என் மலர்
நீங்கள் தேடியது "திருமண மோசடி"
- ருபிந்தர் கடந்த ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் மாயமானார்.
- ருபிந்தரின் மூத்த சகோதரி கமல் கைரா புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புகார் செய்தார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட் பகுதியை சேர்ந்த பெண் ருபிந்தர் கவுர் பாந்தர். 71 வயதான இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.
இந்நிலையில் ருபிந்தருக்கு ஆன்லைனின் திருமண செயலி ஒன்றின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான சரஞ்சித் சிங் கிரேவால் (75) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
கிரேவாலும் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விவாகரத்து செய்த நிலையில் அவருக்கு ருபிந்தருடனான பழக்கம் காதலாக மாறி உள்ளது.
ருபிந்தரை பார்க்க கிரேவால் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு இருவரும் பேசி காதலை வளர்த்து வந்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவெடுத்த நிலையில் கிரேவால் திருமணத்தை தனது சொந்த ஊரான இந்தியாவின் பஞ்சாப்பில் உள்ள தனது கிராமத்தில் வைத்து கொள்ளலாம் என கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து ருபிந்தர் கடந்த ஜூலை மாதம் இந்தியாவுக்கு வந்த நிலையில் அடுத்த சில நாட்களில் அவர் மாயமானார். அவரிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லாததால் சந்தேகமடைந்த ருபிந்தரின் மூத்த சகோதரி கமல் கைரா புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் மாயமான ருபிந்தரை தேடும் பணி தீவிரமாக நடந்தது. அப்போது கிரேவாலின் செல்போனில் இருந்து குறிப்பிட்ட ஒரு நம்பருக்கு அழைப்புகள் சென்றதை கண்டுபிடித்த போலீசார் சம்பந்தப்பட்ட வாலிபரை பிடித்தனர்.
விசாரணையில் அவர் கிரேவால் தூண்டுதலின் பேரில் ருபிந்தரை எரித்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து நடந்த விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ருபிந்தரை காதலிப்பதுபோல் நடித்து கிரேவால் அவரிடம் இருந்து ஏராளமான பணத்தை பெற்றுள்ளார்.
ருபிந்தரிடம் இருந்து மேலும் பணத்தை அபகரிக்கும் நோக்கில் அவரை இந்தியாவுக்கு வரவழைத்த கிரேவால் பஞ்சாப்பின் மல்காபட்டி பகுதியை சேர்ந்த சுக்ஜீத் சிங் சோன் என்பவரை அணுகி உள்ளார். அவரது திட்டப்படி இந்தியா வந்த ருபிந்தரை சுக்ஜீத் சிங் சோனு கொலை செய்துவிட்டு அவரது உடலை டீசல் ஊற்றி எரித்துள்ளார்.
எஞ்சிய பகுதிகளை கிராமத்தில் உள்ள வடிகாலில் வீசிதாக சுக்ஜீத் சிங் சோன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். மேலும் ருபிந்தரை கொலை செய்வதற்காக கிரேவாலிடம் இருந்து ரூ.50 லட்சம் பேரம் பேசியதாகவும், அதை நம்பி அவரை கொலை செய்ததாகவும் சுக்ஜீத் சிங் சோன் போலீ ரிடம் தெரிவித்தார்.
அவரை கைது செய்த போலீசார் ருபிந்தரின் எலும்பு கூடுகளை மீட்டு, தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான சரஞ்சித் சிங் கிரேவாலை தேடி வருகின்றனர்.
- பெண் மீது மேலும் 5 பேர் புகார் அளித்துள்ளனர்.
- 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.
விருத்தாசலம்:
சென்னை சூரப்பட்டு பகுதியை சேர்ந்த 58 வயதுள்ள ஒருவர் கறிக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டுக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு விருத்தாசலம் ஆலடி ரோடு பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார்.
3 மாதம் மட்டும் வேலை செய்துள்ளார். அப்போது கறிக்கடைக்காரருக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பழக்கத்தின் அடிப்படையில் அந்த பெண்ணுக்கு கறிக்கடைக்காரர் கடனாக ரூ.6 லட்சம் பணமும், 8 பவுன் நகையும், ½ கிலோ வெள்ளி பொருட்களும், வெள்ளி கொலுசு மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார்.
பின்பு இந்த பணத்தையும், நகையையும் திரும்ப கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அந்த பெண் விருத்தாசலம் வந்து விட்டார்.
இந்நிலையில் கடந்த 20-ந்தேதி கறிக்கடைக்காரர் விருத்தாசலம் வந்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டபோது தர முடியாது என மறுத்து மகன்களுடன் சேர்ந்து திட்டி, தாக்கி, கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கறிக்கடைக்காரர் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அந்த பெண் குறித்து கறிக்கடைக்காரர் கூறும்போது, 'எனக்கு கணவர் கிடையாது. உங்களோடு வாழ்ந்து விடுகிறேன் என கூறி ஏமாற்றி என்னை திருமணம் செய்து கொண்டு பணம், பொருட்களை வாங்கினார். என்னை பிரிந்த பிறகு விருத்தாசலம் வந்து விசாரித்தபோது தான் அவர் இதுபோன்று ஏற்கனவே 5 பேரை திருமணம் செய்து கொண்டு அவர்களிடமும் பணம் மற்றும் நகைகள் வாங்கி ஏமாற்றி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது என்றார்.
இதுபோன்று அந்த பெண் மீது மேலும் 5 பேர் புகார் அளித்துள்ளனர். அதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ஒருவரும் புகார் அளித்து உள்ளார். அதில் எனது தந்தையுடன் அந்த பெண் சில நாட்கள் மனைவியாக வாழ்ந்தார். அவரிடமும் நகை, பணமும் அபேஸ் செய்துள்ளார் என்று கூறி உள்ளார்.
