என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரோபோ"

    • விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினினீயரிங் கல்லூரியில் கண்காட்சி நடந்தது.
    • ரோபோ அளித்த காபி மிகவும் ருசியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    காபி, டீக்கடைகளில் தற்போது குளிர்காலத்தையொட்டி கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொருவரும் தங்களுக்கு பிடித்தமான வகையில் லைட், ஸ்ட்ராங் டீ, காபி வேண்டுமென கேட்கின்றனர். ஆனாலும் அவர்கள் விரும்பியது போல சில நேரங்களில் டீ காபி கிடைப்பதில்லை.

    இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தற்போது காபி தயாரிக்க ரோபோ வந்து விட்டது.

    விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினினீயரிங் கல்லூரியில் கண்காட்சி நடந்தது.

    அதில் ரோபோடிக் கபே அமைக்கப்பட்டு இருந்தது. அங்கு ரோபோ மூலம் காபி தயார் செய்யப்பட்டு வழங்கினர். அங்கிருந்த ஒரு ரோபோ 40 வினாடிகளில் 4 வகையான டீ, காபிகளை தயார் செய்து கொடுத்து அசத்தியது. ரோபோ அளித்த காபி மிகவும் ருசியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    கடைகளில் இனி மாஸ்டர்கள் தேவையில்லை. இந்த ரோபோ எங்கள் விருப்பப்படி 4 வகையான காபியைத் தயாரித்து வழங்கும் என்று ஏற்பாட்டாளர்கள் விளக்கினர்.

    விமான நிலையங்கள், ஐடி, பூங்காக்கள், மால்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் வெறும் 100 சதுர அடி பரப்பளவில் இந்த ரோபோ ஸ்டால்களை அமைக்கலாம். 40 வினாடிகளில் விரும்பிய காபியைத் தயாரித்து வழங்குவதற்காக இது ஒரு ரஷ்ய நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்டது.

    ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவிடம் இதுகுறித்து விளக்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

    • ரோபோ எந்திரம் நீங்கள் விரும்பும் ஸ்டைலில் முடிவெட்ட காத்திருக்கிறது.
    • வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    அழகாக முடிவெட்டிக் கொள்வது சவாலான வேலையாக மாறிவிட்டது. ஒவ்வொரு முறையும் நண்பர்கள் நம்மை கேலி செய்யாத அளவுக்கு அழகான சிகை அலங்காரம் அமைவதற்கு தனி முடி திருத்துனரை தேர்வு செய்து, காத்திருந்து கத்தரித்துக் கொண்டால்தான் உண்டு.

    ஆனால் இனி அந்தக் கவலையில்லாமல் ரோபோ எந்திரம் நீங்கள் விரும்பும் ஸ்டைலில் முடிவெட்ட காத்திருக்கிறது. ஆம்... அப்படியொரு எந்திரத்தில் வாலிபர்கள் சிலர் முடிவெட்டி சிகை அலங்காரம் செய்து கொள்ளும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    நிஜம்தான், அது கற்பனை சினிமா காட்சியல்ல. 'ஆட்டோ ஸ்ட்ரீட் பார்பர்' என குறிப்பிடப்படும் அந்த எந்திரம், ராட்சத ஸ்பீக்கர் போன்ற தோற்றத்தில் இருக்கிறது. அதில் விரும்பிய ஸ்டைல் குறித்த கட்டளைகளை சொடுக்கி வாஷிங்மெஷின் கதவு போன்ற ஒரு திறப்புக்குள் நமது தலையை நுழைத்தால் போதும், சில வினாடிகளில் சிகை அலங்காரத்தை முடித்து விடுகிறது ரோபோ. அதிகபட்சம் ஒரு நிமிடம் கூட ஆகாது.

    இந்த எந்திரங்கள் நார்வே நாட்டின் ஓஸ்லோ நகரில் பயன்பாட்டுக்கு வந்திருப்பதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த வீடியோ சிகை அலங்கார பிரியர்களால் ஆச்சரியத்துடன் பரப்பப்பட்டு வருகிறது.



