என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை 5 லட்சத்து 31,394 குறைந்திருக்கிறது.
    • திமுகவின் ஒட்டுமொத்த 5 ஆண்டு ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 13.28 லட்சம் குறைந்திருக்கும்.

    பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை இரு ஆண்டுகளில் 5.31 லட்சம் குறைந்திருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அரசு பள்ளிகளை மேம்படுத்துவதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, திட்டமிட்டு அரசு பள்ளிகளை சீரழித்து வருவது கண்டிக்கத்தக்கது.

    நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்களுக்கு விடையளித்த மத்திய அரசு, இந்தியா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் எண்ணிக்கை, மாணவர்கள் & ஆசிரியர்கள் எண்ணிக்கையை மாநில வாரியாக வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 2022&23ஆம் ஆண்டில் மொத்தமுள்ள 37,658 அரசு பள்ளிகளில் 50 லட்சத்து 42,026 மாணவர்கள் பயின்று வந்தனர். இது 2023&24ஆம் ஆண்டில் 48 லட்சத்து 40.034 ஆகவும், 2024&25ஆம் ஆண்டில் 45 லட்சத்து 10,612 ஆகவும் குறைந்திருக்கிறது. அதாவது இரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை 5 லட்சத்து 31,394 குறைந்திருக்கிறது.

    திமுக ஆட்சியில் இரு ஆண்டுகளில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இந்த அளவுக்கு குறைந்திருக்கிறது என்றால், திமுகவின் ஒட்டுமொத்த ஐந்தாண்டு ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை சுமார் 13.28 லட்சம் குறைந்திருக்கும். அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு 5 முதல் 6% அளவுக்கு குறைந்து வருவது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாததாகும்.

    அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதாக தொடர்ந்து கூறி வருகிறேன். கடந்த 2015&16ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 45.10 லட்சமாக குறைந்து விட்டது என மத்திய அரசே தெரிவித்திருக்கிறது. இதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சி கூறி வந்த குற்றச்சாட்டு உண்மை என நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 30 லட்சம் குறைந்திருக்கிறது என்றால் அதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யப்பட வேண்டும்.

    அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதற்கு இரு முக்கிய காரணங்கள் உண்டு. அவற்றில் முதலாவது அரசு பள்ளிகளின் மேம்பாட்டுக்காக போதிய நிதி ஒதுக்காதது, ஆசிரியர்களை நியமிக்காதது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாதது ஆகியவை ஆகும். இரண்டாவது, தனியார் பள்ளிகள் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக அரசு பள்ளிகளை திட்டமிட்டு சீரழிப்பது ஆகும். இந்த இரு வழிகளிலுமே அரசு பள்ளிகளின் வீழ்ச்சிக்கு திமுக காரணமாக இருப்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

    திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. 2021-ஆம் ஆண்டு தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையில் ''மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு 3 மடங்காக உயர்த்தப்படும்'' என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குறுதி பத்தாண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 2020-& 21-ஆம் ஆண்டில் பள்ளிக்கல்விக்கான ஒதுக்கீடு ரூ.34 ஆயிரத்து 181 கோடியாக இருந்தது. இது 2020&-21ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பான ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்து 436 கோடியில் முறையே 1.65%ஆகும். 2024-&25ஆம் ஆண்டுக்கு கணக்கிட்டால் கல்விக்கான ஒதுக்கீடு ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 271 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். ஆனால், கல்விக்கு ரூ.44,042 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது திமுக அரசு. இது திமுக ஒதுக்குவதாக கூறிய தொகையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவு.

    அதிமுக ஆட்சியில் கல்விக்கு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 1.65% நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் இப்போது அது 1.39% ஆக குறைந்து விட்டது. ஒரு மாநிலத்தின் நிதிநிலை அறிக்கை மதிப்பில் குறைந்தது 15% கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட வேண்டும். ஆனால், தமிழக அரசு அதன் நிதிநிலை அறிக்கை மதிப்பில் வெறும் 13.7% மட்டுமே ஒதுக்கியுள்ளது. கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழ்நாடு 22&ஆம் இடத்தில் உள்ளது. தமிழக அரசு பள்ளிகளுக்கு வெகு காலமாகவே ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அரசு பள்ளிகளில் அதிக எண்ணிக்கையில் தற்காலிக ஆசிரியர்கள் தான் நியமிக்கப்பட்டு வருகின்றனர் என்ற போதிலும் 2022&23ஆம் ஆண்டில் இருந்ததை விட, 2024&25ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை 7884 குறைந்திருக்கிறது. இத்தகைய சூழலில் அரசு பள்ளிகள் பராமரிக்கப்பட்டு வந்தால், மாணவர் எண்ணிக்கை குறைவதை தடுக்க முடியாது.

