என் மலர்
உள்ளூர் செய்திகள்
- ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது.
- இணைய தள பதிவுக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை:
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை தோற்கடித்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதும் 2-வது ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 26-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. குஜராத் டைடன்சுடன் மோதுகிறது.
இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கியது. இதற்கான குறைந்தபட்ச டிக்கெட் விலை ரூ.1,700 ஆகவும், அதிகபட்சமாக ரூ.6 ஆயிரமாகவும் நிர்ண யிக்கப்பட்டு இருந்தது.
இதேபோல ரூ.2,500, ரூ.3,500, ரூ.4000 விலைகளிலும் டிக்கெட்கள் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
டிக்கெட் வாங்குவதற்காக லட்சக்கணக்கான ரசிகர்கள் இணைய தளத்தில் பதிவு செய்ய காத்திருந்தனர். இதனால் டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
விற்பனை தொடங்கிய 1 மணி நேரத்திலேயே ரூ.1,700, ரூ.6 ஆயிரம் விலையிலான டிக்கெட்டுகள் ஆன்லைன்னில் விற்றன. அதைத் தொடர்ந்து ரூ.2,500, ரூ.3,500 விலைகளில் உள்ள டிக்கெட்டுகள் முழுமையாக விற்றன. கடைசியாக ரூ.4000 விலையிலான டிக்கெட்டும் விற்றன.
விற்பனை தொடங்கிய 1½ மணி நேரத்திற்குள் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன. இதனால் இணைய தள பதிவுக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.
- தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
- இறுதி வாக்காளர் பட்டியல் மனு தாக்கல் முடிவடைந்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடக்கிறது. இந்த தேர்தலை அமைதியான முறையிலும், நேர்மையாகவும், நடத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படை உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைத்து தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் மாநில தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் தி.மு.க. சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ எம்.பி. அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வக்கீல் பிரிவு செயலாளர் இன்பதுரை, பா.ஜனதா சார்பில் மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், காங்கிரஸ் சார்பில் எஸ்.கே.நவாஸ், சந்திரமோகன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ரவீந்திரநாத் பெரியசாமி, மார்க்சிஸ்டு சார்பில் பீமாராவ், ஆறுமுக நயினார், தே.மு.தி.க. சார்பில் வக்கீல் சந்தோஷ் குமார், மாறன், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சத்தியமூர்த்தி, சார்லஸ், தேசிய மக்கள் கட்சி சார்பில் சீனிவாசன், கார்த்திக், லோக் தந்திரிக் ஜனதாதளம் சார்பில் கார்த்திகேயன், சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தேர்தலின்போது அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இறுதி வாக்காளர் பட்டியல் மனு தாக்கல் முடிவடைந்த பிறகு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு வழங்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பதட்டம் நிறைந்த வாக்குசாவடிகளில் அமைதியாக வாக்குப்பதிவு நடைபெற எடுத்துள்ள நடவடிக்கை பற்றியும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும்படியும் கூறப்பட்டது.
- சாலைவசதி, குடிநீர் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் பலவித போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குச் சேகரித்துவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள்.
கொடைக்கானல்:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவித்து வருவது அரசியல் கட்சியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொடைக்கானல் அருகில் உள்ள வெள்ளக்கவி கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக சாலை வசதி என்பதே கிடையாது. குண்டும், குழியமான மலைச்சாலையில் ஆபத்தான முறையில் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் முதியவர்கள், கர்ப்பிணிகள் போன்ற மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர்களுக்கு டோலிகட்டி தூக்கிச் செல்லும் நிலை உள்ளது.
மேலும் குடிநீருக்காக பெண்கள் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று தண்ணீர் எடுத்து வருகின்றனர். சாலைவசதி, குடிநீர் வசதி கேட்டு இப்பகுதி மக்கள் பலவித போராட்டங்கள் நடத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில்,
எங்கள் கோரிக்கையை மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ ஊராட்சி தலைவர், யூனியன் தலைவர் என அனைவரிடமும் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை. தேர்தல் சமயத்தில் மட்டும் வாக்குச் சேகரித்துவிட்டு பின்னர் கண்டு கொள்ளாமல் சென்று விடுவார்கள். எனவே இந்த முறை கண்டிப்பாக புறக்கணிப்பு செய்ய உள்ளோம் என்றனர்.