    • ரோபோவுக்கு திண்டி என பெயர் வைத்துள்ளேன்.
    • இது வணிக பதிவு அல்ல, இது எனது புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

    பெங்களூரு:

    உலக அளவில் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனங்களின் புகலிடமாக உள்ளது. இதனால் தொழில்நுட்ப பூங்கா என்று அழைக்கப்படும் பெங்களூருவில் ரோபோ பயன்பாடும் அதிகரித்து வருகிறது. ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறும் பணியில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் இல்லத்தரசிகள் வீடுகளை கூட்டி பெருக்கவும், தண்ணீர் வைத்து கழுவி எடுக்கவும் ரோபோக்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

    நிலைமை இப்படி இருக்க இல்லத்தரசிகளின் சமையல் வேலையை எளிதாக்க இப்போது ரோபோ வந்துள்ளது. அதாவது தோசை சுடும் ரோபோவை பெங்களூருவை சேர்ந்த என்ஜினீயர் ஒருவர் வடிவமைத்துள்ளார்.

    இதுபற்றி அந்த என்ஜினீயர் ரெடிட் என்ற இணையதள பக்கத்தில் தோசை சுடும் ரோபோவை பகிர்ந்துள்ளார். அதன் விவரம் பின்வருமாறு:-

    நான் கடந்த சில மாதங்களாக பெங்களூருவில் தனிப்பட்ட முறையில் ஒரு ரோபோவை வடிவமைத்துள்ளேன். இந்த ரோபோ தானாகவே அடுப்பில் தோசை கல் வைத்தால் போதும் தானாகவே மாவை ஊற்றி தோசையை சுட்டெடுக்கும். எனது குடும்ப உறுப்பினர்கள் தோசை சுட சிரமப்படுவதை பார்த்து நான் இந்த தோசை சுடும் ரோபோவை வடிவமைத்தேன்.

    இந்த ரோபோவுக்கு திண்டி என பெயர் வைத்துள்ளேன். (திண்டி என்றால் தமிழில் சிற்றுண்டி என்று பொருள்). இதுதொடர்பாக உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். இது வணிக பதிவு அல்ல, இது எனது புதிய கண்டுபிடிப்பு என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதன் விலை பற்றி அவர் எதுவும் அறிவிக்கவில்லை.

    இந்த பதிவை பார்த்த பல இணையதள வாசிகள் அந்த என்ஜினீயரின் கண்டுபிடிப்புக்காக அவரை பாராட்டி வருகிறார்கள். ஒருவர், இந்த தோசை ஒரு இங்கிலாந்து கிரிக்கெட் ஸ்டேடியம் போல் தெரிகிறது என்று கருத்து பதிவிட்டுள்ளார்.

    மற்றொருவர், இந்த ரோபோவை உருவாக்க நீங்கள் நிறைய கடினமாக உழைத்திருக்க வேண்டும் என எனக்கு தெரிகிறது. இதைவிட இன்னும் சிறப்பான ரோபோவை உருவாக்க வேண்டும். அதற்கு எனது வாழ்த்துகள் என கூறியுள்ளார். இன்னொருவரின் பதிவில், இது உண்மையிலேயே ஆச்சரியமாக இருக்கிறது. இந்த திட்டத்தில் நீங்கள் எடுத்த முயற்சியை நான் புரிந்துக்கொள்கிறேன் என்று கருத்து கூறியுள்ளார்.

    குழந்தைகளுக்கு தாய்மார்கள் தோசை சுட்டு ஊட்டும்போது இது அம்மா சுட்ட தோசை... இது அப்பா சுட்ட தோசை என கூறி தோசை ஊட்டுவது வழக்கம். இனிமேல் இது அம்மா... அப்பா... சுட்ட தோசை என கூற முடியாது. இது ரோபோ சுட்ட தோசை என கூறும் நிலை வந்துவிட்டது என்றால் மிகையல்ல.

    • சாலையை கடந்த ரோபோ, சட்டென்று நின்று திரும்பி, நடைபாதையில் நடக்க ஆரம்பிக்கிறது.
    • வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது.

