என் மலர்
இந்தியா

ரூ. 3.25 லட்சம் கோடியில் 114 ரஃபேல் விமானங்கள்... மத்திய அரசு விரைவில் ஒப்புதல்?
- ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல்.
- 100 விமானங்களை இந்தியாவில் தயாரிக்க திட்டம்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விரைவில் டெல்லி வர இருக்கிறார். இந்த நிலையில், இந்திய விமானப்படையின் பல்நோக்கு போர் விமானத் திட்டத்திற்காக 114 பிரெஞ்சு தயாரிப்பு ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ரூ.3.25 லட்சம் கோடி ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு அமைச்சகம் இந்த வாரம் ஒப்புதல் அளிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒப்புதல் அளிக்கப்பட்டால், இது இந்தியாவின் இதுவரை இல்லாத மிகப்பெரிய ஆயுத ஒப்பந்தமாக அமையும். இதில் சுமார் 100 விமானங்களை இந்தியாவில் தயாரிப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளன. இது உயர்தர போர் விமான தொழில்நுட்பத்தை இடமாற்றம் செய்வதையும், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை வலுப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உறுதிப்படுத்தப்பட்டால், இது இந்தியாவை பிரான்ஸ் அல்லாத நாடுகளில் ரஃபேலின் மிகப்பெரிய இயக்குநர்களில் ஒன்றாக உறுதிப்படுத்தும்.
இந்த இரட்டை என்ஜின், பல்நோக்கு போர் விமானம் உலகின் தலைசிறந்த விமானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இது வான்வெளி ஆதிக்கம் மற்றும் துல்லியமான தாக்குதல் பணிகளை நிறைவேற்றுவதற்கு பெயர்பெற்றது. இந்தியா ஏற்கனவே 36 ரஃபேல்களை வைத்துள்ளது.– இந்திய விமானப்படை கடந்த 2024 டிசம்பரில் கடைசி 'சி' வகை விமானத்தை பெற்றது. மேலும் ரூ.63,000 கோடி மதிப்புள்ள 26 கடற்படை வகைகளான 'எம்' விமானங்களை ஆர்டர் செய்துள்ளது.
அந்த ஒப்பந்தத்தில் நான்கு இரட்டை இருக்கை பயிற்சி விமானங்கள் வாங்குதல், கடற்படை பராமரிப்பு, லாஜிஸ்டிக்ஸ் ஆதரவு மற்றும் பணியாளர்கள் பயிற்சி ஆகியவை உள்ளடங்கிய MRO (பராமரிப்பு, பழுதுபார்த்தல், மேம்படுத்தல்) ஒப்பந்தமும் அடங்கும். 'எம்' வகை ரஃபேல்கள் ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா போன்ற விமானம் தாங்கி கப்பல்களில் பயன்படுத்தப்படும்.
இந்திய விமான படையினர் இந்த விமானங்களை ஏற்கனவே போரில் பபயன்படுத்தியுள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் பஹல்கம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடியான "ஆபரேஷன் சிந்தூர்" மற்றும் லடாக்கில் பங்கேற்றன. ஆபரேஷன் சிந்தூரின் போது பயன்படுத்தப்பட்ட ரஃபேல்கள், ஸ்கால்ப் என்ற வான்-வழி குரூயிஸ் ஏவுகணையை ஏவியதாக நம்பப்படுகிறது. இது 250 கிமீ தொலைவில் உள்ள கடின இலக்குகளை துல்லியமாக தாக்கக்கூடியது, இது ஈராக் போர் மற்றும் லிபியாவில் உள்ளிட்ட பல்வேறு மோதல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரான்ஸ் மற்றும் இந்தியா, உற்பத்தியாளர்களான டசால்ட் ஏவியேஷன் மற்றும் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் இடையே நான்கு முக்கிய உற்பத்தி இடமாற்ற ஒப்பந்தங்களை அறிவித்தன. இது இந்திய இராணுவத்திற்கு ரஃபேல்களின் பாக்கியை விரைவுபடுத்தும். டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் ஐதராபாத்தில் பிரெஞ்சு போர் விமானத்தின் முக்கிய கட்டமைப்பு பிரிவுகளை தயாரிப்பதற்கான அதிநவீன உற்பத்தி வசதியை அமைக்கும்.
இதில் பின்புற உடற்பகுதியின் பக்கவாட்டு ஷெல்கள், முழு பின்புற பிரிவு, மைய உடற்பகுதி மற்றும் முன்புற பிரிவு ஆகியவை அடங்கும். முதல் உடற்பகுதி பிரிவுகள் 2028இல் உற்பத்தி வரிசையில் இருந்து வெளியேறும். ஒரு மாதத்திற்கு இரண்டு முழு உடற்பகுதிகளை வழங்குவதே இலக்கு, ரஃபேல் போர் விமானத்தின் இறுதி அசெம்பிளி பிரான்ஸின் போர்டோ அருகிலுள்ள மெரிக்னாக்கில் உள்ள டசால்ட் உற்பத்தி ஆலையில் நடைபெறும்.






