என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வைர நகை வாங்க வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.
    • பிடிபட்ட 4 பேரையும் சிப்காட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். வைர வியாபாரி. இவர் மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரது 17 கேரட் வைர நகையை விற்பனை செய்ய இடைத்தரகர்களான வில்லிவாக்கத்தை சேர்ந்த ராகுல், மணலி சேக்காடு பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த சுப்பன் ஆகியோரை அணுகினார்.

    இதையடுத்து இடைத்தரகர்கள், வைரத்தை வாங்குவதற்காக லண்டன் ராஜன் மற்றும் அவரது நண்பரான விஜய், மற்றும் உதவியாளர் அருணாச்சலம் ஆகியோரை அழைத்து வந்தனர். அவர்கள் வைர நகையை பார்த்து விட்டு ரூ.23 கோடி விலை பேசி சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை சந்திரசேகரை தொடர்பு கொண்ட இடைத்தரகர்கள் வைரத்தை வாங்க பணம் ரெடியாகிவிட்டது. வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வைர நகையுடன் வந்து அதனை கொடுத்துவிட்டு பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்தனர்.

    இதையடுத்து சந்திரசேகர், தனது வளர்ப்பு மகள் ஜானகியுடன் நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். அப்போது சந்திரசேகர் மட்டும் குறிப்பிட்ட அறைக்குள் வைரத்துடன் சென்றார். ஜானகி ஓட்டலுக்கு வெளியே நின்றார்.

    இதற்கிடையே நீண்ட நேரம் வரை சந்திரசேகர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஜானகி அறைக்கு சென்று பார்த்த போது அங்கு சந்திரசேகர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதையும், அறையில் இருந்த நபர்கள் அவரை தாக்கி வைரத்தை கொள்ளையடித்து சென்று இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரை மீட்டு வைரநகை கொள்ளை குறித்து வடபழனி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வைர நகை வாங்க வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.

    மேலும் அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக இடைத்தரகர்கள் ராகுல், ஆரோக்கியராஜ், சுப்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

    வைர நகை கொள்ளை குறித்து அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே புதியம் புத்தூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    அதில் சென்னை ஓட்டலில் வைரத்தை கொள்ளையடித்து தப்பி வந்த பரமக்குடியை சேர்ந்த அருண் பாண்டியராஜன், அய்யப்பன் தாங்கலை சேர்ந்த ஜான் லயார், வளசரவாக்கத்தை சேர்ந்த விஜய், திருவேற்காடு ரதீஷ் என்பது தெரிந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வைரம் மற்றும் தப்பி செல்ல பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்ட 4 பேரையும் சிப்காட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளையர்கள் பிடிபட்டது தொடர்பாக சென்னை தனிப்படை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விமானம் மூலம் தூத்துக்குடி விரைந்து சென்று பிடிபட்ட அருண்பாண்டியராஜன் உள்பட 4 பேரையும் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    வைரம் கொள்ளையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? தூத்துக்குடிக்கு தப்பி சென்றது ஏன்? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    இடைத்தரகர்கள், நகை வாங்க வந்தவர்கள் மற்றும் தற்போது பிடிபட்டவர்கள் என குழப்பங்களுக்கு விடை காண போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைரம் கொள்ளையில் 4 பேர் பிடிபட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
    • மீன் பிடி திருவிழா அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    நத்தம்:

    திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி கிராமம் எட்டையம்பட்டி கிராமத்தில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில்பெரிய கண்மாய் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் இங்கு மீன் பிடி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு தற்போது கண்மாயில் தண்ணீர் குறைந்ததால் கிராம மக்கள் சார்பில் மீன்பிடி திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. பெரிய கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதையொட்டி நத்தம், சிறுகுடி, கொட்டாம்பட்டி, செந்துறை, சிங்கம்புணரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் குளத்தில் இறங்கி மூங்கில் கூடைகளையும், வலைகளையும் பயன்படுத்தி போட்டிப்போட்டு மீன்களை பிடித்தனர்.

    இதில் கட்லா, ரோகு, விரால், ஜிலேபி, குரவை உள்ளிட்ட பல்வேறு வகையான மீன்கள் சிக்கியது. தொடர்ந்து 2 கிலோ முதல் 3 கிலோ வரை கிடைத்த மீன்களை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    கிராம மக்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் விதமாக மீன் பிடி திருவிழா ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் பல்வேறு இனங்களை கடந்து மக்கள் ஒற்றுமையாக மீன் பிடிக்கின்றனர். காலங்காலமாக தொடர்ந்து வரும் மீன் பிடி திருவிழா அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்வோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
    • தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    ஒகேனக்கல்:

    காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இந்த நிலையில் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று கனமழை பெய்து உள்ளது. இதனால் இன்று காலை 8 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் அதிகரித்து வந்தது.

    மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர் பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கு இடையே காவிரி ஆற்றில் உற்சாகமாக பரிசல் சவாரி மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

    மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர்.

    பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 

    • யானை நெலாக்கோட்டையில் இருந்து வெளியேறி வந்த வழியாக காட்டுக்குள் திரும்பி சென்றது.
    • தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே நெலாக்கோட்டை அமைந்து உள்ளது. இது மலைஅடிவாரத்தை ஒட்டிய கிராமம் ஆகும்.

    இந்த நிலையில் வனத்தில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை இன்று அதிகாலை நெலாக்கோட்டை கிராமத்துக்கு வந்தது. பின்னர் அங்கு நின்ற வாகனங்களை தந்தத்தால் முட்டி சேதப்படுத்தியது. மேலும் நெலாக்கோட்டை வீடுகளின் பக்ககவாட்டு சுவர்களை இடித்து தள்ளியது.

    இதற்கிடையே தெருநாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு கிராம மக்கள் திடுக்கிட்டு விழித்து வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தனர். அப்போது தெருவில் காட்டு யானை சுற்றி திரிவது தெரிய வந்தது.

    இதனை பார்த்து கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வரவில்லை என்று கூறப்படுகிறது.

    தொடர்ந்து நெலாக்கோட்டை கிராமத்தினர் திரண்டு வந்து பெரிதாக சத்தம் எழுப்பியும், தகரங்களை தட்டி ஓசை எழுப்பியும் காட்டு யானையை விரட்டினர். பின்னர் அந்த யானை நெலாக்கோட்டையில் இருந்து வெளியேறி வந்த வழியாக காட்டுக்குள் திரும்பி சென்றது.

    நெலாக்கோட்டை கிராமத்துக்குள் இன்று அதிகாலை புகுந்த ஒற்றை காட்டு யானை அங்கு நின்ற வாகனங்களை தாக்கியதுடன் வீடுகளையும் சேதப்படுத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தொடர்ந்து கிராம மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு நெலாக்கோட்டை-கூடலூர் போக்குவரத்து சாலைக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வனத்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதன்காரணமாக நெலாக்கோட்டை-கூடலூர் ரோட்டில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து நெலாக்கோட்டை கிராமத்தினர் கூறுகையில், எங்கள் பகுதிக்கு காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. மேலும் அவை குடியிருப்பு பகுதிகள் மற்றும் விளைநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.

    தொடர்ந்து நாங்கள் காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க வலியுறுத்தி வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தோம். இருந்தபோதிலும் அவர்கள் நெலாக்கோட்டை பகுதியில் ரோந்துப்பணிகளில் ஈடுபட்டு காட்டு யானைகளின் நடமாட்டத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி உள்ளனர்.

    • வனவிலங்குகள் அடிவாரப்பகுதியில் உள்ள அமராவதிக்கு அணைக்கு வருகின்றன.
    • சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகம் உள்ளது. இங்குள்ள உடுமலை, அமராவதி உள்ளிட்ட வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கடமான், காட்டெருமை, கரடி, கருஞ்சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    அவற்றிற்கு தேவையான உணவு தேவையை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளும், தண்ணீர் தேவையை அடர்ந்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளும் பூர்த்தி செய்து தருகின்றன.

    இந்தநிலையில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்ததால் வன விலங்குகளுக்கான உணவு, தண்ணீர் தேவை பூர்த்தி அடைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிவாரப்பகுதியில் உள்ள அமராவதிக்கு அணைக்கு வருகின்றன.

    காலை நேரத்தில் உடுமலை - மூணாறு சாலையை கடந்து வனப்பகுதிக்குள் செல்வதும் மாலையில் அணைப்பகுதிக்கு வருவதுமாக உள்ளது.

    தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு உடுமலையில் இருந்து மூணாறு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.

    இதனால் உடுமலை-மூணாறு சாலையில் யானைகள் நடமாட்டம் இருந்தால் அவை சாலையை கடக்கும் வரையிலும் வாகன ஓட்டிகள் அமைதியாக இருந்து பயணத்தை மேற்கொள்ள வேண்டும். யானைகள் மிரட்சி அடையும் வகையில் ஒலி எழுப்புவதோ, அவற்றின் மீது கற்களை வீசுவதோ, செல்பி, புகைப்படம் எடுப்பதற்கோ முயற்சி செய்யக்கூடாது என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அத்துடன் உடுமலை- மூணாறு சாலை மலை அடிவாரப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அஜ்சல் செயின் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
    • சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொள்ளாச்சி:

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஜ்சல் செயின்(வயது26).