    அடுத்ததாக பத்தாண்டுகளுக்கு முன் 36.56 லட்சமாக இருந்த தனியார் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை இப்போது 63.42 லட்சமாக அதிகரித்து விட்டது. அரசு பள்ளிகளின் மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு மாறியதால் தான் இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. தனியார் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே அரசு பள்ளிகளை ஆட்சியாளர்கள் திட்டமிட்டு சீர்குலைத்து வருகின்றனர் என்ற பாட்டாளி மக்கள் கட்சியின் குற்றச்சாட்டு இதன் மூலம் உறுதியாகிறது.

    அரசு பள்ளிகளை மேம்படுத்தியவர் கர்மவீரர் காமராசர் என்றால், அவற்றை சீர்குலைத்தது திமுக அரசு தான் என்பது வரலாற்றில் அழிக்க முடியாத அளவுக்கு பொறிக்கப்பட்டிருக்கிறது. அரசு பள்ளிகளை சீரழித்தது மட்டும் தான் திமுகவின் சாதனையாகும். இந்த சீரழிவை திமுக அரசால் சரி செய்ய முடியாது. அடுத்து அமையவுள்ள ஆட்சியில் இந்த சீரழிவுகளை சரி செய்து, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு பா.ம.க நடவடிக்கை எடுக்கும்.

    • மீட்புப் படையினர் கிளப்பில் தீயை அணைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மறுபுறம் லூத்ரா சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டனர்.
    • கிளப்பின் சட்டவிரோத கட்டுமானம் குறித்து ரவி ஹர்மல்கர் என்ற சமூக சேவகர் புகார் அளித்த பிறகு, அதை இடிக்க உத்தரவிடப்பட்டபோதும் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

    கோவாவின் அர்போரா பகுதியில் இயங்கி வந்த, 'பிர்ச் பை ரோமியோ லேன்' இரவு விடுதியில், கடந்த 6ம் தேதி நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் விடுதி ஊழியர்கள் 20 பேர், வாடிக்கையாளர்கள் ஐந்து பேர் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் இந்த விடுதியின் உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களை நாடு கடத்தும் பணிகள் நடந்து வருகிறது.

    கிளப்பின் சட்டவிரோத கட்டுமானம் குறித்து ரவி ஹர்மல்கர் என்ற சமூக சேவகர் புகார் அளித்த பிறகு, அதை இடிக்க உத்தரவிடப்பட்டபோதும் கிளப் தொடர்ந்து செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.

    முன்னதாக கோவா காவல்துறை நடத்திய விசாரணையில், விபத்து நடந்ததும் தீயணைப்புப் படையினரும் பிற மீட்புப் படையினரும் கிளப்பில் தீயை அணைக்க முயன்று கொண்டிருக்கும்போது, மறுபுறம் லூத்ரா சகோதரர்கள் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டனர். 

    விபத்து நடந்த சில மணி நேரங்களில் அதிகாலை 1:17 மணிக்கு, இருவரும் மேக் மை டிரிப் தளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இருவரும் அதிகாலை 5:30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் ஏறி நாட்டை விட்டு வெளியேறினர். தாய்லாந்தின் ஃபூகெட்டுக்கு அவர்கள் சென்றுள்ளனர்.

    இந்தச் சகோதரர்களைப் பிடிக்க சிபிஐ கோரிக்கையின் பேரில் இன்டர்போல் புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

    மேலும் தாய்லாந்து போலீசாரை இந்திய அதிகாரிகள் தொடர்பு கொண்டு சகோதரர்கள் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இந்த நிலையில் சவுரப் லூத்ரா, கவுரவ் லூத்ரா ஆகியோரை இன்று அதி காலை தாய்லாந்து போலீ சார் கைது செய்து உள்ளனர். அவர்கள் இருவரும் புக்கெட்டில் உள்ள தடுப்பு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடைமுறை தொடங்கப்பட்டு உள்ளன.

    இதுதொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, கோவா கிளப்பின் உரிமையாளர்களான லூத்ரா சகோதரர்கள் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் குடிவரவு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு அவை முடிந்ததும் இன்று மாலை அல்லது நாளைக்குள் இருவரும் விமானம் மூலம் இந்தியாவுக்குத் திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என்றனர்.

    லூத்ரா சகோதரர்கள் பாஸ்போர்ட்களை ரத்து செய்வது குறித்து வெளியுறவு அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

    மேலும் திங்களன்று, இதேபோன்ற முறையில் இயங்கி வந்த ரோமியோ கிளப்புக்குச் சொந்தமான இரண்டு இரவு விடுதிகளை அதிகாரிகள் மூடினர்.

    மேலும் இரவு விடுதியின் இணை உரிமையாளரான அஜய் குப்தா டெல்லியில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே லூத்ரா சகோதரர்கள் சார்பில் முன்ஜாமீன் கோரி டெல்லி ரோஹினி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட வணிகப் பயணத்திற்காக தாய்லாந்து சென்றதாக அவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த மனு குறித்து நாளை விசாரணை நடைபெறுகிறது. ஆனால் இருவருக்கும் ஜாமீன் வழங்குவதை கோவா காவல்துறை கடுமையாக எதிர்த்துள்ளது. 

