என் மலர்
தலைப்புச்செய்திகள்
- புஷ்கர் காட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்தது.
- உயிரிழந்தவர்கள் ராஜு மற்றும் அன்னவரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் ராஜமுந்திரியில் கோதாவரி ஆற்றில் 12 பேருடன் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆற்றின் மறுகரையில் இருந்து புஷ்கர் காட் நோக்கி சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து படகு கவிழ்ந்தது. இந்த விபத்தில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், மீட்புக் குழுவினர் 10 பேரை காப்பாற்றினர். 2 பேர் காணாமல் போயினர்.
தேடுதலுக்கு பிறகு ஆற்றில் இருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். உயிரிழந்தவர்கள் ராஜு மற்றும் அன்னவரம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது.
- மகாராஷ்டிரா நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.
- குறுக்கே வந்த பைக்.பைக் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் பேருந்தை திரும்பியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் குறுக்கே வந்த பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பிய ஓட்டுநரின் செயலால், சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தின் அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்டூர்-நான்டெட் நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பைக் ஓட்டி வந்த ஒருவர் திடீரென சாலையை கடக்க முயன்றுள்ளார். இதனை பார்த்த ஓட்டுநர் பைக் மீது மோதாமல் இருக்க பேருந்தை திரும்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 15 முதல் 20 பேர்வரை காயமடைந்தனர்.
- சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என, சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர்.
- அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்போம்.
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஒடுக்கப்படும் மக்களைக் காப்பதும், எளியவர்களுக்கு உதவிகள் செய்வதுமே தர்மம் என்று அன்பு நெறிகளை போதித்து, ஜாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானவராக இருக்கும் அய்யா வைகுண்டர் அவர்களின் 193 ஆவது அவதார தினத்தைக் கொண்டாடும் உலகளாவிய பக்தர்கள் அனைவருக்கும், பா.ஜ.க. சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடவுள் ஒவ்வொருவரிடமும் இருக்கிறார் என்ற ஞானத்தைப் போதித்து, சமூக ஏற்றத்தாழ்வுகளை விலக்கி, ஆண் பெண் அனைவரும் சமம் என, சமத்துவத்தையும் சமாதானத்தையும் விதைத்தவர்.
உடல் தூய்மையையும், உள்ளத் தூய்மையையும் வலியுறுத்தி, மக்களிடம் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, அச்சமின்மை, தர்மம் போன்ற அறநெறிகளை வளர்த்தவர் அய்யா வைகுண்டர் அவர்கள்.
அதிகாரத்துவம், சமூக ஏற்றத்தாழ்வு, கொலை, கொள்ளை, பெண்கள், குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ள இன்றைய காலத்தில், அய்யா வைகுண்டர் அவர்களின் கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வது முக்கியமானதாக இருக்கிறது.
அய்யா வைகுண்டர் அவர்களின் அவதார தினமான இன்று, அவரின் கருத்துகளைப் பின்பற்றி, அவர் காண விரும்பிய, ஏற்றத்தாழ்வற்ற, அமைதியான சமுதாயத்தை உருவாக்குவோம் என்று உறுதியேற்போம்.
அய்யா உண்டு!
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- பெண் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
- பெண் கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளிகள் 2 பேரையும் சில மணி நேரங்களிலேயே பிடித்து கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் புனே ஷிரூர் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் தனது ஆண் உறவினர் ஒருவருடன் வீட்டின் அருகே உள்ள ஒதுக்குப்புறமான இடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவர்கள் இருவரையும் செல்போனில் படம் பிடித்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் எங்களை ஏன் படம் பிடிக்கிறீர்கள்? என்று கேள்வி எழுப்பினர்.
அப்போது வாலிபர்கள் 2 பேரும் தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி அவர்கள் 2 பேரையும் நெருக்கமாக இருக்க சொல்லி கட்டாயப்படுத்தி மிரட்டினர். அவர்கள் நெருக்கமாக இருந்ததை படம் பிடித்து உறவினர்களுக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டினார்கள்.
