என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
- தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.
நெல்லை:
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் 2 மாவட்டங்களிலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
மேலும் பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்த தோடு குளிர்ந்த காற்றும் வீசியது. தொடர்ந்து நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரையிலும் ஒருசில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. தூத்துக்குடியில் மாநகர பகுதி, கடற்கரையோரங்கள் மற்றும் உப்பளங்கள் உள்ள பகுதிகளில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டர், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. காக்காச்சி மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டில் தலா 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக ராதாபுரத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்து ள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குலசேரகன்பட்டினத்தில் 10 மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. பாபநாசம் அணையில் நீர் இருப்பு 68.45 அடியாகவும், சேர்வலாறில் 80.90 அடியாகவும், மணி முத்தாறில் 97.31 அடியாகவும் நீர் இருப்பு குறைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது பெய்த லேசான மழை தண்ணீர் இருப்பை அதிகரிக்காவிட்டாலும், பூமியை சற்று குளிர செய்யும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கூறுகின்றனர்.
- தேர்தல் விதிகளை மீறி தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
- தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை அன்று தொடங்கியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் மீது தரமணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறி தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் தனியார் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி மீது தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- முட்டை லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
- பணத்தை பரமத்திவேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே உள்ள போலீஸ் நிலைய சோதனை சாவடி அருகே நேற்று இரவு பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் முட்டைகளை இறக்கிவிட்டு நாமக்கல் நோக்கி வந்த முட்டை லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
அப்போது கேரளாவில் முட்டைகளை விற்று உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 4 லட்சத்து 18 ஆயிரத்து 380 ரூபாய் லாரியில் இருந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என லாரி டிரைவர் திண்டமங்கலம் அருகே உள்ள பெரியகவுண்டமா பாளையத்தை சேர்ந்த நாகராஜனிடம் கேட்டனர்.
அதற்கு அவர் ஆவணங்கள் எதுவும் இல்லை என கூறினார். இதையடுத்து 4 லட்சத்து 18 ஆயிரத்து 380 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து அந்த பணத்தை பரமத்திவேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
- ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.
- காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முத்தூர்:
திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உலகுடையார்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் அருகில் கீழ்பவானி பாசன உபரி நீர் செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.
நத்தக்காடையூர் - திருப்பூர் சாலையில் சிவசக்திபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து உலகுடையார்பாளையம் செல்லும் கிராம பொதுமக்கள் இந்த தரைப்பாலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். இந்த தரைப்பாலம் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள சூழலில் உலகுடையார்பாளையம் கிராம பொதுமக்கள் தரைப்பாலத்தை சீரமைக்காத காரணத்தால் தேர்தலை புறக்கணிப்பதாக காங்கயம் - நத்தக்காடையூர் பிரதான சாலையில் வெள்ளியங்காடு பஸ் நிறுத்தத்தில் அறிவிப்பு பதாகை வைத்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி சதீஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் போலீசார் உதவியுடன் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகையை அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
- கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும் பார் வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்து சற்று ஆறுதல் அளித்தது.
இந்நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,185-க்கும் சவரன் ரூ.49,480-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும் பார் வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- நாளை இரவு தெப்ப உற்சவமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) இரவு முத்து பல்லக்கு உற்சவமும், 26-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது.
- ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மயிலம்:
விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில் வடிவ மலையில் பிரசித்தி பெற்ற வள்ளிதெய்வானை சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று திருகல்யாணம் நடந்து வெள்ளி குதிரை வாகனத்தில் முருகன் மலைவளம் காட்சி நடந்தது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் முதலில் விநாயகர் தேரையும், பிறகு முருகன் தேரையும் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்
நாளை இரவு தெப்ப உற்சவமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) இரவு முத்து பல்லக்கு உற்சவமும், 26-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
- பறக்கும் படையினர் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- உரிய ஆவணங்களை காட்டிய பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு ரமேசிடம் தெரிவித்தனர்.
நெல்லை:
பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.
