என் மலர்tooltip icon

    இந்தியா

    • உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவும் கருவியில் குழந்தை வைக்கப்பட்டது.
    • மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில், குழந்தை தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது.

    உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தனியார் மருத்துவமனையில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று தீயில் கருகி உயிரிழந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கான்பூரில் உள்ள பக்கர்கஞ்சில் வசிக்கும் அருண் நிஷாத் மற்றும் அவரது மனைவி பிட்டு ஆகியோருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

    பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலையைச் சரியாகப் பராமரிக்க உதவும் கருவியில் குழந்தை வைக்கப்பட்டது. அப்போது மின் கசிவு ஏற்பட்டு தீ பிடித்ததில், அதிலிருந்த குழந்தை தீ காயம் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறது.

    இந்த சம்பவத்தைப் பல மணி நேரம் கழித்தே பெற்றோருக்குத் தெரியப்படுத்தியுள்ளது மருத்துவமனை நிர்வாகம். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனைக்கு வெளியே கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து இந்த சம்பவத்தை குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழு அமைத்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    • 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின.
    • காங்போக்பி, உக்ருல் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.

    இம்பால்:

    மணிப்பூரில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குகி, மெய்தி ஆகிய இரு சமூகங்கள் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்தது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    இதையடுத்து பா.ஜ.க. அரசு விலகியதால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி கெம்சந்த் சிங் தலைமையில் புதிய பா.ஜ.க. அரசு பதவியேற்றது.

    இதற்கிடையே மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடித்தது. உக்ருல் மாவட்டம் லிட்டன் சரேய்கோங் கிராமத்திற்குள் புகுந்த ஒரு கும்பல் தங்குல் சமூகத்தை சேர்ந்த நபரை தாக்கியது. மேலும் வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சாம்பலாகின.

    இந்த நிலையில் லிட்டன் சரேய்கோங் கிராமத்தில் இன்று அதிகாலை துப்பாக்கி சூடு நடந்தது. ஒரு கும்பல் பல சுற்றுகளாக துப்பாக்கியால் சுட்டன. இந்த சத்தங்களை கேட்டு அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.

    நிலைமையைக் கட்டுப்படுத்த லிட்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆனாலும் துப்பாக்கிச் சூடு தொடர்ந்து நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் பதற்றம் நீடித்து வருகிறது.

    இதற்கிடையே மீண்டும் வன்முறை ஏற்பட்டுள்ளதால் குகி மற்றும் தங்குல் சமூகங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு செல்கிறார்கள்.

    கடந்த 2 நாட்களாக லிட்டன் சரேய்கோங் மற்றும் அண்டை குகி கிராமங்களை விட்டு காங்போக்பி, உக்ருல் மாவட்டங்களில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு தப்பி சென்று கொண்டிருக்கிறார்கள்.

    வன்முறையை தொடர்ந்து உக்ருல் மாவட்டத்தில் இணைய சேவைகளை 5 நாட்களுக்கு நிறுத்தி வைக்க மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது.

    • பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றச்சாட்டு
    • காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.

    லோக்சபாவில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மோடியை "நேரடியாகத் தாக்க" திட்டமிட்டிந்ததாக தனக்கு உறுதியான தகவல் கிடைத்ததாகச் சபாநாயகர் ஓம் பிர்லா இன்று தெரிவித்தார்.

    பிரதமரின் பாதுகாப்பு கருதியே அவரது பதிலுரை ரத்து செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி பெண் எம்.பி.க்களை கேடயமாகப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டிருந்ததாக ஓம் பிர்லா தெரிவித்தார்.

    பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி செய்துள்ளதாக சபாநாயகர் ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "காங்கிரஸ் கட்சி தங்கள் எம்.பி.க்களின் மிகவும் இழிவான நடத்தையைப் பற்றி பெருமை கொள்கிறது. நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் நாங்கள் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.

    • ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
    • 100 விமானங்களை இந்தியாவில் தயாரிக்க திட்டம்.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விரைவில் டெல்லி வர இருக்கிறார். இந்த நிலையில், இந்திய விமானப்படையின் பல்நோக்கு போர் விமானத் திட்டத்திற்காக 114 பிரெஞ்சு தயாரிப்பு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ரூ.3.25 லட்சம் கோடி ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் இந்த வாரம் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஒப்புதல் அளிக்கப்பட்டால், இது இந்தியாவின் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தமாக அமையும். இதில் சுமார் 100 விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன. இது உயர்தர போர் விமான தொழில்நுட்பத்தை இடமாற்றம் செய்வதையும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டால், இது இந்தியாவை பிரான்ஸ் அல்லாத நாடுகளில் ரஃபேலின் மிகப்பெரிய இயக்குநர்களில் ஒன்றாக உறுதிப்படுத்தும்.

    இந்த இரட்டை என்ஜின், பல்நோக்கு போர் விமானம் உலகின் தலைசிறந்த விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இது வான்வெளி ஆதிக்கம் மற்றும் துல்லியமான தாக்குதல் பணிகளை நிறைவேற்றுவதற்கு பெயர்பெற்றது. இந்தியா ஏற்கனவே 36 ரஃபேல்களை வைத்துள்ளது.– இந்திய விமானப்படை கடந்த 2024 டிசம்பரில் கடைசி 'சி' வகை விமானத்தை பெற்றது. மேலும் ரூ.63,000 கோடி மதிப்புள்ள 26 கடற்படை வகைகளான 'எம்' விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.

    அந்த ஒப்பந்தத்தில் நான்கு இரட்டை இருக்கை பயிற்சி விமானங்கள் வாங்குதல், கடற்படை பராமரிப்பு, லாஜிஸ்டிக்ஸ் ஆதரவு மற்றும் பணியாளர்கள் பயிற்சி ஆகியவை உள்ளடங்கிய MRO (பராமரிப்பு, பழுதுபார்த்தல், மேம்படுத்தல்) ஒப்பந்தமும் அடங்கும். 'எம்' வகை ரஃபேல்கள் ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போன்ற விமானம் தாங்கி கப்பல்களில் பயன்படுத்தப்படும்.

    இந்திய விமான படையினர் இந்த விமானங்களை ஏற்கனவே போரில் பபயன்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் பஹல்கம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடியான "ஆபரேஷன் சிந்தூர்" மற்றும் லடாக்கில் பங்கேற்றன. ஆபரேஷன் சிந்தூரின் போது பயன்படுத்தப்பட்ட ரஃபேல்கள், ஸ்கால்ப் என்ற வான்-வழி குரூயிஸ் ஏவுகணையை ஏவியதாக நம்பப்படுகிறது. இது 250 கிமீ தொலைவில் உள்ள கடின இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடியது, இது ஈராக் போர் மற்றும் லிபியாவில் உள்ளிட்ட பல்வேறு மோதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரான்ஸ் மற்றும் இந்தியா, உற்பத்தியாளர்களான டசால்ட் ஏவியேஷன் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் இடையே நான்கு முக்கிய உற்பத்தி இடமாற்ற ஒப்பந்தங்களை அறிவித்தன. இது இந்திய இராணுவத்திற்கு ரஃபேல்களின் பாக்கியை விரைவுபடுத்தும். டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஐதராபாத்தில் பிரெஞ்சு போர் விமானத்தின் முக்கிய கட்டமைப்பு பிரிவுகளை தயாரிப்பதற்கான அதிநவீன உற்பத்தி வசதியை அமைக்கும்.

    இதில் பின்புற உடற்பகுதியின் பக்கவாட்டு ஷெல்கள், முழு பின்புற பிரிவு, மைய உடற்பகுதி மற்றும் முன்புற பிரிவு ஆகியவை அடங்கும். முதல் உடற்பகுதி பிரிவுகள் 2028இல் உற்பத்தி வரிசையில் இருந்து வெளியேறும். ஒரு மாதத்திற்கு இரண்டு முழு உடற்பகுதிகளை வழங்குவதே இலக்கு, ரஃபேல் போர் விமானத்தின் இறுதி அசெம்பிளி பிரான்ஸின் போர்டோ அருகிலுள்ள மெரிக்னாக்கில் உள்ள டசால்ட் உற்பத்தி ஆலையில் நடைபெறும்.

    • கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகள் நீதித்துறை சேவையில் சேர அனுமதி அளித்தது.
    • இந்த தீர்ப்பால் ஈர்க்கப்பட்டு, நீதித்துறை சேவைத் தேர்வுக்குத் தயாராக முடிவு செய்தார்.

    கேரளாவின் முதல் பார்வை மாற்றுதிறனாளி சிவில் நீதிபதி என்ற பெருமையை 24 வயதான தன்யா நாதன் பெற்றுள்ளார்.

    கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் மாற்றுத்திறனாளிகள் நீதித்துறை சேவையில் சேர அனுமதி அளித்தது. இதையடுத்து கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பார்வைக் குறைபாடுள்ள சட்டப் பட்டதாரி தன்யா நாதன், இந்த தீர்ப்பால் ஈர்க்கப்பட்டு, நீதித்துறை சேவைத் தேர்வுக்குத் தயாராக முடிவு செய்தார்.

    தற்போது, அவர் மாற்றுத்திறனாளிகள் பிரிவின் கீழ் சிவில் நீதிபதி (ஜூனியர் பிரிவு) தேர்வில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் கேரளாவின் முதல் பார்வை குறைபாடுள்ள நீதிபதியாக மாற உள்ளார்.

    ப்ரெய்லி முறையில் சட்டப் படிப்பை படித்துள்ள இவருக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்பட உள்ளது

    • இளம்பெண் கணவரை பிரிந்து விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபரை தேடி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் கல்வகுர்த்தி அடுத்த ரகுபதி பேட்டை சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளை திம்மாஜிபேட்டியை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணத்திற்கு பிறகு அவரது மருமகன் மதுபோதைக்கு அடிமையாகி அவரது மகளை துன்புறுத்தி வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இளம்பெண் கணவரை பிரிந்து விட்டு உறவினர் வீட்டிற்கு சென்று விட்டார். மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதற்கு மாமியார் தான் காரணம் என வாலிபர் எண்ணினார். நேற்று முன்தினம் இரவு மாமியார் தனியாக வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். மாமியார் வீட்டுக்கு சென்ற மருமகன் அவரை வன்கொடுமை செய்து கொடூரமாக அடித்து கொலை செய்து விட்டு தப்பி சென்றார்.

    நேற்று காலை ரத்த வெள்ளத்தில் பெண் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இறந்து போனவரின் 2-வது மகள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கல்வகுர்த்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள வாலிபரை தேடிப் பார்க்கின்றனர்.

    • சந்திரபாபு நாயுடு சிறிது நேரம் சச்சின் டெண்டுல்கருடன் உரையாடினார்.
    • மாநிலத்திற்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆந்திர மாநில பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

    டெல்லி விமான நிலையத்திற்கு சென்றபோது பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை எதேர்ச்சியாக சந்தித்தார். சந்திரபாபு நாயுடு சிறிது நேரம் சச்சின் டெண்டுல்கருடன் உரையாடினார்.

    இன்று ஜல் சக்தி மந்திரி சி.ஆர்.பாட்டில், உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வேளாண் துறை மந்திரி சிவராஜ் சிங் மற்றும் ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

    அப்போது அமராவதி கட்டுமான பணிக்கு அதிக நிதி, கலப்பட நெய் வழக்கு மற்றும் 16-வது நிதி அறிக்கை பரிந்துரைகளால் மாநிலத்திற்கு ஏற்படும் பொருளாதார பாதிப்பு குறித்து ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • தங்கம் திருட்டு விவகாரத்தில் கள்ள பணம் மோசடி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
    • பழைய கொடி மரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் உள்ள துவார பாலகர் சிலையில் பூசப்பட்ட தங்க முலாம்களை சுத்தப்படுத்தி மீண்டும் பொருத்த முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக அந்த சிலைகள் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு சுத்தப்படுத்தும் பணி முடிந்து மீண்டும் சபரிமலை கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.