    இவர் டாக்டருக்கு படித்து முடித்து வேலைக்காக காத்திருந்தார். இவரது நண்பர் பாகில்.

    இவர்கள் 2 பேரும் தமிழ்நாடு மலையேற்ற சுற்றுலா திட்டத்தின் கீழ் டாப்சிலிப் பகுதியில் மலையேற்றம் செய்வதற்கு முன்பதிவு செய்திருந்தனர். நேற்று மலையேற்றத்துக்காக பொள்ளாச்சி டாப்சிலிப்புக்கு வந்தனர்.

    அதனை தொடர்ந்து பயிற்சி பெற்ற வழிகாட்டிகளான சந்தான பிரகாஷ், அஜித்குமார் மற்றும் வனத்துறையினருடன் அஜ்சல் செயினும், பாகிலும் டாப்சிலிப்பில் ஆனகரி சோலா முதல் பண்டாரப் பாறைக்கு மலையேற்றம் மேற்கொண்டனர்.

    8 கி.மீ தூரம் அடர்ந்த காட்டிற்குள் மலையேற்றம் மேற்கொண்ட இவர்கள் பண்டாரப்பாறையில் இருந்து டாப்சிலிப்புக்கு வந்து கொண்டிருந்தனர்.

    அப்போது அஜ்சல் செயின் மற்றும் பாகிலுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக வனத்துறையினர் 2 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக வேட்டைக்காரன்புதூரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது அஜ்சல் செயின் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருடன் வந்த நண்பர் பாகிலை மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆனைமலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த அஜ்சல் செயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வெள்ளி விலையில் மாற்றமில்லை.
    • ஒரு கிராம் ரூ.108-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    சென்னை:

    தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து புதிய உச்சத்தில் விற்கப்படுவதால் தங்கம் எட்டாக்கனியாகி விடுமோ என்று மக்கள் கவலை அடைந்துள்ளனர். திருமணம், சுப நிகழ்ச்சிக்காக தங்கம் வாங்க நினைப்பவர்களும் செய்வதறியாது தவிக்கின்றனர்.

    இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,775-க்கும் சவரனுக்கு 160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,200-க்கும் விற்பனையாகிறது.



    வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.108-க்கும், பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    04-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    03-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    02-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040

    01-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,200

    30-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    04-05-2025- ஒரு கிராம் ரூ.108

    03-05-2025- ஒரு கிராம் ரூ.108

    02-05-2025- ஒரு கிராம் ரூ.109

    01-05-2025- ஒரு கிராம் ரூ.109

    30-04-2025- ஒரு கிராம் ரூ.111

    • மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
    • விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    சென்னை காட்டாங்குளத்தூரில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, கவர்னர் ஆர்.என்.ரவி, மதுரை ஆதீனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய மதுரை ஆதீனத்தின் 293-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள், தன்னை கொலை செய்ய கார் விபத்து மூலம் சதி நடந்ததாக குற்றம் சாட்டினார்.

    மேலும், மாநாட்டில் கலந்து கொள்ள வந்த தன் கார் மீது உளுந்தூர்பேட்டை அருகே மற்றொரு கார் உரசிச் சென்ற நிலையில், இது திட்டமிட்ட சதி, தன்னை கொல்ல விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேரிகார்டை உடைத்துக்கொண்டு வந்தனர். விபத்துக்குப் பிறகு நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதில் நான் மயக்கமடைந்துவிட்டேன். ஆனால் என் கார் டிரைவர், தொப்பி அணிந்து தாடி வைத்த ஒருநபர் காரில் நம்பர் பிளேட் இல்லாமல் ஓட்டி வந்து மோதியதாக தெரிவித்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் தரவில்லை. ஆண்டவன் சிவபெருமானிடம் புகார் தந்துவிட்டேன். இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கே சலுகைகள் அதிகம். என் புகாரை எடுக்கமாட்டார்கள் என மதுரை ஆதீனம் பகிரங்கமாக குற்றம்சாட்டி பேசி இருந்தார்.

    இதையடுத்து, இச்சம்பம் குறித்து விசாரணை நடத்திய கள்ளக்குறிச்சி போலீசார் விளக்கம் அளித்தனர். அதில், மதுரை ஆதீனத்தை கொல்ல சதி எதுவும் நடந்ததாக தெரியவில்லை என்றும் ஆதீனம் பயணித்த கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்த போது விபத்து நடந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் மதுரை ஆதீனம் பயணித்த வாகனத்தின் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    இதனிடையே, மதுரை ஆதீனத்தின் கார் மற்றொரு வாகனத்தின் மீது மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில் உளுந்தூர்பேட்டை தேசிய நெடுந்சாலையில், மதுரை ஆதீனத்தின் கார் அதிவேகமாகச் சென்று கொண்டிருக்கிறது. அப்போது சாலையின் எதிர் பகுதியில் வெள்ளை நிறக் கார் மெதுவாக வந்துள்ளது. ஆதீனத்தின் கார் அதிவேகமாக சென்று சாலையைக் கடந்தபோது விபத்து நடந்துள்ளது.