இதில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளிலும் நிலையான குழுக்களும் சோதனை சாவடி பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று இரவு நிலையான குழுவினர் அதன் அதிகாரி செல்லத்துரை தலைமையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் அந்த வழியாக நெல்லை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.62 ஆயிரத்து 400 பணம் இருந்தது. அந்த பணம் குறித்து காரில் வந்த பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் விசாரித்தபோது, பத்தமடை பகுதியில் டாக்டராக வேலை பார்ப்பதாகவும், அதற்கான மாத ஊதியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாளை தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காட்டிய பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு ரமேசிடம் தெரிவித்தனர்.
- வெங்கடேசன் 10 மற்றும் 12-ம் வகுப்பு பி .எட். படித்துள்ளதாக கொடுத்தது போலி சான்றிதழ் என்பது தெரிய வந்தது.
- வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடினர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து 12 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள முளுவி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சேலம் கோரிமேடு பர்மா காலனியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கடந்த 9 மாதங்களாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மீது வட்டார கல்வி அதிகாரி ஷேக் தாவூத் நேற்று ஏற்காடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் தலைமை ஆசிரியர் வெங்கடேசன் 10-ம் வகுப்பு முதல் பி.எட். வரை படித்ததாக போலி சான்றிதழ்கள் கொடுத்து கடந்த 1997 -ம் ஆண்டு முதல் ஏற்காட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பணியாற்றி வந்துள்ளார்.
அவர் மேல் சந்தேகம் ஏற்பட்டதால் சென்னையில் உள்ள உண்மை கண்டறியும் குழுவிற்கு அவரது சான்றிதழ்களை அனுப்பி வைக்கப்பட்டது. அதில் வெங்கடேசன் 10 மற்றும் 12-ம் வகுப்பு பி .எட். படித்துள்ளதாக கொடுத்தது போலி சான்றிதழ் என்பது தெரிய வந்தது. எனவே போலி சான்றிதழ் கொடுத்து அரசு பள்ளிகளில் 27ஆண்டுகளாக பணியாற்றி வந்த அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதையடுத்து வெங்கடேசன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடினர். அப்போது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள். இதற்கிடையே போலி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்தது தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கபீர் விசாரணை நடத்தி வருகிறார். விசாரணை முடிவில் அவர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தெரிவித்தனர்.
- பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.
- திருவண்ணாமலையில் இருந்து வருகிற 25-ந் தேதி புறப்படும் சிறப்பு ரெயில் சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.
சென்னை:
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் அதே நாள் இரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். அதேபோல, திருவண்ணாமலையில் இருந்து வருகிற 25-ந் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் காலை 9.05 மணிக்கு சென்னை கடற்கரைக்கு வந்தடையும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- திருச்சியில் நாளை அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 40 பேரை ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கிறார்.
- திறந்த வேனில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
சேலம்:
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் புதிய தமிழகம், தே.மு.தி.க. எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதில் அ.தி.மு.க. 33 இடங்களில் போட்டியிடுகிறது. தே.மு.தி.க. 5 தொகுதிகளிலும், புதிய தமிழகம் தென்காசியிலும், எஸ்.டி.பி.ஐ. கட்சி திண்டுக்கல் தொகுதியிலும் போட்டியிடுகிறது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
இதே போல் கூட்டணி கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு உள்ளனர். திருச்சியில் நாளை (24-ந்தேதி) அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் 40 பேரை ஒரே மேடையில் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி பிரசாரம் செய்கிறார்.
இதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார். பின்னர் ஓமலூரில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு சென்று கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி சேலம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள கரியவரதராஜ பெருமாள் கோவிலில் நாளை காலை 9 மணியளவில் சாமி தரிசனம் செய்கிறார். பின்னர் அந்த பகுதியில் திறந்த வேனில் தனது பிரசாரத்தை தொடங்குகிறார்.
ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி இந்த கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் தான் தனது பிரசாரத்தை தொடங்குவார். அதே போல் இந்த பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தையும் தொடங்க உள்ளார். பின்னர் இங்கிருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்.
எடப்பாடி பழனிசாமி நாளை முதல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதால் அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
- டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.
- கிராம உதவியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி:
அறந்தாங்கியில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து நூதன முறையில் டிராக்டர் மூலம் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.