இதேபோல் திண்டுக்கல் அருகே உள்ள குஜிலியம்பாறை குடகனாறு பாதுகாப்பு சங்கத்தினரும் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். திண்டுக்கல், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக குடகனாறு உள்ளது. இதற்கு தமிழக அரசால் அமைக்கப்பட்ட வல்லுனர் குழு அறிக்கையை நீண்ட காலமாக வெளியிட அரசு மறுத்து வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
- சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை.
- கடந்த தேர்தலில் தனது கணவர் அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் போட்டியிடுகிறார்.
முதலில் வெளியான பட்டியலில் தர்மபுரி தொகுதியில் போட்டியிடுவதாக அரசாங்கம் என்பவரின் பெயர் அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவருக்கு பதிலாக சவுமியா அன்புமணி அறிவிக்கப்பட்டார்.
சவுமியா அன்புமணி தேர்தலில் போட்டியிடுவது இதுவே முதல் முறை. அரசியல் குடும்பத்தில் இருந்தாலும் தீவிர அரசியலில் வெளிப்படையாக இறங்கியது இல்லை. பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக இருந்து சுற்றுச்சூழல் ஆர்வலராகவே இருந்து வந்தார்.

கடந்த தேர்தலில் தனது கணவர் அன்புமணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
சவுமியாவின் தந்தை கிருஷ்ணசாமி முன்னாள் காங்கிரஸ் தலைவர். எம்.பி.யாகவும் இருந்தவர். அதே போல் சவுமியாவின் சகோதரர் டாக்டர் விஷ்ணு பிரசாத் எம்.பி.யாக இருப்பவர். எனவே சிறு வயதில் இருந்தே அரசியல் சூழலுக்குள் வளர்ந்தவர்.
அதே போல் மாமனார் டாக்டர் ராமதாஸ் பா.ம.க. நிறுவனராகவும், தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் தலைவராகவும் இருப்பவர். கணவர் மத்திய மந்திரியாக இருந்தவர்.

இப்படி அரசியல் சூழ்ந்த குடும்ப சூழலுக்குள் இருக்கும் சவுமியாவும் தேர்தலில் போட்டியிட விரும்பி இருக்கிறார். மனைவி போட்டியிட விரும்பியதால் தான் போட்டியிட்ட தர்மபுரி தொகுதியில் போட்டியிட அன்புமணி ஆலோசனை வழங்கியதாக கூறப்படுகிறது.
முக்கியமாக அ.தி.மு.க.வுடன் கூட்டணி என்றதும் 100 சதவீதம் தேர்தலில் குதிக்க தயாராகி இருக்கிறார். கடைசியில் கூட்டணி மாறியதால் போட்டியிட தயங்கியதாக கூறப்படுகிறது.
ஒருவேளை கடைசி நேரத்தில் மனம் மாறினால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் தான் கட்சி மேலிடமும் பிரபலமில்லாத அரசாங்கம் என்பவரை வேட்பாளராக அறிவித்ததாகவும், எதிர் பார்த்தது போலவே சமியா போட்டியிட தயார் என்று அறிவித்ததால் அரசாங்கத்தை மாற்றி விட்டு சவுமியாவை அறிவித்ததாகவும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- பறக்கும் படை அதிகாரி அருண்குமார் தலைமையில் கொடைக்கானல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர்.
- முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
நிலக்கோட்டை:
பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களுக்கு உரிய ஆவணங்கள் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க நிலையான கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வத்தலக்குண்டு அருகே பறக்கும் படை அதிகாரி அருண்குமார் தலைமையில் கொடைக்கானல் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேனியில் இருந்து மதுரைக்கு வந்த வேனை மறித்து பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். அதில் 3 கிலோ 600 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து டிரைவர் நடராஜன் (வயது 34), மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரர் கமலநாதன் (49) ஆகியோரிடம் விசாரித்த போது மதுரையில் உள்ள 3 நகை கடைகளுக்கு நகைகளை கொண்டு செல்வதாக தெரிவித்தனர்.
