்பு ரஷிய தொலைகாட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், வட கொரியா ரஷியாவுக்கு ஆதரவாக உள்ளதாக தெரிவித்தார்.

இரண்டாம் உலக போருக்கு பின் உருவாக்கப்பட்ட வட கொரியாவுடன் ரஷியா நீண்ட காலமாக நட்புறவில் இருந்து வருகிறது. மேலும், 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததில் இருந்து, ரஷியா மற்றும் வட கொரியா இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது.
ரஷிய போருக்காக வட கொரியா சார்பில் ஆயுதங்கள் வழங்கப்பட்டன. இதற்கு அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்தன.
?? ?? Russian President Putin arrives in #Pyongyang to meet with #KimJongUn.
— Shen Shiwei 沈诗伟 (@shen_shiwei) June 19, 2024
Rea carpet rolled out for #Putin on arrival to #NorthKorea. The situation in Korean Peninsula and the Northeast Asia at large is changing.pic.twitter.com/62ZAbodk6c
- மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது.
- வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மெக்கா:
முஸ்லிம்களின் 5 கடமைகளில் ஒன்று சவூதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்வது ஆகும்.
ஆண்டுதோறும் வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கான முஸ்லிம்கள் மெக்கா, மதீனாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே இந்த ஆண்டின் ஹஜ் யாத்திரைக்காக வெளிநாடுகளில் இருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மெக்காவில் குவிந்துள்ளனர். இதனால் மெக்கா நகரம் யாத்ரீகர்களால் நிரம்பி வழிகிறது. வரும் நாட்களில் மேலும் பலர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்நிலையில், சவுதி அரேபியாவில் நிலவி வரும் கடும் வெப்ப அலையால் ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட 550 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் எகிப்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெப்பத்தால் பாதிக்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த திங்களன்று மெக்காவில் உள்ள கிராண்ட் மசூதியில் வெப்பநிலை 51.8 டிகிரி செல்சியஸை எட்டியதாக சவுதி தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- மக்கள் பிரதிநிதித்துவ சபையில் ஏற்கனவே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
- இன்று செனட் சபையில் திருமண சமத்துவ மசோதா நிறைவேற்றப்பட்டது.
தாய்லாந்து நாட்டின் செனட் சபையில் திருமண சமத்துவ மசோதா இன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு 130 பேர் ஆதரவாக வாக்களித்தனர். சிலர் வாக்களிக்காமல் வெளியேறினார். 4 பேர் எதிர்த்து வாக்களித்தனர். ஏற்கனவே, மக்கள் பிரதிநிதிகள் கொண்ட சபையில் கடந்த மார்ச் மாதம் இந்த மசோதா நிறைவேறியது.
இதன்மூலம் விரைவில் தாய்லாந்தில் தன்பாலின திருமணம் சட்டப்பூர்வமாக இருக்கிறது. இதன் மூலம் ஒரு ஆண் மற்றொரு ஆணையுயும், ஒரு பெண் மற்றொரு பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள முடியும்.
இந்த மசோதா செனட் கமிட்டி ஆய்வு செய்யவும். பின்னர் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். அதன்பின் மன்னரிடம் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின் சட்டமாக்கப்படும்.
இதன் மூலம் தாயலாந்து தன்பாலிய திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் முதல் தென்கிழக்கு ஆசிய நாடாகும்.
ஏற்கனவே தைவான் கடந்த 2019-ம் ஆண்டு தன்பாலிய திருமணத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளது.
நேபாளம் இதற்கான முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனால் விரிவான சட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தன்பாலினத்திரின் உரிமையை பாதுகாக்க அரசு சட்ட வரைவை ஏற்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
- இங்கிலாந்தில் ஜூலை மாதம் 4-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது.
- இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை சமீபத்தில் வெளியிட்டன.
லண்டன்:
இங்கிலாந்தில் ஜூலை மாதம் 4-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு கன்சர்வேட்டிவ் கட்சிக்கும், தொழிலாளர் கட்சிக்கும் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இரு கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை சமீபத்தில் வெளியிட்டன.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் பேசுகையில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் கன்சர்வேடிவ் கட்சியை ஆதரிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதை நான் மிகவும் வரவேற்கிறேன் என தெரிவித்தார் .
