என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சென்னை கறிக்கடைக்காரரை திருமணம் செய்து ஏமாற்றி பணம், நகை பறித்த பெண்
    X

    சென்னை கறிக்கடைக்காரரை திருமணம் செய்து ஏமாற்றி பணம், நகை பறித்த பெண்

    • பெண் மீது மேலும் 5 பேர் புகார் அளித்துள்ளனர்.
    • 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர்.

    விருத்தாசலம்:

    சென்னை சூரப்பட்டு பகுதியை சேர்ந்த 58 வயதுள்ள ஒருவர் கறிக்கடை வைத்துள்ளார். இவரது வீட்டுக்கு கடந்த 2 வருடத்திற்கு முன்பு விருத்தாசலம் ஆலடி ரோடு பகுதியை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    3 மாதம் மட்டும் வேலை செய்துள்ளார். அப்போது கறிக்கடைக்காரருக்கும், அந்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    பழக்கத்தின் அடிப்படையில் அந்த பெண்ணுக்கு கறிக்கடைக்காரர் கடனாக ரூ.6 லட்சம் பணமும், 8 பவுன் நகையும், ½ கிலோ வெள்ளி பொருட்களும், வெள்ளி கொலுசு மற்றும் இருசக்கர வாகனம் ஒன்று வாங்கிக் கொடுத்துள்ளார்.

    பின்பு இந்த பணத்தையும், நகையையும் திரும்ப கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் அந்த பெண் விருத்தாசலம் வந்து விட்டார்.

    இந்நிலையில் கடந்த 20-ந்தேதி கறிக்கடைக்காரர் விருத்தாசலம் வந்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டபோது தர முடியாது என மறுத்து மகன்களுடன் சேர்ந்து திட்டி, தாக்கி, கழுத்தில் கத்தியை வைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கறிக்கடைக்காரர் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே அந்த பெண் குறித்து கறிக்கடைக்காரர் கூறும்போது, 'எனக்கு கணவர் கிடையாது. உங்களோடு வாழ்ந்து விடுகிறேன் என கூறி ஏமாற்றி என்னை திருமணம் செய்து கொண்டு பணம், பொருட்களை வாங்கினார். என்னை பிரிந்த பிறகு விருத்தாசலம் வந்து விசாரித்தபோது தான் அவர் இதுபோன்று ஏற்கனவே 5 பேரை திருமணம் செய்து கொண்டு அவர்களிடமும் பணம் மற்றும் நகைகள் வாங்கி ஏமாற்றி வந்துள்ளார் என தெரியவந்துள்ளது என்றார்.

    இதுபோன்று அந்த பெண் மீது மேலும் 5 பேர் புகார் அளித்துள்ளனர். அதில் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ஒருவரும் புகார் அளித்து உள்ளார். அதில் எனது தந்தையுடன் அந்த பெண் சில நாட்கள் மனைவியாக வாழ்ந்தார். அவரிடமும் நகை, பணமும் அபேஸ் செய்துள்ளார் என்று கூறி உள்ளார்.

    அதேபோல் பண்ருட்டியை சேர்ந்த ஒருவர் 1½ பவுன் தங்க நகை மற்றும் ரூ.1 லட்சம் வட்டிக்கு வாங்கி கொடுத்ததாகவும், தன்னையும் திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் இருந்ததாகவும் அப்பெண் மீது புகார் அளித்துள்ளார்.

    அதேபோல் பண்ருட்டியை சேர்ந்த மற்றொருவரும் தன்னையும் திருமணம் செய்து கொண்டு சில நாட்கள் இருந்துள்ளார். அப்போது அவருக்கு ரூ.2 லட்சம் வட்டிக்கு வாங்கி கொடுத்தும் வீடு வாடகைக்கு அட்வான்ஸ் ரூ.70 ஆயிரம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.

    அதுபோல் விழுப்புரத்தைச் சேர்ந்த ஒருவரின் மனைவி, தனது கணவருடனும் அந்த பெண்ணுக்கு தொடர்பு இருந்ததால் கணவரை விவாகரத்து செய்து வாழ்க்கையை இழந்துள்ளேன் எனவும் புகார் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவரையும் திருமணம் செய்து ஏமாற்றி அவரை பிரிந்து வந்துள்ளதாகவும், இதுபோல் மொத்தம் 6 பேரை திருமணம் செய்து அவர்களிடம் பணம் மற்றும் நகைகளை ஏமாற்றி வாங்கியதாகவும் தற்போது அந்த பெண் விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அருகே உள்ள ஒரு டீ கடையில் வேலை செய்து வருவதாகவும், இதனால் அவரை அழைத்து வந்து விசாரணை நடத்த வேண்டும் என கூறி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் புகார்கள் கொடுத்தனர்.

    மேலும் புகார் கொடுத்தவர்களின் உறவினர்கள் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருத்தாசலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் 6 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், நான் ஒருவரை மட்டும்தான் திருமணம் செய்தேன். மற்ற 5 பேரை திருமணம் செய்யவில்லை என கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணை போலீசார் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

    இன்று அவரிடம் 2-வது நாளாக விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். அதன்படி அவரை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்துள்ளனர். அவரிடம் 2-வது நாளாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×