    • தி.மு.க. நிர்வாகிகளிடம் விடை பெற்றுக் கொண்டு, காரையும் எஸ்கார்டு வண்டியையும் தில்லை நகர் வீட்டுக்கு புறப்பட கூறிவிட்டு விறுவிறுவென நடக்க தொடங்கினார்.
    • அமைச்சரை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் அவருக்கு வணக்கம் தெரிவிக்க அவரும் புன்னகையுடன் திரும்ப வணக்கம் தெரிவித்தார்.

    திருச்சி:

    மலைக்கோட்டை மாநகரில் எண்ணிலடங்கா திட்டங்களை ஆளுங்கட்சியில் தான் அமைச்சராக இருந்த காலத்திலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் சரி போராடி பெற்றத்தந்தவர் என்று மக்கள் மத்தியில் பெயர் பெற்றவர் கே.என்.நேரு. தற்போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சராகவும், டெல்டா மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராகவும், தி.மு.க.வின் முதன்மை செயலாளராகவும் இருந்து வருகிறார்.

    தமிழக அமைச்சர்களில் பரபரப்பாகவும், சுறுசுறுப்பாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க.வில் மாபெரும் மாநாடு மற்றும் பொதுக்கூட்டங்களை பிரமாண்டமாக நடத்தி மறைந்த முன்னாள் தலைவர் கருணாநிதியிடமும், தற்போதைய தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினிடமும் பாராட்டு பெற்றவர்.

    2026 சட்டமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு பரபரப்பான அரசியல் புயல் தமிழகத்தை மையம் கொண்டுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் பம்பரமாக பணியாற்றி வருகின்றன. ஒருபுறம் மக்கள் சந்திப்பு பயணங்கள் வேகமெடுத்துள்ள நிலையில், மறுபுறம் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களால் அனல் பறக்கிறது.

    இதற்கிடையே அமைச்சர் கே.என்.நேரு நேற்று இரவு 7 மணி அளவில் திருச்சி உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் அருகே நடைபெற்ற தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காரில் வந்தார். பின்னர் மணமக்களை வாழ்த்திவிட்டு வெளியே வந்த அவர் தி.மு.க. நிர்வாகிகளிடம் விடை பெற்றுக் கொண்டு, காரையும் எஸ்கார்டு வண்டியையும் தில்லை நகர் வீட்டுக்கு புறப்பட கூறிவிட்டு விறுவிறுவென நடக்க தொடங்கினார்.

    அவருடன் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமுவும் சென்றார். பஞ்சவர்ண சுவாமி கோவில் ரோட்டில் இருந்து சாலை ரோடு வழியாக தில்லைநகர் பகுதிக்குள் நுழைந்து தனது வீடு வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றது வழியெங்கிலும் அவரை கடந்து சென்றோரை வியப்பில் ஆழ்த்தியது. முன்னதாக தில்லை நகரில் உள்ள சாலையோர டீக்கடையில் அமர்ந்து டீ குடித்த அமைச்சர் கே.என்.நேரு தன்னை சந்தித்த பொதுமக்களிடம் நலம் விசாரித்ததுடன் ஆட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்தும், நிர்வாகிகளிடம் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்றும் ஓரிரு வரிகளில் கேள்விகளுடன் பதில்களையும் அளித்தவாறு சென்றார்.

    அமைச்சரை அடையாளம் கண்டுகொண்ட மக்கள் அவருக்கு வணக்கம் தெரிவிக்க அவரும் புன்னகையுடன் திரும்ப வணக்கம் தெரிவித்தார். நகராட்சி துறையில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை திரும்பத் திரும்ப நடவடிக்கை எடுக்கச் சொல்லி தமிழக டி.ஜி.பி.க்கு ஒருபுறம் கடிதம் எழுதி வரும் நிலையில், மடியில் கனமில்லை வழியில் பயமில்லை என்பது போல அவர் சொந்த ஊரில் மிகவும் இயல்பாக நடந்து சென்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

    • மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார்.
    • மெஸ்ஸியுடன் ரசிகர்கள் சிறப்பு புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிப்பு.

    அர்ஜென்டினா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வருகிறார். 13-ந் தேதி ஐதராபாத் வரும் கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியுடன் ரசிகர்கள் சிறப்பு புகைப்படங்களை எடுத்துக்கொள்ளலாம். ஒரு புகைப்படத்திற்கு ரூ. 10 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக ஏற்பாட்டுக் குழுவின் ஆலோசகர் பார்வதி ரெட்டி கூறியதாவது:-

    மெஸ்ஸி வருகிற 13-ந் தேதி மாலை ஐதராபாத் வருகிறார். ஃபலக்னுமா அரண்மனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் மெஸ்ஸியை சந்திக்கலாம். நிகழ்வில் நீங்கள் அவருடன் புகைப்படம் எடுக்கலாம். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரூ.9.95 லட்சம் (ஜிஎஸ்டி) கூடுதலாக செலவாகும். இதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் மாவட்ட செயலியில் கிடைக்கும். 100 பேர் மட்டுமே புகைப்படம் எடுக்க முடியும்.