அதேபோல் பண்ருட்டியை சேர்ந்த ஒருவர் 1½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் வட்டிக்கு வாங்கி கொடுத்ததாகவும், தன்னையும் திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் இருந்ததாகவும் அப்பெண் மீது புகார் அளித்துள்ளார்.
அதேபோல் பண்ருட்டியை சேர்ந்த மற்றொருவரும் தன்னையும் திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் இருந்துள்ளார். அப்போது அவருக்கு ரூ.2 லட்சம் வட்டிக்கு வாங்கி கொடுத்தும் வீடு வாடகைக்கு அட்வான்ஸ் ரூ.70 ஆயிரம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
அதுபோல் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவரின் மனைவி, தனது கணவருடனும் அந்த பெண்ணுக்கு தொடர்பு இருந்ததால் கணவரை விவாகரத்து செய்து வாழ்க்கையை இழந்துள்ளேன் எனவும் புகார் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்து ஏமாற்றி அவரை பிரிந்து வந்துள்ளதாகவும், இதுபோல் மொத்தம் 6 பேரை திருமணம் செய்து அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி வாங்கியதாகவும் தற்போது அந்த பெண் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே உள்ள ஒரு டீ கடையில் வேலை செய்து வருவதாகவும், இதனால் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார்கள் கொடுத்தனர்.
மேலும் புகார் கொடுத்தவர்களின் உறவினர்கள் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், நான் ஒருவரை மட்டும்தான் திருமணம் செய்தேன். மற்ற 5 பேரை திருமணம் செய்யவில்லை என கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
இன்று அவரிடம் 2-வது நாளாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். அவரிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஒவ்வொருவரிடமும் ஒரு கதை கூறி அவர்களிடம் பணம், நகைகளை பறித்ததாகவும் கூறப்படுகிறது.
- பலநாள் தொடர்ந்த அவரது மோசடி தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவை சமீப காலமாக பெண்கள் பல்வேறு விஷயங்களில் கதற விட்டு வருகின்றனர். நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகார் தொடர்பான விசாரணைகள் ஓய்ந்த நிலையில் தற்போது 10 ஆண்களை ஏமாற்றி மணந்த கல்யாண ராணி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காஞ்சிரா மட்டம் பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்பவர் தான் இந்த மோசடியில் ஈடுபட்டு உள்ளார். திருமணத்திற்கு ஆன்லைனில் பெண்களை தேடும் ஆண்களை கண்டு பிடித்து தனது வசீகர குரலால் பேசியும், நேரில் சந்திக்கும் போது தனது அழகால் வீழ்த்தியும் திருமண பந்தத்தில் பலருடன் இணைந்துள்ளார். ஆனால் ஒவ்வொருவரிடமும் ஒரு கதை கூறி அவர்களிடம் பணம், நகைகளை பறித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவரை கரம் பிடிக்க முயன்ற நிலையில் தான் அவரது குட்டு வெளிப்பட்டது. திருமணத்திற்காக அழகுநிலையம் சென்றிருந்த அவர் தனது கைப்பையை மறந்து விட்டுச் சென்றார். அதனை மணமகனான பஞ்சாயத்து உறுப்பினர் பார்த்த போது, அதில் ரேஷ்மாவுக்கு பல திருமணங்கள் நடந்திருப்பதற்கான சான்றிதழ்கள் இருந்ததை பார்த்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆரியநாடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அழகுநிலையம் சென்ற போலீசார், அங்கு வைத்தே ரேஷ்மாவை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது தனது மோசடியை ஒத்துக் கொண்ட ரேஷ்மா, அடுத்த மாதம் மற்றொருவருடன் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது பல்வேறு தகவல்கள் கிடைத்தன.
திருமணத்துக்கு பெண் தேடுபவர்கள் விவரங்களை ஆன்லைன் மூலம் பெறு வாராம். அதில் வசதியானவரை தேர்வு செய்து, அவரது செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்வார். அப்போது தனது மகளுக்கு உங்களை தேர்வு செய்துள்ளேன் எனக் கூறி விட்டு தனது மகள் நம்பர் இது என ஒரு நம்பரை கொடுப்பாராம். அதனை நம்பியவர்கள் அந்த எண்ணை தொடர்பு கொள்ளும் போது ரேஷ்மா பேசி, அவருடன் சந்திப்பை ஏறபடுத்திக் கொள்வார்.
அப்போது தான் தத்தெடுக்கப்பட்டவள், தனது தாய்க்கு திருமணம் செய்து கொடுப்பதில் விருப்பம் கிடையாது. எனவே திருமண விழாவில் தான் சார்பில் யாரும் வரமாட்டார்கள் என கூறி திருமணம் செய்து வந்துள்ளார். கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்த ரேஷ்மா, பஞ்சாயத்து உறுப்பினரை திருமணம் செய்த பிறகு அடுத்த திருமணத்தை 20 நாட்களில் நடத்த மற்றொருவரையும் தேர்வு செய்து வைத்திருந்தாராம்.
அவர் பல்வேறு மாவட்டங்களில் 10-க்கும் மேற்பட்டோரை இதுபோல பேசி ஏமாற்றி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இது பற்றி ரேஷ்மாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், 2014-ம் ஆண்டு பட்டப்படிப்பு படித்த போது எர்ணாகுளத்தை சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு அவருடன் ஓடிச் சென்று உள்ளார். 2017-ம் ஆண்டு வரை அவருடன் வாழ்ந்த ரேஷ்மா, அதன்பிறகு தான் தனது திருமண மோசடிகளை தொடங்கி உள்ளார். 2017 முதல் 2022-ம் ஆண்டு வரை அவர் 4 ஆண்களை திருமணம் செய்துள்ளதாக தெரிகிறது.
