என் மலர்tooltip icon

    இந்தியா

    கழுத்தில் தாலி ஏறியதும் தப்பி ஓடிய மணப்பெண்!- விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
    X

    கழுத்தில் தாலி ஏறியதும் தப்பி ஓடிய மணப்பெண்!- விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

    • பெண் வீட்டாரிடம் இருந்து மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை எதுவும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
    • திருமணமான முதல் நாளே மணமகள் மணக்கோலத்தில் ரோட்டில் தனியாக செல்வதை பார்த்த கிராம மக்கள் மணமகன் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர்.

    மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகை தாலுகாவில் உள்ள கோட்ரி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் ஜக்தாப்(வயது36). இவர் திருமணத்துக்கு பெண் தேடிவந்தார். சமீபத்தில் திருமண தரகர் ஒருவர் நாகேஷ் ஜக்தாப்புக்கு அறிமுகம் ஆனார். அந்த தரகர் மூலம் அவருக்கு பிரித்தி ராவத் என்ற பெண்ணுடன் திருமணம் நிச்சயமானது. பெண் தேடி கொடுத்ததற்காக திருமண தரகர் நாகேஷ் ஜக்தாப்பிடம் இருந்து ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் கமிஷனாக வாங்கிக்கொண்டார். பெண் வீட்டாரிடம் இருந்து மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணை எதுவும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இந்தநிலையில் சம்பவத்தன்று மதியம் 12.30 மணிக்கு காய்ஜ் தாலுகாவில் உள்ள கோவிலில் நாகேஷ் ஜக்தாப்புக்கும், பிரித்தி ராவத்துக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு திருமண கோஷ்டியினர் கோட்ரியில் உள்ள மணமகன் வீட்டுக்கு சென்றனர்.

    இந்தநிலையில் பிரித்தி ராவத் மாலை 4.30 மணியளவில் வீட்டுக்கு வெளியே உள்ள கழிவறைக்கு செல்வதாக கூறிவிட்டு நைசாக தப்பினார். திருமணமான முதல் நாளே மணமகள் மணக்கோலத்தில் ரோட்டில் தனியாக செல்வதை பார்த்த கிராம மக்கள் மணமகன் வீட்டாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மணமகளை தேடி சென்ற மணமகன் வீட்டார் திக்கோல் அம்பா பஸ் நிறுத்தத்தில் அவரை பிடித்தனர். அப்போது அவர் வீட்டை விட்டு வெளியே வந்தது குறித்து முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    இதனால் சந்தேகமடைந்த மணமகன் வீட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று நடத்திய விசாரணையில், பிரித்தி ராவத் திருமண மோசடியில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. பணத்துக்காக திருமணத்துக்கு சம்மதித்து கழுத்தை நீட்டிய சில மணி நேரத்தில் தப்பியோட முயற்சித்தது தெரியவந்தது.

    மேலும் இந்த மோசடியில் திருமண தரகர், பெண்ணின் அத்தை உள்ளிட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் மோசடியில் தொடர்புடைய பிரித்தி ராவத்தின் அத்தை, திருமண தரகர் உள்ளிட்ட 3 பேரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×