    உப்பல் மைதானத்தில் 3 மணி நேர நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுகளில் மெஸ்ஸி பங்கேற்பார்.

    பின்னர் நடைபெறும் அணிவகுப்பில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மெஸ்ஸியை கவுரவிப்பார். மாவட்ட செயலியில் அனைத்து வகையான டிக்கெட்டுகளும் கிடைக்கும்.

    இந்த நிகழ்வுக்கு கிரிக்கெட் வீரர்கள் அழைக்கப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது தி.மு.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதி.
    • அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நான்கரை ஆண்டு கால கோரிக்கை.

    பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், இடையில் நிறுத்தப்பட்ட உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை மீண்டும் வழங்க வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டுநடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) கூட்டமைப்பு சார்பாக கடந்த 08.12.2025 முதல் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.

    அதற்கான நடவடிக்கைகளில் சங்க நிர்வாகிகள் ஈடுபட்டிருந்த நிலையில் அதற்கு முதல் நாளான 07.12.2025 அன்று இரவிலிருந்தே போராட்டத்திற்கு புறப்படத் தயாரான நிர்வாகிகளை மாநிலம் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்து வீட்டுக் காவலில் வைத்த செயல் கண்டிக்கத்தக்கது.

    அதையும் மீறி பேருந்துகள், தொடர் வண்டிகள் மூலமாக சென்னை சென்ற ஆசிரியர்கள் நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் ஆங்காங்கே வழிமறித்து கைது செய்துள்ளனர். அத்தனை தடைகளையும் தாண்டி சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கூடிய ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் அங்கிருந்து நுங்கம்பாக்கத்திற்கு பேரணியாக புறப்பட்டபோது அங்கும் வந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    அதன் பிறகு டிட்டோ-ஜாக் உயர்மட்டக் குழு நிர்வாகிகளுடன் பள்ளி கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். ஆனால் 3 நாட்களாக போராட்டக் குழுவிடம் அரசு சார்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை, கோரிக்கைகள் குறித்து உத்திரவாதமும் அளிக்கப்படவில்லை. இதனால் நாளை (12.12.2025) அடையாள வேலை நிறுத்தமும், மாவட்டத் தலை நகரங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளனர். மேலும் ஜனவரி மாதம் 6-ம் தேதியிலிருந்து காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளனர்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பது தி.மு.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதி. அதனை நிறைவேற்ற வேண்டும் என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் நான்கரை ஆண்டு கால கோரிக்கை. தற்போது ஆட்சி முடியும் தருவாயில் உள்ளதால் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.

    அதுபோல் சம வேலைக்கு சம ஊதியம் என்கிற அடிப்படையில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பதும், தகுதி உயர்த்துவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதியம் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டதை மீண்டும் வழங்க வேண்டும் என்பதும், வட்டார அளவிலான பதிவு மூப்பு பதவி உயர்வு என்று இருந்ததை மாநில அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என மாற்றியதால் அவர்களின் குடும்ப சூழல் பாதிக்கும் என்பதால் மீண்டும் வட்டார் அளவிலான பதவி உயர்வு பணி மாறுதல் என்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளாகும். மேலும் தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியில் காலியாக உள்ள 30,000-த்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது அவர்களுக்கான கோரிக்கைகள் மட்டுமல்ல, நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்குமானதாகும்.

    எனவே ஆசிரியர் பணியிடம் காலி ஆகாமல் இருக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சரும், தமிழக முதல்வரும் உடனடியாக தலையிட்டு ஆசிரியர்கள் சங்கங்களின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

    • அருகருகே அமைந்த அந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்தன.
    • இந்த விபத்தானது மொராக்கோவில் இந்தாண்டு நடைபெற்ற 2வது பெரிய விபத்தாகும்.

    மொராக்கோவின் 2வது பெரிய நகரமான ஃபெஸ் நகரில் இரண்டு நான்கு மாடி குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழுந்து நேற்று பெரும் விபத்து ஏற்பட்டது.

    அருகருகே அமைந்த அந்த இரண்டு குடியிருப்பு கட்டடங்களிலும் எட்டு குடும்பங்கள் வசித்து வந்த நிலையில் நேற்று ஏற்பட்ட விபத்தில் 19 பேர் உயிரிழந்தர். மேலும் 16 பேர் காயங்களுடன் சிகிச்சை அனுமதிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் தற்போது இந்த சம்பவத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

    இடிபாடுகளுக்கும் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது தெரியாததால் மீட்புப் பணிகள் தொடா்ந்து நடைபெறுகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொங்க உள்ளது.