    இந்த நிலையில் பணியின்போது துவாரபாலகர் சிலையில் உள்ள தங்கம் திருடப்பட்டதாக புகார் எழுந்தது. கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை (எஸ்.ஐ.டி.) கேரள ஐகோர்ட்டு நியமித்தது.

    இந்தக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி துவார பாலகர் சிலைகளை முலாம் பூச எடுத்துச் சென்ற உன்னி கிருஷ்ணன் போற்றியை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கர்நாடகாவை சேர்ந்த நகை வியாபாரி கோவர்த்தன் மற்றும் சபரிமலை கோவில் தேவசம்போர்டு முன்னாள் நிர்வாகிகள் உள்பட பலரை கைது செய்தது. இதற்கிடையில் தங்கமுலாம் பூசப்பட்ட பிறகு துவாரபாலகர் சிலைகள், சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட தகவல் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கிடைத்தது. இது தொடர்பான படங்களும் வெளிவந்தன. இதனை தொடர்ந்து நடிகர் ஜெயராமுக்கு தங்கம் கடத்தல் சம்பவத்தில் தொடர்பு இருக்கலாமா? என்ற சந்தேகம் எழுந்தது.

    இது தொடர்பாக விளக்கம் அளித்த நடிகர் ஜெயராம், உனனிகிருஷ்ணன் போற்றியை எனக்கு தெரியும். கோவில் தங்க நகைகளை வீட்டிற்கு கொண்டு வந்தது உண்மை தான். அதனை வீட்டில் வைத்து பூஜை செய்தால், செழிப்பை தரும் என்று உன்னி கிருஷ்ணன் போற்றி கூறியதால், தனது வீட்டில் வைத்து பூஜை செய்ததாகவும், கோவிலில் நடைபெற்ற பூஜையிலும் தான் பங்கேற்றதாகவும் தெரிவித்தார். மேலும் உன்னியிடம் இருந்து நான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழு நோட்டீசு அனுப்பியிருந்தது. தொடர்ந்து 2 வாரங்களுக்கு முன்பு அந்த குழுவினர், சென்னையில் உள்ள நடிகர் ஜெயராம் வீட்டுக்குச் சென்று அவரிடம் வாக்குமூலம் பெற்றது. அப்போது ஜெயராம், ஏற்கனவே தான் தெரிவித்திருந்ததை அவர்களிடம் தெரிவித்தாராம்.

    இந்த நிலையில் தங்கம் திருட்டு விவகாரத்தில் கள்ள பணம் மோசடி நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் அமலாக்கத்துறையினர் விசாரணையில் இறங்கி உள்ளனர். சென்னையில் துவார பாலகர் சிலையை தங்க முலாம் பூச கொண்டு செல்லப்பட்ட நிறுவனம் மற்றும் கைது செய்யப்பட்ட திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் நிர்வாகிகள் வீடுகள் போன்ற பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனையிலும் ஈடுபட்டனர். இதனால் தங்கம் திருட்டு வழக்கு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியது.

    இந்த நிலையில் நடிகர் ஜெயராமிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது. இதை தொடர்ந்து அவருக்கு நோட்டீசு அனுப்பி உள்ளது. அடுத்த செவ்வாய்க்கிழமை (17-ந் தேதி) அமலாக்கத்துறை முன்பு ஆஜராகும்படி அதில் கூறப்பட்டுள்ளது. தங்கம் திருட்டு வழக்கில் சிறப்பு புலனாய்வு துறையை தொடர்ந்து அமலாக்கத்துறையும் நடிகர் ஜெயராமுக்கு நோட்டீசு அனுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த சூழலில் தங்கம் திருட்டு வழக்கில் தனது விசாரணை அறிக்கையை கேரள ஐகோர்ட்டில் சிறப்பு புலனாய்வு குழு தாக்கல் செய்துள்ளது. அதில், மேலும் 3 பேருக்கு வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் சபரிமலையில் தங்கம் திருடப்பட்டது என்பதை விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உறுதி செய்த போதும், எவ்வளவு தங்கம் திருடப்பட்டது? இப்போது இருப்பது ஒரிஜினல் தங்கம் தானா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சபரிமலை கோவிலில் மீண்டும் ஆய்வு நடத்த சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு கேரள ஐகோர்ட்டு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையில் சபரிமலையில் கடந்த 2017-ம் ஆண்டு புதிய கொடிமரம் அமைக்கப்பட்டதிலும் முறைகேடு நடந்திருப்பதாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு விஜிலன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பழைய கொடிமரத்திற்கு சேதம் ஏற்பட்டதாக கூறி புதிய கொடிமரம் அமைக்க முடிவு செய்யபட்டதாக கூறப்படுகிறது. ஆனால் பழைய கொடி மரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பான அறிக்கை கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை பரிசீலித்த ஐகோர்ட்டு, புதிய கொடிமரம் அமைக்கப்பட்டது குறித்து விரிவான விசாரணை நடத்த விஜிலன்சு துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இதில் முறைகேடு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் அதுபற்றியும் சிறப்பு புலனாய்வுக் குழு கூடுதல் விசாரணை நடத்த வேண்டும் என்று ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

