என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.
    • கிராம உதவியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து நூதன முறையில் டிராக்டர் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

    நாகுடியிலிருந்து ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சிவக்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது பெருங்காடு, மேலப்பட்டு, அறந்தாங்கி வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தூரம் கடந்து விக்னேஷ்வரபுரம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியை அடைந்தது. அப்போது வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.

    இறுதியாக எவ்வாறு வாக்களிப்பது குறித்து கல்லூரி மாணவ மாணவியர்களோடு உறுதி மொழி ஏற்கப்பட்டது. பேரணியில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் திருநாவுக்கரசு, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் மதியழகன், சுமந்தா, பிரகதீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், ராஜா, கார்த்திகேயன், ரமேஷ், புவனேஸ்வரி, வெண்ணிலா, மோகன், பிரபாகரன், கோபிராஜ், அழகு பாண்டியன், மகேஸ்வரி, பழனியம்மாள், துரை முருகன், யோகராஜ், கோபிநாத் தனசிங், உதயகுமார் உள்ளிட்ட கிராம உதவியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வரும்போது கோவை உலக அளவில் சிறந்து விளங்கும்.
    • தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ச்சி வர வேண்டும்.

    கோவை:

    கோவை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோவை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 3 வேட்பாளர்களுக்கு இடையே நடக்கும் போட்டி இல்லை. 70 ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கக்கூடிய அதர்மம் ஒரு பக்கமும், தர்மம் ஒரு பக்கமும் உடையதான தேர்தல். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு பணமழை கோவையில் பொழியும்.

    பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வரும்போது கோவை உலக அளவில் சிறந்து விளங்கும். 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஜூன் 4-ந் தேதி தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.

    எனக்கு டெல்லி அரசியலில் விருப்பம் இல்லை. தமிழக அரசியலில்தான் அதிக விருப்பம். பிரதமர் மோடியின் உத்தரவுக்கு இணங்க கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன்.

    தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ச்சி வர வேண்டும். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

    பிரதமர் தமிழகத்திற்கு ஏன் அடிக்கடி வருகிறார் என்றால் இங்கு வெற்றி பெறும் எம்.பி.க்கள் மூலம் தமிழகத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, தமிழகத்தை மாற்றி காட்டுவோம். அதற்காக தான் பிரதமர் மோடி சபதம் எடுத்து களத்தில் இறக்கி உள்ளார்.

    கோவை தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு வந்து செலவு செய்வார்கள். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கமாட்டேன். பா.ஜனதா எதுவும் செலவு செய்யாது. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த தொகுதி தேர்தல் இருக்கும்.

    கடந்த தேர்தலின்போது அறிவித்த அதே அறிக்கையை தி.மு.க. வெளியிட்டுள்ளது. இதில் எதையும் அவர்கள் நிறைவேற்றபோவது இல்லை.

    மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை காட்ட வேண்டும். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும். நான் பெரிய வேட்பாளர் இல்லை. கோவை மக்களை நம்பி அவர்களுடன் சேர்ந்து 2 ஆண்டுகளில் இந்த மாற்றம் தமிழகத்தில் எடுத்து செல்லும் சாதாரண நபர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தாவரவியல் பூங்காவில் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா மலர்கள் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
    • 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது

    ஏற்காடு:

    ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில் ஆண்டுதோறும் மே மாதத்தில் கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படும். தமிழகத்தில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை தருவார்கள். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா மலர்கள் நடவு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து தோட்ட கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    ஏற்காடு கோடை விழாவில் மலர் கண்காட்சிக்கு தேவைப்படும் மலர்ச்செடிகளை இப்போதே நடவு செய்ய தொடங்கியுள்ளோம். அண்ணா பூங்காவில் பால்சம், ஜீனியா, சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், மேரிகோல்டு, சூரியகாந்தி ஆகிய மலர் விதைகள் 25 ஆயிரம் முதல் கட்டமாக விதைக்கப்பட்டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ், 3ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, முதலாவது அரசு தாவரவியல் பூங்கா ஆகியவற்றில் 675 வகையான ரோஜா செடிகள் என மொத்தம் 6,750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது.