    இந்த விபத்தானது மொராக்கோவில் இந்தாண்டு நடைபெற்ற 2வது பெரிய விபத்தாகும். முன்னதாக மொராக்கோவில் கடந்த மே மாதம் ஏற்பட்ட மற்றொரு கட்டட விபத்தில் 10 போ் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

    • புதுச்சேரியில் 5 ஆண்டில் 5.13 சதவீதமாக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை 2.18 சதவீதமாக குறைதுள்ளது.
    • எதிர்காலத்தில் பொது தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் உயரதிகாரிகளுடன் அமைச்சர் நமச்சிவாயம் ஆலோசனை நடத்தினார்.

    டி.ஜி.பி. ஷாலினிசிங், ஐ.ஜி.அஜித்குமார் சிங்ளா, டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுக்கள், எஸ்.பி.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    விஜய் பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கிய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங் உட்பட பல்வேறு வகையிலும் சிறப்பாக செயல்பட்ட போலீஸ் அதிகாரிகளை அமைச்சர் நமச்சிவாயம் சால்வை அணிவித்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

    இதனை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுச்சேரி மாநில காவல்துறை 2 நிலைகளில் முதலிடம் பெற்றுள்ளது. மத்திய அரசு புதிதாக 3 சட்டங்களை உருவாக்கி கடைபிடிக்க வழிமுறைகள் வகுத்தது. புதுச்சேரி மாநிலம் 90 நாட்களுக்குள் 80 சதவீத குற்றபத்திரிகையை தாக்கல் செய்து இந்தியாவில் முதலிடத்தை பெற்றுள்ளது. 60 நாட்களில் குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யும் பிரிவில் கேரளா, புதுச்சேரி முதலிடத்தை பெற்றுள்ளது.

    இதற்காக மத்திய உள்துறை மந்திரி புதுச்சேரி அரசை பாராட்டியுள்ளார். அகில இந்திய அளவில் பாகூர் போலீஸ் நிலையம் 8-ம் இடம் பிடித்து மிகப்பெரும் சாதனை செய்துள்ளது.

    பாகூர் போலீஸ் நிலைய போலீசார் அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். வாரந்தோறும் காவல் துறையினர் மக்கள்மன்றம் நடத்தி குறைகளை தீர்த்து வருகின்றனர்.

    இதுவரை 10 ஆயிரத்து 866 புகார் மனு பெற்று 98 சதவீத தீர்வு காணப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த டி.ஜி.பி., ஐ.ஜி. மாநாட்டில் புதுச்சேரியில் நடைபெறும் மக்கள் மன்றத்தை சுட்டிக்காட்டி, நாடு முழுவதும் இதை நடத்த அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் புதுச்சேரி மாநிலத்துக்கு கவுரவம் அளித்துள்ளார்.

    புதுச்சேரியில் 5 ஆண்டில் 5.13 சதவீதமாக இருந்த குற்றங்களின் எண்ணிக்கை 2.18 சதவீதமாக குறைதுள்ளது. சட்ட ஒழுங்கை கட்டுப்படுத்துவதில் புதுச்சேரி காவல்துறை சிறப்பாக செயல்படுகிறது. எதிர்காலத்தில் பொது தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டிய சீனியர் போலீஸ் சூப்பிரண்டு இஷா சிங் த.வெ.க. பொதுக்கூட்டத்தில் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தும் போது த.வெ.க. நிர்வாகிகளிடம் எனது வேலையை ஒழுங்காக செய்ய விடுங்கள் என்று ஆவேசமாக பேசியவர் ஆவார். இவரது இந்த ஆவேசமான பேச்சு சமூக வலைதளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

    • 2003ம் ஆண்டு முதல் விஜயக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பி.டி.செல்வக்குமார் இருந்தார்.
    • கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் உள்ள பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார்.

    தவெக தலைவர் விஜயுடன் 25 ஆண்டு காலம் பயணித்த பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார். 2003ம் ஆண்டு முதல் விஜயக்கு மக்கள் தொடர்பு அலுவலராக பி.டி.செல்வக்குமார் இருந்தார்.

    கலப்பை மக்கள் இயக்க தலைவராகவும் உள்ள பி.டி.செல்வக்குமார் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், பி.டி.செல்வக்குமார் தலைமையிலான நூற்றுக்கணக்கானோர் திமுகவின் இணைந்தனர்.

    விஜய் நடித்து வெளியான புலி திரைப்படத்தை தயாரித்தவர் பி.டி.செல்வக்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.
    • இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட்டு இருந்தார்.

    முக்கியமாக, மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வகை செய்யும் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்பட மொத்தம் 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைப்பதாக கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி அறிவித்தார்.

     

    இதனால் அந்த மசோதாக்களை தமிழக அரசு, 2023-ம் ஆண்டு நவம்பர் 18-ந்தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அவற்றை அவர் ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார்.