இதுதொடர்பாக ரிஷி சுனக் கூறுகையில், ஜான்சன் பிரசாரத்தின் மூலம் வீடியோக்கள் மற்றும் கடிதங்கள் மூலம் வேட்பாளர்களை ஆதரிக்கிறார். அது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எனக்குத் தெரியும்.
நிச்சயமாக, ஒவ்வொரு வாரமும் அவர் தனது கட்டுரையில் வழக்கை உருவாக்கி, தொழிற்கட்சி அரசாங்கம் என்ன என்பதை அனைவரும் புரிந்துகொள்வதை உறுதிசெய்கிறார்.
எல்லோரும் பழமைவாதத்திற்கு வாக்களிப்பது ஏன் முக்கியம், அவர் அதைச் செய்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என தெரிவித்தார்.
- உர்சுலா வொன் டென் லெயன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
- இத்தாலி பிரதமர் மெலோனியின் ஈசிஆர் உர்சுலாவிற்கு ஆதரவு கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் இந்த மாதத்தின் தொடக்கத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனின் முக்கியமான பதவிக்கு தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான பேச்சுவார்த்தை ஐரோப்பிய தலைவர்களிடம் நடைபெற்று வருகிறது.
தற்போது ஐரோப்பிய யூனியனின் தலைவராக இருக்கும் உர்சுலா வொன் டென் லெயன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருசெல்ஸில் நடைபெற்ற முதல்நாள் கூட்டத்தில் அதற்கான ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இதற்கான பேச்சுவார்த்தை ஒன்றிரண்டு வாரங்கள் எடுத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற ஐரோப்பிய யூனியன் தேர்தலில் உர்சுலாவின் ஐரோப்பியன் மக்கள் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. ஐரோப்பிய யூனியனில் உள்ள நாடுகளில் வலதுசாரி கட்சிகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. ஜெர்மனியின் ஏஃப்டி, இத்தாலியின் ஃஎப்டிஎல், பிரான்சின் ஆர்என் கட்சிகள் செயல்பாடுகள் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளன.
இத்தாலி பிரதமர் மெலோனியின் ஈசிஆர் உர்சுலாவிற்கு ஆதரவு கொடுக்கும் என முன்னதாகவே செய்திகள் வெளியானது.
போர்ச்சுக்கலின் ஆண்டனியோ கோஸ்டா ஐரோப்பிய கவுன்சில் தலைவர் பதவியை எதிர்பார்த்துள்ளார்.
மால்டாவின் ராபர்ட்டா மெட்சோலா ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் பதவியை எதிர்பார்த்துள்ளார்.
எஸ்டோனியாவின் கஜா கலலாஸ் வெளியறவுததுறை மற்றும் பாதுகாப்பு கொள்கையின் உயர் பிரதிநிதி பதவியை எதிர்பார்த்துள்ளார்.
- 10 முறை கிராமிய விருதை வென்றுள்ளார்.
- கடந்த மார்ச் மாதம் புதிய ஆல்பம் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மதுபோதையில் கார் ஓட்டியதாக பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் டிம்பர்லேக் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சஃப்போல்க் கவுன்ட்டி மாவட்ட அட்டார்னி அலுவலகம் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது.
டிம்பர்லேக் தி சோசியல் நெட்வொர்க் மற்றும் பிரண்ட்ஸ் வித் பெனிபிட்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார். பாடகர்களுக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய விருதான கிராமிய விருதுகளை 10 முறை வென்றுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தனது புதிய ஆல்பமான எவ்ரிதிங் ஐ தாட் இட் வாஸ் (Everything I Thought It Was) வெளியிட்டார். இதை பிரபலப்படுத்தும் வகையில் "Forget Tomorrow" என்ற பெயரில் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.
ஜஸ்டின் டிம்பர்லேக் அடுத்த வாரம் சிகாகோவின் யுனைடெட் சென்டர் மற்றும் நியூயார்க்கின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் தலா இரண்டு இசை நிகழ்ச்சிகளை நடத்த உள்ளார்.