2023-ம் ஆண்டு ஒரு குழந்தையை பெற்ற அவர், இந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 2 வாலிபர்களை திருமணம் செய்துள்ளார். இந்த மாதம் பஞ்சாயத்து உறுப்பினர், அடுத்த மாதம் வேறு ஒருவருடன் திருமணம் என மாதத்திற்கு ஒரு திருமணம் செய்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதமும் ஒருவருடன் திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், அந்த வாலிபர் விபத்தில் சிக்கி விட்டார். இதனால் அந்த திருமணம் நின்று விட்டது.
திருமணம் செய்த ஒவ்வொருவரிடமும் ஒரு கதையை நம்பும் படி கூறி ஏமாற்றிய அவர், சில நாட்களில் பணம் மற்றும் பொருட்களை எடுத்துக் கொண்டு சென்று விடுவாராம். அப்போது சில சான்றிதழ்களை சேகரிக்க வேண்டும் என தான் திருமணம் செய்தவர்களிடம் கூறிவிட்டு மாயமாகி வந்துள்ளார். மேலும் அவர்களுக்கு அடிக்கடி போன் செய்தும் பேசி வந்துள்ளார். இதனால் தான் அவர் மீது யாருக்கும் பெரிதாக சந்தேகம் வர வில்லை. அதனால் தான் போலீசாருக்கு புகாரும் வரவில்லை.
எர்ணாகுளம், தொடுபுழா, கோட்டயம், கொட்டாரக்கரா, வாலாகோம், வைக்கம், திருவனந்தபுரம் என பல மாவட்டங்களில் ரேஷ்மா திருமணம் செய்து உள்ளார். பலநாள் தொடர்ந்த அவரது மோசடி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. தொடர்ந்து போலீசாரிடம் பல்வேறு தகவல்களை கூறிய ரேஷ்மா, தனக்கு சரியான காதல் கிடைக்காததால் பல திருமண உறவுகளில் ஈடுபட்டதாகவும், தன்னை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் என்னை வெளியே விடாதீர்கள்... நான் வெளியே வந்தால், என் தவறுகளை மீண்டும் செய்வேன் என்றும் கூறியது போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விசாரணைக்கு பிறகு அட்டங்குளக்கரை பெண்கள் ஜெயிலில் ரேஷ்மா அடைக்கப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது தான் அவர் ஏமாற்றி திருமணம் செய்தவர்கள் யார்? என்ற விவரம் முழுமையாக தெரியவரும்.
- பல்வேறு மாவட்டங்களில் பல கதைகள் கூறி திருமண பந்தம் ஏற்படுத்தி பலரிடம் பணம் பறித்துள்ள தகவல் கிடைத்துள்ளது.
- கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்த ரேஷ்மா, அதற்குள் பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமண பந்தத்திற்கு தயாராகி உள்ளார்.
திருவனந்தபுரம்:
அழகால் வீழ்த்தி ஆண்களை மயக்கி பணம் பறிக்கும் சில பெண்கள் இதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி குடும்பத்தினரையும் வேறு சிலரையும் நம்ப வைத்து டாக்டர் உள்பட பலரிடம் பணம் பறித்த பெண்ணின் செயல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் 10 ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி இளம்பெண் பணம் பறித்த அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் காஞ்சிரா மட்டம் பகுதியை சேர்ந்தவர் ரேஷ்மா. அழகும் திறமையும் கொண்ட இவருக்கும், பஞ்சாயத்து உறுப்பினர் ஒருவருக்கும் திருமணம் நிச்சயமானது. திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில் ரேஷ்மா முதல் நாள் திருவனந்தபுரம் வேம்பாயம் அழைத்து வரப்பட்டார்.
அவரை தனது நண்பர் வீட்டில் வருங்கால கணவரான பஞ்சாயத்து உறுப்பினர் தங்க வைத்தார். அப்போது அவருக்கு ரேஷ்மா பற்றி சில தகவல்கள் கிடைத்தன. மேலும் அவரது நடவடிக்கையும் சந்தேகத்துக்குரியதாக இருந்தது. இந்த நிலையில் திருமண அலங்காரத்திற்காக ரேஷ்மா அழகு நிலையம் சென்றார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, அவரது உடமைகளை பஞ்சாயத்து உறுப்பினர் தனது நண்பருடன் சேர்ந்து சோதனை செய்தார். அப்போது ரேஷ்மாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இருப்பதற்கான ஆவணங்கள் கிடைத்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆரியநாடு போலீசில் புகார் செய்தார். இந்த விவரங்கள் தெரியாமல் ரேஷ்மா அலங்காரம் முடித்து திரும்பியபோது போலீசார் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் ரேஷ்மாவுக்கு திருமணம் புதிதல்ல... அவர் பல்வேறு மாவட்டங்களில் பல கதைகள் கூறி திருமண பந்தம் ஏற்படுத்தி பலரிடம் பணம் பறித்துள்ள தகவல் கிடைத்துள்ளது. கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஒருவரை திருமணம் செய்த ரேஷ்மா, அதற்குள் பஞ்சாயத்து உறுப்பினருடன் திருமண பந்தத்திற்கு தயாராகி உள்ளார்.
மேலும் அடுத்த மாதம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்ய பேசி வைத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த தகவலை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். ஒரே பெண் எப்படி? மாறி மாறி ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்? என விசாரித்த போது, ஆன்லைனில் விளம்பரப்படுத்தியும், அதில் வரும் திருமண வரன் தகவல்களை சேகரித்தும் ரேஷ்மா திருமண பந்தத்தில் ஈடுபட்டுள்ளார்.