    சாலையை கடக்கும் மனித வடிவ ரோபோ பற்றிய வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக வலம் வருகிறது. துபாயின் 'எமிரேட்ஸ் டவர்' அருகே உள்ள ஒரு சாலையில் கார் ஒன்று வேகமாக செல்கிறது. அப்போது காரின் குறுக்கே ரோபோ ஒன்று மிதமான வேகத்தில் ஓடியபடி சாலையைக் கடக்கிறது. இதை காருக்குள் இருந்த ஒருவர் ஆச்சரியமாக பார்த்து படம் பிடிக்கிறார்.

    சாலையை கடந்த ரோபோ, சட்டென்று நின்று திரும்பி, நடைபாதையில் நடக்க ஆரம்பிக்கிறது. ரோபோவின் பின்னால் அதன் எஜமானர் நடந்து செல்கிறார். அவர் கையில் ரிமோட் கண்ட்ரோல் வைத்து ரோபோவை இயக்குவது தெரிகிறது. அதற்கேற்ப ரோபோ மனிதனைவிட சற்று வேகமான நடையில் பரபரப்பாக ஓடுவதுபோலவே நடந்து செல்கிறது. இந்த வீடியோ வலைத்தளவாசிகளை வெகுவாக கவர்ந்தது.

    ரோபோக்கள் இன்னும் அதிகமாக மனிதர்களுடன் வலம் வரும் காலம் நெருங்கிவிட்டதாக பலரும் கருத்து பதிவிட்டு பாராட்டினார்கள்.



    • வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
    • வீடியோவை பார்ப்பவர்களுக்கு, தொழில்நுட்பத்தின் அபாயங்கள் தொடர்பான கவலை எழுகிறது.

    உலகத்தில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் சில நன்மைகளும், சில தீமைகளும் நடைபெறத்தான் செய்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் கொடி கட்டி பறக்கும் சீனா, ரோபோவைக்கொண்டு பல ஆச்சரியமான கண்டுபிடிப்புகளை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'எந்திரன்' படத்தில் ரோபோவை உருவாக்குபவருக்கு அந்த ரோபோவால் ஏற்படும் பிரச்சனை தான் கதை.

    அதைப்போலத்தான் சீனாவிலும் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஒரு தொழிற்சாலையில் மனித உருவ ரோபோட்டை உருவாக்கும் பணியில் இருவர் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது ரோபோ செயலிழந்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களை தாக்குகிறது. இதனால் அச்சமடைந்தவர்கள் அங்கிருந்து சிறிது தூரம் ஓடி செல்கின்றனர். பின்பு, திரும்பி வந்து ரோபோவை பழைய நிலைமைக்கு கொண்டுவருகின்றனர்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு, தொழில்நுட்பத்தின் அபாயங்கள் தொடர்பான கவலை எழுகிறது. மேலும் பேசுபொருளாகி உள்ளது.



    • அரசு துறைகளிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன.
    • பல்வேறு ஓட்டல்களிலும் ரோபோக்கள் உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன.

    பெங்களூரு:

    மனிதனது மேம்பட்ட அறிவுத்திறனின் வியக்கத்தக்க கண்டுபிடிப்பு தான் ரோபோ. இன்றைய கால கட்டத்தில் மனிதனுக்கு போட்டியாக ரோபோக்கள் உருவெடுத்துள்ளன. மனிதர்களை போல் அல்லாமல், ரோபோக்கள் சலிப்படையாது. மனிதர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல்களில் ரோபோக்கள் வேலை செய்ய முடியும். மனிதர்களைப் போன்ற சுற்றுச்சூழல் தேவைகள் ரோபோக்களுக்கு இல்லை. ரோபோக்களுக்கு மனிதர்களை விட அதிக திறன் கொண்ட சில சென்சார்கள், ஆக்சுவேட்டர்கள் உள்ளன. நம்முடைய வேலைகளை நம்மை விட வேகமாகவும், குறைந்த செலவிலும் முடித்து விடுவதால் ரோபோக்களை விரும்புகின்றனர். சம்பளம் கொடுக்க வேண்டியதில்லை. பராமரிப்பு செலவு மட்டும் தான்.