அந்த வாலிபரை அங்கிருந்து அடித்து விரட்டி விட்டு அந்த இளம்பெண்ணை 2 பேரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண் அணிந்திருந்த மூக்குத்தி, கம்மல், ஒரு பவுன் செயின் ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனால் செய்வதறியாமல் தவித்த இளம்பெண் 112 என்ற எண்ணிற்கு போன் செய்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதுகுறித்து ரஞ்சன்கான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
பெண் கூறிய அடையாளங்களை வைத்து குற்றவாளிகள் 2 பேரையும் சில மணி நேரங்களிலேயே பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடந்த வாரம் புனே பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த இளம்பெண்ணை அரசு பஸ்சுக்குள் வைத்தே வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் மீண்டும் உறவினர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடந்த 1-ந்தேதி அன்று குழந்தை மூளைச்சாவு அடைந்தது.
- குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர்.
ஒரு காலக்கட்டத்தில் உடல் உறுப்பு தானம் என்பது அரிதான நிகழ்வாக இருந்தது. ஆனால் தற்போது உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வால் பல பேர் மறுவாழ்வு பெற்று வருகின்றனர். மேலும் உடல் உறுப்பு தானம் செய்ய தொடர்ந்து பலரும் முன் வருகின்றனர்.
இந்த நிலையில், 16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம் மூலம் இரண்டு பேர் புது வாழ்வு அடைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்ட 16 மாத பெண் குழந்தையான ஜன்மேஷ் லென்காவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந்தேதி அன்று குழந்தை மூளைச்சாவு அடைந்ததையடுத்து மீளாதுயரத்தில் இருந்த குழந்தையின் பெற்றோரிடம் மருத்துவ குழு உடல் உறுப்பு தானம் குறித்து ஆலோசனை வழங்கியது.

இதனைத்தொடர்ந்து, மிகுந்த மன வலிமையுடனும், இரக்கத்துடனும் குழந்தையின் உறுப்புகளை தானம் செய்ய பெற்றோர் சம்மதித்தனர். இதனையடுத்து மருத்துவர்கள் உடனடியாக மாற்று அறுவை சிகிச்சையில் ஈடுபட்டு கல்லீரலை அகற்றி டெல்லியில் உள்ள ILBS-க்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அபாய கட்டத்தில் கல்லீரல் செயலிழப்பால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு பொருத்தப்பட்டது.
அதேபோன்று குழந்தையின் சிறுநீரகங்கள் புவனேஸ்வரியில் உள்ள AIIMS-BBS-ல் ஒரு நோயாளிக்கு என்-பிளாக் முறையில் பொருத்தப்பட்டன.
இதன்மூலம் 2 பேருக்கு புதிய வாழ்க்கையை ஒடிசாவின் இளைய உறுப்பு தானம் செய்பவரான 16 மாத குழந்தை ஜன்மேஷ் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜனும் வாழ்த்து தெரிவித்தார்.
- தெலுங்கானா கவர்னராக பணியாற்றிய அனுபவத்தில் தெலுங்கு மொழியை அவர் அறிந்து கொண்டுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த சனிக்கிழமை அன்று தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரதமர் மோடி, கவர்னர் ஆர்.என்.ரவி, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள், தி.மு.க. எம்.பி.க்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜனும் வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் மும்மொழியில் வாழ்த்துகிறேன்... என தமிழ், ஆங்கிலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மும்மொழியில் வாழ்த்து தெரிவித்த தமிழிசை சவுந்தரராஜனுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். என் பிறந்தநாளுக்கு சகோதரி தமிழிசை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு என மும்மொழியில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். அதில் இந்தி இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு. எனக்கு தெலுங்கு தெரியாது. தெலுங்கானா கவர்னராக பணியாற்றிய அனுபவத்தில் தெலுங்கு மொழியை அவர் அறிந்து கொண்டுள்ளார். இதிலிருந்தே, 3-வதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டிய அவசியம் இல்லை. தேவைப்பட்டால், அதனை புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்ற திராவிட இயக்க கொள்கையை தமிழிசை உறுதிப்படுத்தி உள்ளார். அவருக்கு என் நன்றி என கூறியுள்ளார்.
- ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில், இரு அணிகளும் இதுவரை 7 போட்டிகளில் மோதியுள்ளன.
- இதில் இந்தியா நான்கிலும், ஆஸ்திரேலியா மூன்றிலும் வெற்றி கண்டுள்ளன.