திருமணம் செய்த ஒவ்வொருவரிடமும் ஒரு கதையை நம்பும் படி கூறி ஏமாற்றி உள்ளார். ஆனால் பல நாள் திருடன் ஒருநாள் அகப்படுவான் என்பது போல தற்போது அவர் சிக்கி உள்ளார். அவரை போலீசார் கைது செய்ய காரணமான பஞ்சாயத்து உறுப்பினர் இது பற்றி கூறுகையில், திருமண விளம்பர குழுவில் எனது செல்போன் நம்பரை நான் பதிவு செய்திருந்தேன். அந்த எண்ணுக்கு கடந்த மாதம் (மே) 29-ந்தேதி அழைப்பு வந்தது.
அதில் பேசியவர் தான் பெண்ணின் தாய் என அறிமுகப்படுத்திக் கொண்டு ரேஷ்மாவின் செல்போன் எண்ணை கொடுத்தார். அதன் மூலம் ரேஷ்மாவிடம் பேசினேன். பின்னர் நாங்கள் 2 பேரும் கோட்டயத்தில் உள்ள ஒரு மாலில் நேரில் சந்தித்து பேசினோம். அப்போது தான் தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்றும், தனக்கு திருமணம் செய்து வைப்பதில் தாய்க்கு ஆர்வம் இல்லை என்றும், அவர் தன்னை துன்புறுத்துவதாகவும் ரேஷ்மா கூறினார்.
இதனை நம்பிய நான் திருமணத்திற்கு சம்மதித்தேன். அப்போது திருமண விழாவில் தனது தரப்பில் இருந்து பெரிதாக யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் ரேஷ்மா தெரிவித்தார். அதன்பிறகே திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இருப்பினும் அவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியதாலேயே உடமைகளை சோதனை செய்தேன். அப்போது தான் அவரது திருமணம் தொடர்பான தகவல்கள் கிடைத்தன என்றார்.
இதற்கிடையில் அடுத்த மாதம் திருமணம் செய்ய இருந்த நபரையும் தற்போது அழைத்து வந்ததாக போலீசாரிடம் ரேஷ்மா தெரிவித்தார். இதனை கேட்டு போலீசார் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு மாவட்டத்திற்கு ஒரு கதை சொல்லி பலரை திருமணம் செய்த கல்யாண ராணி ரேஷ்மா, 10-க்கும் மேற்பட்டோரை இதுபோல் ஏமாற்றி திருமண வலையில் வீழ்த்தி பணம் பறித்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
- உள்ளூர் திருமண ஏஜெண்டுகளுடன் சேர்ந்து திருமண மோசடிகளில் ஈடுபடும் நபர்களுடன் அனுராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
ராய்ப்பூர்:
பணம், நகைக்காக அப்பாவி ஆண்கள் மற்றும் மனைவிகளை இழந்த ஆண்களை குறி வைத்து திருமணம் செய்து ஏமாற்றும் பெண்களை அறிந்திருக்கிறோம். கோவையைச் சேர்ந்த மடோனா என்ற பெண் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஓய்வுபெற்ற மற்றும் கணவரை இழந்த அரசு ஊழியர்களை வலையில் வீழ்த்தி திருமணம் செய்து நகை பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பெண் 25 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ராஜஸ்தானை சேர்ந்த அந்த இளம்பெண்ணின் பெயர் அனுராதா ஹேக்.
இவர் தன்னை ஒரு மணப்பெண்ணாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆண்களை ஏமாற்றியுள்ளார். திருமணத்திற்காக தீவிரமாக பெண் தேடும் நபர்களை குறிவைத்து திருமணம் செய்து, குறுகிய காலத்திலேயே அவர்களிடம் உள்ள நகை மற்றும் பணத்துடன் ஓட்டம் பிடிப்பதை வாடிக்கையாக கொண்டு வந்துள்ளார்.
இதற்காக சில திருமண தரகர்களையும் கையில் வைத்திருந்தார். மிகவும் அதிநவீன முறையில் திருமண மோசடியில் ஈடுபட்ட இவர் சிலரை குறிவைத்து, திருமணத்துக்குப் பெண் நகை பணத்தை திருடிக் கொண்டு மாயமாகி உள்ளார்.
ராஜஸ்தானின் சவாய் மாதோப்ப்பூர் பகுதியை சேர்ந்த விஷ்ணு சர்மா எனும் நபர் கடந்த மே 3-ந் தேதி காவல்துறையில் அளித்த புகாரின் பேரில் தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதில், "வரன் பார்த்து தரும்படி திருமண ஏஜெண்ட்களான சுனிதா மற்றும் பப்பு மீனா ஆகியோரிடம் ரூ.2 லட்சம் பணம் கொடுத்தேன். அவர்கள் அனுராதாவை மணமகளாக எனக்கு அறிமுகம் செய்தனர். தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 20ம் தேதி உள்ளூரில் உள்ள நீதிமன்றத்தில் பதிவு திருமணம் செய்துகொண்டோம். ஆனால், மே 2ம் தேதியன்று வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்களுடன் தப்பிச் சென்று விட்டார்" என விஷ்ணு சர்மா புகாரளித்துள்ளார்.
இது குறித்த தொடர் விசாரணையில்தான் அனுராதா ஹேக்கின் திருமண மோசடி அம்பலமானது. சர்மாவின் வீட்டிலிருந்து அனுராதா காணாமல் போன பிறகு, போபாலில் கப்பர் என்ற மற்றொரு நபரை அனுராதா திருமணம் செய்து கொண்டு அவரிடமிருந்து ரூ.2 லட்சம் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரை வருங்கால மணமகனாக காட்டிக் கொண்டு அனுராதாவை போலீசார் மடக்கி கைது செய்துள்ளனர்.