    ஏற்காட்டில் பருவமழை சீராக பெய்துள்ளதால், தற்போது தட்பவெப்ப நிலை சீராக உள்ளது. இதன் காரணமாக, தோட்டங்களில் வைத்துள்ள பூச்செடிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன. கோடை விழா தொடங்கும் போது, பூச்செடிகள் முழுமையாக வளர்ச்சியடைந்து, பூத்துக் குலுங்கி, சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும். இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
    • மலை பாதையில் செல்லும்போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் இந்த வனப்பகுதி வழியாக அமைந்துள்ள தமிழக-கர்நாடகா மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வருகின்றன.

    பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள திம்பம் மலைப்பகுதியில் நேற்று மதியம் ஒரு காட்டுயானை சாலை ஓரத்தில் நின்றபடி அங்கும், இங்குமாக நடமாடியது. யானை நடமாட்டத்தை கண்ட வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்தனர்.

    வாகனங்களில் வந்தவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டனர். பஸ் மற்றும் காரில் சென்ற பயணிகள் சிலர் காட்டுயானையை தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். சிறிது நேரம் இருந்த யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    திம்பம் மலைப்பகுதியில் பகல் நேரங்களில் காட்டுயானை நடமாட்டம் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனமாக செல்லுமாறும், மலை பாதையில் செல்லும்போது வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

    • வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.
    • வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் வன விலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகே இருக்கும் கிராமத்துக்குள் புகுவது தொடர்கதையாகி வருகிறது.

    தாளவாடி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவதுயும் தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக் குட்பட்ட கும்டாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இம்ரான் (37).விவசாயி. இவர் தனது விவசாய தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம் போல மாட்டுக்கொட்டையில் ஆடு, மாடுகளை கட்டி வைத்திருந்தார்.

    இந்நிலையில் வெளியே சென்று விட்டு மதியம் திரும்பி வந்து பார்த்த போது மாட்டுக் கொட்டையில் கட்டி வைத்திருந்த 3 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து குதறிய நிலையில் இறந்து கிடந்தது. இது பற்றி தாளவாடி வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால் தடைகளை ஆய்வு செய்தனர்.

    இதில் சிறுத்தை கடித்து ஆடு பலியானது தெரிய வந்தது. இதனால் அப்பகுதி விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். வனப்பகுதிக்குள் சென்ற சிறுத்தை எந்த நேரமும் மீண்டும் கிராமத்துக்குள் வரலாம் என மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    எனவே பொதுமக்களை அச்சுறுத்தும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிறுமி ஒருவர் முதலமைச்சருக்கு சால்வை கொடுத்து வாழ்த்தினார்.
    • ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    தஞ்சாவூா்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ள தால் முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தனது பிரசாரத்தை தொடங்கினார். நேற்று மாலை திருச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.

    பொதுக்கூட்டம் முடிந்த பின்னர் நேற்று இரவு தஞ்சைக்கு வந்தார். முன்னதாக அவருக்கு தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி சார்பில் பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, இரவு தஞ்சை சங்கம் ஹோட்டலில் தங்கினார்.