    இதனால் கர்நாடக மாநிலத்தில் வீடுகளில் பணிப்பெண்களுக்கு பதிலாக ரோபோக்களை அதிக எண்ணிக்கையில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

    7 மாதங்களுக்கு முன்பு, கர்நாடக மாநிலம் ஹெப்பலில் வசிக்கும் மனிஷா ராய் (வயது 35) என்ற பெண் தனது சமையல்காரருக்கு பதிலாக ஒரு சமையலறை ரோபோவை வாங்கினார். இப்போது நன்றாக இருப்பதாக அவர் கூறினார். மேலும் அவர் கூறுகையில் ரோபோ வந்ததிலிருந்து எனது கணவர் நவீன் மற்றும் 2½ வயது மகள் நட்ஷித்ரா, ரோபோ தயாரித்த உணவை ருசிக்கிறார்கள். "எனது சமையலறை ரோபோ நறுக்கவும், வதக்கவும், வறுக்கவும், கிளறவும், ஆவியில் வேகவைக்கவும், பிசையவும் செய்கிறது. " நான் செல்போனை பயன்படுத்தி ரோபோவை இயக்குகிறேன். பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்ட வழிமுறைகளை பின்பற்றி ரோபோவை பயன்படுத்த வேண்டும். ரோபோ காய்கறிகளை வெட்டுவது அல்லது வறுப்பது போன்ற பணிகளைச் செய்யும்போது நான் அருகில் இருக்க வேண்டிய அவசியமில்லை. சமைக்கும் போது ரோபோ பல பணிகளை செய்ய அனுமதிக்கிறது என்றார்.

    பெங்களூருவைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் மீரா வாசுதேவ் என்ற பெண் 2 வகையான ரோபோக்களைப் பயன்படுத்துகிறார். நீங்கள் ஒரு துடைப்பத்தைப் பயன்படுத்தும்போது குனிய வேண்டியதில்லை. ஒரு துடைப்பத்தால் எடுக்க முடியாத மெல்லிய தூசியையும் அவை எடுத்துக்கொள்கின்றன என கூறினார்.

    கோரமங்கலாவை சேர்ந்த 43 வயதான ரேணுகா குருநாதன் என்ற பெண் பாத்திரங்கழுவி மற்றும் தரையை சுத்தம் செய்யும் ரோபோ பயன்படுத்தி வருகிறார். அன்றாட வாழ்க்கைக்கு வெளியாட்களைச் சார்ந்து இருக்காமல் இருப்பது உண்மையிலேயே ஒரு விடுதலையான அனுபவம் என கூறினார்.

    உயிரியல் அறிவியலில் முதுகலைப் பட்டதாரி மனிஷா கூறுகையில் "நான் என் வீட்டின் உதவியாளருக்கு மாதம் ரூ.2,500 சம்பளம் கொடுத்தேன். நான் ஒரு ரோபோ வாங்கியுள்ளேன். இப்போது நான் நிறைய சேமித்து வருகிறேன். வருடத்திற்கு ரூ.9,000 வரை," சேமிக்கிறேன். சமையல் ரோபோ வாங்க சுமார் ரூ.40,000 செலவாகும் என்றார்.

    இதைத்தவிர அரசு துறைகளிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டில் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் கெம்பேகவுடா பெங்களூரு சர்வதேச விமான நிலையமும் ஒன்று. அங்கு பயணிகளுக்கு உதவும் நோக்கத்தில் அந்த விமான நிலையத்தில் 10 ரோபோக்கள் கடந்த ஆண்டு முதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இதுதவிர பெங்களூரு நகரில் உள்ள பல்வேறு ஓட்டல்களிலும் ரோபோக்கள் உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. தென் இந்தியாவில் அதிகளவில் பெங்களூருவில் ரோபோக்கள் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. ஐ.டி. நிறுவனங்கள் மற்றும் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் தம்பதிகள் ரோபோக்கள் மூலம் தங்களுக்கு தேவையான சமையலை செய்து சாப்பிட்டு மகிழ்கின்றனர். இதனால் வெளியாட்கள் இல்லாமல் அவர்கள் அன்றாட தேவையை நிறைவேற்றி கொள்கிறார்கள்.

    • மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர்.
    • மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

    ராமேசுவரம்:

    உலகம் முழுவதும் தற்போது செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கக்கூடிய மார்க்ரேட் என்று பெயரிடப்பட்ட ஏ.ஐ. ரோபோடிக் ஆசிரியர் ராமேசுவரத்தில் செயல்படும் கிரைஸ்ட் தி கிங் சீனியர் செகண்டரி இன்டர்நேஷனல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் கற்பித்தல் பணிக்காக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    இதற்கான அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, நகரசபை சேர்மன் நாசர் கான் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பள்ளி தாளாளர் பில்லி கிரகாம் அனைவரையும் வரவேற்றார்.

    இது குறித்து பள்ளி முதல்வர் ஷாலினி பில்லி கிரஹாம் கூறியதாவது.:- மனித உருவத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஏ.ஐ. ஆசிரியை பள்ளி மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது. மாணவர்களின் கல்வித்திறனை ஊக்குவிப்பதற்காகவே பள்ளியில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் இயங்கும் இந்த ரோபோடிக் ஆசிரியை தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    நிகழ்ச்சியில் தாசில்தார்கள் முரளிதரன், அப்துல் ஜபார், டி.ஆர்.ஓ. நேர்முக உதவியாளர் சாமிநாதன், கடற்படை கமாண்டர் தினேஷ்குமார், மீனவ பிரதிநிதி சேசுராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஏ.ஐ. ரோபோட்டிடம் பல்வேறு கேள்விகள் கேட்டனர். அதற்கு ரோபோட்டிக் ஆசிரியை பதில் அளித்தது. இதனை மாணவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.

    • பெங்களூரிவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் 35 வயதான வாலிபர் ஒருவர் இதய பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டார்.
    • ரோபோவை பயன்படுத்தி, பெங்களூரில் உள்ள நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    புதுடெல்லி:

    ரோபோக்களின் பயன்பாடு பல்வேறு துறைகளிலும் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் மருத்துவ துறையிலும் ரோபோக்கள் ஈடுபடுத்தப்படுகிறது.

    குறிப்பாக பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து டாக்டர்கள் ரோபோ மூலம் நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை செய்த சம்பவங்கள் நடைபெற்றன.

    இந்நிலையில் இந்தியாவிலும் முதல்முறையாக 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு தூரத்தில் இருந்து ரோபோடிக் மூலம் ஒரு நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரிவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் 35 வயதான வாலிபர் ஒருவர் இதய பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் இதயத்தின் மேல் அறைகளுக்கு இடையில் ஒரு துளை இருக்கும் இழ பிறவி நிலையான சிக்கலான நோய் என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து குருகிராமில் உள்ள எஸ்.எஸ்.இன்னோவேஷன் நிறுவன தலைவர் டாக்டர் சுதிர்ஸ்ரீவஸ்தவா தலைமையில் குருகிராமில் இருந்தே இந்தியாவில் முதல் முறையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட அறுவை சிகிச்சை ரோபோவை பயன்படுத்தி, பெங்களூரில் உள்ள நோயாளிக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ரோபோடிக் கமிட்டி மூலம் குருகிராமில் இருந்து 2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் பெங்களூரில் உள்ள நோயாளிக்கு தொலை நிலை வழியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    அறுவை சிகிச்சையின் போது, அறுவை சிகிச்சை மருத்துவர் 3டி கண்ணாடிகளை அணிந்து ஒரு கன்சோலுக்கு பின்னால் அமர்ந்து திரையை பார்த்துக்கொண்டே அறுவை சிகிச்சையை நடத்துகிறார். ரோபோடிக் கைகளின் உதவியுடன், உதவி மருத்துவர் முன்னிலையில் வேறு ஒரு இடத்தில் அமர்ந்திருக்கும் நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

    இந்த அறுவை சிகிச்சையை வழிநடத்திய டாக்டர் அருள்பெர்டாடோ கூறுகையில், எஸ்.எஸ்.மந்த்ரா ரோபோடிக் அமைப்பு மூலம் மிகவும் பயன் உள்ளதாகவும், துல்லியமாகவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதயம் போன்ற மிக முக்கியமான உறுப்புகளில் மிக நுணுக்கமாக சிறந்த நம்பிக்கையுடன் அறுவை சிகிச்சையை மேற்கொள்ள முடிந்தது என்றார்.

