என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • பெரும்பாலான கோவில்களில் நாளை மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
    • சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தென்மாவட்டங்களில் பங்குனி உத்திர நாளில் சாஸ்தா கோவில்களில் சிறப்பு பூஜை நடப்பது வழக்கம்.

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் அந்த நாளில் கிராமங்களில் மட்டுமல்லாது நகரங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் தங்களது சாஸ்தா கோவில்களுக்கு சென்று பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு செய்வார்கள்.

    இதற்காக வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் லாரி, கார் உள்ளிட்ட வாகனங்களிலும் முந்தைய நாளே வந்து குடிசை போட்டு தங்கியிருப்பார்கள்.

    இந்த ஆண்டு பங்குனி உத்திரத்தையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள சாஸ்தா கோவில்களில் வர்ணம் பூசுதல், சுத்தப்படுத்துதல், பந்தல் போடுதல் உள்ளிட்ட பணிகளை பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

    தூத்துக்குடி வல்லநாடு மணக்கரை, மணத்தேரி, நெல்லை மாவட்டம் பனையங்குறிச்சி, கடையம் அருகே பாப்பான்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் சாஸ்தா கோவில்களில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாநகரில் சந்திப்பு மேகலிங்க சாஸ்தா கோவில், டவுன் பாரதியார் தெரு முருங்கையடி சாஸ்தா கோவில், பிராஞ்சேரி கரையடி மாடசாமி, பாளை சாந்தி நகர் நடுக்காவுடையார் சாஸ்தா, சீவலப்பேரி மறுகால்தலை பூலுடையார் சாஸ்தா கோவில், அம்பை வைராவிகுளம் இரண்டிலாம் உடையார் சாஸ்தா, வெட்டுவான்களம் அகத்தீஸ்வரர் சாஸ்தா, வள்ளியூர் ஊரணி சாஸ்தா கோவில்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் சிறப்பு பூஜைகள், பொங்கலிடுதல், அன்னதானம் நடக்கிறது.

    தென்மாவட்டங்களை பொறுத்தவரை மிகவும் பிரசித்தி பெற்ற சிவ தலங்களில் ஒன்றான உவரி சுயம்புலிங்கசுவாமி கோவிலிலும் உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அங்கு நாளை திருவிழா நடக்கிறது.

    பெரும்பாலான கோவில்களில் நாளை மறுநாளும் சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

    இந்த திருவிழாவையொட்டி நாளை மறுநாள் நெல்லை, தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். இதனையொட்டி சாஸ்தா கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.
    • வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    சேலம்:

    சேலம் மெய்யனூர் இட்டேரி ரோடு பகுதியில் தமிழ்நாடு மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்திற்கு சொந்தமான கேபிள் மின் வயர்கள் அங்குள்ள சாலையோரம் கடந்த சில நாட்களாக குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ரோட்டோரம் கிடந்த குப்பைக்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்தார். இந்த தீ மளமளவென பரவி கொளுந்து விட்டு எரிந்தது. பின்னர் அங்கிருந்த கேபிள் வயரில் பிடித்து எரிந்தது. இதனை பார்த்த மின் ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கொளுந்து விட்டு எரிந்ததால் அங்கிருந்த கேபிள் வயர்கள் அனைத்தும் எரிந்து சேதமானது.

    இது குறித்து மின் வாரிய உதவி என்ஜினீயர் கண்ணன் ( 48) பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். இந்த தீ விபத்தில் ரூ.15 லட்சம் மதிப்பிலான கேபிள் வயர்கள் எரிந்து சேதமானதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் புகாரில் கூறி இருந்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் குப்பைக்கு தீ வைத்த மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 8 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் மட்டும் மாற்றும் செய்யப்பட்டுள்ளது.
    • ஏப்ரல் 8-ந்தேதி மாலை 4 மணிக்கு காரைக்குடியிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனையிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பிலும், அதன் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசார சுற்றுப் பயணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், மார்ச் 28 மற்றும் ஏப்ரல் 8 ஆகிய தேதிகளுக்கான சுற்றுப் பயணத் திட்டம் மட்டும் மாற்றும் செய்யப்பட்டுள்ளது.

