என் மலர்
இந்தியா
- மத்திய அமைச்சரவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
- தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமைச்சரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. அதன் பாகங்கள் நாலாபுறத்திலும் சிதறி விழுந்தன. கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தன. இதன் காரணமாக பக்கத்தில் நின்ற பல வாகனங்களும் தீப்பிடித்தன.
இந்த கார் வெடிவிபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். நள்ளிரவு வரை 10 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இது நேற்று 13 ஆக உயர்ந்தது.
சம்பவ இடத்தில் துப்பாக்கிக் குண்டு கிடைத்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
காரை ஓட்டிச்சென்றவர் யார்? என கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது (வயது 35) ஆவார். இவரும் பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்துள்ளார்.
இந்நிலையில் கார் வெடிவிபத்து குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது.
இந்நிலையில், டெல்லி செங்கோட்டை அருகே நடத்தப்பட்டது கொடூரமான பயங்கரவாத செயல் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், "மத்திய அமைச்சரவையில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தாக்குதலில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அமைச்சரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தேச விரோத சக்திகள் கார் மூலமாக வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்கள் நீதியின் முன்பு நிறுத்தப்படுவார்கள்" என்று மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "ஏற்றுமதி நிறுவனங்களுக்கு உதவி அளிக்க ரூ.25,000 கோடி ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
- முதலமைச்சர் அங்கே இருப்பதில் என்ன தவறு?. அவர் இருக்கட்டும்.
- நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம்.
கர்நாடக மாநில முதல்வராக இருக்கும் சித்தராமையா மாற்றப்பட்டு, துணை முதல்வராக இருக்கும் டி.கே. சிவக்குமார் முதல்வராவார் என்ற பேச்சு கர்நாடாக மாநில காங்கிரஸ் தலைவர்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. அதேவேளையில் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்ட தலைவர்கள்தான் இது குறித்து முடிவு செய்வார்கள். அவர்கள் முடிவே இறுதியானது என சித்தராமையா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அம்மாநில மந்திரி பி.இசட். ஜமீர் அகமது கான் சமீபத்தில் சித்தராமையாக 2028-ல் ஐந்து வருடம் முதலமைச்சர் பதவியை நிறைவு செய்த பின்னர் டி.கே. சிவக்குமாரால் முதல்வராக முடியும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் டி.கே. சிவகுமாரிடம் காங்கிரஸ் ஆட்சி இரண்டரை ஆண்டுகள் முடிவடைந்துவிட்டதே, சிலர் நவம்பர் புரட்சி என்கிறார்களே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டி.கே. சிவக்குமார் பதில் அளித்ததாவது:-
மிகவும் மகிழ்ச்சி. முதலமைச்சர் அங்கே இருப்பதில் என்ன தவறு?. அவர் இருக்கட்டும். நாங்கள் கவலைப்படவில்லை. நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றி வருகிறோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். தொடர்ந்து ஒற்றுமையாக இருப்போம்.
இவ்வாறு டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.
- நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோனை நடத்துகிறார்.
- பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டம் தொடங்கியது.
டெல்லி கார் வெடிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.
இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் மோடி முக்கிய ஆலோனை நடத்துகிறார்.
முன்னதாக, டெல்லியில் கார் வெடிவிபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
2 நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உக்ரைன் - ரஷியா இடையிலான போர் 3 ஆண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது.
- இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வருகிறது.
உக்ரைனுக்கும் ரஷியாவுக்கும் இடையே 3 ஆண்டுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச நாடுகள் முயற்சித்து வருகின்றன. எனினும் இதில் உடன்பாடு எட்டப்படவில்லை.
உக்ரைன்–ரஷியா போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என இந்தியாவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். அதிபர் புதின் டிசம்பர் 5 ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தச் சந்திப்பின்போது இரு தரப்பிலும் பாதுகாப்பு, எரிசக்தி, பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் உடனான போர் தொடங்கிய பிறகு, புதினின் முதல் இந்திய பயணம் இதுவென்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. கடைசியாக 2021 டிசம்பர் மாதம், அவர் இந்தியா வந்திருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரியானா தேர்தலுக்குப் பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்ன சொன்னது?.
- காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. ஆனால், முடிவு வேறு மாதிரியாக வந்தது.
பீகாரில் உள்ள 243 தொகுதிகளுக்கு கடந்த 6-ந்தேதி மற்றும் 11-ந்தேதி என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நேற்றைய வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் தனியார் தொலைக்காட்சிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை வெளியிட்டன.
அதில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கருத்து கணிப்பை மீறி நாங்கள் வெற்றி பெறுவோம் என காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.
வழக்கத்திற்கு மாறாக பீகாரில் அதிக சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. ஆளுங்கட்சிக்கு எதிராக மக்கள் திரண்டு வந்து வாக்களித்துள்ளனர். இதனால் மகாகத்பந்தன் கூட்டணி (Mahagathbandhan) வெற்றி பெறும் என ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பீகாரில் மகாகத்பந்தன் கூட்டணிக்கு சாதகமாக காற்று வீசுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கே.சி. வேணுகோபால் கூறியதாவது:-
அரியானா தேர்தலுக்குப் பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு என்ன சொன்னது?. காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டது. ஆனால், முடிவு வேறு மாதிரியாக வந்தது. அதனால் நாம் தேர்தல் முடிவு வரும் வரை காத்திருப்போம். எங்கள் கூட்டணிக்கு சாதகமாக காற்று வீசுகிறது.
முன்னதாக தேர்தல் நடைபெற்று இரவு 8.30 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிவான வாக்குகளின் முழு விவரத்தையும் வெளியிட்டுவிடும். வாக்களித்த ஆண்கள் மற்றும் பெண்கள் விவரங்கள் உள்பட அனைத்து விவரங்களையும் வெளியிட்டு விடும். தற்போது அவர்கள் அவ்வாறு செய்வதில்லை. சில தேர்தல்களில், மொத்த வாக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு அறிவிக்கப்படுகிறது. தேர்தல் ஆணையம் சமரசம் கமிஷனாகி விட்டது என்பதை நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
பீகார் மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளைமறுதினம் (14-ந்தேதி) நடைபெறுகிறது.
- பிரதமர் மோடி 161 அடி உயர கோபுரத்தில் காவிக்கொடி ஏற்றுகிறார்.
- சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பிரமாண்டமான ராமர் கோவிலின் 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி வருகிற 25ம் தேதி காவிக்கொடியை ஏற்ற உள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியுடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், உத்தரபிரதேச கவர்னர் ஆனந்தி பென்படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். மேலும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
விவாக பஞ்சமி தினத்தில் நடைபெறும் இந்நிகழ்ச்சி காலை 9 மணிக்கு பிறகு தொடங்கி பிற்பகல் 2 மணியளவில் நிறைவடையும். அதன் பிறகு விருந்தினர்களுக்கான சிறப்புத் தரிசனம் தொடங்கும்.
பாதுகாப்புக் கருதி அன்றைய நாளில் பொது மக்களுக்காக வழக்கமான தரிசனம் இருக்காது என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோபுரத்தின் உச்சியில் ஏற்றப்படவுள்ள காவிக் கொடி 22 அடி நீளமும், 11 அடி அகலமும் கொண்டது. உறுதியான பாராசூட் துணி மற்றும் பட்டு நூலால் ஆனது. 42 அடி உயரம் கொண்ட கம்பத்தில் 360 கோணத்திலும் சுழலும் வகையில் பொருத்தப்படும். முக்கோண வடிவிலான கொடியில் சூரியன், ஓம் மற்றும் மந்தாரை மரம் போன்ற புனிதச் சின்னங்கள் இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம் கோவிலின் அனைத்து 7 கோபுரங்களிலும் முதன்முறையாக காவிக்கொடிகள் பறக்கும் என்று கோவில் நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.
இதையடுத்து அயோத்தி நகரம் முழுவதும் காவிக் கொடிகள், தோரணங்கள் மற்றும் வண்ணமயமான விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது.
சாலைகள் சீரமைப்பு, மரக்கன்றுகள் நடுதல், சரயுநதி படித்துறைகளுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட அழகுபடுத்தும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- 2 நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் மோடி.
- ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.
டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் வெடித்ததில் 13 பேர் உயிரிழந்த நிலையில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக போலீசார், காரை ஓட்டி வந்தது ஜம்மு காஷ்மீர் புல்வாமா பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது உமர் என கண்டறியப்பட்டது.
கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்திய முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக பெண் மருத்துவர் உள்ளிட்ட பல மருத்தவர்கள் சிக்கினர்.
முகமது உமருடன் தொடர்பில் இருந்ததாக இன்று காலை வரை 6 மருத்துவர்கள் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் கார் வெடிவிபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல் கூறினார்.
2 நாள் அரசு முறை பயணமாக பூட்டான் சென்று நாடு திரும்பிய பிரதமர் உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.
கார் வெடிப்பு சம்பவத்தில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஷோரூம் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நாணயங்களை தரையில் கொட்டி எண்ணத்தொடங்கினர்.
- சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் ஸ்கூட்டர் வாங்கித்தருமாறு கேட்டார்.
மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூர் அருகே உள்ள மவுலா பகுதியை சேர்ந்தவர் பச்சு சவுத்ரி. இவர் டீ வியாபாரம் செய்து வருகிறார். இவர் சம்பவத்தன்று ஒரு பெரிய டிரம்முடன் ஸ்கூட்டர் ஷோரூமுக்கு சென்றார். அங்கிருந்த ஊழியர்களிடம் எனது மகளுக்கு புது ஸ்கூட்டர் வேண்டும் என கூறிய அவர், அதற்கான தொகையாக நான் 4 ஆண்டுகளாக சேமித்து வைத்த நாணயங்களை பெற்றுக்கொள்ளுமாறு கூறினார்.
ஷோரூம் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து நாணயங்களை தரையில் கொட்டி எண்ணத்தொடங்கினர். 2 மணிநேரமாக நடந்த நாணயங்கள் எண்ணும் பணியின் முடிவில் மொத்தத்தில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் நாணயங்கள் இருந்தது. அவற்றை பெற்றுக்கொண்டு ஸ்கூட்டர் வழங்கினர்.
இதுகுறித்து பச்சு சவுத்ரி கூறுகையில், சில ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் ஸ்கூட்டர் வாங்கித்தருமாறு கேட்டார். அப்போது அவரது ஆசையை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் நாணயங்கள் சேகரிக்க தொடங்கினேன். தற்போது அவரது ஆசையை நிறைவேற்றி விட்டேன் என்றார்.
- பீகார் சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு சதவீதம் பதிவாகி இருக்கிறது.
- கருத்து கணிப்புகளில் பா.ஜ,க கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இதற்கிடையே கருத்து கணிப்புகளில் பா.ஜ,க கூட்டணி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பீகார் சட்டசபை தேர்தலில் அதிக வாக்கு சதவீதம் பதிவாகி இருக்கிறது. இது மக்கள் அரசாங்க மாற்றத்திற்கு வாக்களித்திருப்பதைக் குறிக்கிறது.
பீகாரில் பா.ஜ.க கூட்டணியின் வெற்றியைக் கணித்த கருத்துக்கணிப்புகள் பா.ஜ.க-வின் உயர்மட்டத் தலைமையின் வழிகாட்டுதலின் பேரில் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.
- சமூக வலைதள புகழுக்காக வரம்புகளை மீறக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.
ஓடும் ரெயிலின் ஸ்லீப்பர் கோச் பெட்டியில் இருக்கைகளுக்கு அருகே நடைபாதையில் ஒரு வாலிபர் குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஜான்சி பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஓடும் ரெயிலில் ஸ்லீப்பர் கோச்சில் வாளியில் தண்ணீர் கொண்டு வந்து குவளை மூலம் எடுத்து தனது தலையில் ஊற்றி குளிக்கிறார். மேலும் அவர் சோப்பு, ஷாம்பு பயன்படுத்தி குளிப்பது போன்றும் காட்சிகள் உள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 2.6 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வாலிபரின் செயலை விமர்சித்து பதிவிட்டனர். இதற்கிடையே ரெயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த வாலிபர் ஜான்சி பகுதியை சேர்ந்த பிரமோத் ஸ்ரீவாஸ் என்பது தெரியவந்தது. அவர் சமூக வலைதளங்களில் புகழ்பெற வேண்டும் என்பதற்காக இவ்வாறு குளித்து ரீல் வீடியோ எடுத்து பதிவிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சமூக வலைதள புகழுக்காக வரம்புகளை மீறக்கூடாது என அதிகாரிகள் எச்சரித்தனர்.