ஜூலை 9-ந்தேதி வடஅமெரிக்காவின் கென்டக்கியில் தனது பயணத்தை முடித்து, மாத இறுதியில் ஐரோப்பியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
- வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ரோபோக்களின் சேவை பல துறைகளிலும் கால்பதித்து வருகிறது. உணவகங்களில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக உணவு பரிமாறும் பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. பெரிய ஓட்டல்களில் ரூம் சர்வீஸ் செய்வதற்கும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
இந்நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வரும் ஒரு வீடியோவில் உணவகம் ஒன்றில் ரோபோ போன்று ஒரு பணிப்பெண் உணவு பரிமாறும் காட்சிகள் பயனர்களை கவர்ந்துள்ளது. இந்த வீடியோ சீனாவில் உள்ள ஒரு உணவகத்தில் எடுக்கப்பட்டுள்ளது. வீடியோவில் உள்ள பணிப்பெண் ரோபோவை போன்றே வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறுகிறார்.
பார்ப்பதற்கு உண்மையான ரோபோ பரிமாறுவது போன்று வாடிக்கையாளர்கள் கருதும் வகையில் அந்த பெண்ணின் அசைவுகள் அனைத்தும் துல்லியமாக ரோபோவை போன்று இருக்கிறது. அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- மோடிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் உள்ள வெகுகாலத்திய தொடர்பு குறித்து அலசப்பட்டுள்ளது.
- மோடியால் தனக்கு எதிரான விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியவில்லை என்று அந்த ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஆஸ்திரேலிய ஒளிபரப்பு கழக ஊடகமான ABC பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் இந்திய அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்து Spies, Secrets And Threats - Infiltrating Australia என்ற தலைப்பில் யூடியூபில் வெளியிட்டுள்ள ஆவணப்படம் பெரும் சர்சையைக் கிளப்பியுள்ளது. ஆஸ்திரேலியாவின் மீது இந்தியா ரகசிய போர் தொடுத்துள்ளது என்றும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றும் அந்த ஆவணப்படம் தெரிவிக்கிறது.
இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் களத்தில் நரேந்திர மோடி இருக்கும் காட்சிகளுடன் தொடங்கும் அந்த ஆவணப்படத்தில் மோடிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் உள்ள வெகுகாலத்திய தொடர்பு குறித்து அலசப்பட்டுள்ளது. இந்த ஆவணப்படத்தில், இந்து தேசியவாத அமைப்பு என்று சுட்டப்படும் ஆர்எஸ்எஸ், இந்திய பாராளுமன்றத்தை வலதுசாரிகள் வசம் வைத்திருக்க முயல்கிறது அதற்காக நரேந்திர மோடிக்கு ஆர்எஸ்எஸ் பாடமும் பயிற்சியும் வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'இந்த ஆவணப்படத்தின் மூலம் இந்தியா ஆஸ்திரேலிய விவகாரங்களில் ஊடுருவ முயல்வது குறித்தும் நரேந்திர மோடி மற்றும் அவரது சகாக்கள் குறித்த விசாரணையை நாங்கள் வெளியிட்டுள்ளோம் 'என்று இந்த படத்தின் நெறியாளர் அவானி தியாஷ் தெரிவித்துள்ளார். படத்தின் உருவாக்கத்தின்போது தான் இந்தியாவில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
1984 சீக்கிய கலவரங்களுக்குப் பின் மீண்டும் தற்போது பூதாகரமாகியுள்ள காலிஸ்தான் விவகாரம் குறித்தும் கனடா அமெரிக்கா போன்ற வநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் குறிவைக்கப்படும் நிலையில் ஆஸ்திரேலியாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களுடன் உரையாடல் நிகழ்த்தி இந்த விவகாரங்களில் இந்திய அரசின் தலையீடு குறித்தும் அலசப்பட்டுள்ளது.
இதுதவிர்த்து, ஆஸ்திரேலியாவில் இந்திய உளவாளிகள் நடமாட்டம் மற்றும் இந்தியாவின் தலையீடு குறித்த பார்வையை இந்த ஆவணப்படம் முன்வைக்கிறது. பிரதமர் மோடியால் தனக்கு எதிரான விமர்சனங்களை சகித்துக்கொள்ள முடியவில்லை என்று ஆவணப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக 2002 குஜராத் கலவரத்தோடு அப்போது அம்மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி வெளியான பிபிசி ஆவணப்படம் இந்தியாவில் தடைசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- ஒரு மோதிரத்தையும் அவளுக்கு அணிவித்து காதலை வெளிப்படுத்துகிறார்.
- அரண்மனை வாசலை கடந்து செல்ல இளம்பெண் ஓடும்போது மீண்டும் ஒருமுறை அவர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டு விடைபெறுகிறார்கள்.
