என் மலர்
இந்தியா

இந்தியப் பொருட்கள் உயர் தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும்- பிரதமர் மோடி
- இந்தியப் பொருள் என்றாலே 'உயர்தரம்' என்ற அர்த்தம் ஏற்பட வேண்டும்.
- நாம் உற்பத்தி செய்யும் எந்தப்பொருளாக இருந்தாலும், அதன் தரத்தை மேம்படுத்துவோம் என்று உறுதி ஏற்போம்.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ரேடியோ மூலம் மன் கி பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.
தனது 130-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
தேசிய வாக்காளர் தினம் மற்றும் குடியரசு தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு இளைஞர் முதல் முறையாக வாக்காளராகும்போது நாம் பிறந்த நாளை விரும்பி கொண்டாடுவது போலவே அவருக்கு வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்க வேண்டும். இது வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, வாக்காளராக இருப்பது எவ்வளவு முக்கியம் என்ற உணர்வை ஏற்படுத்தும்.
செயற்கை நுண்ணறிவு, விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து, பசுமை ஹைட்ரஜன், உயிரிதொழில்நுட்பம் என நீங்கள் எதை குறிப்பிட்டாலும், அந்தத் துறையில் ஏதேனும் ஒரு இந்திய ஸ்டார்ட்-அப் நிறுவனம் செயல்படுவதை காண்பீர்கள்.
ஏதேனும் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்துடன் தொடர்புடைய அல்லது சொந்தமாக ஒரு நிறுவனத்தைத் தொடங்க விரும்பும் இளம் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் உற்பத்தி செய்யும் எந்தப்பொருளாக இருந்தாலும், அதன் தரத்தை மேம்படுத்துவோம் என்று உறுதி ஏற்போம். ஜவுளி, தொழில் நுட்பம், மின்னணு வியல் அல்லது பேக்கேஜிங் என எதுவாக இருந்தாலும், ஒரு இந்தியப் பொருள் என்றாலே 'உயர்தரம்' என்ற அர்த்தம் ஏற்பட வேண்டும். சிறப்பையே நமது அளவு கோலாக கொள்வோம்.
இந்தியப் பொருட்கள் உயர்தரத்திற்கு இணையாக இருக்க வேண்டும். இன்று இந்தியா உலகின் 3-வது பெரிய ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது. இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் வழக்கத்திற்கு மாறானவை.
10 ஆண்டுகளுக்கு முன்பு கற்பனை செய்ய முடியாத துறைகளில் அவை செயல்படுகின்றன. வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
இந்தியாவில் உள்ள குடும்ப அமைப்பு நமது பாரம்பரியத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். இது உலகின் பல நாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கப்படுகிறது.
பல நாடுகளில், இத்தகைய குடும்ப அமைப்புகள் மிகவும் மதிக்கப்படுகின்றன. சில நாட்களுக்கு முன்பு, எனது சகோதரரும், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரு மான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவுக்கு வருகை புரிந்தார். ஐக்கிய அரபு அமீரகம் 2026-ம் ஆண்டை 'குடும்ப ஆண்டு' ஆக கொண்டாடுகிறது என்று அவர் என்னிடம் தெரிவித்தார்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.