    இந்த நிலையில், மதுரை ஆதீனத்தின் கார் ஓட்டுநர் மீது உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை ஆதீனம் வந்த காரை அதிவேகமாகவும், அலட்சியமாகவும் ஓட்டியதாக அவரது கார் ஓட்டுநர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விபத்திற்குள்ளான மற்றொரு காரை ஓட்டி வந்தவர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


    • கோவில் திருவிழாவின் போது போதையில் நடனம் ஆடியவர்களை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகே 12-ம் வகுப்பு மாணவன் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    கோவில் திருவிழாவின் போது போதையில் நடனம் ஆடியவர்களை தட்டிக்கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் 3 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. அதில் ஷியாம் சுந்தர் என்ற 17வயதான 12-ம் வகுப்பு மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    தடுக்க சென்ற அஜய், வசந்தகுமார் ஆகியோரும் கத்தியால் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • பஹல்காம் தாக்குதல் உலக நாடுகளை உலுக்கியுள்ளது.
    • இதைக் கண்டித்து பா.ஜ.க. சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற மக்களை மதத்தின் பெயரால் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் படுகொலை செய்த கொடூரம் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது.

    இந்த பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான், வங்கசேத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளைத் தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் வதந்திகளைக் கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் பா.ஜ.க. சார்பில் திங்கட்கிழமை கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அத்தனை அதிகாரங்களையும் திமுக பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே?
    • இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்!

    நீட் தேர்வு ரத்து என்ற பொய்யால் 21 மாணவர்கள் உயிர் பறிபோய் இருக்கிறது, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா ? என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வௌயிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இன்று நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே கயல்விழி என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தன் இன்னுயிரை மாய்த்துக்கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    தமிழ்நாட்டில் ஆட்சி, நாடாளுமன்றத்தில் 39 எம்.பி.க்கள் என அத்தனை அதிகாரங்களையும் திமுக பெற்றது "நீட் தேர்வு ரத்து" என்ற வாக்குறுதியால் தானே?

    "ரகசியம் இருக்கிறது, ஆட்சிக்கு வந்ததும் பாருங்கள்" என்று வாய் சவடால் பேசியதெல்லாம் எங்கே போனது? வெட்கம், மானம், சூடு, சுரணை எல்லாம் எங்கே போனது?

    உங்களுடைய தேர்தல் அரசியலுக்கான ஒற்றைப் பொய்யால் மட்டுமே 21 மாணவ மாணவியரின் உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் எத்தனை பிள்ளைகள் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களே? உங்களுக்கு இப்போது கூட மனசாட்சி உறுத்தவில்லையா?

    "நீட் ஒழிய வேண்டும் என்றால் '2.ஓ' வர வேண்டும்" என்று கூச்சமின்றி திமுக-வினர் 2026ல் வாக்கு கேட்கும் போது, "உரிய மரியாதையுடன்" மக்கள் பதில் அளிப்பார்கள்! இத்தனை மாணவ- மாணவியரின் மரணங்களுக்கு உரிய நீதியை,மக்கள் நிச்சயம் வழங்குவார்கள்!

    ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொதுக் கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.
    • பொதுக்கூட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த ஹாலோஜன் விளக்கு கம்பம் பலத்த காற்றால் சரிந்து விழுந்தது.

    மயிலாடுதுறையில் திமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பங்கேற்றார்.

    அக்கூட்டத்தில், கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர்.

    இந்நிலையில், பொதுக் கூட்டத்திற்கான மேடையில் அமைக்கப்பட்டிருந்த மைக் மேஜை அருகே ஆ.ராசா பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது, யாரும் எதிர்பாராத நேரத்தில் மேடையின் எதிரே அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மின்விளக்கு தூண் திடீரென சாய்ந்தது.

    பொதுக்கூட்டத்திற்காக கட்டப்பட்டிருந்த ஹாலோஜன் விளக்கு கம்பம் பலத்த காற்றால் சரிந்து விழுந்தது.

    விளக்குத்தூண் விழுவதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஆ.ராசா அங்கிருந்த உடனடியாக விலகி ஓடி உயிர் தப்பினார்.

    மேடையில் இருந்த திமுக நிர்வாகிகள் இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

    ×