இங்கிலாந்தில் சார்லஸ் மன்னரின் பிறந்தநாளை முன்னிட்டு லண்டனில் ராணுவ அணிவகுப்பு நடத்தப்படும். ட்ரூப்பிங் தி கலர் எனப்படும் இந்த விழாவின்போது, அரண்மனையின் பால்கனியில் ராஜ குடும்பத்தினர் தோன்றும்போது, கீழே ராணுவ வீரர்களின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறும்.
இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த வேளையில், நடந்த சுவாரஸ்யமான பல புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் பிரபலமாகின. அதில் அரண்மனை காவலர் ஒருவரின் காதல் வீடியோ மிகவும் வைரலானது.
அரண்மனையின் முதன்மை வாசல் அருகே, ராணுவ அணிவகுப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக, காவலர் தனது காதலியை கட்டிப்பிடித்து வழியனுப்புகிறார். அப்போது ஒரு மோதிரத்தையும் அவளுக்கு அணிவித்து காதலை வெளிப்படுத்துகிறார். உடனே காதலி மீண்டும் அவரை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார். பின்னர் அரண்மனை வாசலை கடந்து செல்ல இளம்பெண் ஓடும்போது மீண்டும் ஒருமுறை அவர்கள் கட்டிப்பிடித்து முத்தமிட்டு விடைபெறுகிறார்கள். கடமைக்கு இடையே காதலில் நெகிழ்ந்த இந்த ஜோடியின் வீடியோக்கள் வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டது.
- வட கொரியாவுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
- ரஷியா, வட கொரியா இடையிலான உறவை மேம்படுத்தி வருகிறோம்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் பயணமாக வட கொரியா பயணம் மேற்கொள்கிறார். இதனிடையே உக்ரைன் மீதான ரஷிய போருக்கு ஆதரவு அளிக்கும் வட கொரியாவுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
ரஷியா மற்றும் உக்ரைன் இடையிலான போர் 844 நாட்களை கடந்துள்ள நிலையில், "உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டுள்ள சிறப்பு ராணுவ நடவடிக்கைக்கு வட கொரியா ஆதரவாக இருப்பதை நாங்கள் பாராட்டுகிறோம். ரஷியா மற்றும் வட கொரியா இடையிலான உறவை மேம்படுத்தி வருகிறோம்," என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
அதிபர் புதினின் வட கொரிய பயணத்தின் போது, இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இரண்டாம் உலக போரை தொடர்ந்து வட கொரியா உருவானதில் இருந்தே ரஷியா மற்றும் வட கொரியா இடையே நட்புறவு இருந்து வருகிறது.
எனினும், கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷியா-உக்ரைன் போர் துவங்கியதில் இருந்து ரஷியா மற்றும் வடகொரியா இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு மேம்பட்டு இருக்கிறது. இதனிடையே உக்ரைன் மீதான போருக்கு உதவும் வகையில், வட கொரியா சார்பில் 7000 கண்டெயினர்களில் ஆயுதங்கள் அனுப்பப்பட்டன.
இதில் வெடி குண்டுகள், அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஏவுகணைகள் இடம்பெற்று இருந்ததாக கூறப்படுகிறது. உக்ரைன் உடனான போர் தீவிரம் அடைந்ததில் இருந்து, புதின் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதால் அவர் நண்பர்களை தேடி வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
- இந்தியாவிடம் 172 அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
- சீனா ஜனவரி 2024-ன்படி 500 வரை உயர்த்தியுள்ளதாக தகவல் SIPRI தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானை விட இந்தியாவிடம் அணு ஆயுதங்கள் அதிகமாக உள்ளது. அதேவேளையில் சீனா அணு ஆயுதங்களை அதிகரித்துள்ளது என ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) வெளியிட்ட தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் இரண்டு போர்களை பார்த்துள்ளது. ஒன்று உக்ரைன்- ரஷியா போர். மற்றொன்று இஸ்ரேல்- காசா போர். இதன் மூலமாக இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட அணு ஆயுங்களை கொண்ட 9 நாடுகள் அவர்களுடைய அணு ஆயுதங்களை நவீனப்படுத்த தொடங்கியுள்ளன எனத் தெரிவித்துள்ளது.
