search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Congress"

    • பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்நிலையில், பிரியங்கா காந்தி வேட்புமனுவில் இணைக்கப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரம் வெளியாகியுள்ளது.

    இதுகுறித்து பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

    பிரியங்கா காந்தியின் கையில் ரூ.52 ஆயிரம் ரொக்கப்பணம் உள்ளது. 30.09.2024ம் தேதியின் படி பிரியங்கா காந்தியின் டெல்லி எச்டிஎப்சி வங்கி கணக்கில் ரூ.2.80 லட்சம் பணம் உள்ளது. டெல்லி யுசிஓ வங்கியில் ரூ.80,399 ரொக்கப்பபணம் இருக்கிறது. அதேபோல் கேரளா கனரா வங்கியில் ரூ.5,929 சேமிப்பாக இருக்கிறது.

    மியூச்சுவல் பண்ட் முறையில் ரூ.2.24 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. சொந்தமாக ஹோண்டா சிஆர்வி கார் உள்ளது. இந்த காரை அவரது கணவர் ராபர்ட் வதேரா 2004ல் பரிசளித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதன் மதிப்பு ரூ.8 லட்சமாகும். ரூ.1.15 கோடி மதிப்புக்கு தங்க நகை ஆபரணங்கள் உள்ளன. இதுதவிர ரூ.29.55 லட்சம் மதிப்பிலான 59.83 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளது.

    மொத்தம் ரூ.4 கோடியே 24 லட்சத்து 78 ஆயிரத்து 689க்கு அசையும் சொத்து உள்ளது. அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் மொத்தம் ரூ.37.91 கோடிக்கு அசையும் சொத்து உள்ளது. அதேபோல் அசையா சொத்துகளை எடுத்து கொண்டால் பிரியங்கா காந்தியிடம் ரூ.7 கோடியே 74 லட்சம் உள்ளது. அவரது கணவர் ராபர்ட் வதேராவிடம் ரூ.27 கோடியே 64 லட்சத்துக்கு அசையா சொத்துகள் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி மொத்தமாக பார்த்தால் பிரியங்கா காந்தியிடம் அசையும் மற்றும் அசையா சொத்துகள் என்று மொத்தம் சுமார் ரூ.12 கோடிக்கு சொத்துகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
    • காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    வயநாடு மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி, இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    அதற்கு முன்பாக, காங்கிரஸ் சார்பில் ரோடு-ஷோ நடைபெற்றது. இதைதொடர்ந்து, பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மட்டுமின்றி, சோனியாகாந்தி, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், இந்த ரோடு-ஷோவில் பங்கேற்ற கன்னியாகுமரி தொகுதி எம்.பி., விஜய் வசந்த் இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    அன்னை சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் உடனிருக்க, லட்சக்கணக்கான தொண்டர்கள் படைசூழ இன்று பிரியங்கா காந்தி வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

    வயநாடு தொகுதியின் இடைத்தேர்தல் விரைவில் நடைபெறுகிறது. அதற்கான ஊர்வலத்தில் கலந்துக் கொள்வதற்கு மிக்க மகிழ்ச்சி. மாபெறும் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றிப் பெற்று பாராளுமன்றத்தில் அவரது குரல் உயர்ந்து இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகா விகாஸ் அகாதி எதிர்கட்சி கூட்டணி பா.ஜ.க.வை சந்திக்கிறது.
    • கடந்த 1 வாரமாக மோதல் போக்கு நிலவியது.

    மராட்டிய சட்டசபை தேர்தலில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவற்றை கொண்ட மகா விகாஸ் அகாதி எதிர்கட்சி கூட்டணி பா.ஜ.க.வை சந்திக்கிறது.

    தொகுதி பங்கீடு தொடர்பாக எதிர்கட்சிகள் இடையே கடந்த ஓரு வாரமாக மோதல் போக்கு நிலவியது. மாநில காங்கிரஸ் தலைவர் நானா படேல், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இந்த நிலையில் தொகுதி பங்கீடு தொடர்பாக ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் காங்கிரஸ் 105 இடங்களிலும், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா 95 தொகுதி யிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 84 இடங்களிலும் போட்டியிட உள்ளன. எஞ்சிய 4 தொகுதிகள் சமாஜ்வாடி மற்றும் பி.டபிள்யூ.பி. கட்சிகளுக்கு ஒதுக்கப்படுகிறது.