    • பாஜகவின் துண்டு பிரசுரங்களை மக்களிடம் சென்று ரோபோ வழங்குகிறது.
    • பா.ஜ.க.வின் நூதன பிரச்சாரத்தை ஆர்வத்துடன் பார்க்கும் வாக்காளர்கள்.

    காந்திநகர்:

    நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குஜராத் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 1-ந் தேதி மற்றும் 5ந் தேதி என 2 கட்டங்களாக நடைபெறுகிறது. டிசம்பர் 8-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ள நிலையில் மக்களை கவர அரசியல் கட்சியினர் பல்வேறு நூதன முறை பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க.வின் தொழில்நுட்ப பிரிவு மண்டல தலைவர் ஹர்ஷத் பட்டேல் தேர்தல் பிரச்சாரத்திற்காக ரோபோவை தயாரித்துள்ளார். இதையடுத்து மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிரச்சாரத்திற்காக இந்த ரோபோவை பா.ஜ.க. எம்.எல்.ஏ. பங்கஜ் தேசாய் களம் இறக்கி உள்ளார். 


    பாஜகவின் சாதனைகள் மற்றும் பாஜக வேட்பாளர்கள் குறித்து மக்களிடத்தில் இந்த ரோபோ அறிமுகம் செய்கிறது. மேலும் கட்சி பொதுக் கூட்டங்களிலும் பாஜகவின் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை ரோபோ வழங்குகிறது.

    மேலும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பும் வகையில் இதில் ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளன. பா.ஜ.க.வின் இந்த நூதன பிரச்சாரத்தை அந்த தொகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். பல தொகுதிகளில் வீடு வீடாக சென்று பாஜகவுக்காக பிரச்சாரம் செய்ய இது போன்ற மேலும் பல ரோபோக்களை களமிறக்க உள்ளதாகவும் ஹர்ஷத் பட்டேல் தெரிவித்துள்ளார்.

    • அரசு பள்ளி மாணவிகள் ரோபோ உருவாக்கினர்
    • இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.

    பொன்னமராவதி

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் லேப் பணிமனை மூலம் 7-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் தங்களின் திறமையை வெளிப்படுத்தும் விதமாக கடந்த மூன்று நாட்களாக அட்டை பெட்டி, காகிதம், பழைய பொருட்களை கொண்டு ரோபோட்டுகள் உருவாக்கப்பட்டன. குப்பை சுத்தம் செய்யும் இயந்திரம், சுமை தூக்கும் ரோபோ, மலர் கொத்து வழங்குதல், விபத்துகளை தடுக்கும் வகையிலான கண்டறியும் கருவி போன்றவைகளை உருவாக்கி மாணவிகள் சாதனை படைத்தனர். இவர்களை ஆசிரியர்கள் பாராட்டினர்.



    • உணவு வழங்கிய பின்பு அதற்குரிய இடத்தி்ல் தானாக வந்து நின்றுவிடும்.
    • கேமரா மற்றும் சென்சார் மூலம் குறிப்பிட்ட டேபிளுக்கு சென்று ரோபோ உணவு வழங்கும்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம், அவிநாசி - திருப்பூர் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சொகுசு உணவகத்தில் உணவு விநியோகிக்கும் பணியில் முதன்முறையாக ரோபோ பயன்படுத்தப்படுகிறது. இது குழந்தைகள், பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சப்ளையர்கள் ஆர்டர் எடுத்து சமையல்காரர்களிடம் வழங்கி விடுகின்றனர்.

    உணவு தயாரானதும் ரோபோவில் உணவு வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள அலமாரியில் அந்த உணவு வைக்கப்படுகிறது. பின்னர் உணவு ஆர்டர் செய்த வாடிக்கையாளரின் டேபிளுக்கு செல்லும் வகையில் ஒவ்வொரு டேபிளுக்கான எண் ரோபோவில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்டர் செய்த வாடிக்கையாளர்கள் அமர்ந்திருக்கும் டேபிள் எண்ணை அழுத்தியதும் அங்கு ரோபோ உணவுகளை எடுத்து செல்கிறது.