அனுராதா ஹேக் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கைவரிசை காட்டியுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 7 மாதத்தில் 25 பேரை அவர் திருமணம் செய்து பணம், நகைகளை சுருட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் மஹராஜ்கன்ஜ் பகுதியில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த அனுராதா, குடும்ப பிரச்சனை காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்து போபாலில் குடியேறியுள்ளார். அங்கு தான், உள்ளூர் திருமண ஏஜெண்டுகளுடன் சேர்ந்து திருமண மோசடிகளில் ஈடுபடும் நபர்களுடன் அனுராதாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏஜெண்டுகள் வாட்ஸ்அப் வாயிலாக மணமகள்களை அறிமுகப்படுத்தி, தங்களது சேவைக்கு லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்துள்ளனர். அதன்படி, திருமணம் நடந்தும் ஒரே வாரத்தில் மணமகள் மணமகனை விட்டு ஓடிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், "அனுராதா தனது திட்டங்களையும், நடவடிக்கைகளையும் ஒவ்வொரு திருமணத்தின் போதும் திறம்பட செயல்படுத்தியுள்ளார். மணமகளாக தன்னை முன்னிறுத்தி, தேவையான ஆவணங்களை பயன்படுத்தி சட்டப்படி திருமணம் செய்துகொள்வார். சில நாட்கள் மட்டும் கணவருடன் தங்கியிருந்து, சரியான நேரம் பார்த்து கையில் கிடைக்கும் பணம், நகை மற்றும் மின்சாதன பொருட்களுடன் இரவோடு இரவாக அங்கிருந்து தப்பிச் சென்று விடுவார். இதையே வாடிக்கையாக கொண்டு கச்சிதமாக பல திருமணங்களை செய்துள்ளார்" என தெரிவித்தனர்.
- தனது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாங்கினார்.
- ஐதராபாத் ஜுபிலி ஹில்சை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ரூ. 11 லட்சம் கடனாக பெற்று திருப்பி தரவில்லை.
ஆந்திரா மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமகேந்திரவரத்தை சேர்ந்தவர் வம்சி கிருஷ்ணா (வயது 33). இவர் பி.டெக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஐதராபாத் வந்தார்.
ஐதராபாத்தில் உள்ள வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். இளைஞர்களுக்கு வேலை வாங்கி தராமல் ஏமாற்றியதாக போலீசார் வம்சி கிருஷ்ணாவை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
ஜெயிலில் இருந்து வெளியே வந்த வம்சி கிருஷ்ணா ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. போட்டோவை தனது வாட்ஸ்அப் டி.பி.யாக வைத்தார்.
பின்னர் திருமண தகவல் வலைதளங்களில் தன்னுடைய தாய் அமெரிக்காவில் டாக்டராக வேலை செய்கிறார். நான் உள்ளூரில் வியாபாரம் செய்து வருகிறேன். 2-வது திருமணம் செய்ய விரும்பும் பெண்கள் மற்றும் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என பதிவு செய்தார்.
மேலும் தனது தாய் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறியிருந்தார். இதனை உண்மை என நம்பி ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வம்சி கிருஷ்ணாவை தொடர்பு கொண்டனர்.
பழக்கம் ஏற்பட்ட பெண்களிடம் தனது நிறுவனத்தில் ஐடி அதிகாரிகள் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்துவிட்டனர். தனது பெற்றோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறி ஒவ்வொருவரிடமும் ரூ.5 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாங்கினார். இதன் மூலம் ரூ.2½ கோடி மோசடி செய்தார்.
வம்சி கிருஷ்ணாவிடம் பணத்தை இழந்த பெண்கள் பணத்தை திருப்பி கேட்ட போது அவர்களது போட்டோவை மார்பிங் செய்து சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்துள்ளார்.
ஐதராபாத் ஜுபிலி ஹில்சை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் ரூ. 11 லட்சம் கடனாக பெற்று திருப்பி தரவில்லை. இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார்.
பல்வேறு பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் பெங்களூருவில் பதுங்கி இருந்த வம்சி கிருஷ்ணாவை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வாலிபரை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது.
- காதல் திருமணம் செய்த இளம்பெண் முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக வாலிபரை திருமணம் செய்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவை:
அரியலூர் மாவட்டம் மகாலிங்கபுரத்தை சேர்ந்த 37 வயது கட்டிட தொழிலாளி.
இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 24 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.
இந்தநிலையில் தொழிலாளி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கேரளாவுக்கு வேலைக்கு சென்றார். அப்போது இளம்பெண்ணுக்கு போன் மூலமாக கோவை கீரநத்தம் அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்தனர். அப்போது இளம்பெண் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வாலிபருடன் பழகி வந்தார்.
2 பேரும் திருமணம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி இளம்பெண் தனது வீட்டை விட்டு வெளியேறி கோவைக்கு வந்தார். பின்னர் கோவில்பாளையத்துக்கு சென்று தனது கள்ளக்காதலனை சந்தித்தார். பின்னர் 2 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.
திருமணம் செய்து கொண்ட கையோடு 2 பேரும் பாதுகாப்பு கேட்டு கோவில்பாளையம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் இளம்பெண் தனக்கு திருமணம் ஆனதை மறைத்து வாலிபரை ஏமாற்றி 2-வதாக திருமணம் செய்து கொண்டது தெரியவந்தது. பின்னர் போலீசார் இளம்பெண்ணின் முதல் கணவருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக கோவில்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து சென்றார். 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் இளம்பெண்ணை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.
காதல் திருமணம் செய்த இளம்பெண் முதல் திருமணத்தை மறைத்து 2-வதாக வாலிபரை திருமணம் செய்து போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார்.
- கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அபிநயா நகை, பணத்துடன் திடீரென மாயமானார்.
தாம்பரம்:
தாம்பரம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது25). இவர், ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
அப்போது முடிச்சூர் சாலையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வந்த அபிநயா (28) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
அப்போது அபிநயா தான் பெற்றோருடன் தகராறு செய்து வந்து விட்டதாகவும், இங்கு தனியாக விடுதியில் தங்கி இருப்பதாகவும் கூறினார்.
இதையடுத்து கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ந்தேதி ரங்கநாதபுரம் பெருமாள் கோவிலில் நடராஜன் தனது பெற்றோர் மற்றும் உறவினர் முன்னிலையில் காதலி அபிநயாவை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் வெவ்வேறு நகை கடையில் வேலைக்கு சேர்ந்தனர். ஒரு நாள் மட்டும் வேலைக்கு சென்ற அபிநயா அதன்பிறகு வேலைக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி அபிநயா திடீரென மாயமானார். அவரது 2 செல்போன்களும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது. மேலும் வீட்டில் இருந்த 17 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் புதிய பட்டுப் புடவைகள் அனைத்தையும் அவர் சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து இருப்பது தெரிந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நடராஜன், தாம்பரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அபிநயாவின் ஆதார் அட்டையை போலீசார் கைப்பற்றியபோது அதில் மதுரை தெற்கு, அரிசிகார தெரு, நன்மைதருவார் கோவில் என்று இருந்தது.
இந்த நிலையில் செம்மஞ்சேரி பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள விடுதியில் அபிநயா தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று விடுதியில் இருந்த அபிநயாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் நகை மீட்கப்பட்டது.
விசாரணையில் அபிநயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவரும், 8 வயதில் மகனும் இருப்பது தெரிய வந்தது.
அவர் தாம்பரத்தில் இருந்து மாயமான பின்னர் மதுரைக்கு சென்று வந்து உள்ளார். அங்கு சுருட்டிய நகையை வைத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதையடுத்து மதுரைக்கு தனிப்படை போலீசார் சென்று உள்ளனர்.
அபிநயா திட்டமிட்டு நடராஜனை காதலிப்பதுபோல் நடித்து கணவர், மகன் இருப்பதை மறைத்து திருமணம் செய்து 1½ மாதத்தில் நகை, பணத்தை சுருட்டிச்சென்று இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
விசாரணையில் அபிநயா இதேபோல் மேலும் 3 பேரை திருமணம் செய்து மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.
அபிநயாவுக்கு கடந்த 2011-ம் ஆண்டு மன்னார்குடியை சேர்ந்த வாலிபருடன் முதலில் திருமணம் நடந்தது. பின்னர் 10 நாளிலேயே அவரை பிரிந்து விட்டு மதுரையை சேர்ந்த செந்தில்குமார் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 8 வயதில் மகன் உள்ளான்.
அங்கிருந்து ஓட்டம் பிடித்த அபிநயா கேளம்பாக்கத்தில் வாலிபர் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து 10 நாளில் அவரையும் உதறிவிட்டு ஊரப்பாக்கத்தில் தங்கி இருந்தபோது நடராஜனை காதலிப்பது போல் நடித்து திருமணம் செய்து நகை-பணத்துடன் ஓட்டம் பிடித்து இருக்கிறார்.
அபிநயா வேலைக்காக ஒவ்வொரு இடங்களில் தங்கும்போதும் பழக்க மாகும் வாலிபர்களை குறி வைத்து திருமண ஆசை காட்டி நகை-பணத்தை சுருட்டி இருப்பது தெரிய வந்துள்ளது.
கடைசியாக சுருட்டிய நகை-பணத்தை அபிநயா 2-வது கணவர் செந்தில்குமாரிடம் கொடுத்து ஜாலியாக செலவு செய்து உள்ளார். இதையடுத்து அபிநயாவுக்கு உடந்தையாக இருந்ததாக செந்தில் குமாரையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
கைதான அபிநயா தனது பெயரில் 32 சிம்கார்டுகள் வாங்கி வைத்திருந்தார். அவர் ஒவ்வொருவரிடம் தனித்தனி செல்போன் நம்பரை கொடுத்து திட்டமிட்டு ஏமாற்றி இருக்கிறார்.
மேலும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமும் அபிநயாவுக்கு பலரிடம் நெருக்கமான பழக்கம் இருந்தது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் பழக்கமான வாலிபர் ஒருவர் துபாய் செல்வதற்கு 2 பவுன் நகை மற்றும் பணத்தை கொடுத்து உதவி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
விசாரணையின்போது அபிநயாவுடன் பழக்கத்தில் இருந்தவர்கள், ஏமாந்தவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. தற்போது நடராஜன் மட்டுமே போலீசில் புகார் செய்து உள்ளார்.
இதே போல் நகை-பணத்தை இழந்தவர்கள் யார்? யார்? என்று கைதான அபிநயா, அவரது 2-வது கணவர் செந்தில்குமார் ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறி வைத்து, ஆசை வார்த்தைகள் கூறி பழகி உல்லாசம் அனுபவித்ததோடு, நகை-பணத்தையும் பறித்துச் சென்ற வாலிபர் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
- புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
குழித்துறை:
குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் மற்றும் குழித்துறையைச் சேர்ந்த 26 வயது பெண் ஆகியோர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, தக்கலை துணை சூப்பிரண்டு அலுவலகத்தில் தனித்தனியாக ஒரு புகார் கொடுத்து உள்ளனர்.