    எனவே தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை நாடியது. நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுவை தாக்கல் செய்தது.

     இந்த மனுவை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. நீண்ட கால விசாரணைக்குப்பின் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.

     

    அப்போது தமிழ்நாடு சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கை சட்டவிரோதமானது என நீதிபதிகள் அறிவித்தனர்.

    மேலும் மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் ஆளுநர் தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும் அமைச்சரவையின் ஆலோசனையின்படியே செயல்பட வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள், 10 மசோதாக்களையும் ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநரின் நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

    பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கும் சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி, ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அத்துடன் சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு காலக்கெடு நிர்ணயித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன்படி சட்டசபைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்தனர்.

    சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் வரவேற்றன.

     

    அதேநேரம் இந்த தீர்ப்பு தொடர்பாக ஜனாதிபதி திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி சுப்ரீம் கோர்ட்டின் விளக்கம் கேட்டிருந்தார்.

    இந்த கேள்விகள் தொடர்பாக 5 நீதிபதிகள் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம் நாத், நரசிம்மா, சுந்துர்கர் அடங்கிய இந்த அமர்வில் நடந்த விசாரணை நிறைவடைந்து கடந்த செப்டம்பர் 11-ந்தேதி தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த வழக்கில் கடந்த மாதம் 20-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜனாதிபதி எழுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    அதன்படி மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதி மற்றும் மாநில ஆளுநர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பு அளித்தனர்.

    5 நீதிபதிகளும் ஒருமித்த வகையில் வழங்கிய தீர்ப்பில் அவர்கள் கூறியதாவது:-

    மாநில சட்டசபைகள் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களை, ஆளுநர்கள் அரசியல் சட்டப்பிரிவு 200-ன் கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரத்தை மீறி நீண்ட காலம் கிடப்பில் போட முடியாது.

    அந்தவகையில், மாநில அரசில் 2 நிர்வாக அதிகார மையங்கள் இருக்க முடியாது என பஞ்சாப் அரசுக்கு எதிராக ராம் கபூர் என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே அளித்த தீர்ப்பில் உடன்படுகிறோம்.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் மாநிலத்தின் முதன்மை அதிகார அமைப்பாக இருக்க முடியும்.

    மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் கிடப்பில் போட அனுமதிப்பது என்பது சட்டசபை அதிகாரத்தை மதிப்பிழக்கச்செய்வதாகவும், கூட்டாட்சி கொள்கைக்கு எதிராகவும் அமையும் என கருதுகிறோம்.

    அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200-ன் கீழ் மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர்களுக்கு 3 வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அதாவது ஒப்புதல் அளிப்பது, ஜனாதிபதிக்கு அனுப்பி வைப்பது அல்லது ஒப்புதலை நிறுத்தி வைப்பது, தனது கருத்துடன் சட்டசபைக்கு திருப்பி அனுப்புவது ஆகியவை.

    இதில் ஒன்றை தேர்வு செய்தாக வேண்டும். இதில் மத்திய அரசு கூறுவது போல 4-வது வாய்ப்பு இல்லை. இதில் அமைச்சரவையின் ஆலோசனை இல்லாமல் தன் விருப்புரிமையுடன் செயல்பட முடியும்.

    நிதி மசோதாவாக இல்லாத பட்சத்தில் அந்த மசோதாவுக்கான ஒப்புதலை நிறுத்தி வைக்க முடியும் அல்லது கருத்துகளுடன் சட்டமன்றத்துக்கு மீண்டும் அனுப்பி வைக்கலாம்.

    அதேநேரம் இந்தியா போன்ற ஒரு ஜனநாயக நாட்டில் ஜனாதிபதி, ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிப்பது அரசியல் சாசனத்தின் நெகிழ்வுத்தன்மைக்கு எதிரானது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு கெடு விதிப்பது பொருத்தமாக இருக்காது.

    மசோதாக்கள் சட்டமாகி நடைமுறைக்கு வராத நிலையில், அவை குறித்த ஆளுநர்கள், ஜனாதிபதியின் முடிவுகளை கோர்ட்டு விசாரணைக்கு உட்படுத்த முடியாது. சட்டமாகாத மசோதாக்களின் பொருளடக்கம் குறித்து கோர்ட்டு விசாரிக்க முடியாது.

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் செயல்பாடுகள் கோர்ட்டு விசாரணைக்கு உட்பட்டதல்ல. எனவே, ஆளுநர்களின் முடிவுகளை கோர்ட்டுகள் ஆய்வு செய்ய முடியாது. இது மசோதாக்கள் மீது ஜனாதிபதி எடுக்கும் முடிவுகளுக்கும் பொருந்தும்.

     

    மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல் சாசனத்தில் ஜனாதிபதிக்கு கெடு விதிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு ஜனாதிபதியையும் கட்டுப்படுத்தாது.