ஆனால் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லாததால் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை பறிமுதல் செய்து நிலக்கோட்டை சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். அப்போது நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.
பறக்கும்படை சோதனையில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சந்தோஷ் குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் நாளை திருமணம் நடத்த தேதி நிச்சயம் செய்து தடபுடலாக ஏற்பாடுகளை செய்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கில்லாடி மாப்பிள்ளையை தேடி வருகின்றனர்.
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் நமண்டி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 33).
இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். பல ஆண்டுகளாக இவருக்கு திருமணத்திற்காக பெண் தேடும் படலம் நடந்தது. ஆனால் தனியார் நிறுவனத்தில் வேலை செய்வதால் இவருக்கு பெண் கொடுக்க மறுத்துள்ளனர்.
வயது 33 ஆகிவிட்டதால் விரைவில் திருமணம் செய்ய வேண்டும் என சந்தோஷ் குமார் முடிவு செய்தார். தனக்கு போலீசில் டி.எஸ்.பி. வேலை கிடைத்துள்ளதாக அந்த பகுதி பொதுமக்களிடம் கூறினார்.
தற்போது சென்னையில் பயிற்சி டி.எஸ்.பி.யாக வேலை பார்த்து வருவதாக கூறி பெண் பார்க்க தொடங்கினார். இந்த நிலையில் செய்யார் பகுதியை சேர்ந்த பெண்ணை அவருக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
மாப்பிள்ளை சென்னையில் டி.எஸ்.பி. அரசு அதிகாரியாக வேலை பார்க்கிறார். கை நிறைய சம்பளம் வாங்குகிறார் என கூறி வரதட்சணையும் பேசியதாக கூறப்படுகிறது.
சந்தோஷ் குமாருக்கும் இளம்பெண்ணுக்கும் நாளை திருமணம் நடத்த தேதி நிச்சயம் செய்து தடபுடலாக ஏற்பாடுகளை செய்தனர்.
திருமண பத்திரிகையில் சந்தோஷ் குமார் காவல்துறை டி.எஸ்.பி (சென்னை) என கம்பீரமாக அச்சடித்தார். அந்த பத்திரிகைகள் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பெண் வீட்டிற்கும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் அப்பாதுரை என்பவருக்கு சந்தோஷ் குமார் டி.எஸ்.பி. இல்லை. அவர் மோசடி செய்து இளம்பெண்ணை திருமணம் செய்ய முயற்சி செய்கிறார் என தகவல் கிடைத்தது.
அப்பாதுரை இது குறித்து தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் திருமண பத்திரிகையில் சென்னை காவல்துறை டி.எஸ்.பி என அச்சிடப்பட்டிருந்ததை வைத்து விசாரித்தனர்.
இதில் அவர் சென்னை காவல்துறையில் பணிபுரியவில்லை என்பது உறுதியானது. போலீசார் சந்தோஷ் குமாரின் குடும்பத்தினரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
அப்பொழுதுதான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் சந்தோஷ் குமார் போலீஸ் டி.எஸ்.பி. என மோசடி செய்து திருமணம் செய்ய முயற்சி செய்தது தெரியவந்தது. போலீசார் விசாரிப்பது குறித்து தகவல் அறிந்த சந்தோஷ்குமார் தலைமறைவானார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கில்லாடி மாப்பிள்ளையை தேடி வருகின்றனர். நாளை திருமணம் நடைபெற இருந்த நேரத்தில் மாப்பிள்ளை மோசடி செய்தது தெரிய வந்ததால் பெண் வீட்டார் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
- தேர்தல் நேரத்தில் மட்டும் வாரத்திற்கு 3, 4 நாட்கள் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார்.
- பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
உடன்குடி:
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணி சார்பில் தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி. மீண்டும் போட்டியிடுகிறார்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் உடன்குடி அருகே உள்ள தண்டுபத்தில் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
தமிழகத்தில் ஒரு பிடி அளவு மண் கூட பா.ஜ.க. விற்கு சொந்தம் இல்லை என்கிற நிலையை உருவாக்கி காட்ட வேண்டும். தேர்தல் நேரத்தில் மட்டும் வாரத்திற்கு 3, 4 நாட்கள் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகிறார்.
ஆனால் இதுவரை தமிழ்நாட்டில் ஏற்பட்ட பேரிடர் சம்பவங்களின் போது எந்த நிவாரண உதவிகளையும் வழங்கவில்லை.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பா.ஜ.க. அரசு தங்களை எதிர்த்தவர்களை கைது செய்து மிரட்டி வருகிறது. தமிழக மக்களை அவர்க ளால் ஏமாற்ற முடியாது. பாராளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.
நீங்கள் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ.க.விற்கு போடக்கூடிய வெடி என்பதை நினைத்து இந்த தேர்தலில் களப்பணியாற்ற வேண்டும்.
இந்த மண்ணில் ஒரு இடத்தில் கூட பா.ஜ.க. 2-வது இடத்திற்கு வந்து விடக்கூடாது என்பதனை மனதில் வைத்து கொண்டு நாம் தேர்தலில் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதிக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- பாஜக சார்பில் ராதிகா போட்டியிடும் விருதுநகர் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
தமிழ்நாடு உட்பட 40 மக்களவைத் தொகுதிகளுக்கும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும், தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.
* தேர்தல் பணிகளை முறைப்படுத்தும் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திமுக-வின் கலாநிதி வீராசாமி போட்டியிடும் வடசென்னை தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதியில் அதிமுக தேர்தல் பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திமுக-வின் தமிழச்சி தங்கபாண்டியன் போட்டியிடும் தென்சென்னைக்கு கோகுல இந்திரா தேர்தல் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* ஓபிஎஸ் போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதிக்கு அதிமுக தேர்தல் பொறுப்பாளராக ஆர்.பி.உதயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* திமுக-வின் ஆ.ராசா போட்டியிடும் நீலகிரிக்கு தேர்தல் பொறுப்பாளராக அதிமுக சார்பில் எஸ்.பி.வேலுமணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பாஜக சார்பில் ராதிகா போட்டியிடும் விருதுநகர் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக ராஜேந்திர பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* பாஜக-வின் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்கு இசக்கி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தேனி தொகுதிக்கு ஆர்.பி.உதயகுமார், தூத்துக்குடி தொகுதிக்கு கடம்பூர் ராஜூ, மதுரை தொகுதிக்கு நத்தம் விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
* தஞ்சை தொகுதிக்கு காமராஜ், மயிலாடுதுறை தொகுதிக்கு ஓ.எஸ்.மணியன், திருச்சிக்கு சி.விஜயபாஸ்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- கட்சிகளின் வண்ணங்களின் அச்சிட்டு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
- சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் துணிகளை வைத்து தயாரிப்பதுதான் சிறப்பம்சமாகும்.
சிவகாசி:
ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் தேர்தல் வந்து விட்டாலே கட்சியினர் முதல் கடைக்கோடி தொண்டன் வரை கரைவேட்டி, கட்சிக்கொடி, தொப்பி, சின்னம் என எல்லாம் அதகளப்படும். அந்த வகையில் பிரசாரத்திற்கு தேவையான துண்டு பிரசுரம் முதல் சுவரொட்டிகள், பேனர்கள் அச்சிடும் பணிகளும் சூடு பிடிப்பது வழக்கம்.
பாராளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் தற்போது அரசியல் கட்சிகளின் பிளக்ஸ், தொப்பி மற்றும் சின்னங்கள் பொறித்த அட்டை மற்றும் பிளாடிக் மாஸ்க் உள்ளிட்ட வைகளை அச்சடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அதன்படி தேசிய கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மாநிலகட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சி பாகுபாடு இல்லாமல் இல்லாமல் அனைத்து கட்சிகளின் வரவேற்பு பேனர்கள், கட்சி கொடிகள், சின்னம், தோரணங்கள், துண்டு, தொப்பி ஆகியவை என அந்தந்த கட்சிகளின் வண்ணங்களின் அச்சிட்டு தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
குறிப்பாக இந்த தேர்தலுக்கான புதுவரவாக ஸ்டார் வடிவிலான கொடிகள் அனைத்து கட்சியினரிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இதுகுறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், ஒரு ஸ்டார் கொடியின் விலை ரூ.2.50 பைசா தான். மேலும் 30 வகையான கொடிகள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தாமல் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் துணிகளை வைத்து தயாரிப்பதுதான் சிறப்பம்சமாகும்.