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
முன்னதாக இந்தியாவில் 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியானது இந்திய அணியை வீழ்த்தி இந்திய ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருந்தது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய அணி இந்த அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பழித்தீர்கும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஐசிசி நாக் அவுட் போட்டிகளில் கடந்த 14 ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியை, இந்திய அணி வீழ்த்தியதே இல்லை. அந்த வரலாற்றை இந்திய அணி மாற்றியமைக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2015 உலக கோப்பை அரையிறுதி, 2023 உலக கோப்பை இறுதிப்போட்டி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி என ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தொடர் தோல்வியை சந்தித்துள்ளது.
ஐசிசி தொடர்களின் நாக் அவுட் போட்டிகளில், இதுவரை 7 போட்டிகளில் மோதி இந்தியா நான்கிலும், ஆஸ்திரேலியா மூன்றிலும் வெற்றி கண்டுள்ளன.
- மார்ச் 8-ந் தேதிக்குள், 2500 வழங்குவது குறித்து அறிவிக்கவில்லை என்றால், சோனியா காந்திக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புவோம்.
- பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவதாக உறுதியளித்ததை நாங்கள் அவருக்கு நினைவூட்டுவோம்
திருப்பதி:
தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2500 வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்தது.
ஆனால் இதுவரை இந்த திட்டம் கொண்டு வரப்படவில்லை.
பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) எம்.எல்.சி. கே.கவிதா, பெண்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தெலுங்கானா காங்கிரஸ் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க அஞ்சல் அட்டை இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.
பெண்களுக்கு மாதம் ரூ. 2500 வழங்க கோரி முதல் மந்திரி ரேவந்த் ரெட்டிக்கு 10 ஆயிரம் அஞ்சல் அட்டைகளை அனுப்பி வைத்தார்.
மகளிர் தினமான மார்ச் 8-ந் தேதிக்குள், 2500 வழங்குவது குறித்து அறிவிக்கவில்லை என்றால், நாங்கள் சோனியா காந்திக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்புவோம்.
அவர் இங்கு வந்து பெண்களுக்கு ரூ.2,500 வழங்குவதாக உறுதியளித்ததை நாங்கள் அவருக்கு நினைவூட்டுவோம் என கவிதா தெரிவித்தார்.
- மீனவர்களை விடுதலை செய்யவதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.
- அபராதத்தை செலுத்த முடியாமல் சிறையில் தவித்து வருகிறார்கள்.
ராமேசுவரம்:
எல்லை தாண்டியதாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், அவர்களின் விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தியும் ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 24-ந்தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை தொடங்கினர்.
மீனவர்கள் பிரச்சனையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் கடந்த 28-ந்தேதி முதல் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.

அதன்படி உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம், கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்திய மீனவர்கள் 4-வது நாளான நேற்று திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தினர்.
இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்டு சிறையில் வாடும் மீனவர்களை விடுதலை செய்யவதில் மத்திய அரசு பாராமுகமாக இருக்கிறது.
மேலும் மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் விதித்த அபராதத்தை செலுத்த முடியாமல் சிறையில் தவித்து வருகிறார்கள். அந்த அபராத தொகையை செலுத்த நாங்கள் பிச்சை எடுக்கிறோம் என்றனர்.
அத்துடன் இந்திய நாட்டிற்கு பல ஆயிரம் கோடியை அந்நியச் செலாவணியாக ஈட்டித்தரும் மீனவர்கள் இன்று பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.
இதற்கிடையே நேற்று இரவு போராட்ட பந்தலுக்கு வருகை தந்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், டெல்லியில் தி.மு.க. எம்.பி.க்கள் பிரச்சனையை முன்னிறுத்தி தீர்வுகாண உத்தரவிட்டு இருப்பதாகவும், இன்னும் 10 நாட்களுக்குள் மீனவர்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.
இருந்தபோதிலும் முதலமைச்சர், பிரச்சனைக்கு தீர்வு காண்பேன் என்று உறுதி அளித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர். அதன்படி இன்று 5-வது நாளாக மீனவர்கள் போராட்டம் தொடர்கிறது.