    இருப்பினும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்புதல் அளிக்கும் வகையில், ஆளுநர்களின் விருப்புரிமை குறித்து கருத்து தெரிவிக்காமல் முடிவுகளை எடுக்க அளவான உத்தரவுகளை கோர்ட்டு பிறப்பிக்க முடியும்.

    ஆளுநர்களுக்கு எதிராக உரிமையியல் வழக்கு தொடர முடியாத வகையில் அரசியல் சாசனத்தின் 361-வது பிரிவு பாதுகாப்பு அளித்துள்ளது. இருப்பினும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநர்களின் காலதாமதம், விளக்கமற்ற நிலை நிலவும்போது கோர்ட்டு அளவாக தலையிட முடியும்.

    ஆளுநர்கள் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் ஒவ்வொரு மசோதாவுக்கும் ஒப்புதல் அளிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை ஜனாதிபதி பெற தேவையில்லை.

    அதேநேரம் மசோதா குறித்த தெளிவில்லாதபோது அல்லது சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனை தேவைப்படும்போது, ஜனாதிபதி அரசியலமைப்பு சாசனத்தின் 143-வது பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட்டின் ஆலோசனையை கேட்டுப்பெறலாம்.

    ஆளுநர்களின் அரசியலமைப்பு அதிகாரங்களையும், அவர்களின் உத்தரவுகளையும் சுப்ரீம் கோர்ட்டுக்கு சிறப்பு அதிகாரம் அளிக்கும் அரசியலமைப்புப்பிரிவு 142-ன் கீழ் எந்த வகையிலும் மாற்ற முடியாது.

    அந்தவகையில் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும் என்ற கோட்பாட்டை சுப்ரீம் கோர்ட்டு சிறப்பு அதிகாரம் அனுமதிக்கவில்லை.

    ஆளுநர்களின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மசோதா சட்டமாகுமா என்ற கேள்விக்கே இடமில்லை. மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதில் சட்டமியற்றும் பணியை ஐகோர்ட்டுகளோ, சுப்ரீம் கோர்ட்டோ பறித்துக்கொள்ள முடியாது.

    அரசியல்சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை குறைந்தபட்சம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்க வேண்டும் என்ற விதி தொடர்பான கேள்வி நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை.

    சுப்ரீம் கோர்ட்டின் சிறப்பு அதிகாரம் குறித்து ஏற்கனவே விரிவாக பதில் அளித்து விட்டதால், குறிப்பிட்ட பாணியில் பதில் அளிப்பது சாத்தியமில்லை.

    மாநில அரசுகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நிலவும் தாவாக்களை தீர்வுகாணும் சுப்ரீம் கோர்ட்டின் வரம்பு எல்லை குறித்த கேள்வியும் நடைமுறைக்கு பொருத்தமற்றதாக இருப்பதால் பதில் அளிக்கவில்லை என்று தீர்ப்பில் விளக்கம் அளித்துள்ளது.

    இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

    • ஒரு கட்டத்தில் 0-2 என்ற கணக்கில் இந்தியா பின்தங்கி இருந்தது.
    • கடைசி 15 நிமிடங்களில் 4 கோல்கள் அடித்து இந்தியா முத்திரை பதித்தது.

    2 முறை சாம்பியனான இந்திய ஜூனியர் ஹாக்கி அணி முதல் முறையாக வெண்கலம் பதக்கம் பெற்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

    இந்தியாவின் இந்த வெற்றி மிகவும் சிறப்பானது. ஏனென்றால் ஒரு கட்டத்தில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்தது. கடைசி 15 நிமிடங்களில் 4 கோல்கள் அடித்து முத்திரை பதித்தனர்.

    49-வது நிமிடத்தில் அங்கீத் பால் (பெனால்டி கார்னர்), 52-வது நிமிடத்தில் மன்மீத்சிங் (பெனால்டி கார்னர்), 57-வது நிமிடத்தில் ஷர்தானந்த் திவாரி (பெனால்டி ஸ்டிரோக்), 58-வது நிமிடத்தில் அன்மோல் எக்கா (பெனால்டி கார்னர்) ஆகியோர் இந்திய அணிக்கான கோலை அடித்தனர்.

    இந்திய அணி அர்ஜென்டினாவை வீ்த்தி வெண்கல பதக்கம் வென்றது குறித்து தலைமை பயிற்சியாளர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் கூறியதாவது:-

    இந்திய வீரர்கள் நெருக்கடியை சிறப்பாக கையாண்டனர். கடைசி 15 நிமிடத்தில் ஒரு அணியாக ஆடினார்கள். அழுத்தத்தில் இருந்து விடுப்பட்டு ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கூறினேன். அவர்கள் அதை சிறப்பாக செய்தனர். ஆனால் கடுமையான சவாலை எதிர் கொண்டு அவர்கள் இந்த வெற்றியை பெற்றனர். எல்லாவற்றையும் திட்டமிட்டோம். வீரர்களின் அபாரமான செயல்பாட்டை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் என பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
    • புது வேரியண்ட் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.1.24 லட்சம் ஆகும்.

