என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    வடபழனி நட்சத்திர ஓட்டலில் வியாபாரியிடம் ரூ.23 கோடி வைரம் கொள்ளை- 4 பேர் கைது
    X

    வடபழனி நட்சத்திர ஓட்டலில் வியாபாரியிடம் ரூ.23 கோடி வைரம் கொள்ளை- 4 பேர் கைது

    • ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வைர நகை வாங்க வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.
    • பிடிபட்ட 4 பேரையும் சிப்காட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். வைர வியாபாரி. இவர் மதுரையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரது 17 கேரட் வைர நகையை விற்பனை செய்ய இடைத்தரகர்களான வில்லிவாக்கத்தை சேர்ந்த ராகுல், மணலி சேக்காடு பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த சுப்பன் ஆகியோரை அணுகினார்.

    இதையடுத்து இடைத்தரகர்கள், வைரத்தை வாங்குவதற்காக லண்டன் ராஜன் மற்றும் அவரது நண்பரான விஜய், மற்றும் உதவியாளர் அருணாச்சலம் ஆகியோரை அழைத்து வந்தனர். அவர்கள் வைர நகையை பார்த்து விட்டு ரூ.23 கோடி விலை பேசி சென்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை சந்திரசேகரை தொடர்பு கொண்ட இடைத்தரகர்கள் வைரத்தை வாங்க பணம் ரெடியாகிவிட்டது. வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு வைர நகையுடன் வந்து அதனை கொடுத்துவிட்டு பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்தனர்.

    இதையடுத்து சந்திரசேகர், தனது வளர்ப்பு மகள் ஜானகியுடன் நட்சத்திர ஓட்டலுக்கு வந்தார். அப்போது சந்திரசேகர் மட்டும் குறிப்பிட்ட அறைக்குள் வைரத்துடன் சென்றார். ஜானகி ஓட்டலுக்கு வெளியே நின்றார்.

    இதற்கிடையே நீண்ட நேரம் வரை சந்திரசேகர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த ஜானகி அறைக்கு சென்று பார்த்த போது அங்கு சந்திரசேகர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருப்பதையும், அறையில் இருந்த நபர்கள் அவரை தாக்கி வைரத்தை கொள்ளையடித்து சென்று இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    அவரை மீட்டு வைரநகை கொள்ளை குறித்து வடபழனி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வைர நகை வாங்க வந்தவர்கள் குறித்த விபரங்களை சேகரித்தனர்.

    மேலும் அவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இது தொடர்பாக இடைத்தரகர்கள் ராகுல், ஆரோக்கியராஜ், சுப்பன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.

    வைர நகை கொள்ளை குறித்து அனைத்து மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். சோதனை சாவடிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தூத்துக்குடி, புதூர் பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே புதியம் புத்தூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

    அதில் சென்னை ஓட்டலில் வைரத்தை கொள்ளையடித்து தப்பி வந்த பரமக்குடியை சேர்ந்த அருண் பாண்டியராஜன், அய்யப்பன் தாங்கலை சேர்ந்த ஜான் லயார், வளசரவாக்கத்தை சேர்ந்த விஜய், திருவேற்காடு ரதீஷ் என்பது தெரிந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து வைரம் மற்றும் தப்பி செல்ல பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்ட 4 பேரையும் சிப்காட் போலீஸ் நிலையம் கொண்டு சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

    மேலும் கொள்ளையர்கள் பிடிபட்டது தொடர்பாக சென்னை தனிப்படை போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விமானம் மூலம் தூத்துக்குடி விரைந்து சென்று பிடிபட்ட அருண்பாண்டியராஜன் உள்பட 4 பேரையும் விசாரணைக்காக சென்னை அழைத்து வந்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

    வைரம் கொள்ளையில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? தூத்துக்குடிக்கு தப்பி சென்றது ஏன்? என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    இடைத்தரகர்கள், நகை வாங்க வந்தவர்கள் மற்றும் தற்போது பிடிபட்டவர்கள் என குழப்பங்களுக்கு விடை காண போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    இதில் மேலும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வைரம் கொள்ளையில் 4 பேர் பிடிபட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×