    • இந்த வருமானம் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது என கிண்டலாக பதிவிட்டனர்.
    • வீடியோ இணையத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.

    சிறிய தொழில் செய்தாலும், திறம்பட செய்தால் நல்ல வருமானம் ஈட்டலாம் என்பதை உறுதிபடுத்துவது போன்ற வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வைரலாவது உண்டு. அந்த வகையில் நளினி உனாகர் என்ற பெண் தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு தகவல் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

    நளினி உனாகரின் வீட்டுக்கு அருகே ஒரு டிரை கிளீனிங் கடைக்காரரிடம் அவரது வருமானம் குறித்து பேசும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது. கடைக்காரரும், அவரது மனைவியும் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக சம்பாதிப்பதாக கூறுகிறார்கள். தினமும் சுமார் 350 துணிகளை அயர்ன் செய்வதன் மூலமும், விலை உயர்ந்த புடவைகள் மற்றும் சூட்களை டிரைகிளீனிங் செய்வதன் மூலமும் ஒரு நாளைக்கு ரூ.10,500 வரை வருமானம் கிடைப்பதாக கூறுகிறார்கள். சொந்தக்கடை என்பதால் வாடகை கிடையாது, மின்சாரக் கட்டணம் மற்றும் ஆட்கள் கூலி போக மாதம் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் வரை லாபமாக கிடைப்பதாக கூறுகிறார்கள். வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும், இந்த வருமானம் ஐ.டி. நிறுவன ஊழியர்களின் சம்பளத்தை விட அதிகமாக இருக்கிறது என கிண்டலாக பதிவிட்டனர்.

    அதேநேரம் சிலர், இதுபோன்று வருமானம் ஈட்டுபவர்கள் முறையாக வருமான வரி செலுத்துவதில்லை என பதிவிட்டுள்ளனர். இவ்வாறு பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்ட நிலையில் நளினி உனாகரின் இந்த வீடியோ இணையத்தில் விவாத பொருளாக மாறி உள்ளது.



    • மகள் ஒரு நபருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருப்பதை அவரது தாய் கவனித்துள்ளார்.
    • குடும்பத்தினர் தடுத்தும் கேட்காத அந்தப் பெண், வருணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மைசூரு ரோடு பகுதியில் பிபிஏ பட்டதாரியான 23 வயது இளம்பெண் ஒருவர் தனது தாய் தந்தை மற்றும் இளைய சகோதரி உடன் வசித்து வந்தார்.

    இந்நிலையில் 49 வயதுடைய அந்த தாய், தனது மூத்த மகள் மீது பெங்களூரு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் போலீசாரையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, வேலை தேடுவதற்காக கூறி, தனது தந்தையிடம் கேட்டு ஒரு ஸ்மார்ட்போனை அந்தப் பெண் வாங்கியுள்ளார்.

    ஒரு மாதத்திற்கு முன்பு, மகள் ஒரு நபருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருப்பதை அவரது தாய் கவனித்துள்ளார். மகளின் மொபைல் போனை வாங்கிச் சோதித்தபோது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    தனது தாய் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரது அந்தரங்க உறுப்புகளைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, வருண் என்ற நபருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளது தெரியவந்தது.