    பஜாஜ் நிறுவனம், புதிய பல்சர் N160 வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதில், 164.82 சிசி என்ஜின் உள்ளது. இது அதிகபட்சமாக 15.68hp பவரையும், 14.65nm டார்க்கையும் வெளிப்படுத்தும். இதற்கு முன்பு அறிமுகமான N160 பைக்கில் ஸ்பிளிட் சீட் இடம்பெற்று இருந்தது.

    புதிய வேரியண்டில், வாடிக்கையாளர்கள் விருப்பத்தை ஏற்று சிங்கிள் சீட்டாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் டிஸ்க் பிரேக்குகள், முன்புறம் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் என பல அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

    பல்சர் N160 புது வேரியண்ட் பியர்ல் மெட்டாலிக் ஒயிட், ரேசிங் ரெட், போலார் ஸ்கை புளூ, புளூ அண்ட் பிளாக் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. புது வேரியண்ட் எக்ஸ் ஷோரூம் விலை சுமார் ரூ.1.24 லட்சம் ஆகும். இது ஸ்பிளிட் சீட் வேரியண்டை விட சுமார் ரூ.2,000 குறைவாகும்.

    • இந்தியாவிற்கு பாரத் என பெயர் சூட்ட பா.ஜ.க. நினைக்கிறது.
    • எஸ்.ஐ. ஆர். வைத்து தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்குகள் நீக்கப்பட உள்ளது.

    மதுரை:

    மதுரையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால் 31 ஆண்டுகளாக ம.தி.மு.க.வை நடத்தி வருகிறேன். முல்லை பெரியாறு, ஸ்டெர்லைட் போன்ற மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக போராடினேன். நீதிபதிகளை நான் மதிக்கிறேன், ஆனால், நீதிபதிகள் வரம்புக்குள் மட்டுமே பேச வேண்டும். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மதுரை ஐகோர்ட்டின் உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதமானது.

    புதிதாக கட்சியை தொடங்கி உள்ள விஜய் பொதுப் பிரச்சனைகளில் தலையிட்டாரா? அல்லது போராட்டங்கள் நடத்தினாரா? தனிப்பட்ட முறையில் விஜயை நான் மதிக்கிறேன்.

    யாரோடு கூட்டு சேர்த்தாலும் தி.மு.க.வை யாராலும் வீழ்த்த முடியாது. தமிழ் நாட்டில் இந்துத்துவா சக்திகள் உள்ளே நுழைய நினைக்கிறது. எந்த கால கட்டத்திலும் எந்த சக்தியும் இங்கு நுழைய முடியாது. தி.மு.க.வை வீழ்த்த வேண்டும் என முயற்சிகள் நடைபெற்று வருகிறது.

    தி.மு.க.வையும், அதன் கூட்டணி கட்சிகளையும் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. கர்வத்தோடும், அகந்தையோடும் தி.மு.க.வை துடைத்தெறிவோம் என அமித்ஷா பேசுகிறார். 100 மடங்கு பலம் கொண்டவர்களால் கூட தி.மு.க.வை வீழ்த்த முடியவில்லை. அமித்ஷா நாவை அடக்கி பேச வேண்டும். கட்சிகளை விமர்சனம் செய்யும்போது மிக கவனத்துடன் பேச வேண்டும்.

    மத்திய அரசு திட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயர் வைத்து பாஜக இந்தியாவை துண்டிக்க பார்க்கிறார்கள். இந்தியாவிற்கு பாரத் என பெயர் சூட்ட பா.ஜ.க. நினைக்கிறது. தி.மு.க. கூட்டணியில் சிறு சலசலப்பு கூட கிடையாது. மீண்டும் தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எஸ்.ஐ. ஆர். வைத்து தமிழ்நாட்டில் 75 லட்சம் வாக்குகள் நீக்கப்பட உள்ளது. அதே எஸ்.ஐ.ஆரை வைத்து 65 லட்சம் வெளிமாநில வாக்குகள் தமிழ்நாட்டில் சேர்க்க திட்டமிடப்பட்டு உள்ளது.

    தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆசை, கனவு எனக்கு கிடையாது, நான் என்றும் முதல்வர் ஆவேன் என பேசியதில்லை. தி.மு.க.-த.வெ.க. இடையே தான் போட்டி என சினிமாவில் பேசும் வசனங்களை போல் பேசி வருகிறார் விஜய். விஜயின் கனவு நினைவாகாது. காகித கப்பலில் கரையை கடக்க முயல்கிறார் விஜய். ஆகாய வெளியில் மணக்கோட்டையை கட்டுகிறார் விஜய். அது வெறும் மண் கோட்டையாக தான் போகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×