    தலைநகரான மும்பையில் உத்தவ் தாக்கரே சிவசேனா 18 இடங்களிலும், காங்கிரஸ் 14 தொகுதிகளிலும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.

    • ஜார்கண்டில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளில் போட்டியிடுகின்றன
    • தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன

    ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திக்கின்றன.

    ஜார்கண்டில் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், 35 பேர் கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வெளியிட்டுள்ளது. முதல்வர் ஹேமந்த் சோரன் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக உள்ள பர்ஹைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவரது மனைவி கல்பனா சோரன் காண்டே தொகுதியிலும் ஹேமந்த் சோரனின் சகோதரரான பசந்த் சோரன் தும்கா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 

    • வயநாடு தொகுதிக்கு நவம்பர் 13-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ரேபரேலி தொகுதி எம்.பி.யுமான ராகுல் காந்தி வயநாடு தொகுதியில் இருந்தும் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார். இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் வயநாடு தொகுதி எம்.பி.யை ராஜினாமா செய்தார்.

    இதனால் நவம்பர் 13-ந்தேதி வயநாட்டில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி சகோதரி பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறார்.

    இந்த நிலையில் வயநாட்டிற்கு பிரியங்கா காந்தியை விட சிறந்த பிரதிநிதியை கற்பனை செய்து பார்க்க முடியாது ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் "வயநாட்டு மக்களுக்கு என் இதயத்தில் சிறந்த இடம் வைத்துள்ளேன். என்னுடைய சகோதரியை விட அவர்களுக்கு சிறந்த பிரதிநிதியை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

    அவர் நாடாளுமன்றத்தில் வயநாட்டின் சக்திவாய்ந்த குரலாகவும் இருப்பார் என்று நான் நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

    • மராட்டிய மாநில விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பா.ஜனதாதான்.
    • அங்கு 20 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    பா.ஜனதா ஆட்சி நடக்கும் மராட்டிய மாநிலத்தில், அடுத்த மாதம் 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது.

    இதையொட்டி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மராட்டிய மாநில விவசாயிகளின் மிகப்பெரிய எதிரி பா.ஜனதாதான். அங்கு 20 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயத்துக்கான நிதிஒதுக்கீடு குறைக்கப்பட்டு விட்டது. மராட்டிய மாநிலத்தை வறட்சியற்ற மாநிலம் ஆக்குவோம் என்ற வாக்குறுதி வெற்று முழக்கமாகி விட்டது.

    காப்பீட்டு நிறுவனங்களுக்கு பா.ஜனதா அரசு ரூ.8 ஆயிரம் கோடி வழங்கி வருகிறது. ஆனால், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மறுத்து விட்டது.

    வெங்காயம், சோயாபீன் ஆகியவற்றுக்கான ஏற்றுமதி வரி உயர்த்தப்பட்டதால் அவற்றை விளைவிக்கும் விவசாயிகள் ஏற்றுமதி வரி சுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தி, கரும்பு உற்பத்தி வீழ்ச்சி அடைந்ததால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

    மராட்டிய மாநிலத்தில் உள்ள பால் கூட்டுறவு சங்கங்கள் சிக்கலில் உள்ளன. அதை அரசும் ஒப்புக்கொண்டுள்ளது.

    இந்தநிலையில் பா.ஜனதாவின் இரட்டை என்ஜின் அரசை அகற்றினால்தான் விவசாயிகளுக்கு நன்மை விளையும் என்று மராட்டிய மாநிலம் முடிவு செய்து விட்டது. மகாபரிவர்த்தன் என்ற காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
    • இந்தியா கூட்டணியில் தொகுதி பங்கீடு ஏறத்தாழ நிறைவு பெற்றுள்ளது.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல் நவம்பர் 13 மற்றும் 20 தேதிகளில் இரு கட்டமாக நடைபெற உள்ளது.

    ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஓரணியாக தேர்தலைச் சந்திக்கின்றன. மறுபுறம் பா.ஜ.க, ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் (ஏ.ஜே.எஸ்.யூ.) ஐ.ஜ.த., லோக் ஜனசக்தி (எல்.ஜே.பி.,) ஆகியன ஓரணியாக உள்ளன.