    இந்த நிலையில் இன்று காலை வழக்கமான நடைபயிற்சி மேற்கொள்வதற்காக ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்திற்கு சென்றார் . காரை விட்டு இறங்கியவுடன் நடைபயிற்சி, விளையாடும் மாணவ-மாணவிகள், பெண்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கைத்தட்டி முதலமைச்சரை வரவேற்றனர். இந்த உற்சாக வரவேற்பை ஏற்றுக்கொண்டு அதே உற்சாகத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது நடைப்பயிற்சி மேற்கொண்டவாறே பொதுமக்கள், பெண்களிடம் தஞ்சை பாராளுமன்ற தொகுதி

    தி.மு.க. வேட்பாளர் முரசொலிக்கு உங்கள் வாக்குகளை செலுத்துங்கள் எனக்கூறி வாக்கு சேகரித்தார். அப்போது கூடியிருந்த சிறுமிகளிடம் நீங்கள் தினமும் இங்கு வந்து தான் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வீர்களா? எந்த வகையான விளையாட்டு பயிற்சியை மேற்கொள்வீர்கள்? என ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு நாங்கள் பேட்மிட்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு பயிற்சி மேற்கொள்வோம் என சிறுமிகள் உற்சாகத்துடன் பதில் அளித்தனர். அவர்களை முதலமைச்சர் வாழ்த்தினார். மேலும், சிறுமி ஒருவர் முதலமைச்சருக்கு சால்வை கொடுத்து வாழ்த்தினார். மேலும், சிறிது நேரம் கைப்பந்து விளையாடினர்.

    தொடர்ந்து, மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டவாறே பொதுமக்களிடம் தி.மு.க.வுக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது ஏராளமானோர் முதலமைச்சருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அப்போது பயிற்சி மேற்கொண்டிருந்த காங்கிரஸ் மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையாரிடம் நலம் விசாரித்தார்.

    பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை காமராஜர் மார்க்கெட்டிற்கு சென்றார். அங்கு வியாபாரிகளிடம் வாக்கு சேகரித்தார். முதலமைச்சரை நேரில் பார்த்த சந்தோஷத்தில் வியாபாரிகள் மகிழ்ச்சியில் மூழ்கினர். அவர்கள் முதலமைச்சருக்கு வாழைப்பழம், எலுமிச்சை பழங்களை பரிசாக கொடுத்தனர். மேலும், வியாபாரிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். சிலர் மனுவும் அளித்தனர். அதற்கு முதலமைச்சர் உங்களது கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

    இதையடுத்து மார்க்கெட்டில் இருந்து புறப்பட்டு ஒரு கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து டீ குடித்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தங்கியுள்ள சங்கம் ஹோட்டலுக்கு சென்றார்.

    • தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசார பயணத்திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. தலைவரும், முதyமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை திருச்சியில் நேற்று தொடங்கினார். அவர், பொதுக்கூட்டங்கள் வாயிலாக வாக்குகள் திரட்டுகிறார். திருச்சியில் நேற்று பிரசாரத்தை தொடங்கிய அவர் வருகிற 17-ந் தேதி மத்திய சென்னை தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள், தி.மு.க. முன்னணி நிர்வாகிகள், நட்சத்திர பேச்சாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.

    அவர், மத்திய சென்னை தி.மு.க. வேட்பாளர் தயாநிதி மாறனை ஆதரித்து சேப்பாக்கம் பகுதி 62-வது வட்டத்தில் அமைந்துள்ள ஐயா தெரு, பஜார் தெரு சந்திப்பில் இன்று காலை 8.30 மணி முதல் திறந்த ஜீப்பில் சென்று வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளார். இந்த தகவலை தி.மு.க. சேப்பாக்கம் பகுதி செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான எஸ்.மதன்மோகன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசார பயணத்திட்டம் ஏற்கனவே வகுக்கப்பட்டது. இதில் கடைசி நேரத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இப்பணிகள் முடிவடைந்தவுடன் அவருடைய பிரசார பயண விவரம் முழுவதும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கருணாநிதியின் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொண்டனாக செயல்பட்டுக் கொண்டிருப்பவன் நான்.
    • தற்போது கிடைத்துள்ள இந்த தீர்ப்பு என்பது அனைவருக்கும் வழிகாட்டுதலாக இருக்கும்.

