என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும்: அண்ணாமலை
- பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வரும்போது கோவை உலக அளவில் சிறந்து விளங்கும்.
- தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ச்சி வர வேண்டும்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 3 வேட்பாளர்களுக்கு இடையே நடக்கும் போட்டி இல்லை. 70 ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கக்கூடிய அதர்மம் ஒரு பக்கமும், தர்மம் ஒரு பக்கமும் உடையதான தேர்தல். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு பணமழை கோவையில் பொழியும்.
பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வரும்போது கோவை உலக அளவில் சிறந்து விளங்கும். 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஜூன் 4-ந் தேதி தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
எனக்கு டெல்லி அரசியலில் விருப்பம் இல்லை. தமிழக அரசியலில்தான் அதிக விருப்பம். பிரதமர் மோடியின் உத்தரவுக்கு இணங்க கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன்.
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ச்சி வர வேண்டும். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
பிரதமர் தமிழகத்திற்கு ஏன் அடிக்கடி வருகிறார் என்றால் இங்கு வெற்றி பெறும் எம்.பி.க்கள் மூலம் தமிழகத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, தமிழகத்தை மாற்றி காட்டுவோம். அதற்காக தான் பிரதமர் மோடி சபதம் எடுத்து களத்தில் இறக்கி உள்ளார்.
கோவை தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு வந்து செலவு செய்வார்கள். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கமாட்டேன். பா.ஜனதா எதுவும் செலவு செய்யாது. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த தொகுதி தேர்தல் இருக்கும்.
கடந்த தேர்தலின்போது அறிவித்த அதே அறிக்கையை தி.மு.க. வெளியிட்டுள்ளது. இதில் எதையும் அவர்கள் நிறைவேற்றபோவது இல்லை.
மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை காட்ட வேண்டும். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும். நான் பெரிய வேட்பாளர் இல்லை. கோவை மக்களை நம்பி அவர்களுடன் சேர்ந்து 2 ஆண்டுகளில் இந்த மாற்றம் தமிழகத்தில் எடுத்து செல்லும் சாதாரண நபர்.
இவ்வாறு அவர் கூறினார்.