குழித்துறை பெண் கொடுத்த புகாரில், எனக்கு 2014-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2018-ல் கணவரை பிரிந்து விட்டேன். இந்த நிலையில் எனது செல்போனுக்கு வந்த 'மிஸ்டு கால்' அழைப்பு மூலம், மார்த்தாண்டம் அருகே உள்ள மேல்புறம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபர் பழக்கமானார்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாக கூறிய அவர், பல்வேறு ஆசை வார்த்தைகள் கூறினார். இதில் நான் மயங்கி அவருடன் உல்லாசமாக இருந்தேன். அப்போது வீடியோ மற்றும் போட்டோ எடுத்துக்கொண்ட அவர், 13 பவுன் நகைகளையும் வாங்கிச் சென்றார். என்னை திருமணம் செய்யும்படி கேட்டபோது, அதற்கு மறுப்பு தெரிவித்த அவர், வீடியோக்களை வெளியிடுவேன் என மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
குளச்சலை சேர்ந்த 29 வயது பெண் கருத்து வேறுபாடு காரணமாக, கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வசித்து வந்து உள்ளார். அப்போது தான் மேல்புறம் வாலிபருடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. 2-ம் திருமணம் செய்வதாக வாலிபர் கூறியதை நம்பி நெருங்கி பழகியதோடு, நகை-பணத்தையும் இழந்துள்ளார்.
தற்போது திருமணம் செய்ய கேட்ட போது, வாலிபர் மறுத்து மிரட்டல் விடுப்பதாக போலீசில் கொடுத்த புகாரில் தெரிவித்து உள்ளார். இதே புகாரை மற்றொரு பெண்ணும் தெரிவித்து உள்ளார்.
கணவரை பிரிந்து வாழும் பெண்களை குறி வைத்து, ஆசை வார்த்தைகள் கூறி பழகி உல்லாசம் அனுபவித்ததோடு, நகை-பணத்தையும் பறித்துச் சென்ற வாலிபர் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். புகார்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர்.
- சொத்துக்கள் -ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூா் குறிச்சி தோட்டத்துப்பாளையத்தை சோ்ந்தவா் சுப்பிரமணி (வயது 52), விவசாயி. இவா் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் திண்டுக்கல்லை சோ்ந்த தேவி (35) என்பவரை திருமணம் செய்துள்ளாா்.
இந்தநிலையில் சுப்பிரமணியின் தாய்க்கும், தேவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் சுப்பிரமணியின் தாய் கோபித்துக்கொண்டு அவரது அக்கா வீட்டுக்கு சென்றுவிட்டாா்.
இதையடுத்து தேவி திண்டுக்கல்லில் சென்று வாழலாம் என சுப்பிரமணியை அழைத்துள்ளாா். அவா் வர மறுத்ததாக தெரிகிறது. கடந்த 15-ந்தேதி சுப்பிரமணிக்கு காய்ச்சல் ஏற்படவே அவரது வலது காலில் தேவி ஊசி செலுத்தியுள்ளார். இதில் சுயநினைவை இழந்த சுப்பிரமணி திருப்பூா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், ரத்தத்தில் பூச்சிமருந்து கலந்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து விஷ ஊசி செலுத்தி தன்னை கொல்ல முயன்றதாக மனைவி தேவி மீது சுப்பிரமணி குன்னத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது சுப்பிரமணிக்கு சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்புள்ள 2 ஏக்கர் நிலத்தை அபகரிக்க தேவி , கணவருக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயன்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தலைமறைவான தேவியை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அவர் திண்டுக்கல்லில் பதுங்கியிருக்கலாம் என்பதால் போலீசார் அவரை தேடி திண்டுக்கல்லுக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் தேவிக்கு விஷ ஊசி வாங்கி கொடுத்தவர்கள் யார், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். சுப்பிரமணிக்கு தேவியை பெண் பார்த்து திருமணம் செய்து வைத்த புரோக்கரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்தநிலையில் தலைமறைவான தேவி நாமக்கல்லில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் அங்கு சென்று தேவியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அப்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, தேவிக்கு ஏற்கனவே 2பேருடன் திருமணமான நிலையில் 3-வதாக சுப்பிரமணியை திருமணம் செய்து அவரது சொத்துக்களை அபகரிக்க திட்டமிட்டதும், அந்த திட்டம் நிறைவேறாததால் சுப்பிரமணிக்கு விஷ ஊசி செலுத்தி கொல்ல முயற்சித்ததும், ஆனால் அந்த திட்டம் நிறைவேறாததால் நாமக்கல்லுக்கு தப்பி சென்று 4-வதாக ரவி என்கிற ராமன் என்பவரை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்ததும் தெரியவந்தது.
நாமக்கல்லை சேர்ந்த ரவிக்கு ஏராளமான சொத்துக்கள் உள்ளது. கோடீஸ்வரரான அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விவாகரத்து செய்தார். இதையடுத்து 2-வது திருமணம் செய்து வைக்க அவருக்கு உறவினர்கள் பெண் பார்த்து வந்துள்ளனர்.
இதையறிந்த தேவி, ரவியை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். சுப்பிரமணியை விட ரவியிடம் அதிக பணம் உள்ளதால் அவரை திருமணம் செய்ய முடிவு செய்த தேவி, சுப்பிரமணி இதற்கு தடையாக இருப்பார் என்பதால் அவரை விஷ ஊசி போட்டு கொன்று விட்டு ரவியை திருமணம் செய்து கொள்ள திட்டம் தீட்டியுள்ளார்.