    அதாவது, வருகிற 28-ந்தேதி மாலை 4 மணிக்கு விருதுநகர் தொகுதிக்குட்பட்ட பாவடி தோப்பு திடல், சிவகாசியிலும் இரவு 7 மணிக்கு ஜெயம் தியேட்டர் அருகில் பழங்காநத்தம் மதுரையிலும் பிரசாரம் செய்கிறார்.

    ஏப்ரல் 8-ந்தேதி மாலை 4 மணிக்கு காரைக்குடியிலும், இரவு 7 மணிக்கு ராமநாதபுரம் அரண்மனையிலும் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வாரந்தோறும் கோடி கணக்கில் மாடுகள் வியாபாரம் நடக்கும் சந்தையில் இன்று இலட்சக்கணக்கில் மட்டுமே வியாபாரம்.
    • வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கேளூர் தேப்பனந்தல் மாட்டுச் சந்தை தமிழகத்தில் பிரபலமான மாடு சந்தையாக விளங்கி வருகிறது.

    வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் திருவண்ணாமலை வேலூர் ராணிப்பேட்டை விழுப்புரம் கடலூர் திருப்பத்தூர் தர்மபுரி தேனி மதுரை சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மாடுகள் மற்றும் பல நூறு மாற்று வியாபாரிகள் கலந்துகொண்டு பல கோடி வர்த்தகம் நடைபெறும் சந்தையாக விளங்கும் கேளூர் மாட்டுச் சந்தையில் இன்று தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை காரணமாக மாட்டுச் சந்தைக்கு பணங்கள் கொண்டு வருவதில் மாற்று வியாபாரிகளுக்கு பெருத்த சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதால் இன்று நடைபெறும் கேளூர் மாட்டுச்சந்தைக்கு மாடு வியாபாரிகளின் வரத்து குறைந்துள்ளதால் மாடுகள் விற்பனையாவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் இருந்து ஒரு சில மாவட்டங்களில் இருந்து மட்டுமே மாடுகள் குறைந்த அளவிலே வந்துள்ளதால் வியாபாரிகளும் குறைந்த அளவில் கலந்து கொண்டனர். கோடிக்கணக்கில் நடைபெறும் இந்த மாட்டுச்சந்தையில் இன்று லட்சக்கணக்கில் தான் வியாபாரம் நடைபெற்றது. வியாபாரம் மந்தமாக நடைபெறுவதாக மாட்டுச் சந்தையில் உள்ள மாடு வியாபாரிகள் மாடுகளை விற்க வந்திருக்கும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    வியாபாரிகள் வராததால் மாடுகள் வரத்தும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள்.
    • டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது.

    சென்னை:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில்,

    'சங்கீத கலாநிதி' விருதுக்குத் தேர்வாகி உள்ள டி.எம்.கிருஷ்ணாவிற்கு எனது அன்பான வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கிருஷ்ணா அவர்கள் கொண்டுள்ள முற்போக்கு அரசியல் நிலைப்பாடுகளினாலும், அவர் எளியோரைப் பற்றித் தொடர்ந்து பேசி வருவதாலும் ஒரு தரப்பார் காழ்ப்புணர்விலும் உள்நோக்கத்துடனும் விமர்சிப்பது வருத்தத்துக்குரியது.

    இதில் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட மானுட சமத்துவத்துக்காகவும் பெண்கள் சரிநகர் சமானமாக வாழ்ந்திடவும் முக்கால் நூற்றாண்டு காலம் அறவழியில், அமைதிவழியில் போராடிய தந்தை பெரியாரைத் தேவையின்றி வசைபாடுவது நியாயமல்ல. பெரியாரின் தன்னலமற்ற வாழ்க்கை வரலாற்றையும், அவரது சிந்தனைகளையும் படிக்கும் எவரும் இப்படி அவதூறு சேற்றை வீச முற்பட மாட்டார்கள். 