உலகளவில் உள்ள அணு ஆயுதங்களில் அமெரிக்கா மற்றும் ரஷியா ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் 90 சதவீதத்தை பெற்றுள்ளன. 2023-ல் மற்ற பல நாடுகள் புதிய அணு ஆயுதம் திறன் கொண்ட ஆயுதங்களை குவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மொத்தம் 2100 அணு ஆயுதங்களில் பெரும்பாலும் அமெரிக்கா மற்றும் ரஷியாவிடம் இருப்பதாக நம்பப்படும் நிலையில், பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் செலுத்தப்படும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா 172 அணுஆயுதங்கள் வைத்துள்ளதாகவும், 2024 ஜனவரி கணக்குப்படி இது பாகிஸ்தானைவிட எண்ணிக்கைளில் இரண்டு அதிகம் எனவும் தெரிவித்துள்ளது. 2023 இந்தியா- பாகிஸ்தான் அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் சிஸ்டத்தை முன்னேற்றத்தில் தொடர்ந்து ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் அணு ஆயுதத்தை தடுப்பதில் பாகிஸ்தான் முக்கிய கவனம் செலுத்தி வருகிறது. அதேவேளையில் சீனா முழுவதும் இலக்குகளை அடையும் திறன் கொண்ட நீண்ட தூர ஆயுதங்களுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
சீனா மற்ற நாடுகளை விட அதிகவேகமாக அணுஆயுதங்களை வேகப்படுத்து வருவதாகவும், 2023-ல் 410 அணுஆயுதங்கள் வைத்திருக்கும் நிலையில், 2024 ஜனவரி நிலவரப்படி அதை 500 ஆக உயர்த்தாகவும் தெரிவித்துள்ளது.
- கோவில் கட்டுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அனுமதி அளித்தது.
- கோவில் கட்டும் பணிகள் முடிக்கப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி திறக்கப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு முதல் முறையாக சென்றபோது அங்கு வசிக்கும் இந்திய இந்து மக்களுக்காக கோவில் கட்ட மோடி வேண்டுகோள் விடுத்தார்.
இதை ஏற்றுக்கொண்டு இந்து கோவில் கட்டுவதற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அனுமதி அளித்தது. கோவிலை கட்டுவதற்கு துபாய்- அபுதாபி, ஷேக் ஜாயித் சாலையில் உள்ள அல் ரக்பா பகுதியில் 27 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
கோவிலின் கட்டுமான பணிகள் மற்றும் நிர்வகிக்க குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் நகரை சேர்ந்த பிஏபிஎஸ் என்ற ஆன்மிக அமைப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது.
அபுதாபியின் ரக்பா பகுதி அருகே அல் முரைக்கா பகுதியில் சில ஆண்டுகளாக கோவில் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வந்த நிலையில் பணிகள் முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி திறக்கப்பட்டது.
இந்நிலையில், அபுதாபி கோவிலுக்கு இதுவரை வருகை தந்த பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து அபுதாபி இந்து கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அபுதாபியில் உலகளாவிய நல்லிணக்கத்திற்கான ஆன்மீக சோலை என போற்றப்படும் மணற்கல் ஆலயம் உலகம் முழுவதிலும் இருந்து பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இதில் கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி முதல் நடப்பு ஆண்டின் ஜூன் 14-ந் தேதி வரை பதிவு செய்யப்பட்ட பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கோவில் திறக்கப்பட்டு இதுவரை வருகை புரிந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியுள்ளது.
10 லட்சம் பேரின் பிரார்த்தனைகள், இதயங்கள், நம்பிக்கைகள், அன்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் கதைகளை நாங்கள் கொண்டாடுகிறோம். தற்போது இந்த ஈத் அல் அதா எனப்படும் பக்ரீத் பண்டிகை விடுமுறையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்துகொண்டு மட்டுமே வருகை புரிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாதவர்களுக்கு அனுமதி இல்லை. இந்த விடுமுறை நாட்களில் சுவாமி தரிசன நேரம் காலை 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இன்று (திங்கட்கிழமை) கோவிலுக்கு விடுமுறையாகும். நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் கோவில் திறந்திருக்கும். பார்வையாளர்களின் வசதிக்காக அபுதாபி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 203 வழித்தட எண் கொண்ட பஸ் அல் முரைக்காவில் கோவிலுக்கு அருகில் உள்ள பஸ் நிறுத்தம் வரை இயக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