மேலும் தேர்தல் சமயத்தில் தான் விருதுநகர் மாவட் டம் சிவகாசியில் உள்ள அச்சக உரிமையாளருக்கும் விற்பனையாளர்களுக்கும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து மாநிலங்களில் இருந்து கட்சிக்கொடி தயார் செய்வதற்கு ஆர்டர் கொடுப்பார்கள். ஆனால் தற்பொழுது கட்சிக் கொடிகளின் ஆர்டர்கள் மந்தமாக உள்ளது.
கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இழுபறியே இதற்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் 26 நாட்களே உள்ளதால் தமிழகம் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் ஆர்டர்கள் குவியத்தொடங்கி உள்ளன.
இந்த தேர்தலையெட்டி, மேற்கண்ட தொழிலை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் ஒரு படி முன்னேற்றம் அடையும் என்றும் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.
- பங்குனி உத்திர திருவிழாவில் கடந்த 18ம் தேதி கொடியேற்றம் நடந்தது.
- பழனியில் இன்று மாலை திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
பழனி:
அறுபடை வீடுகளில் 3ம் படை வீடான பழனியில் தற்போது பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
பங்குனி உத்திர திருவிழாவில் கடந்த 18ம் தேதி கொடியேற்றம் நடந்தது. அப்போது எர்ணாகுளத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் பழனி கோவிலுக்கு ரெயிலில் வருகை தந்தார். மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல பழனி ரெயில்நிலையம் வந்தபோது கேரளாவை சேர்ந்த 3 பேர் பழனி ரெயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றி வந்துள்ளனர். அவர்களை ஏற்கனவே கேரளாவில் பார்த்திருந்த முருகேசன் அவர்களது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்தார். அதன்பின் சொந்த ஊருக்குச் சென்ற அவர் கேரள மாநில டி.ஜி.பி.க்கு பழனி ரெயில் நிலையத்தில் நடந்த விபரங்கள்குறித்து இ-மெயில் மூலம் தகவல் தெரிவித்தார்.
பின்னர் அங்கிருந்து தமிழக டி.ஜி.பி.க்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து இன்று ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூயமணி வெள்ளைச்சாமி, ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டர் சுனில்குமார், பழனி இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சேர்ந்து வெடிகுண்டு உள்ளதா என்று சோதனை மேற்கொண்டனர்.
பயணிகள் ஓய்வெடுக்கும் அறைகள், குப்பை தொட்டி, கடைகள், ரெயில்வே தண்டவாளம் என அனைத்து பகுதிகளிலும் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். இதனை தொடர்ந்து அடிவாரம் பகுதியில் உள்ள கடைகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பழனியில் இன்று மாலை திருக்கல்யாணம், நாளை தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். எனவே பக்தர்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அடுத்துவரும் 3 நாட்களுக்கும் தொடர் சோதனை, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சோதனையால் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
- ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- கொல்கத்தா 16 போட்டியிலும், ஐதராபாத் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.
மொகாலி:
ஐ.பி.எல்.போட்டியில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது.
மொகாலியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ்-ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.
கார் விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் 14 மாதங்களுக்கு பிறகு களம் இறங்குகிறார். முழு உடல் தகுதியுடன் இருக்கும் அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கிறது. ரிஷப் பண்ட் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்து வாரா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சீசனில் அவர் இல்லாத டெல்லி அணி 10-வது இடத்தை பிடித்தது. தற்போது ரிஷப் பண்ட் வருகையால் டெல்லி அணியின் செயல்பாடு மேம்பாடு அடையலாம். பஞ்சாப் அணி கடந்த சீசனில் 8-வது இடத்தை பிடித்தது. இரு அணிகளும் வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளன.