இந்தநிலையில் இன்று தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் அந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் தயார் நிலையில் தீயணைப்பு வாகனம் கொண்டு வரப்பட்டு பேராட்ட பந்தல் அருகே நிறுத்தப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் தீவிர மடையும் போராட்டத்தால் ராமேசுவரத்தில் 700 விசைப்படகுகளும், மண்டபம் கோவில்வாடி பகுதியில் 150 படகுகளும் கடலுக்கு செல்லவில்லை. இதனால் தற்போது வரை ரூ.30 கோடிக்கும் மேல் மீன்பிடி வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்தவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகிறார்கள்.
முன்னதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள விசைப்படகு உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும், இலங்கை சிறையில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு வழங்கப்படும் தின உதவித்தொகை ரூ.350-ல் இருந்து ரூ.500-ஆக உயர்த்தி வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார்.
- தேசிய குறியீடான நிஃப்டி 22,000 புள்ளிகளாக இருந்தது.
- இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.
பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று (செவ்வாய் கிழமை) காலை சரிவுடன் தொடங்கியது. மும்பை பங்குச் சந்தை குறியீடான பி.எஸ்.இ. சென்செக்ஸ் இன்று காலை 72,800 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது. தேசிய குறியீடான நிஃப்டி 22,000 புள்ளிகளாக இருந்தது.
இன்றைய நாளின் தொடக்கத்தில் (காலை 9.17 மணி நிலவரம்) பி.எஸ்.இ. சென்செக்ஸ் 378 புள்ளிகள் சரிவடைந்தது. நிஃப்டி 146 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. சர்வதேச நிர்வாக முதலீடு விற்பனை, அமெரிக்க வரி விதிப்பு மற்றும் ரஷியா-உக்ரைன் போர் என பல்வேறு காரணங்களால் நேற்று (திங்கள்கிழமை) இந்திய பங்குச் சந்தைகள் சரிவுடன் முடிவடைந்தன.
நேற்றைய நிலவரப்படி சர்வதேச போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் (எஃப்.ஐ.ஐ.) ரூ. 4 ஆயிரத்து 781 கோடி மதிப்பிலான விற்பனையை பதிவு செய்தனர். உள்நாட்டு நிர்வாக முதலீட்டாளர்கள் ரூ. 8 ஆயிரத்து 790 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர்.
- வெள்ளி விலையும் உயர்வு
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இம்மாத தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.63,520-க்கு விற்பனையானது. தொடர்ந்து மறுநாளான ஞாயிற்றுக்கிழமை மற்றும் நேற்று விலை மாற்றமின்றி விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,010-க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,080-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
03-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
02-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
01-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,520
28-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,680
27-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 64,080
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
03-03-2025- ஒரு கிராம் ரூ.106
02-03-2025- ஒரு கிராம் ரூ.105
01-03-2025- ஒரு கிராம் ரூ.105
28-02-2025- ஒரு கிராம் ரூ.105
27-02-2025- ஒரு கிராம் ரூ.106
- வாகன தணிக்கை, போக்குவரத்தை சீர் செய்யும் போக்குவரத்து காவலர்களுக்கு ஏ.சி. ஹெல்மெட் வழங்கப்பட்டது.
- காவலர்களுக்கு நாரால் செய்யப்பட்ட தொப்பியும், கண்ணாடியும் வழங்கப்பட்டன.
சென்னையில் அதிகாலையில் காணப்பட்ட பனிமூட்டம் குறைந்து தற்போது வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும்.
இந்நிலையில் கோடை வெயிலை சமாளிக்கும் வகையில் ஆவடி காவல் ஆணையரக போக்குவரத்து காவலர்களுக்கு காவல் ஆணையர் சங்கர் ஏ.சி. ஹெல்மெட் வழங்கினார்.
வாகன தணிக்கை மற்றும் போக்குவரத்தை சீர் செய்யும் 50-க்கும் மேற்பட்ட போக்குவரத்து காவலர்களுக்கு ஆவடி காவல் ஆணையர் சங்கர், கூடுதல் காவல் ஆணையர் பவானீஸ்வரி ஆகியோர் ஏ.சி. ஹெல்மெட் வழங்கினர். இதேபோல் காவலர்களுக்கு நாரால் செய்யப்பட்ட தொப்பியும், கண்ணாடியும் வழங்கப்பட்டன.