சுப்பிரமணியை கொலை செய்தால் அவரது சொத்துக்களும் கிடைத்து விடும் என்பதால் கடந்த 15-ந்தேதி விஷ ஊசியை சுப்பிரமணிக்கு செலுத்தியுள்ளார். ஆனால் சுப்பிரமணி உயிர் பிழைத்து கொண்டதால், போலீசில் சிக்காமல் இருக்க நாமக்கல்லுக்கு தப்பி சென்ற தேவி கடந்த 27-ந்தேதி ரவியை திருமணம் செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சொத்துக்களை அபகரிக்கவும், ஆடம்பர வாழ்க்கைக்காகவும் தேவி இது போன்று பல ஆண்கள், தொழிலதிபர்களை மயக்கி திருமணம் செய்திருக்கலாம் என தெரிகிறது. அவருக்கு பின்னணியில் உள்ளவர்கள் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில் மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. கைதான தேவியிடம் இருந்து 6 பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சொத்துக்கள் -ஆடம்பர வாழ்க்கைக்காக தொழிலதிபர்களை மயக்கி பெண் திருமணம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- அருள்ராஜை திருமணம் செய்த பெண் வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 வாலிபர்களை மணந்திருப்பது தெரியவந்தது.
- பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே வானியம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 25). கரும்பு வெட்டும் கூலிதொழிலாளி. இவர் பேஸ்புக்கில் தனது நண்பர்கள் ஏராளமானவர்களுடன் தொடர்பில் இருந்து வந்தார்.
அப்போது அருள்ராஜிக்கு வேலூரை சேர்ந்த இளம்பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. அப்போது அந்த பெண் தான் ஒரு ஆதரவற்றவர் என்று பகிர்ந்துள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அருள்ராஜ் அந்த பெண்ணை கடந்த ஆண்டு பண்ருட்டி திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் திருமணம் செய்தார்.
ஆரம்பத்தில் இவர்கள் வாழ்க்கை இனிதாக சென்றது. அருள்ராஜ் கரும்பு வெட்டும் தொழிலுக்கு செல்லும்போது வெளியூர்களில் தங்குவது வழக்கம். அப்போது அந்த பெண் அருள்ராஜிடம் தனது உறவினர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு செல்வார். இதுபோன்று அடிக்கடி நடந்தது.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அருள்ராஜ் தனது தங்கை திருமணத்துக்காக 7 பவுன் நகை, 90 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவை வாங்கி வைத்திருந்தார். இந்த பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்து வைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அருள்ராஜ் திருமணம் செய்த பெண் நகை, பணத்துடன் திடீரென மாயமானார்.
நீண்ட நாட்களாகியும் அவர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் அந்த பெண் கொடுத்த முகவரி குறித்து விசாரித்தபோது அது போலியானது என தெரியவந்தது. அவர் வழங்கிய செல்போன் எண்ணும் வேறு நபருக்கு உரியது.
அதிர்ச்சியடைந்த அருள்ராஜ் இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அருள்ராஜை திருமணம் செய்த பெண் வேலூர், கோவை, திருவண்ணாமலை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 15 வாலிபர்களை மணந்திருப்பது தெரியவந்தது.
இது தொடர்பாக அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பண்ருட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார்.
- வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.
சென்னை:
சென்னை போரூர் முகலிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ராம் பாலாஜி. தொழில் அதிபரான இவர், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார்.
மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் ராம் பாலாஜி மதுரையில் திருமணம் ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அப்போது வித்யா ஸ்ரீ என்ற 31 வயது இளம்பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. வித்யா ஸ்ரீ தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு இனிக்க இனிக்க பேசினார்.
இதையடுத்து ராம் பாலாஜியின் செல்போன் எண்ணையும் அவர் வாங்கிக் கொண்டார். திருமண நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ராம்பாலாஜி சென்னை திரும்பிய பின்னர் செல்போனில் தொடர்பு கொண்டு வித்யா ஸ்ரீ பேசி வந்தார். அப்போது உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி காதலில் வீழ்த்தினார்.
நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வித்யா ஸ்ரீ கூறினார். இதற்கு ராம் பாலாஜியும் சம்மதித்தார்.
ராம் பாலாஜியிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட வித்யா ஸ்ரீ கொஞ்சம் கொஞ்சமாக பணம் பறித்துள்ளார். தனது செலவுகளை கூறி வங்கி கணக்கையும் வித்யா ஸ்ரீ அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து ராம் பாலாஜி, திருமணம் செய்ய போகும் பெண்தானே என நினைத்து வித்யா ஸ்ரீ கேட்கும் போதெல்லாம் பணத்தை வாரி இறைத்துள்ளார். இப்படி ராம் பாலாஜியிடம் இருந்து வித்யா ஸ்ரீ ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டினார்.
ராம் பாலாஜி திருமணம் பற்றி பேசும்போதெல்லாம் வித்யா ஸ்ரீ சாக்கு போக்கு சொல்லி காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வித்யா ஸ்ரீயை ராம் பாலாஜியால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம் பாலாஜி இதுபற்றி விசாரித்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மதுரை அலங்காநல்லூரை அடுத்த சிக்கந்த சாவடி பகுதியில் வசித்து வந்த வித்யா ஸ்ரீ வீட்டை காலி செய்துவிட்டு ஓட்டம் பிடித்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ராம் பாலாஜி தான் ஏமாற்றப்பட்டது குறித்து அலங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து வித்யா ஸ்ரீயை தேடி கண்டுபிடித்து கைது செய்தனர். அவரது நண்பரான அஜித்குமாரும் பிடிபட்டார். ராம்பாலாஜி இடமிருந்து ரூ.50 லட்சம் பணத்தை சுருட்டியதற்கு அஜித்குமார் உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வித்யா ஸ்ரீ -அஜித்குமார் இருவரையும் வாடிப்பட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர். வித்யா ஸ்ரீ இதுபோன்று வேறு யாரையும் ஏமாற்றி உள்ளாரா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