    கிருஷ்ணா அவர்கள் இசைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்கு உரிய மரியாதையையும் அங்கீகாரத்தையும் வழங்கிடும் வகையில் தகுதியானவரைத் தேர்ந்தெடுத்த மியூசிக் அகாடெமி நிர்வாகிகள் நம் பாராட்டுக்கு உரியவர்கள்.

    டி.எம்.கிருஷ்ணா எனும் கலைஞனின் திறமை எவராலும் மறுதலிக்க முடியாதது. அரசியலில் மத நம்பிக்கைகளைக் கலந்தது போல, இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்! விரிந்த மானுடப் பார்வையும், வெறுப்பை விலக்கி, சக மனிதரை அரவணைக்கும் பண்புமே இன்றைய தேவை! என்று தெரிவித்துள்ளார்.

    • ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று அதிகாலை திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் 2 மாவட்டங்களிலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

    மேலும் பெரும்பாலான இடங்களில் வானம் மேக மூட்டமாக காட்சியளித்த தோடு குளிர்ந்த காற்றும் வீசியது. தொடர்ந்து நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரையிலும் ஒருசில இடங்களில் மிதமான சாரல் மழை பெய்தது. தூத்துக்குடியில் மாநகர பகுதி, கடற்கரையோரங்கள் மற்றும் உப்பளங்கள் உள்ள பகுதிகளில் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்த வண்ணம் இருந்தது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் இன்றும் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக ஊத்து எஸ்டேட்டில் 20 மில்லிமீட்டர், மாஞ்சோலையில் 16 மில்லிமீட்டர் மழை பெய்தது. காக்காச்சி மற்றும் நாலுமுக்கு எஸ்டேட்டில் தலா 5 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான ராதாபுரம், சேரன்மகாதேவி, களக்காடு ஆகிய இடங்களில் லேசான மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக ராதாபுரத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்து ள்ளது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் காயல்பட்டினத்தில் 45 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. குலசேரகன்பட்டினத்தில் 10 மில்லி மீட்டரும், ஸ்ரீவைகுண்டத்தில் 8 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது. பாபநாசம் அணையில் நீர் இருப்பு 68.45 அடியாகவும், சேர்வலாறில் 80.90 அடியாகவும், மணி முத்தாறில் 97.31 அடியாகவும் நீர் இருப்பு குறைந்துள்ளது.

    இந்நிலையில் தற்போது பெய்த லேசான மழை தண்ணீர் இருப்பை அதிகரிக்காவிட்டாலும், பூமியை சற்று குளிர செய்யும் என்று விவசாயிகளும், பொதுமக்களும் கூறுகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேர்தல் விதிகளை மீறி தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.
    • தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த புதன்கிழமை அன்று தொடங்கியது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், தென்சென்னை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயவர்தன் மீது தரமணி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேர்தல் விதிகளை மீறி தனியார் திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து தென் சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் தனியார் திருமண மண்டப உரிமையாளர் பாலாஜி மீது தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில் தரமணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • முட்டை லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.
    • பணத்தை பரமத்திவேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    பரமத்திவேலூர் காவிரி பாலம் அருகே உள்ள போலீஸ் நிலைய சோதனை சாவடி அருகே நேற்று இரவு பரமத்திவேலூர் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் முட்டைகளை இறக்கிவிட்டு நாமக்கல் நோக்கி வந்த முட்டை லாரி ஒன்றை தடுத்து நிறுத்தி இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் போலீசார் சோதனை செய்தனர்.

    அப்போது கேரளாவில் முட்டைகளை விற்று உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட 4 லட்சத்து 18 ஆயிரத்து 380 ரூபாய் லாரியில் இருந்தது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என லாரி டிரைவர் திண்டமங்கலம் அருகே உள்ள பெரியகவுண்டமா பாளையத்தை சேர்ந்த நாகராஜனிடம் கேட்டனர்.