    சென்னை:

    தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்ற பொன்முடி, சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கருணாநிதியின் வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொண்டனாக செயல்பட்டுக் கொண்டிருப்பவன் நான். அவர் எடுத்த சட்டபூர்வ நடவடிக்கைகள் காரணமாகத்தான், நான் இந்த பொறுப்பில் மீண்டும் அமர வைக்கப்பட்டுள்ளேன்.

    எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கட்சியின் வக்கீல்கள் வில்சன், இளங்கோ உள்ளிட்டோருக்கும் எனது உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது கிடைத்துள்ள இந்த தீர்ப்பு என்பது அனைவருக்கும் வழிகாட்டுதலாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டாஸ் வென்ற ஆர்சிபி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
    • தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 21 ரன்னில் அவுட்டானார்.

    சென்னை:

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் திருவிழா இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

    டாஸ் வென்று முதலில் ஆடிய ஆர்சிபி அணியின் விராட் கோலி 21 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், விராட் கோலி சர்வதேச டி20 போட்டியில் 12,000 ரன்கள் அடித்துள்ளார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 12 ஆயிரம் ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

    மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1,000 ரன்கள் அடித்த 2-வது வீரர் விராட் கோலி ஆவார். சிஎஸ்கே அணிக்கெதிராக விராட் கோலி 32 போட்டிகளில் 1006 ரன்கள் எடுத்துள்ளார்.

    • தருமபுரி தொகுதியில் பா.ம.க. சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார்.
    • காஞ்சிபுரம் தொகுதியில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுகிறார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான அணியில் பா.ம.க, தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. அதில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

    இதற்கிடையே, தருமபுரி தொகுதி பா.ம.க. வேட்பாளர் மாற்றப்பட்டு, அன்புமணி ராமதாஸ் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானது.

    இந்நிலையில், காஞ்சிபுரம் தொகுதிக்கு பா.ம.க. சார்பில் ஜோதி வெங்கடேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் தொடங்கினார்.
    • அப்போது ஆட்சி முடியப் போகிறதே என்ற கவலையில் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை என்றார்.

    திருச்சி:

    பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருச்சியில் தொடங்கினார். திருச்சி மற்றும் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து சிறுகனூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    திருச்சி என்றாலே திருப்புமுனை. இந்தியாவுக்கு இப்போது திருப்புமுனை தேவைப்படுகிறது.

    40க்கு 40 தொகுதிகளில் நாம் நிச்சயம் வெற்றிபெற வேண்டும்.

    இந்தியாவே பாராட்டடும் நல்லாட்சியை நடத்தி வருகிறோம்.

    தேர்தல் வருவதால் பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகிறார். இல்லாவிட்டால் வெளிநாட்டில் இருப்பார்.

    ஆட்சி முடியப் போகிறதே என்ற கவலையில் பிரதமர் மோடிக்கு தூக்கம் வரவில்லை.

    3 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்ல இன்று ஒருநாள் போதாது.

    மகளிர் உரிமை திட்டத்தல் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள்.

    காலை உணவுத் திட்டத்தால் பள்ளி மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.

    புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் 4 லட்சம் பெண்கள் பயன்பெற்றுள்ளனர்.

    நான் முதல்வன் திட்டம் மூலம் 28 லட்சம் இளைஞர்கள் பயன்

    மக்களை தேடி மருத்துவம் மூலம் 1 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர் என தெரிவித்தார்.

    • பாஜக கூட்டணியில், பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன
    • பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான அணியில் பா.ம.க., தமிழ் மாநில காங்கிரஸ், அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தை கடந்த 2 தினங்களுக்கு முன் நிறைவு பெற்றது.

    இதையடுத்து பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொடர்ந்து நேற்று முன்தினம் மற்ற கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

    இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதில், தருமபுரி தொகுதியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அக்கட்சி அறிவித்தது.

    இந்நிலையில், தருமபுரி தொகுதி பாமக வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அத்தொகுதியில் அன்புமணியின் மனைவியான சவுமியா அன்புமணி போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    ×