    தொகுதி பங்கீடு குறித்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அதில், பா.ஜ.க. 68 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஏ.ஜே.எஸ்.யூ.10 தொகுதிகளிலும், ஐ.ஜ.த. 2 தொகுதிகளிலும், எல்.ஜே.பி. ஒரு தொகுதியிலும் போட்டியிடுவது என முடிவானது.

    இந்நிலையில், இந்தியா கூட்டணி கட்சியில் தொகுதி பங்கீடு நிறைவு பெற்றுள்ளது. அதன்படி, மொத்தம் உள்ள 81 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் 70 தொகுதிகளிலும், ஆர்.ஜே.டி, கம்யூனிஸ்ட் கட்சிகள் இதர தொகுதிகளிலும் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    எந்தக் கட்சி எத்தனை இடங்களில் போட்டி என்ற விவரங்களை இந்தியா கூட்டணி வெளியிடவில்லை.

    ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படுகின்றன

    • எந்த புள்ளி விவரத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிற பா.ஜ.க.வினர், ஐ.நா. சபை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறது?
    • அவலநிலை நீடிக்குமேயானால் நாட்டு மக்களின் கடும் கோபத்திற்கு பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2014, 2019 பாராளுமன்ற தேர்தல் பரப்புரைகளின் போது 2024-ம் ஆண்டுக்குள் இந்திய பொருளாதாரத்தை 5 டிரில்லியன் கோடி டாலராக உயர்த்துவதோடு நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தை இரட்டை இலக்கில் உறுதி செய்வோம் என்று பிரதமர் மோடி வாக்குறுதி வழங்கினார்.

    கடந்த 10 ஆண்டுகால ஆட்சிக்காலத்தில் அவர் கொடுத்த வாக்குறுதியின்படி இந்தியாவில் வளர்ச்சி ஏற்படவில்லை. தற்போது உலக நாடுகளில் இந்திய பொருளாதாரம் 5-வது இடத்தில் இருப்பதாகவும், அதை மூன்றாவது இடத்திற்கு கொண்டு வருவோம் என்றும் பேசி வருகிறார்.

    இந்தியாவை பொருளாதார வல்லரசாக உயர்த்துவேன் என்று மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டின் அடிப்படையில் பேசுகிற பிரதமர் மோடியின் ஆட்சியில் மக்களின் வாழ்க்கை தரமும், மனிதவளமும் குன்றி வறுமையின் கோரப்பிடியில் எந்த அளவிற்கு சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஐ.நா. சபையின் தரவரிசை பட்டியல் அம்பலப்படுத்தியிருக்கிறது.

    எந்த புள்ளி விவரத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிற பா.ஜ.க.வினர், ஐ.நா. சபை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கைக்கு என்ன பதில் கூறப் போகிறது? மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, வாக்கு வங்கியை விரிவுபடுத்தி தேர்தலில் வெற்றி பெறுவதை நோக்கமாக கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழிவந்த பா.ஜ.க.வினர் மக்களின் உண்மையான வளர்ச்சி மீது அக்கறையில்லை என்பதையே ஐ.நா. சபையின் புள்ளி விவரம் சுட்டிக்காட்டுகிறது. இத்தகைய அவலநிலை நீடிக்குமேயானால் நாட்டு மக்களின் கடும் கோபத்திற்கு பா.ஜ.க. ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பொதிகை என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
    • டிடி தமிழ் தொலைக்காட்சிக்கு காவி நிறத்தில் லோகோ உருவாக்கப்பட்டதற்கும் கண்டனம் எழுந்தது.

    சென்னை தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களை ஒட்டி ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன.

    இந்நிலையில், நாளை நடைபெறும் இந்தி மாத கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கெனவே பொதிகை என்ற பெயரில் செயல்பட்ட தொலைக்காட்சி டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. டிடி தமிழ் தொலைக்காட்சிக்கு காவி நிறத்தில் லோகோ உருவாக்கப்பட்டதற்கும் கண்டனம் எழுந்தது.