நாகுடியிலிருந்து ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான சிவக்குமார் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியானது பெருங்காடு, மேலப்பட்டு, அறந்தாங்கி வழியாக சுமார் 15 கிலோமீட்டர் தூரம் கடந்து விக்னேஷ்வரபுரம் அரசு தொழில்நுட்பக் கல்லூரியை அடைந்தது. அப்போது வாக்காளர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும், கையூட்டு பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. டிராக்டர்கள் அணிவகுத்து வந்ததை பலரும் வினோதமாக பார்த்தனர்.
இறுதியாக எவ்வாறு வாக்களிப்பது குறித்து கல்லூரி மாணவ மாணவியர்களோடு உறுதி மொழி ஏற்கப்பட்டது. பேரணியில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் திருநாவுக்கரசு, மண்டல துணை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் மதியழகன், சுமந்தா, பிரகதீஸ்வரன், கிராம நிர்வாக அலுவலர்கள் சுரேஷ், ராஜா, கார்த்திகேயன், ரமேஷ், புவனேஸ்வரி, வெண்ணிலா, மோகன், பிரபாகரன், கோபிராஜ், அழகு பாண்டியன், மகேஸ்வரி, பழனியம்மாள், துரை முருகன், யோகராஜ், கோபிநாத் தனசிங், உதயகுமார் உள்ளிட்ட கிராம உதவியாளர்கள், டிராக்டர் உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வரும்போது கோவை உலக அளவில் சிறந்து விளங்கும்.
- தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ச்சி வர வேண்டும்.
கோவை:
கோவை விமான நிலையத்தில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது:-
கோவை பாராளுமன்ற தொகுதியை பொருத்தவரை 3 வேட்பாளர்களுக்கு இடையே நடக்கும் போட்டி இல்லை. 70 ஆண்டுகளாக தமிழகத்தில் நடக்கக்கூடிய அதர்மம் ஒரு பக்கமும், தர்மம் ஒரு பக்கமும் உடையதான தேர்தல். தமிழகத்தில் எங்கும் இல்லாத அளவுக்கு பணமழை கோவையில் பொழியும்.
பிரதமர் மோடி 3-வது முறையாக பிரதமராக வரும்போது கோவை உலக அளவில் சிறந்து விளங்கும். 39 பாராளுமன்ற தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும். ஜூன் 4-ந் தேதி தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
எனக்கு டெல்லி அரசியலில் விருப்பம் இல்லை. தமிழக அரசியலில்தான் அதிக விருப்பம். பிரதமர் மோடியின் உத்தரவுக்கு இணங்க கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறேன்.
தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் வளர்ச்சி வர வேண்டும். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.
பிரதமர் தமிழகத்திற்கு ஏன் அடிக்கடி வருகிறார் என்றால் இங்கு வெற்றி பெறும் எம்.பி.க்கள் மூலம் தமிழகத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, தமிழகத்தை மாற்றி காட்டுவோம். அதற்காக தான் பிரதமர் மோடி சபதம் எடுத்து களத்தில் இறக்கி உள்ளார்.
கோவை தொகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு வந்து செலவு செய்வார்கள். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கமாட்டேன். பா.ஜனதா எதுவும் செலவு செய்யாது. தமிழக வரலாற்றில் செலவு குறைந்த தேர்தலாக இந்த தொகுதி தேர்தல் இருக்கும்.
கடந்த தேர்தலின்போது அறிவித்த அதே அறிக்கையை தி.மு.க. வெளியிட்டுள்ளது. இதில் எதையும் அவர்கள் நிறைவேற்றபோவது இல்லை.
மக்களுக்கு உண்மையான ஜனநாயகத்தை காட்ட வேண்டும். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து தொடங்கும். நான் பெரிய வேட்பாளர் இல்லை. கோவை மக்களை நம்பி அவர்களுடன் சேர்ந்து 2 ஆண்டுகளில் இந்த மாற்றம் தமிழகத்தில் எடுத்து செல்லும் சாதாரண நபர்.
இவ்வாறு அவர் கூறினார்.