    பின்னர் ஆர்டர் செய்த உணவை ரோபோவின் அலமாரியில் இருந்து அங்கு இருக்கும் சப்ளையர் அல்லது வாடிக்கையாளர்களே உணவுகளை எடுத்து கொள்ளலாம். உணவு வழங்கிய பின்பு அதற்குரிய இடத்தி்ல் தானாக வந்து நின்றுவிடும்.

    ரோபோ சப்ளை குறித்து உணவகத்தின் மேற்பார்வையாளர் ஒருவர் கூறுகையில்,

    சமையலறையில் இருந்து வாடிக்கையாளர்கள் இருக்கும் இடம் வரை உணவு எடுத்து செல்ல ரோபோ பயன்படுத்த படுகிறது. இதற்காக ரோபோவில் அதற்கு உண்டான ப்ரோக்ராம் சார்ட் மற்றும் எண்கள் கண்டறியும் சேவை ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. ரோபோவில் பொருத்தப்பட்டுள்ள கேமரா மற்றும் சென்சார் மூலம் குறிப்பிட்ட டேபிளுக்கு சென்று ரோபோ உணவு வழங்கும். தொடர்ந்து அடுத்த டேபிளுக்கு சென்று விடும். மேலும் பிறந்தநாள், திருமணநாள் போன்ற விசேஷங்கள் சமயத்தில், சம்பந்தப்பட்டவர்கள் எதிர்பாராத வகையில் ரோபோ வாயிலாக கேக்கை அனுப்பி வைத்து அவர்கள் ஆச்சரியப்படும் வகையில் ஹேப்பி பர்த்டே என்று பாடும் வகையில் ப்ரோக்ராம் செய்யப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றனர். மேலும் குறைந்த நேரத்தில் அதிகளவில் உணவு சப்ளை செய்யப்படுகிறது. இந்த ரோபோவை காண்பதற்காகவே உணவகத்தை தேடி வாடிக்கையாளர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக அளவில் வருவதாகவும், குழந்தைகள் இந்த ரோபோவை கண்டு அதிக அளவில் மகிழ்ச்சி அடைவதாகவும் தெரிவித்தார்.

    • குழந்தைகள் ரோபோவுடன் விளையாடினார்கள்.
    • நிகழ்ச்சிக்கு வந்த பலரும் அந்த ரோபோவுடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர்.

    புதுச்சேரி:

    மருத்துவம், அறிவியல் மற்றும் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு ரோபோ பயன்படுத்தப்படுவது வாடிக்கை. ஆனால் வீட்டு விசேஷ நிகழ்ச்சியில் விருந்தினர்களை வரவேற்க ரோபோ பயன்படுத்தப்படுகிறது என்றால் ஆச்சரியமாக தானே இருக்கிறது.

    ஆம்... புதுச்சேரியில் நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில் விருந்தினர்களை ரோபோ ரோஜாப்பூ, சாக்லெட் கொடுத்து வரவேற்றது பிரமிக்க வைத்தது.

    புதுச்சேரியில் நேற்று 100 அடி சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதில் வருகை தந்த விருந்தினர்களை ரோபோ ஒன்று வரவேற்றது.

    பெண் போன்று பாவாடை, தாவணி மற்றும் தலையில் தொப்பியுடன் மிடுக்காக காணப்பட்டது. தட்டில் கொடுக்கப்பட்ட ரோஜா பூ, சாக்கெட் ஆகியவற்றை விருந்தினர்களை தேடிச்சென்று வழங்கியது. மேலும் மக்கள் விரும்பும் பாடல்களை அது இசைக்க செய்தது. குழந்தைகள் ரோபோவுடன் விளையாடினார்கள்.

    சூறாவளி போல் சுற்றி சுற்றி வலம் வந்த ரோபோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நிகழ்ச்சிக்கு வந்த பலரும் அந்த ரோபோவுடன் செல்பி எடுக்கவும் ஆர்வம் காட்டினர்.

    மும்பை மற்றும் ஐதராபாத்தை சேர்ந்தவர்களுடன் சேர்ந்து இந்த ரோபோவை 3 மாதத்தில் ரூ.4 லட்சம் மதிப்பில் உருவாக்கியுள்ளனர்.

    இதனை முதல் முறையாக புதுச்சேரியில் நடந்த விழாவில் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

    ×