- கார் குண்டு வெடிப்பில் பலியானோரின் உடல்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
- அமர் கட்டாரியா தந்தை, அந்த உடல் தனது மகன்தான் என்று உறுதிப்படுத்தினார்.
டெல்லியில் கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். அவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இதில் டி-சர்ட், உடலில் இருந்த டாட்டூ மூலம் உடல்களை குடும்பத்தினர் அடையாளம் கண்டுபிடித்து வருகின்றனர்.
தாக்குதலில் பலியான தொழில் அதிபர் அமர் கட்டாரியா, தனது கையில் தாய், தந்தை குறித்து பச்சை குத்தியிருந்தார். அதை வைத்து அமர் கட்டாரியா தந்தை, அந்த உடல் தனது மகன்தான் என்று உறுதிப்படுத்தினார்.
அதேபோல் ஜூம்மான் என்பவரின் உடலை அவர் அணிந்திருந்த டி-சர்ட்டை வைத்து குடும்பத்தினர் கண்டுபிடித்தனர்.
இதுதொடர்பாக அவரது உறவினர் கூறும்போது, "ஜூம்மானின் உடல் மோசமாக சேதமடைந்தது. அவரது டி-சர்ட் மூலம் நாங்கள் அவரை அடையாளம் கண்டோம்" என்றார்.
- காரை ஓட்டிச்சென்றவர் யார்? என கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
- இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த என்.ஐ.ஏ. டிஜி மற்றும் ஐபி தலைவர் இன்று கூடுகின்றனர்.
டெல்லியில் உள்ள செங்கோட்டை எதிரே உள்ள போக்குவரத்து சிக்னல் பகுதியில் நேற்று முன்தினம் மாலை 6.52 மணிக்கு ஒரு கார் திடீரென வெடித்து சிதறியது. அதன் பாகங்கள் நாலாபுறத்திலும் சிதறி விழுந்தன. கார் முற்றிலும் தீப்பிடித்து எரிந்தன. இதன் காரணமாக பக்கத்தில் நின்ற பல வாகனங்களும் தீப்பிடித்தன.
இந்த கார் வெடிவிபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தார்கள். நள்ளிரவு வரை 10 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. இது நேற்று 13 ஆக உயர்ந்தது.
சம்பவ இடத்தில் துப்பாக்கிக் குண்டு கிடைத்து இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்.ஐ.ஏ.) ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
காரை ஓட்டிச்சென்றவர் யார்? என கண்காணிப்பு கேமரா பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது. அவர் ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவைச் சேர்ந்த உமர் முகமது (வயது 35) ஆவார். இவரும் பரிதாபாத்தில் உள்ள அல்பலா மருத்துவ பல்கலைக்கழகத்தில் டாக்டராக பணிபுரிந்துள்ளார்.
உமர் முகமது சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பார், சிதைந்த உடல் இவருடையதாகத்தான் இருக்கும் என சந்தேகிக்கப்பட்டு டி.என்.ஏ. சோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் கார் வெடிவிபத்து குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்துள்ளது. ஒரு ஐ.ஜி., இரண்டு டி.ஐ.ஜி.க்கள், மூன்று எஸ்.பி.க்கள் மற்றும் டி.எஸ்.பி. அளவிலான அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழு, என்ஐஏ ஏடிஜி விஜய் சாகரே தலைமையில் செயல்படும்.
இன்று, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, டெல்லி காவல்துறை மற்றும் அரியானா காவல்துறையினரிடமிருந்து ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு தொடர்பான அனைத்து வழக்கு ஆவணங்களையும் என்.ஐ.ஏ. கைப்பற்றும்.
கூடுதலாக, இந்த வழக்கு தொடர்பாக ஆலோசனை நடத்த என்.ஐ.ஏ. DG மற்றும் IB தலைவர் இன்று கூடுகின்றனர்.