    அதற்கு அவர் ஆவணங்கள் எதுவும் இல்லை என கூறினார். இதையடுத்து 4 லட்சத்து 18 ஆயிரத்து 380 ரூபாயை போலீசார் பறிமுதல் செய்து அந்த பணத்தை பரமத்திவேலுார் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    • ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.
    • காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    முத்தூர்:

    திருப்பூர் மாவட்டம் நத்தக்காடையூர் அருகே உலகுடையார்பாளையம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊரின் அருகில் கீழ்பவானி பாசன உபரி நீர் செல்லும் ஓடை உள்ளது. இந்த ஓடையின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டு உள்ளது.

    நத்தக்காடையூர் - திருப்பூர் சாலையில் சிவசக்திபுரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து உலகுடையார்பாளையம் செல்லும் கிராம பொதுமக்கள் இந்த தரைப்பாலத்தின் வழியாக கடந்து செல்ல வேண்டும். இந்த தரைப்பாலம் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கிராம பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ள சூழலில் உலகுடையார்பாளையம் கிராம பொதுமக்கள் தரைப்பாலத்தை சீரமைக்காத காரணத்தால் தேர்தலை புறக்கணிப்பதாக காங்கயம் - நத்தக்காடையூர் பிரதான சாலையில் வெள்ளியங்காடு பஸ் நிறுத்தத்தில் அறிவிப்பு பதாகை வைத்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி சதீஸ்குமார் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் போலீசார் உதவியுடன் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு பதாகையை அப்புறப்படுத்தினர். மேலும் இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது.
    • கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும் பார் வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.760 உயர்ந்து தங்கம் வாங்குவோரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதையடுத்து நேற்று சவரனுக்கு ரூ.280 குறைந்து சற்று ஆறுதல் அளித்தது.

    இந்நிலையில், வார இறுதி நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6,185-க்கும் சவரன் ரூ.49,480-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.50-க்கும் பார் வெள்ளி ரூ.80,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    • நாளை இரவு தெப்ப உற்சவமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) இரவு முத்து பல்லக்கு உற்சவமும், 26-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது.
    • ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மயில் வடிவ மலையில் பிரசித்தி பெற்ற வள்ளிதெய்வானை சமேத முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு பங்குனி உத்திர திருவிழா கடந்த 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று திருகல்யாணம் நடந்து வெள்ளி குதிரை வாகனத்தில் முருகன் மலைவளம் காட்சி நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் முதலில் விநாயகர் தேரையும், பிறகு முருகன் தேரையும் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்

    நாளை இரவு தெப்ப உற்சவமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) இரவு முத்து பல்லக்கு உற்சவமும், 26-ந்தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெறுகிறது.

    இதில் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் 20-ம் பட்டம் ஸ்ரீமத் சிவஞானபாலய சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • பறக்கும் படையினர் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • உரிய ஆவணங்களை காட்டிய பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு ரமேசிடம் தெரிவித்தனர்.

    நெல்லை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி நெல்லை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது.

    இதில் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பணம் ஏதேனும் கொண்டு செல்லப்படுகிறதா என்பதை கண்டறிய மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் ஆங்காங்கே நின்று வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மாநகர மற்றும் மாவட்ட பகுதிகளிலும் நிலையான குழுக்களும் சோதனை சாவடி பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று இரவு நிலையான குழுவினர் அதன் அதிகாரி செல்லத்துரை தலைமையில் வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவில் அந்த வழியாக நெல்லை நோக்கி வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.62 ஆயிரத்து 400 பணம் இருந்தது. அந்த பணம் குறித்து காரில் வந்த பாளை பெருமாள்புரத்தை சேர்ந்த ரமேஷ் என்பவரிடம் விசாரித்தபோது, பத்தமடை பகுதியில் டாக்டராக வேலை பார்ப்பதாகவும், அதற்கான மாத ஊதியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், பாளை தாசில்தார் சரவணனிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காட்டிய பின்னர் பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு ரமேசிடம் தெரிவித்தனர்.

    ×