    மேலும், தனது தாயின் அக்கா (பெரியம்மா) குளித்துக்கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதே நபருக்கு அனுப்பியுள்ளார்.

    மொபைல் சாட்களை ஆராய்ந்தபோது வருண் என்ற அந்த நபரே இது போன்ற புகைப்படங்களை அனுப்புமாறு அப்பெண்ணைத் தூண்டியது தெரியவந்தது.

    குடும்பத்தினர் தடுத்தும் கேட்காத அந்தப் பெண், கடந்த வாரம் வருணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

    இந்நிலையில் தனது மகள் குறித்தும், புகைப்படங்கள் குறித்தும் அச்சத்தில் இருந்த தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

    வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள வருணையும், அப்பெண்ணையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

    • அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.
    • தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.

    மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் பால்காவாடா பகுதியில் பால்காட் என்ற கிராமம் அமைந்துள்ளது.

    கடந்த 1980 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கு அருகிலுள்ள ஒரு வயலில் இருந்து ரூ.100 மதிப்புள்ள கோதுமை திருடு போனது.

    கோதுமையை திருடியதாக சலீம் மற்றும் ஆறு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    அப்போது 20 வயதாக இருந்த சலீம், சம்பவத்திற்குப் பிறகு தனது குடும்பத்துடன் பக்கத்து மாவட்டமான தார் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்தார்.

    தற்போது 65 வயதாகும் சலீம் அங்கு குடும்பத்துடன் ஒரு சிறிய கடை நடத்தி வருகிறார்.

    மறுபுறம் மாநில அளவிலான நீண்ட கால வழக்குகளளில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணிகளை மத்தியப் பிரதேச காவல்துறை தீவிரப்படுத்தியது.

    இந்நிலையில் சலீமின் முன்னாள் கூட்டாளி ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு சலீமை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.  

    • இஸ்லாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது பொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
    • "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.

    அசாம் மாநிலத்தில் ஹிமாந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் அசாம் பாஜக தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்த இஸ்லாமிய வெறுப்பு வீடியோ கண்டனத்தை குவித்து வருகிறது.

    "Point Blank Shot" என்று தலைப்பிடப்பட்ட அந்த வீடியோவில், முதல்வர் பிஸ்வா கையில் ரைபிள் துப்பாக்கியை எடுத்து குறிபார்க்கிறார், அடுத்த காட்சியில் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட குல்லாய், தாடி உள்ளிட்ட இஸ்லாமிய அடையாளம் கொண்ட இருவரின் மீது பிஸ்வாவின் துப்பாக்கி சுடுவதற்கு குறி வைக்கப்பட்டது பொன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.

    வீடியோவின் பின்னணியில் "அந்நியர்கள் இல்லாத அசாம்" மற்றும் "இரக்கமே காட்டமாட்டோம்" போன்ற வாசகங்கள் ஆங்கிலத்திலும் அசாமி மொழியிலும் இடம்பெற்றுள்ளன.

    முதல்வர் பிஸ்வா அசாம் இஸ்லாமிய சமூகம் குறித்து தொடர்ந்து கடுமையான கருத்துக்களை கூறியும், நடவடிக்கை எடுத்தும் வரும் சூழலில் இந்த வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் இது குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், 'அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வ சர்மாவின் விடியோ மியா சமூகத்தின் மீதான நேரடி வன்முறையைத் தூண்டும் அதிர்ச்சியளிக்கக்கூடிய செயல்.

    தேர்தல் லாபத்துக்காக வெறுப்புணர்வை இயல்பானதாக மாற்ற துடிக்கும் முயற்சிகள் நமது அரசமைப்புக்கான தீங்கு விளைவிக்கும். இந்த விவகாரத்தில் பாஜக தேசிய தலைமையின் மௌனம் பிளவுவாத அரசியல் மீதான அவர்களின் பற்றைத் தெளிவாக்குகிறது.

    இத்தகைய வகுப்புவாத வெறுப்புணர்வு செயல்களை எதிர்க்க மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் கட்டாயம் ஒன்றிணைய வேண்டும். இந்தியாவின் ஆன்மாவைப் பாதுகாக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார். 

    ×