இரு அணிகளும் 32 முறை மோதியுள்ளன. இதில் தலா 16 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. கடைசியாக மோதிய ஆட்டத்தில் டெல்லி அணி 15 ரன்னில் வெற்றி பெற்றது.
இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2-வது போட்டியில் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்-கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
சொந்த மண்ணில் கொல்கத்தா வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஐதராபாத் அணி வெல்லும் வகையிலும் சவால் கொடுத்து விளையாடும்.
இரு அணிகளும் ஐ.பி.எல். தொடரில் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 16 போட்டியிலும், ஐதராபாத் 9 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு கடைசியாக மோதிய போட்டியில் கொல்கத்தா 5 ரன்னில் வெற்றி பெற்றது.
- கோவையில் பறக்கும் படையினரின் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.
- சோதனைச்சாவடிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
கோவை:
கோவை பாராளுமன்ற தொகுதியில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதன் காரணமாக இந்த தொகுதி மாநில அளவில் மட்டுமின்றி, தேசிய அளவிலும் திரும்பி பார்க்கும் தொகுதியாக மாறி உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் மும்முனை போட்டி நிலவினாலும் கோவையில் இந்த போட்டி இன்னும் மிக கடுமையாக உள்ளது.
மற்ற அரசியல் கட்சியினருக்கு சிம்ம சொப்பனமாக திகழும் அண்ணாமலையை வீழ்த்தும் நோக்கில் இந்த தொகுதியில் மற்ற கட்சிகளின் களப்பணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆளும் கட்சியான தி.மு.க. கோவை பாராளுமன்ற தொகுதியை எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கில் இந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு கொடுக்காமல் அந்த கட்சியே பெற்று களமிறங்கி உள்ளது. தற்போது அண்ணாமலை போட்டியால் மிக கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது. முன்னாள் மேயரான கணபதி ராஜ்குமாரை வேட்பாளராக களமிறக்கி தீவிர களப்பணியில் குதித்துள்ளது. வரும் நாட்களில் இந்த தொகுதியில் வாக்கு சேகரிப்பு பணியை மேற்கொள்ள அமைச்சர்கள் பலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல அ.தி.மு.க.வும் கடுமையான போட்டியில் இறங்கி உள்ளது. கோவையை தங்கள் கோட்டையாக கருதும் அந்த கட்சி செல்வாக்கை தக்க வைக்க களமிறங்கி உள்ளது.
அண்ணாமலை வருகையால் ஏற்பட்ட மிக கடுமையான போட்டியால் மற்ற தொகுதிகளை விட இந்த தொகுதியில் பணமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். வாக்காளர்களை கவரும் வகையில் பணம், பரிசு பொருட்கள் அதிகளவில் வழங்கப்படலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கோவையில் தற்போது களமிறங்கி உள்ள பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையும் இதே கருத்தை தெரிவித்துள்ளார். கோவையில் என்னை வீழ்த்தும் நோக்கில் கோடிக்கணக்கான ரூபாய் கொண்டு வந்து செலவு செய்வார்கள். பணமழை இங்கே பொழியும், இலவசங்கள் அள்ளித்தரப்படும். ஆனால் நான் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டேன் என கூறி உள்ளார்.
கோவை தொகுதியில் பணப்புழக்கம் அதிகம் இருக்க வாய்ப்பு இருப்பதால் பறக்கும் படையினர் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளனர். தனிப்படைகளின் எண்ணிக்கையும் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. தனிப்படையினர் இரவு- பகல் பாராமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். சோதனைச்சாவடிகள் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் கேட்டபோது கோவையில் பறக்கும் படையினரின் கண்காணிப்பு தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரை ரூ.1 கோடியே 68 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 72 வழக்குகள் பதிவாகி உள்ளது. பரிசு பொருட்கள் என்று எதுவும் சிக்கவில்லை. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுக்கப்படுகிறதா என்பதைதொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.