    தமிழ் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதால் தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் டிடி தமிழ் நிகழ்ச்சியில் இந்தி மாதம் கொண்டாட்டங்கள் நடந்ததற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அவரது எக்ஸ் பதிவில், "தமிழ் மக்களின் உணர்ச்சிகளை மீண்டும் மீண்டும் சீண்டிப் பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு ஏற்கனவே பொதிகை என்ற பெயரில் இருந்த தொலைக்காட்சியை டிடி தமிழ் என்று மாற்றம் செய்தது மட்டுமல்லாமல் பெயரளவில் தமிழை வைத்துவிட்டு தங்களின் குறுகிய எண்ணமான இந்தி திணிப்பை தற்போது அதே தொலைக்காட்சியின் வாயிலாக நடத்த திட்டமிட்டு இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது, இது போன்று மக்கள் விரோத போக்கை ஒரு நாளும் தமிழ் மண்ணில் வாழ்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

    ஒன்றிய பாஜக அரசின் இந்தி மாத கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    • 1952-ல் இவரது தந்தை எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    • அப்போது இருந்து காங்கிரஸ் பாரம்பரியத்தை தொடர்ந்து வந்தவர் அஜய் சிங் யாதவ்.

    அரியானா சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து இன்று பா.ஜ.க.வின் நயாப் சிங் சைனி முதல்வராக பதவி ஏற்ற நிலையில், அம்மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மந்திரியுமான கேப்டன் அஜய் சிங் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

    சோனியா காந்தி கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், உயர் தலைவர்கள் தன்னை இழிவாக நடத்தியது ஏமாற்றம் அளிக்கிறது என குற்றம்சாட்டியுள்ளார்.

    இவர் அகில இந்தியா காங்கிரஸ் கட்சியின் ஓபிசி சேர்மனாகவும் இருந்து வந்தார். அந்த பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

    சோனியா காந்தி தலைவர் பதவியில் இருந்து விலகிய பின்னர், தன்னை இழிவுப்படுத்தும் வகையில் கட்சி நடத்தியதால் ஏமாற்றம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

    அஜய் சிங் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் "காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்க எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளது.

    ராஜினாமா செய்ய வேண்டும் என எடுத்தது மிகவும் கடினமான முடிவு. எங்களுடைய குடும்பம் 70 வருடங்களாக காங்கிரஸ் கட்சியுடன் பயணித்துள்ளது. என்னுடைய மறைந்த தந்தை ராவ் அபேய் சிங் 2952-ல் எம்.எல்.ஏ. ஆனார். அதன்பிறகு நான் குடும்ப பாரம்பரியத்தை தொடர்ந்தேன். ஆனால் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் தன்னை இழிவாக நடத்திய விதம் ஏமாற்றம் அளிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

    அந்த பதிவில் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை டேக் செய்துள்ளார்.

    • நாகேந்திரா மீது 18 கிரிமினல் வழக்குள் உள்ளதாக ஜனார்த்தன ரெட்டி விமர்சனம்.
    • 100 வழக்குகள் உள்ளவர்கள் முதல்வரான சம்பவம் நடந்துள்ளதாக நாகேந்திரா பதிலடி.

    கர்நாடக மாநில மந்திரியாக இருந்தவர் நாகேந்திரா. வால்மீகி கார்ப்பரேசன் மோசடி வழக்கில், மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கில் சிறைக்குச் சென்ற அவர் நேற்று ஜாமினில் விடுதலையானார். ஜாமினில வெளியே வந்த நாகேந்திரா, தனக்கு கர்நாடக மாநில முதல்வராகும் தகுதி உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    நாகேந்திரா மீது 18 கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஜனார்த்தன ரெட்டி எம்.எல்.ஏ. கூறியிருந்த நிலையில் "100 கிரிமினல் வழக்குகள் உள்ளவர் முதலமைச்சராகிய சம்பவம் உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    89.63 கோடி ரூபாய் மோசடி குற்றச்சாட்டு காரணமாக நாகேந்திரா தனது பழங்குடியினர் நலத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அமலாக்கத்துறை அவரை கைது செய்த நிலையில் சுமார் மூன்றரை மாதங்கள் கழித்து நேற்று ஜாமினில் வெளியே வந்தார்.

    தன்மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நாகேந்திரா கூறுகையில் "வெறும் 18 வழக்குகள் அல்ல. 100 வழக்குகள் உள்ளவர்கள் முதல்வராகி இருக்கிறாரக்ள். வரும் நாட்களில் எனக்கும் சிறப்பான எதிர்காலம் உள்ளது. நான் காங்கிரசுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தால், நான் ஏன் முதலமைச்சராக ஆகக்கூடாது?. என்னைப் போன்ற சாதாரண உழைப்பாளியை காங்கிரஸ் அமைச்சராக்கவில்லையா? சாதாரணவர்களையும் கவுரவிக்கும் பாரம்பரியம் காங்கிரசுக்கு உண்டு" என்றார்.

    • வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றிருந்தார்
    • கேரள மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன.

    திருவனந்தபுரம், அக்.16

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26-ந்தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் வெளியானது. இதில் 18 தொகுதிகளின் காங்கிரஸ் கூட்டணி கட்சி களும், பாஜக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

    வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி  பெற்றிருந்தார். ஆனால் அவர் தனது தாய் சோனியா காந்தியின் தொகுதியாக உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்ட நிலையில் அங்கும் வெற்றிபெற்றார். இரண்டு தொகுதிகளில் ஒன்றை மட்டுமே தேர்தெடுக்க வேண்டும் என்ற சூழல் எழுந்ததால் வட மாநிலங்களில் காங்கிரசை வலுப்படுத்தும்   நோக்கத்தில் ரேபரேலி தொகுதி எம்.பி.யாகவே பதவியேற்றார். இதனால் வயநாடு மக்களவை தொகுதி காலியான தாக அறிவிக்கப்பட்டது.

    மேலேயும் மக்களவை தேர்தலில் கேரளாவில்  2 எம்.எல்.ஏ.க்.கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அதாவது செலக்கரா தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ராதாகிருஷ்ணன் ஆலத்தூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

    பாலக்காடு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கி ரஸ் கட்சியை சேர்ந்த ஷாபி பரம்பில் வடகரா மக்களை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர்கள் இருவரும் எம்.பி.க்களாக பதவியேற்றனர். இதனால் செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளும் காலியான தாக அறிவிக்கப்பட்டன.

    வயநாடு மக்களவை தொகுதி மற்றும் செலக்கரா-பாலக்காடு சட்டமன்ற தொகுதிகள் ஆகிய 3 தொகுதிகளும் 4 மாதங்களுக்கு மேலாக காலியாக இருந்ததால், அந்த தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்ற சூழல் நிலவியது.  

    இந்தநிலையில் வயநாடு மக்களவை தொகுதி, பாலக்காடு மற்றும் செலக்கரா சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்புடன் இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.  அதன்படி அந்த 3 தொகுதிகளுக்கும் வருகிற நவம்பர் 13-ந்தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என்றும், அதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 18-ந்தேதி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

    இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கேரள மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன. நாளைமறுநாள் வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கிறது. அரசியல் கட்சியினரும் இடைத்தேர்த லுக்கு தயாராக தொடங்கி விட்டனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது.

    வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாகவே தெரிவிக்கப் பட்டிருந்த நிலையில், அது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை நேற்று இரவு வெளியாகியுள்ளது.

    இதனால் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது. அதேபோல் பாலக்காடு மற்றும் செலக்கரா சட்ட சபை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களையும் காங்கிரஸ் கட்சி அறிவித்துவிட்டது.

    தொடர்ந்து வயநாடு தொகுதியில் போட்டியிடும் பிரியங்காகாந்தி பிரசா ரத்தில் ஈடுபட கேரளாவுக்கு வருகிறார். அவருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட ராகுல்காந்தியும் வர உள்ளார். மற்ற காட்சிகள் யாரை நிறுத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருகின்றன.

    வயநாடு மக்களவை தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்திருப்பதால், அவருக்கு கடும் போட்டியாக இருக்கும் வகையில் வேட்பாளரை களமிறக்க பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் முடிவு செய்துள்ளன. பாலக்காடு சட்டசபை தொகுதி ஏற்கனவே காங்கிரஸ் வசம் இருந்தது.

    அதனை மீண்டும் தனதாக்கிக்கொள்ள காங்கிரஸ் திட்டமிட்டு தேர்தல் பணி களை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் செலக்கரா தொகுதியை மீண்டும் தனதாக்கிக்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டிருக்கிறது. அதற்கு தகுந்தாற்போல் வேட்பாளர்களை களமிறக்க இரு கட்சிகளும் முடிவு செய்துள்ளன. இவர்களுக்கு மத்தியில் பாஜகவும் வேட்பாளர்களை களமிறக்குகிறது.

    ×